an Indian boy of 18 years age taking tuition class for a girl student of 8 years in a village in Tamilnadu . on the background a small house and two elderly ladies and an old man watching the boy and girl

அவன் பெரியம்மா சிதம்பரம் நகரில் பாப்பாரத்தெரு என்று  பெயர் விளங்கிய  கீழப் புதுத் தெருவில்தான் குடியிருந்தார். பெரியம்மா அவன் அம்மாவுக்கு உடன் பிறந்த அக்காதான்.  அம்மா சொந்தம் என்பதால் சங்கடங்கள் குறைவு. அப்பாவுக்கு உறவு என்றால் அவர்கள் வீட்டில் இருந்து  தங்கிப்படிப்பது எல்லாம் சவுகரியப்படுமா என்ன.

அந்த பெரியப்பாவுக்கு அண்ணாமலை யூனிவெர்சிடியில் லைப்ரரி கிளார்க் வேலை. கிளார்க் வேலைக்குக்  கிடைக்கும்  மாச  சம்பளத்தில் ஒரு குடும்பம் பட்டினியில்லாமல் காலந் தள்ளிவிடலாம். வேறு எந்த அரண்மனையைக் கட்டிக்கொள்ளவோ  ஆனையைப் பிடித்துவிடவோ முடியாது. பெரியம்மாவோ ஒண்டு குடித்தன வாடகை வீட்டில்தான் குடியிருந்தாள். ஒண்டுக்குடித்தனம் என்றால்  வீட்டுக்குள் வீடு. தோட்டத்துப்பக்கமாய் ஒரு தாழ்வாரத்தில் பாதியை மரப்பலகை வைத்து அடைத்து பெரியம்மாவுக்குக் கொடுத்திருந்தார்கள்.

அந்த வீடு முழுமைக்கும் வரி வரியாய்  நாட்டோடு. ஒவ்வொரு வீட்டிற்கும்  ஒரு தாய்ச்சுவர் மட்டுமே  சொந்தம். வீட்டு முற்றத்தின் மய்யத்தில் சிமெண்ட் சதுரத்தொட்டி யில் துளசிமாடம்.  முற்றத்தில் நின்று ஆகாயத்தை  அண்ணாந்து பார்த்தால் இரும்புக்கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாய்ப் பச்சை வண்ணத்தில் படல் மாதிரிக்கு பின்னிப் போட்டிருப்பார்கள். காகமோ குரங்கோ திருடனோ வீட்டுக்குள்  எளிதில் நுழையமுடியாது.

 பெரியம்மா வீட்டிற்கு மாத வாடகை பதினைந்து ரூபாய். கரண்ட் சார்ஜ் மாதத்திற்கு ஐந்து ரூபாய். ஆக மாதம் இருபது ரூபாய். அவன் புதியதாய் பெரியம்மா வீட்டிற்கு கல்லூரிப் படிப்புக்கென்று  வந்த பிறகு,   வீட்டு உரிமையாளர் மாமி  மாத வாடகை ஐந்து ரூபாய் கூட்டித் தரவேண்டும் என்று பெரியம்மாவுக்கு   உத்தரவு போட்டார்கள்.பெரியம்மா வீட்டில் மூன்று பேர் அவர்கள் இருவர் தம்பி ஒருவன். தம்பி   மேல ரதவீதி ஆறுமுக நாவலர்  பள்ளியில் பயின்று கொண்டிருந்தான். பெரியம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை. அவள் மூத்தவள் அவளைக் கும்பகோணத்திற்கு அருகே ஒரு பள்ளிக்கூட வாத்யாருக்குத் திருமணம் முடித்து  அனுப்பி வைத்தாயிற்று.

அன்று   வாத்யார்  உத்யோகம்  ராப்பட்டினிக்காரன் உத்யோகம் என்று பொதுவாய் வியாக்கியானம் சொல்வார்கள். அத்தி பூத்தாற்போல்  எப்போதோ ஓர் முறை அந்த அக்கா   குழந்தைகளோடு சிதம்பரம்  அம்மா வீட்டிற்கு  வருவாள்.

மேற்படிப்புக்காக அவனின்  சிதம்பரம் வருகை. பெரியம்மாவுக்குச் சங்கடம்  ஏதும்   இதில் வந்துவிடக்கூடாது எனத் தீர்மானித்தான். வீட்டுக்காரமாமி வாடகை ஐந்து ரூபாய் ஏற்றிக்கேட்டதைப் பெரியம்மா அவனிடம் வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘நான் வீட்டுக்கார மாமியிடம் பேசிப்பார்க்கிறேன்’ என்றான் அவன்.
‘அது சரியா வருமாடா’ இழுத்தபடியாய் பேசினாள் பெரியம்மா.
‘ஒரு முயற்சிதான்’

பெரியம்மா சம்மதம் சொன்னார்.  வீட்டுக்கார மாமி கூடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கல்கி படித்துக்கொண்டிருந்தாள். கல்கி படிப்பது மட்டுமே தவம் என்றிருந்த பொற்காலம். தயக்கமில்லாமல் அவன் வீட்டுக்கார மாமியிடம் நேராகவே சென்றான். பேசினான்.

‘மாமி ஒரு  சமாச்சாரம். உங்க கிட்ட பேசணுமே’
‘என்னப்பா நீ பேசப்போற’
‘பெரியம்மாவுக்கு மாதவாடகை அஞ்சி ரூவா ஏத்தறதா சொன்னீங்களாம்’
‘ஆமாம் அதற்கென்ன’
‘நா ஒரு வார்த்த பேசிக்கறேன். அதக்கேளுங்க. அப்பறம் வாடகைய ஏத்தறதுபத்தி முடிவு பண்ணலாம்’
‘இதென்னப்பா  புது பழக்கமா இருக்கு. நா வீட்டுக்குச் சொந்தக்காரி எனக்குத் தெரியாதா வாடகையை எப்ப ஏத்தணும் எவ்வளவு ஏத்தணும்னு’
‘அந்தமாதிரிக்கு நா சொல்லலவே இல்லயே மாமி’ ஸ்திதியில் சற்று இறங்கிக் கொண்டான்.
‘நீ என்னதான் சொல்ல வரே அத சொல்லு’
’நா இங்க படிக்க வர்றேன்னு எங்க பெரியம்மாவுக்கு வீட்டு வாடகைய ஏத்திடாதிங்க. அது அவுங்களுக்கு கஷ்டம். எனக்கும் கஷ்டம். நா  இந்த வீட்டுல இருக்குற கக்கூச உபயோகப்படுத்திக்க மாட்டன்’. பச்சை வண்ணத்தில்  இரும்பு முறமும், கரண்டியும் வைத்துச்சுரண்டி எடுக்கும் கக்கூஸ் இருந்த ஒரு  காலம். 

அவன் தொடர்ந்து கொண்டான். ’எங்கயாவது தூரமா ரயில் ரோட்டு பக்கமா போயிட்டு வந்துடுவேன். கிராமத்துல எங்க வீட்டுல கரண்டு லைட்டு இல்ல. சிமிழி விளக்கு வச்சிண்டுதான் இதுவரைக்கும் படிச்சன். இங்கயும் நான் சிமிழி விளக்கு வாங்கி வச்சி படிச்சிகறேன். உங்க வீட்டு பின்னாடி இருக்கற ராட்டின கெணத்துல பச்சத்தண்ணி ரெண்டு வாளி  இழுத்து குளிச்சிப்பேன். துணி தோச்சிப்பேன் அவ்வளவே. நா உங்க வீட்டு ரேழில செருப்பு எல்லாம் கழட்டி வைப்பாளே அங்க ஒரு  கோர பாய போட்டு படுத்துகறேன்.’

வீட்டுக்கார மாமி எதுவுமே பேசாமல் இருந்தாள். வீட்டுக்கார மாமிக்கு ஒரு பேத்தி இருந்தாள். அவள்  தெருக்கோடியில் இருந்த  தனியார் ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவள் டியூஷன்  படிப்பதற்கு என்று இரண்டு தெரு தள்ளி ஒரு ஓய்வுபெற்ற பள்ளிக்கூட வாத்தியார் வீட்டுக்குத் தினம் தினம் நடந்தே  சென்று வருவாள். அவளுக்குத் தந்தை இல்லை. தாய் மட்டுமே. கணவனை  இழந்த அந்த மருமகள் தனது  பெண் குழந்தையோடு  தனது  மாமியார் வீட்டில் இருந்தாள்.

அவன் வீட்டுக்கார மாமியிடம்  மீண்டும் ஏதோ  பேச ஆரம்பித்தான். அந்த மாமி ஒன்றும் திருப்தி பட்டுக்கொண்ட மாதிரி அவனுக்குத் தெரியவில்லையே.  ஒரு யோசனை தோன்றியது அவனுக்கு, இந்தப் பெண் குழந்தைக்கு நாமே டியூஷன் சொல்லிக்கொடுத்தால் என்ன. அந்தப்பெண் குழந்தை ஏன் தினமும் இரண்டு தெரு தள்ளி ஒரு டியூஷன் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று வரவேண்டும்.  இதுவே சரி  அவன் பேச்சை ஆம்பித்தான் மாமியிடம்,

மாமி ஒங்க பேத்திக்கு நா தெனம் சாயங்காலம் டியூஷன் எடுக்கறேன். அந்த பொண்ணு  எதுக்கு ரெண்டு தாண்டிண்டு போகணும் வரணும். நான் தான் வீட்டிலேயே இருக்கேன். இங்கயே பாடம் சொல்லிக்கொடுத்துடுவேன்’

‘அவளுக்குத்தான்  டியூஷனுக்கு அந்த ராயர் சார் இருக்காரே’
‘இனி அங்க போகவேண்டாம் நானே பாடம் சொல்லி தர்ரேன்’
‘அதுக்கு எம்மாட்டுபெண் ஒத்துக்கணுமே’
‘கேளுங்கோ கேளுங்கோ’
‘டீ  மாட்டுபொண்ணே  இந்த புள்ளயாண்டான் என்ன சொல்றான்  கேட்டியோ’ பட்டென்று மருமகளுக்கு வினா வைத்தாள்.
‘ நானும்  கேட்டேன். அவர் சொல்றதும் நன்னாத்தானே இருக்கு’

அவனுக்கு உயிர் வந்தமாதிரிக்கு இருந்தது.
வீட்டுக்காரமாமி பேத்தியை அழைத்தாள். ‘டீ பொண்ணே நீ இந்த தம்பிண்ட டியூஷன் படிச்சிகறயா’
அந்தப்பெண்குழந்தை என்னையே முறைத்துப்பார்த்தது.
‘தம்பிண்டன்னு சொல்ற’
‘தப்புதான். அண்ணாண்டன்னு வச்சிக்கலாம்  நீ சொல்லு’ என்றாள் மாமி.
‘நா உனக்கு பாடம் சொல்லித்தரேனே’ அவனே நேராகக் கேட்டுவிட்டான்.
அந்தப்பெண் குழந்தை தலையை ஆட்டி சம்மதம் சொன்னது. அவனுக்கு லாட்டரியில் லட்சம் பரிசு விழுந்த மாதிரிக்கு  உணர்ந்தான்.
‘ நான் நேராகவே வந்துவிடுகிறேன்.  நான் உங்கள் பேத்திக்கு  டியூஷன் எடுப்பதற்கு நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம். கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்ளமாட்டேன்’
’ ஏனாம்’
‘வேண்டாம் எனக்கு’ அழுத்தமாய்ச் சொன்னான்.
‘அந்த ராயர் டியூஷன் எடுக்கிறார். அவருக்கு சேதி சொல்லவேண்டும்’ என்றாள் மாமி.
‘சொல்லுங்கள். பெண் குழந்தை. ரெண்டு தெரு  தாண்டித்தாண்டி  ஏன் சென்று வரவேண்டும். நான் வீட்டில் ரேழித்திண்ணையிலேயே டியூஷன்  சொல்லிக் கொடுத்துவிடுவேன்’

பெண் குழந்தையின் அம்மா சம்மதம் சொன்னாள். வீட்டுக்கார மாமி வாடகை ஏற்றியது எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போனது.பெரியம்மாவுக்கோ ரொம்பவும் சந்தோஷம். அவன்  அந்தப்பெண் குழந்தைக்கு டியூஷன் சொல்லிக்க்டுக்க ஆரம்பித்தான்.
 வீட்டுக்கார மாமி வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க,  வீடு கூட்டி மெழுக கன்னியம்மாள் என்கிற ஒரு ஆயா இருந்தார்கள். அவரை கடைத்தெருவில் பார்த்த ராயர் சார் ‘ஏம்மா அந்த பொண்ணு டியூஷனுக்கு வரல. உனக்கு எதாவது சேதி  தெரியுமா, ஊருக்கு எங்காவது போயிட்டுதா’ என்ற கேள்வியை வைத்தார்.

‘சார் அது அந்த காலேஜு படிக்கிற தருமங்குடி பையன் புதுசா வந்திருக்கானே  அவன் கிட்ட,  வீட்டுலயே டியூஷன் சொல்லிகுது. அதான் உங்ககிட்ட வருல’
‘எனக்கு யாரும் சேதி சொல்லுலயே’
‘பாத்தா சொல்லுவாங்க அய்யா’
‘டியூஷனுக்கு ஆள மாத்துனா அது எனக்கு தெரியணுமில்ல’
‘ஆமாம்’
‘உன்கிட்ட என்ன பேச்சு. நா அவுங்க கிட்ட பேசிக்கறேன்’

ராயர்  ஆயாவிடம் சம்பாஷணையை முடித்துக்கொண்டார். மறுநாள் மாலை அவன் அந்தப்பெண்ணுக்கு அதே ரேழித்திண்ணையில்  டியூஷன் நடத்திக்கொண்டிருந்தான். ராயர் சார் வேக வேகமாக  மாமி வீட்டின் உள்ளே வந்தார். 
‘என்ன சசி  டியூஷன் வாத்தியார மாத்திட்டயா. எனக்கு சொல்லவேண்டாமா. தெனம் சாயங்காலம்  நீ வருவேன்னு மெனக்கிட்டு  ஒக்காந்துண்டு இருக்கேன்’
அந்தப் பெண்குழந்தை எதுவுமே பேசவில்லை.

அவன் எழுந்து  அவருக்கு வணக்கம் சொன்னான். ‘ம்ம் இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல’  ராயர் சொல்லிக்கொண்டே வீட்டின்  கூடத்துக்குப் போனார்.
‘நம்ப வேலய நாம  பாப்போம்’ அவன் அந்தப்பெண் குழந்தையிடம் சொன்னான்.   அவளுக்குப் பெருக்கல் கணக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான். வாய்ப்பாடு மனனம் செய்யவேண்டும் என்றான். வாய்ப்பாட்டை மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் சொல்லவேண்டுமென்றான்.

‘மாமி மாமி’     ராயர் சார் மாமியை அழைத்துக்கொண்டே  இருந்தார்.
‘வாங்கோ ராயர் சார்’
‘ கொழந்த சசி   டியூஷன் படிக்க  ஏன்   என்னண்ட வல்லேன்னு கேட்கணும். அதுக்குத்தான் வந்தேன். உங்க ஆத்து வேலைக்காரி  கன்னியம்மாவை  எதேச்சயா கடைத்தெருவில்  பார்த்தேன். அவள்தான் சொன்னாள். ’சசிக்கு இப்ப  டியூஷன் வாத்தியார் மாத்தி இருக்காங்கன்னு.’ எனக்கு விஷயமே தெரியாது.  என் கிட்ட ஒரு வார்த்த நீங்க  சொல்லணுமா வேண்டாமா’
‘சொல்லணும். ஆனா முடியல. உங்கள நேரா பாத்து  விஷயத்தைச் சொல்லலாம்னு இருந்தேன்’

மாமி சமாளித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

‘இது சரியில்ல. கொழந்த எங்கிட்டதான்  வந்து  டியூஷன் படிக்கணும்’
‘அவ ஏன் அலையணும். அவளுக்கு வீட்டுலயே சொல்லித்தர ஆள் கெடச்சிருக்கு’
‘மாமி இப்ப என்னத்துக்கு  புதுசா ஒரு ஆஸாமி.  ‘ஒரு பத்துரூபாதான்    எனக்கு   டியூஷனுக்கு  மாச சம்பளன்னு  தர்ரீங்க அதுக்கு இவ்வளவு   கணக்கா. நாந்தான்  சசிக்கு டியூஷன் சொல்லித்தருவேன்’

‘டுயூஷன் வாத்தியார மாத்திதான் பாப்போமேன்னு ஒரு யோஜனை’ என்றாள் வீட்டுக்கார மாமி. சற்றும் அசரவேயில்லை. மாமி வேறு எதுவும் சொல்லவுமில்லை.
அவர்கள் பேசிக்கொள்வதைத்  தன் காதில் வாங்கிக்கொள்ளாது அவன் அந்தப் பெண்குழந்தைக்குப் பாடம் நடத்திக்கொண்டே இருந்தான். அப்படியும் நடக்கின்ற காரியமா அது.

‘இந்த காலத்து பசங்களே சரியில்ல’

‘யார சொல்றீங்க ராயர் சாரு’  இது மாமி
‘காலேஜ் படிக்கிற பசங்கள சொல்றேன்’
‘இப்ப எதுக்கு அந்த பேச்சு’
‘இப்பதான் பேசணும்’ அழுத்தமாக சொன்னார் ராயர்.
‘நீங்க என்ன சொல்ல வறேள்’
‘எங்க தெரு. கமலீசுரன் கோவில் தெரு. அதே தெருவுல ஒரு பையன் அண்ணாமல   காலேஜ்ல எம் காம் படிச்சிண்டு இருந்தான். அவனும் ஒரு பொண்ணுக்கு டியூஷன் சொல்லிக்குடுக்கறேன்னு ஆரம்பிச்சான். படிப்பு முடிஞ்சுது. ஊரவிட்டு கிளம்பினான்.  தான் டியூஷன் சொல்லிக்குடுத்த  அந்தப் பொண்ணயும் கூட்டிண்டு போயிட்டான். பொண்ணோட அப்பா அம்மா பந்துக்கள் எல்லாம் கதறி பாத்தா. ஒண்ணும் கத ஆகல. எனக்கு அவர புடிச்சிருக்கு. நா  அவரோட போறேன்னு சொன்னா. ரெண்டு கை எடுத்து கும்பிட்டுட்டு அந்தப்பொண் கொழந்த  போயே போயிட்டா. நா சொல்ல வந்தது இதுதான்’
‘அப்பறம்’
‘அப்பறம் என்ன விழுப்புரம்தான்’
‘பொண் கொழந்தேன்னா ஜாக்கிரதயா இருக்கணும்’
‘இப்ப என்ன சொல்ல வறேள்’
‘நா  என்ன சொல்லணுமோ அத  சொல்லியாச்சு. அப்பறம் உங்க சவுகரியம். அவா அவாளுக்குத் தலை எழுத்துன்னு ஒண்ணு இருக்கு.. நா வறேன்.’ ராயர்சார்  தன் வீட்டுக்குப்புறப்பட்டார்.

இந்த  சம்பாஷணை முழுவதுமாக அவன் காதில் வாங்கிக்கொண்டான்.  இது எல்லாம் புரிந்து கொள்ளும்   ஸ்திதியில் அந்த பெண் குழந்தை இல்லை. அவனுக்கோ  நன்றாகவே புரிந்தது. நெஞ்சு படக் படக்  அடித்துக்கொண்டது.

கல்லூரியில் படித்த நான்காண்டுகள் அந்தப் பெண்குழந்தைக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்தான். டியூஷன் வாத்தியார் என்ற பெயர் வாங்கினான். தன்  பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு தருமங்குடிக்குத்   திரும்பினான். வேலையைத் தேடி ஊர் ஊராய் நாயாய் பேயாய் அலைந்தான். அவன் கிராமம்  தருமங்குடி  அருகே வடலூர் சேஷசாயி கம்பெனியிலியே  ப்ரொடெக்‌ஷன் சூப்பர்வைசர் வேலையும் கிடைத்தது. முந்நூறு ரூபாய்தான்  மாத சம்பளம். ‘இதுவே போதுண்டா உனக்கு’  அவன் மனம் சொன்னது.

ராயர் வீட்டுக்கார மாமியிடம்  சொன்ன  அந்த சொல் மட்டும்  அவனை  விடாமல் பயமுறுத்திக்கொண்டே இருந்தது.  ராயர் சாரைத்தான்  அவன் எங்கே மறப்பது.   வீட்டு உரிமையாளர் மாமி அவன் அங்கு படிக்கும்வரை    பெரியம்மாவுக்கு   மாத  வாடகை ஏற்றாமல்தான் இருந்தாள்.   அதனில் பெரியம்மாவுக்கோ   அலாதியாய்  ஒரு திருப்தி. அவன் தான் மிகவும்  எச்சரிக்கையோடு இருந்தவன். தினம் தினம்   மாலை வேளையில் தில்லக்காளிகோவிலுக்குச்சென்றான். காளியைச் சுற்றி வந்தான்.  தரைமீது வீழ்ந்து வணங்கினான். அந்தத் தில்லைக்காளிதான் தன்னைக் காத்து ஊருக்கு நல்ல பெயரோடு அனுப்பி வைத்ததாய்  அவனே  அவ்வப்போது நினைத்துக்கொள்வான்.

அது  அப்படித்தான் இருக்கட்டுமே.