
உணர்ச்சிகள் ஒரு மனிதனை ஆட்கொள்ளும்போது அவன் மனம் பலவீனமாகித் தளர்ச்சியுற்று அவனது ஸ்தூல உடலையும் பாதிக்கும். உணர்ச்சி மயமாகி நின்ற அர்ஜுனன் கழிவிரக்கத்தால் புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மா முதல் முறையாக திருவாய் மலர்ந்தருளுகிறார். ஆனால் அர்ஜுனன் மீது கருணை கொண்டு, அவனது துக்கத்தில் பங்கு கொள்ளும் விதமாய் அல்ல. மாறாக ஆரியனாகப் பிறந்த ஒருவன் செய்யத் தகாததை அர்ஜுனன் செய்ய முயல்வதைக் கண்டித்து அறிவுறுத்தும் விதமாகப் பேசுகிறார். நல்ல பண்பட்ட மனதையும் தார்மீக வாழ்க்கை நெறியையும் எவன் விடாமல் பின்பற்றி வருகிறானோ அவனே ஆரியன் என்று அழைக்கப்படுகிறான் என்று நமது தர்மசாத்திரங்கள் கூறுகின்றன. ‘அந்தணன் என்போன் அறவோன்’ என்ற திருவள்ளுவர் கூற்றை ஒத்து நிற்கும் சொற்றொடர் இது. தமிழில் அய்யன் என்ற சொல்லும் இதற்கு ஈடாகி நிற்கும்.
அர்ஜுனன் ஒரு தலை சிறந்த வீரன். வீர சுவர்க்கம் என்பது இவனுக்குப் போற்றத் தகுந்த ஒரு பேறாகும். ஆனால் கடமையை மறந்து உணர்ச்சிகளுக்கு எப்பொழுது அவன் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தானோ, அப்பொழுதே சுவர்க்கத்துக்குப் போகும் மார்க்கமும் அவனுக்கு புலப்படாது. இப்பொழுது அவன் இருக்கும் நிலை, அவன் இத்தனை வருடங்களாகச் சேர்த்து வைத்த புகழை மாற்றி விடக்கூடிய ஒரு மோக நிலை, ஒரு மோசமான நெருக்கடியில் அர்ஜுனன் இருக்கிறான். இந்த நெருக்கடியில் இருந்து அவன் விடுபட வேண்டும் என்றால், ஸ்ரீகிருஷ்ணரைப் போன்ற ஒரு குரு, வாழ்க்கையின் உண்மை நிலையை அவனுக்கு உணர்த்த வேண்டும். அவனது தர்மத்தை, அவனது கடமையை அவனுக்கு நினைவுறுத்த வேண்டும். இதைத் தான் கிருஷ்ணர் பதினொன்றாம் சுலோகத்திலிருந்து செய்யப் போகிறார்.
குருவை, மேன்மை பொருந்திய பெரியோரை, வதம் செய்து பாபகர்மத்தை சம்பாபிப்பதை விட, எல்லாச் செல்வங்களையும் துறந்து, பிக்ஷையேற்று வாழ்வது சிறந்தது என்று அர்ஜுனனின் வாய் கூறினாலும், அவன் மனம் தான் செய்வது தார்மீகப்படி சரியல்ல என்று உணர்கிறது. அதனாலேயே, ஸ்ரீகிருஷ்ணரிடம் உன் சீடனாக உன் முன் நிற்கிறேன். எனக்குத் தகுந்த வழிகாட்டுவாய் என்று இறைஞ்சுகிறான்.
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தேடுபவை அவனது இயல்புக்கு உகந்தவாறு அமையும். பொறிகளின் வாயிலாக மனத்திற்குப் பிரியத்தைத் தருபவை ப்ரேயஸ் என்றும், வாழ்வின் உண்மையான பொருளை அடைய விழைந்து இந்திரிய இன்பங்களுக்கு முக்கியத்துவம் தராமல். ஆத்ம சாதனையில் மனம் செலுத்தி பக்தியையும் ஞானத்தையும் தேடுபவர் ஷ்ரேயஸ் என்ற உயரிய நிலைநிலையை நாடுபவர் என்றும் தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன. அர்ஜுனன் இத்தனை காலம் பிரியமானவைகளை அடையும் செயல்களிலும், புகழ் சேர்க்கக் கூடிய செயல்களிலும் ஈடுபட்டு, ப்ரேயஸ மார்க்கத்திலேயே இருந்து வந்திருக்கிறான். ஒவ்வொரு சாமானிய மனிதனும் இவ்வாறே ப்ரேயஸ மார்க்கத்தில் இருப்பதையே எளிதானதாகக் கருதுகிறான். ஆனால், நெருக்கடி நிலை என்று ஒன்று வரும்பொழுது, ப்ரேயஸ மார்க்கத்தில் இருந்து பிரச்னைக்கு வழி காண முடியாது. அப்பொழுது தான் ஷ்ரேயஸ மார்க்கத்தின் துணை தேவைப்படும். ஆத்ம சிந்தனை என்பது ஆன்மீக மார்க்கத்திற்கு வழிவகுக்கும். இதனாலேயே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் குருவாக வந்து ஞான யோகத்தைப் பற்றிக் கூறி, ஷ்ரேயஸ மார்க்கத்தின் சிறப்பையும் அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார்…
பதினொன்றாம் சுலோகத்திலிருந்து முப்பத்து ஏழாம் சுலோகம் வரை ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தைப் பற்றிக் கூறுகிறார். முப்பத்து எட்டாம் சுலோகத்திலிருந்து ஐம்பத்து மூன்றாம் சுலோகம் வரை கர்ம யோகத்தைப் பற்றிக் கூறுகிறார். ஐம்பத்து நாலிலிருந்து எழுபத்து இரண்டாம் சுலோகம் வரை ஆத்ம ஞானம் அடைந்தவரின் குண நலன்கள் பற்றியும் அவரது இயல்புகள் பற்றியும் கூறுகிறார்.
ஞான யோகத்தைப் பற்றிச் சொல்லும் சுலோகங்கள் உபநிஷத்துக்களின் சாராம்சத்தைத் தருகின்றன. ஒரு தனி மனிதனின், ஜீவசொரூபத்தின் இன்றியமையாத தன்மை விவாதிக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்தக் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தனிப்பட்ட ஜீவன் என்பது வெறும் ஸ்தூல உடல் இல்லை; இந்த உடலுக்குள் இருக்கும் மனமும் இல்லை. நம் கண்களுக்குப் புலப்படும் இந்த உடலும் இந்த உடலுக்குள் இருக்கும் மனமும் தாற்காலிகமானவை; நிரந்தரமானவை அல்ல என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் என்பதை உணர்த்துகிறார். நாம் இந்தப் பூமியில் இருக்கும் வரையிலும் இந்தப் பூதவுடலை உபயோகிக்கிறோம். ஆனால் இந்த உடல் இந்த நிலத்தில் வீழ்ந்த உடன் இந்த உடலுக்கும் இந்த ஜீவாத்மாவுக்கும் உள்ள பந்தம் இற்று விடும். . இந்த உடலுடன் நமக்கு இருக்கும் பந்தம் தாற்காலிகமானது என்ற உண்மையை புரிந்து கொண்ட உடனேயே இந்த உடல் தொடர்பினால் வரும் பந்தங்களின் ஈர்ப்பும் குறைந்து விடும். இந்த ஈர்ப்பைக் குறைக்கத் தான் நமக்கு விதித்துள்ள யோகப் பயிற்சிகள்.
ஸ்ரீகிருஷ்ணர் அனைத்து ஜீவாத்மாக்களும் சைதன்ய ஸ்வரூபமாகவும் சித் ஸ்வரூபமாகவும், ஞான ஸ்வரூபமாகவும் இருப்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். இந்த சைதன்யம் இந்த உடலின் அங்கமோ இந்த உடல் மூலம் வரும் விளைபொருளோ அல்ல. இந்த உடலின் உடைமையோ அல்லது அதன் குணநலனோ அல்ல. இந்த உடலின் எல்லைகள் இந்த சைதன்யத்தைக் கட்டுப்படுத்தாது; இந்த உடல் வீழ்ந்த பின்னும் சைதன்ய ஆத்மா தொடரும்; எப்படி ஒளியானது நம் கைகளைப் பார்க்க வழி செய்யுமோ அதைப் போலவே சைதன்யத்தால் உயிர் பெரும் நம் உடலையும் சைதன்ய சக்தியினாலேயே அறிகிறோம். ஒளியானது அது ஒளிர்விக்கும் கையின் அங்கமாகவோ அல்லது அதன் மூலம் வரும் விளைபொருளாகவோ அல்லது அதன் குணநலனாகவோ ஒரு நாளும் இருக்காது. ஒளியில் கையைப் பார்க்கலாம்; கையை நீக்கியபின்னும் ஒளி தொடர்ந்து இருக்கும். கை மறையும்; ஆனால் ஒளி மறையாது. இதைப் போலவே இந்த உடலையும், இந்த உலகத்தையும் சைதன்ய சக்தியினால் அறிகிறோம். உடல் நீங்கினால், சைதன்யம் நீங்காது. சைதன்ய சக்தி தொடரும். இதுவே ஆத்ம சக்தியின் நித்தியத் தன்மையை உணர்த்துகின்றது.
ஸ்ரீகிருஷ்ணர் இந்த சைதன்ய ஆத்மாவின் ஏழு அம்சங்களைப் பற்றிக் கூறுகிறார். அவையாவன:
- சைதன்ய ஆத்மா நித்யமானது.
- ஆத்மா சத்தியமானது; அதாவது ஆத்மா என்பது எதன் மேலும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக இருக்கும் உண்மை; அதோடு உலகில் உள்ள அத்துணை இருப்பும் இந்த ஆத்மாவையே சார்ந்துள்ளன.
- ஆத்மா என்பது எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. எங்கெல்லாம் விண்வெளி உள்ளதோ அங்கெல்லாம் சைதன்ய ஆத்மா வியாபித்துள்ளது.
- ஆத்மாவை அப்ரமேயா என்பர்; அதாவது, எப்பொழுதுமே ஆத்மா மட்டுமே எந்த அனுபவத்தையும் அறியும்; உணரும். உணரப்படும் விஷயங்கள் ஆத்மா ஆகா.
- ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை; அதனால் எந்த கர்ம பலனையும் அனுபவிப்பதில்லை.
- ஆத்மா என்பது அனைத்து மாற்றங்களிலிருந்தும் விடுபட்டது. அதாவது பிறப்பு, வளர்ச்சி, சிதைவு மற்றும் இறப்பு போன்ற மாற்றங்களிலிருந்து விடுபட்டது.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தனது கீதோபதேசத்தில் இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். நம் மனதில் ஏற்கனவே இருக்கும் கருத்துகள் நம் கற்றலைத் தடுக்கும். அதோடு சரணாகதியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். சரணாகதி என்பது முன் கூட்டியே நம்முள் இருக்கும் எண்ணங்கள் கரைந்து போவதன் அடையாளமாக இருக்கிறது. அதோடு கீதையைப் படிக்க மூன்று அணுகுமுறைகளைக் காட்டுகிறார், முதலாவது, தத்துவார்த்த அணுகுமுறை, அடுத்தது, நெறிமுறை மற்றும் விழுமங்கள் சார்ந்த அணுகுமுறை, கடைசியில் லௌகீக அதாவது உலகியல் அணுகுமுறை. மனிதர்கள் எண்ணங்களினாலும், செயல்படும் மனப்பாங்கினாலும் வேறுபடுவதால் இப்படி கீதையை அறியவும் பல அணுகுமுறைகள் அவசியமாகின்றன.
தத்துவார்த்த அணுகுமுறை ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு தத்துவார்த்த நிலையில் வரும் தேடலைக் குறிக்கிறது. ப்ரேயஸ் என்ற மார்க்கத்திலிருந்து ஸ்ரேயஸுக்குப் போகும் வழியைக் காண்பிக்கும்.
விழுமங்கள் சார்ந்த நெறிமுறை ஒரு மனிதனுக்கு, தர்ம நெறிப்படி வாழ வேண்டிய கட்டாயத்தைக் கூறுகிறது. தார்மீக நெறி ஒரு நாட்டுக்கும் சமூகத்துக்கும் அமைதியையும் முன்னேற்றத்தையும் காண்பிக்கும்.
உலகியல் அணுகுமுறை, ஒவ்வொரு மனிதனும் தத்தம் கடமைப்படி செயல்பட்டால் மட்டுமே ஒரு சமூகமும் நாடும் செழிப்பாக இருக்க முடியும் என்பாதை உணர்த்தும்.
11வது சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உண்மையான பண்டிதன் உயிரோடு இருப்பவர்களைப் பற்றியும் கவலைப் பட மாட்டான்; உயிர் இழந்தவர்களைப் பற்றியும் கவலைப் பட மாட்டான் என்கிறார். அதோடு அர்ஜுனனிடம், ‘எந்தத் துக்கத்திற்கும் தகுதியற்ற மனிதர்களுக்காக நீ வருந்துகிறாய். பண்டிதனைப் போலப் பேசும் நீ, பண்டிதனைப் போல செயல்படவில்லை.’, என்று கூறுகிறார்.
அசோச்யான் அன்வசோசஸ்த்வம் ப்ர்க்ஞாவாதான்ஸ்ச பாஷசே
கதாஸூ ந கதாஸூன்ஸ்ச நானு சோசந்தி பண்டிதா:
अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे |
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः ||
இது கீதையின் மிகவும் முக்கியமான, கீதையின் சாராம்சத்தை ஒரே பாடலில் சொல்லும் சுலோகம். நாம் எல்லாரும் புத்தகங்கள் நிறையப் படித்தவர்களைப் பண்டிதர்கள் என்று அழைக்கிறோம். கிருஷ்ண பரமாத்மா குறிப்பிடும் பண்டிதனோ இயற்கையின் நடைமுறைகளை அறிந்த ஒருவன்; ஜனனமும் மரணமும் வாழ்வின் ஒரு அங்கமே என்று அறிந்தவன். ஆத்ம ஞானத்துடன் இறப்பைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பவன். எனவே, ஸ்ரீகிருஷ்ணர், ‘அர்ஜுனா! நீ, பண்டிதனைப் போல பேசுகிறாய். ஆனால், பாமரனைப் போல் துயரத்தின் பால் பட்டுச் செயல்படுகிராய். ஞானம் இருப்பவனுக்கு மனத்தளர்ச்சி எப்படி ஏற்படும்?’ என்ற கேள்வி எழுப்புகிறார். ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியே, இவ்வாறு ஞானம் உடையவனைப் போல் பேசுவதும், அஞ்ஞானியைப் போல் வருந்துவதும் மனத்தின் அமைதியை அழிக்கிறது என்று உணர்வதுதான்.. மனம், வாக்கு, காயம் அதாவது, நமது உடல், மூன்றுமே ஒரே வழியில், ஒரே நிலையில் நிற்க வேண்டும். இதுவே யோகநிலையும் ஆகும். மனம், வாக்கு, காயம் மூன்றும் பொருந்தி ஒன்றுபடும்போது ஒருவனது ஆத்ம சக்தி வெளிப்படும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூற்றுப்படி, ‘நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் சிந்தைக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். அப்படி ஒற்றுமை ஏற்படாவிட்டால், உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.’ இம்மூன்றும் ஒரே வழி நின்றால் மட்டுமே ஆத்ம ஞானம் சித்திக்கும்.
12வது சுலோகத்தில் கிருஷ்ணர் ஆத்மா எப்படி காலத்தின் பிடியில் மாட்டாது முக்காலத்திலும் பொதுவாக அழிவற்று நிற்கும் என்பதை விளக்குகிறார். 13வது சுலோகமோ ஒரு உடலில் எவ்வாறு இளமையும், யௌவனமும் மூப்பும் உண்டாகிறதோ, அதைப் போலவே ஆத்மா என்பது ஒரு உடலிலிருந்து இன்னோர் உடலுக்குப் போகிறது என்பதையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மாறாத ஆத்மாவை எதுவும் செய்வதில்லை என்பதையும் விளக்குகிறது. 14வது சுலோகம் ஐம்பொறிகளும் ஐந்து புலன்களுடன் சேர்ந்து மனத்தைத் தொடும்போது, விருப்பம், வெறுப்பு என்று இரு வகை உணர்வுகள் உண்டாகின்றன என்பதை விளக்குகிறது.. இவை இன்ப துன்பத்திற்கு வழி வகுக்கின்றன. இவையும் அநித்தியமானவை. பொறுமையுடன் நித்திய அநித்திய வகைப் பாகுபாட்டை அறிந்து, செயல்பட்டால், ஞானயோகம் சித்தியாகும். 15வது சுலோகத்தில் ஆத்ம தத்துவத்தில் நிலைத்திருப்பவனை இன்பதுன்பங்கள் ஒன்றும் செய்வதில்லை என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.. அமைதியும், சஞ்சலமற்ற மனமும் தெளிவான சிந்தனையும் ஒருவனுக்கு வீரத்தையும் அறிவையும் கொடுத்து, ஞான வழிக்கு அவன் செல்ல வழி செய்யும். உடலைத் தான் தன் உண்மை நிலை என்று நினைப்பவன் உடலைச் சேர்ந்த ஐம்பொறிகள் மற்றும் ஐம்புலன்கள் மூலம் வரும் இன்பதுனபங்களுக்கு ஆளாகித் தவிக்கிறான்.
தத்துவார்த்த ஞான தரிசனம் என்பது உண்மையைக் காண்பது. இந்த மானுட வாழ்க்கையின் உண்மை நோக்கமே சாசுவதமான உண்மை நிலையைக் கண்டறிவதே. இந்தத் தேடலும் தேகம் என்பது அசத்தியம் என்பதையும் இடையில் வந்து இடையில் மறையும் தன்மையது என்பதையும் உணரும் நிலை வரும்பொழுது, வாழ்க்கையின் உண்மையான இலக்கு புரியும். ஒவ்வொரு கணமும் இந்த இலக்கை நோக்கிப் போவதிலேயே மனம் சிந்திக்கும். நீரில் மூழ்கும் நிலையில் உள்ள ஒருவன் எவ்வாறு, மூச்சு விடுவதற்காகத் தவிப்பானோ, அதைப் போலவே, இந்தத் தேடலில் ஈடுபட்டிருக்கும் ஒருவனும்,(அவனை முமுக்ஷு என்றழைப்பர்) ஆத்ம ஞானத்திர்காகத் தவிப்பான். உண்மையை நோக்கி வீறுநடை போடுவான். இது ஸ்ரீகிருஷ்ணர் நமக்குக் காண்பித்த உண்மை.
மலரும்

வாழ்வுக்குப் பயனுள்ள தொடர்.
LikeLike