என் சி சி . அலப்பறைகள் 4

ஸ்குவார்டன் லீடர் ராமன் கேட்ட கேள்வியில் இடியோசை கேட்ட நாகம் போல் நடுங்கி நின்றேன். ஜூனியர் டிவிஷனில் ஆர்மி விங்கில் இருந்த நான் ஏன் அதைவிட்டு ஏர் விங்கில் ஜாயின் செய்ய வந்துள்ளேன். இது தான் அவர் சந்தேகம்.
யூ ஹாவ் ஆல்சோ பாஸ்ட் “ஏ “ சர்டிபிகேட் . தென் வாட் இஸ் த பிராப்ளம்? அவங்க ஏன் உன்னை செலக்ட் பண்ணல ? டெல் மீ த ட்ரூத்”
“சார் ! சின்ன வயசிலேர்ந்தே எனக்கு விமானப்படை மீது ஆசை . முக்கியமா இந்த யூனிஃபார்ம் .. அழகான ப்ளூ கலர். கறுப்பு கலர் ஷூ . ஸ்டைலான தொப்பி. “ரேங்க்” குக்கு ஏற்ற அழகான தோள்பட்டை அடையாளங்கள். அதை போட்டுக்கணும்னு ரொம்ப ஆசை சார். நான் தான் வேண்டாம்னு இங்க வந்திருக்கேன் . போனா அவங்க எடுத்துப்பாங்க. ” என்றேன்.
என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்.
உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே கொட்டிவிட்டேன். த ஆன்சர் வாஸ் நெய்தர் டெக்னிகல் நார் இண்டெலிஜெண்ட் . இப்படி விளையாட்டுத்தனமான விடையைச் சொல்லிவிட்டோமே என்று உடனே நாக்கைக் கடித்துக் கொண்டு
“சாரி சார் .. பட் இட் இஸ் ட்ரூத் சார் “ என சொல்லிக் கொண்டே மெல்லத் தலைதூக்கி அவரைப் பார்த்தேன்.
என் பயம் தேவையற்றது. அவர் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை.
“ஐ யாம் கிளாட் யூ செட் இட் . ஸோ யூ ஆர் இன் லவ் வித் திஸ் யூனி ஃபார்ம் யங் மேன் ! கிரேட் ரீஸன் டு டெல் . தட் இஸ் த குவாலிடி வி நீட் இன் எவரி சோல்ஜர் ! யூ ஆர் இன் “ என்று சொல்லிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினார்.
வாழ்க்கையில் யாருடைய உதவியும் இன்றி நானே ஒரு நேர்காணலை எதிர்கொண்டு, வெற்றியும் பெற்றேன் என்பது என் மனத்தில் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை விளைத்தது. “இதென்ன பெரிய விஷயம் ! சப்ப மேட்டர் “ என்பவர்கள் படகின் பருவங்களின் அழுத்தங்களை அறியாதவர்கள். கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.
பி. யு. சி. யில் நல்ல மதிப்பெண்கள் வங்கியிருந்தேன். பள்ளிக் காலத்திலிருந்து வாங்கிய என். சி. சி. , ஸ்போர்ட்ஸ் என். எஸ் எஸ். மற்றும் எக்ஸ்ட்ரா கரிக்குலார் சான்றிதழ்கள் பல. இவற்றையெல்லாம் சேர்த்து “ மெடிக்கல் கல்லூரிக்கு” விண்ணப்பித்து இருந்தேன். எங்கள் காலத்தில் “நீட்” தேர்வு போன்றவை கிடையாது. நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியாகவே பதில் சொன்னேன். “சீட்” கிடைக்கவில்லை. இன்னொருமுறை ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது மறுபடியும் அப்ளை செய்து , மறுபடியும் நேர்காணலுக்குச் சென்று, மறுபடியும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லித் திரும்பினேன். அந்த முறையும் கிடைக்கவில்லை. இது எனது தன்னம்பிக்கையைச் சிதைத்துவிட்டது. ஃபர்ஸ்ட் இயர் வேண்டா வெறுப்பாக இருந்தது. மனம் சோர்வடைந்திருந்தது. அந்த நேரத்தில்தான் மேற்சொன்ன என். சி. சி. விமானப்படைப் பிரிவு நேர்காணல் நடந்தது. என்னளவில் நான் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டியது.
ஃபர்ஸ்ட் இயர் இனிக்கத் தொடங்கியது. எனக்கு ஏதோ முக்கியத்துவம் கிடைத்துவிட்டது போல நானே உணர்ந்தேன். கல்லூரி அசெம்பிளி ஹாலில் பேசத் தொடங்கினேன். எல்லாப் போட்டிகளிலும் பெயர் கொடுக்கத் தொடங்கினேன். கல்லூரித் தமிழ் மன்றத்தில் துணைச் செயலாளர் பொறுப்பை ஏற்றேன். சில போட்டிகளில் வென்றேன்; சிலவற்றில் தோற்றேன். இந்தத் தோல்வி வெற்றிகளெல்லாம் என்னை பாதிக்கவில்லை. காரணம் என்னைச் சுற்றி அமைந்துவிட்ட நண்பர்கள் கூட்டம். உற்சாகம் ஊற்றாகக் கிளம்பி வெள்ளமாகப் பிரவாகிக்கும் இளம்பருவக் காலம்.
இதெல்லாம் இல்லாமல் முதல் மூன்று மாதங்கள் தேவாங்கு போல் நான் முடங்கிக் கிடந்ததற்குக் காரணம் என் மனக்கோளாறுதான். மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்ற வருத்தம்; என் பாட்சில் சிலர் மெடிக்கல் இல்லை என்றவுடன் பணம் செலவழித்து பி. டி. எஸ். (டெண்டல்) கால்நடை மருத்துவம், பிற மாநிலம் என்று போய்விட்டார்கள். நானும் என்னோடு ஒரு நாலைந்து பேர்கள் மட்டுமே அதே கல்லூரியில் பி. எஸ். சி. தாவரவியல் சேர்ந்தோம். வீட்டில் உறவு சொந்தங்கள் என் அன்னையிடம் “ அடுத்த வருடம் பையன் மெடிக்கல் சேர்ந்துடுவான் இல்லையா “ என்று ரொம்ப அக்கறையாய் கேட்கும் கணங்கள். ஏன் ! சில நண்பர்கள் கூட கேலி பேசி வெறுப்பேற்றினார்கள். இவற்றால் எல்லாம் சோர்ந்து இருந்த என் மனப் பாலைவனத்தில் “ என். சி. சி. விமானப்படைத் தேர்வு” ஓர் அழகிய மாற்றத்தை உண்டாக்கியது. நம்பிக்கை என்ற வற்றாத அமுத ஊற்றை என் மனத்தில் உருவாக்கிவிட்டது.
இளம் பருவத்தின் வேகம் தடைபட்டு நிற்கவும் , தடை நீங்கி ஓடவும் மிகப் பெரிய காரணங்கள் தேவையில்லை. சிறிய காரணமே போதும் என என் வாழ்க்கை மூலம் நான் அறிந்துகொண்டேன். மெடிக்கல் சீட் கிடைக்காதது ஒரு தடையாக நின்றது என்றால், என். சி. சி. ஏர் விங் ஒரு வெற்றியைக் காட்டி அந்தத் தடையை நீக்கியது.
எந்தப் படிப்பு படித்தாலென்ன ? அதிலே சிகரம் தொட வேண்டும். அதுவே வெற்றி என எனக்கு உணர்த்தியது என். சி. சி. பின்னாளில் அதே தாவரவியல் துறையில் நான் முனைவர் பட்டம் பெற்றேன். பல சாதித்தேன்.
இத்தனைக்கும் காரணம் எனது மரியாதைக்குரிய ஸ்குவார்டன் லீடர் ராமன் அவர்கள்தான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தெரிந்துகொண்ட பல விஷயங்களில் முக்கியமானது, நமது முப்படை வீரர்கள் அனைவருமே தங்கள் சீருடை குறித்து மிகப் பெருமை கொள்பவர்களாம். அந்த உடையில் ஒரு குறையோ அல்லது கறையோ இல்லாமல் பேணுவது அவர்கள் கடமையாம். தேசக் கொடிக்குக் கொடுக்கும் மரியாதையை அந்த சீருடைக்கும் தர வேண்டுமாம். எனவேதான் சீருடை பற்றி எனக்கிருந்த ஆசையும் ஆர்வமும் திரு. ராமன் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாயின.
மேலும் சீருடைகளையும் மற்ற பெல்ட், ஷூ, கேப் , பேட்ஜ் போன்ற துணைப் பொருட்களையும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றி இரண்டு மூன்று வகுப்புகள் எடுக்கப்பட்டன,
முழுக்கை சட்டையும் முழு கால்சராயும் எப்போது அணிந்தாலும் அழுக்கின்றித் தூய்மையாகவும், கஞ்சி போட்டு அயர்ன் செய்து விறைப்பாக இருக்கவேண்டும். எல்லாப் பொத்தான்களும் சரியாக இருக்கவேண்டும். பொத்தான் உடைந்ததென்று சேஃப்டி பின் போட்டுக்கொண்டு வந்தால் நிச்சயம் தண்டனை உண்டு.

தோள் பட்டையில் போடப்படும் பதவி சார்ந்த அடையாளங்கள் சரியாகப் பொருத்தப் பட்டிருக்கவேண்டும். தலைகீழாகவோ சாய்வாகவோ இருப்பது தண்டனைக்குரியது.
அடுத்து பெல்ட். மிக முக்கியமானது. விறைப்பான சீருடைக்கும், பரேட் செயல்முறைப் பயிற்சிகளின் போதும் ,பெல்ட் சரியாக பொருந்தியிரா விட்டால எல்லாமே வேஸ்ட். பெல்ட்டைப் பாலீஷ் போட இரண்டு வகை பாலீஷ் தேவை. ஒன்று தோல் பளபளப்பாக லெதர் பாலிஷ் ; இன்னொன்று பிராஸ்ஸோ எனப்படும் மெட்டல் பாலிஷ். பெல்ட்டின் நடுவிலிருக்கும் என் . சி. சி முத்திரை பதித்த மெட்டல் பகுதிக்கும் , குல்லாவில் உள்ள மெட்டல் பேட்ஜுக்கும் அதுதான் சரி. இவற்றைப் பளபளப்பாக்க குறைந்த பட்சம் கால்மணி நேரம் தேவைப்படும்.
அடுத்து ஷூ. சாக்ஸ் எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். பரேட்டில் சும்மா இருக்கும் நேரமெல்லாம் இதைப் பாலிஷ் செய்யும் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
இத்தகைய சீருடை அலங்காரத்திற்கு நிறைய நேரம் தேவைப்படும் என்பதன்றி, அதைப் பராமரிக்கும் டெக்னிக்கும் அறிந்திருக்கவேண்டும். இது சார்ந்த பல விஷயங்களை சீனியர்களிடம் கேட்டுத்தான் அறியவேண்டும்
“இன்ஸ்பெக்ஷன் பரேட் “ நடக்கும் போது சில சீனியர்கள் பாக்கெட்டில் உள்ள சிறு தேங்காய் எண்ணெய் பாட்டிலில் இருந்து பெல்ட், பேட்ஜ் மேலெல்லாம் தடவிவிடுவார்கள் . இன்ஸ்டண்ட் பளபளப்பு வந்துவிடும். ஆனால் அதன் பிறகு உடனே துடைக்காவிட்டால் எறும்பு வந்துவிடும்.
ஒருமுறை இன்ஸ்பெக்ஷன் பரேட் நடக்கும் போது ஸ்குவார்டன் லீடர் ராமன் வந்திருந்தார். என்னைப் பார்த்துவிட்டு,
“ யூ ஆர் த கேடட் ஹூ செட் யூ லவ் த யூநிஃபார்ம் . லெட் மீ சீ யுவர் டர்ன் அவுட் “ என்றார். பார்த்துவிட்டு
“நாட் குட் எனஃப் யூ மஸ்ட் டூ பெட்டர் “ என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுச் சென்றார்.
இது தவிர “செர்மோனியல் பரேட்” என்ற ஒரு ஸ்பெஷல் வகை உண்டு. அதற்கு உடைகளிலும் ,துணைப் பொருட்களிலும், ஷூ ,பெல்ட், கேப் ஆகிய அனைத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். கேப்பின் மேலே சிவப்பு நிறக் குஞ்சமும் இருக்கவேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் நடக்கும் பரேட்களில் பங்குகொள்ள வேண்டுமானால் இத்தகு உடை அணிகலங்களில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்காகப் பல மணி நேரங்கள் செலவிடவேண்டும்.
வீட்டில் என் துணிமணிகளை நான் என்றும் துவைத்து உலர்த்தியது கிடையாது. என் காலணிகளை நான் துடைத்து வைத்தது கிடையாது. ஆனால் என். சி. சி. என்று வந்த பிறகு நானும் என் சகோதரனும் இந்தச் சீருடைகளை துவைத்து, உலர்த்தி, அயர்ன் செய்து வைத்துக் கொள்ள நாங்களே கற்றுக் கொண்டோம். ஷூ வை நாங்களே பாலீஷ் போட்டுக் கொண்டோம்.
இப்போது புரிகிறது. என். சி. சி என்னவெல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்று ! எவ்வளவு கடினமாக இருந்தாலும் என். சி. சி பணிகளை நாங்கள் மறுக்காமல் செய்தோம். காரணம், அதிலே எங்களுக்கு இருந்த ஆர்வம். ஆம்! ஆர்வம் இருந்தால் எந்த வேளையும் பளுவல்ல; எந்த வேலை செய்தாலும் அதிலே ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற மகத்தான தத்துவதை என். சி. சி பயிற்சிதான் எனக்குக் கற்றுத் தந்தது.
இன்னும் பல விஷயங்களை என். சி. சி. யில் நான் கற்றுக் கொண்டேன். அதன் அடிப்படை “ ரிபப்ளிக் டே பரேட் செலெக்ஷன் கேம்ப்” . மலைப் பிரதேசமான கோத்தகிரியில் நடக்கும் இந்த பயிற்சி முகாமுக்கு நானும் என் சகோதரனும் தேர்ந்தெடுக்கப்படடோம். பதினைந்து நாள் முகாம். விதவிதமான அனுபவங்கள்.
கேம்ப் புறப்படும் தேதி தெரிந்த உடனேயே ஒரு “ஷாக்”
( தொடரும்)

‘இளம் பருவ வேகம் தடைப்படவும், தடை நீங்கவும் சிறிய காரணங்களே போதும்’ அனுபவப் பாடம் தரும் அரிய செய்தி.
LikeLike