அதிகாலை நேரத்திலேயே கூட்டம் கூடி விட்டது. யாரோ சொல்லி யாரோ காசு வசூலித்து ஒரு பந்தலும் போட்டு விட்டார்கள். படபடவென்று நாற்காலிகளும் முளைத்து விட்டன. சிலவற்றின் பெயர் நாற்காலி என்றாலும், ஒரு கால் ஊனமாகி ஊசலாடிக் கொண்டிருந்தன.
“அதென்ன ஓய் சதுரன் சதுரின்னு ஒரு பெயர்?” இந்தக் கேள்வியை அவர் குறைந்தது இருபது முறையாவது கேட்டிருப்பார்.
“அவங்க பாட்டி காலத்து பேரு ஓய். அவா எல்லாமே ஏழு தலமுறையா சதுர் ஆடறவா”
கேட்டவர் இலேசாக முகத்தைச் சுளித்துத் தன்னுடையப் புனிதத்தை நிரூபித்துக் கொண்டார். “சதுர் ஆடறதுன்னா என்னாங்காணும்? பரதம்தானே!?”
“அதெப்படி? சதுர்னா பாடிண்டே ஆடணும். பரதம்னா நட்டுவாங்கம் இருப்பா. அவா பாடுவா.” இப்படி பல பேச்சுகள், நிறைய எதிர்பார்ப்புகள்.
ஜமீன்தார் வரப் போகிறார் என்றொரு பேச்சு. பெரிய ஜமீன் வெளியே வருவதே அபூர்வம்.
அவ்வளவு அதிகாலையிலும் விடாமல் வெற்றிலையை வேட்டியில் ஈரம் போக தேய்த்துத் தேய்த்து அதக்கிக் கொண்டிருந்தனர் சிலர். சீவல், சுண்ணாம்போடு “கும்மோணம் கறுப்பு வெத்திலை ஓய்!” என்கிற ஜம்பமும் பல வாய்களில் மெல்லப் பட்டுக் கொண்டிருந்தது. ஒரே சலசலப்புதான். யாரோ சொல்லி ஒரு பித்தளைக் கூஜா நிறைய காபியும் வந்து, நான், நீ என்று ரவுண்ட் கட்டிக் கொண்டிருந்தது.
எந்த சலசலப்பும், சதுரியை எட்டினதாகத் தெரியவில்லை. அவள் கண்கள் எங்கேயோ நிலைகுத்தி நின்றுக் கொண்டிருந்தன. வைத்தியர்கள் உதடுகளைப் பிதுக்கி இருபது நாள் ஆயிற்று. ஆனால் ஊசலாடிக் கொண்டிருந்தாள். நினைவே இல்லை. அசைவும் இல்லை.
“பெரிய ஜமீன் வந்தா ஒரு வேளை….” வெற்றிலையைத் துப்பி விட்டு மேல் துண்டால் உதடுகளைத் துடைத்துக் கொண்டே சற்று எகத்தாளமாகவேதான் கேட்டார் ஒருத்தர். எல்லோர் உதடுகளிலும் ஒரு நமட்டுச் சிரிப்பு. ஒரு சின்ன சந்தோஷம். ஆனால் ஜமீன் வந்தும் எதுவும் ஆகவில்லை. பல காலமாக சதுரியின் பரம்பரையை போஷித்து வந்தவர். அது மட்டும்தான். வேறு எதுவும் கிடையாது. அந்த மரியாதைக்கு வந்திருந்தார். சதுரியிடம் அசைவே இல்லை. மூச்சுக் காற்று மட்டும் ஒரு நூலாகப் போய் வந்து கொண்டிருந்தது.
“அவ காலத்துல அவ ஆடாத ஆட்டமா? பாவம் ஓய். அந்த நடராசனுக்கு இரக்கமே இல்லை.”
உடனே கூட்டம் இவர்கள் பக்கமாகத் திரும்பியது. அப்படியாகப் பழம் பெருமையை சிலர் தொடர்ந்தனர்.
“அந்த ரெண்டு காலும் ஆடாம கெடக்கறது இந்த இருபது நாளாத்தான் ஓய். அவ ஆடாத ஆட்டமா”
சிலர் நாயை அழைப்பது போன்ற சப்தத்தை எழுப்பித் தங்களையும் சம்பாஷணையில் இணைத்துக் கொண்டனர். அங்கே இருந்த ஒரு பொக்கைவாய் கிழவர் மெல்லத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். உடனே கூட்டம் அவர் பக்கம் திரும்பியது.
“இவ ஆட்டம் இல்லாம சாமி பொறப்பாடு ஏது?” மறுபடியும் நாயை அழைக்கும் சப்தம்.
“அதுவும் மல்லாரிக்கு அவ ஆடற ஆட்டம் இருக்கே?” இப்போது இன்னும் பலரும் உதடுகளைச் சுழித்து அந்த சப்தத்தை எழுப்பினர்.
“கம்பீர நாட்டைல ஆரம்பிக்க வேண்டியதுதான். அப்பிடியே சிலித்துண்டு வந்துடுவோ சதுரி. கைல குடம். குடத்துக்குள்ள விளக்கு. அப்பிடியே ஸ்வாமியை சுத்தி சுத்தி மூணு பிரதக்ஷிணம். அப்பவே அவ நினைப்பு அவ கிட்டே இருக்காது ஓய். சன்னம் வந்தா மாதிரிதான் இருப்போ. கண்ணும், காலும் ஒரு நிலைல இருக்காது. அவளை அறியாம அப்பிடியே கால் திம் திம்முனு பூமியை அதிர அதிர குத்தும். நாதஸ்வரக் காராளும் ஸ்வாமியை சுத்தி வருவா. அப்ப வெறும் தவில் மட்டும்தான் வாசிப்பா. அதனால அதுக்குத் தட்டுசுத்துன்னு பேரு. ஸ்வாமிக்கு த்ருஷ்டி சுத்தறதுக்காக அப்பிடி செய்வாளாம்”
அப்பிடியே உருகிப் போய் கேட்டுக் கொண்டிருந்தது கூட்டம். உள்ளே சதுரியின் நிலையில் முன்னேற்றமே இல்லை. பெண்டுகள் சுற்றி அமர்ந்திருந்தனர். கூடம் சற்றுப் பெரிது. பதினைந்து பேர் வரை அமரலாம். இரண்டு தலைமுறைகளுக்கு முன் அரசர்களோ, ஜமீனோ கொடுத்தக் கொடை என்று ஊர் திண்ணைகளில் அரசல் புரசலாகப் பேச்சு.
“மல்லாரிக்கு ஆடறதுன்னா, சதுரிதான் ஓய். அவளை அடிச்சிக்க ஜில்லாவுலயே ஆளே இல்லெங்காணும்.” தாத்தா தொடர்ந்தார். அவர் கண்களில் ஒரு மயக்கம். “முதல்ல நாதஸ்வரக் காரா. அடுத்து சதுரி. அப்பறம் ஸ்வாமி தேரு. அப்பறம் வேத கோஷம். அப்பறம் தேவாரம்னு அப்பிடியே ஜே ஜேன்னு இருக்கும்.”
தான் விவரித்ததைத் தானே ரசித்தப் படி தொடர்ந்தார் தாத்தா. “சாயரட்சைக்கு ஆரம்பிச்சா விடிஞ்சிதான் ஸ்வாமி நிலைக்குத் திரும்பும். சலிக்காம ஆடுவோ சதுரி.”
அந்தப் புகழ் வார்த்தைகளால் உந்தப் பட்டு, இலேசாக சதுரியின் வீட்டு சன்னலை எட்டிப் பார்த்துக் கொண்டனர் சிலர்.
“மல்லாரின்னா மல்லாரிதான். அதுக்கு ஈடு உண்டா? கண்ணை மூடிண்டு கேட்டாக்க, ஸ்வாமி புறப்பாடு அப்பிடியே ப்ரத்யக்ஷமா தெரியும். இருந்த இடத்துல இருந்தே மல்லாரியைக் கேட்டுண்டே, கோவில்ல என்ன நடக்கறதுன்னு சொல்லிப்புடலாமே! திருமஞ்சன மல்லாரி கேட்டா ஸ்வாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் வந்துண்டு இருக்குன்னு அர்த்தம். தளிகை மல்லாரி வாசிச்சா, மடப்பள்ளியில இருந்து தளிகை வருதுன்னு தெரிஞ்சிக்கலாம். அப்பறம் சின்ன மல்லாரி, பெரிய மல்லாரின்னெல்லாம் உண்டு”
சில சிறிய வயதுக் காரர்கள் ஆஹா, ஓஹோ என்று வியந்தனர். கிழவருக்கு கிரீடம் வைத்தது மாதிரி ஆனது. விடுவாரா? “குளிக்கரை பிச்சப்பா, செம்பனார்கோவில் சகோதரர்கள் எல்லாம் மல்லாரி வாசிச்சிக் கேட்கணும். ஆஹா ஆனந்தம். ஆனந்தம்” என்று கண்களை மூடி சிலாகித்துக் கொண்டார் கிழவர்.
கிழவர் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது வந்து நின்றது ஒரு வில் வண்டி. உயர்ந்த ஜாதி எருதுகள். அலங்காரமான வண்டி. களைத்துப் போன காளைகளைப் பார்த்தால் சற்று தொலைவில் இருந்து வந்த வண்டி போலத் தெரிந்தது. முதலில் இறக்கப் பட்டது ஒரு தவில். தொடர்ந்து மற்றொன்று. கறுத்த மேனியராக, கட்டையும், குட்டையுமாக இரண்டு பேர் இறங்கினர். அடுத்தபடியாக நாதஸ்வரத்தைக் கைகளில் ஏந்தியபடி இறங்கினார் முத்துக்காளை. கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் சடசடவென்று எழுந்தனர். ஆஹா, ஆஹா என்ற சப்தங்கள் அந்த பந்தலின் மூலை முடுக்குகளிலெல்லாம் முளைத்துப் பறந்தன.
கைகளைக் கூப்பி வணங்கியபடி வந்தார் முத்துக்காளை. வனப்பான தேகம். வயதானாலும் கட்டுக் குலையவில்லை. மாநிறம். வெற்று மார்பில் தங்கச் சங்கிலி. ஒவ்வொரு கையிலும் இரண்டிரண்டு காத்திரமான மோதிரங்கள். வித்தையின் கம்பீரத்தை அனாயாசமாகக் காட்டும் கருவண்டுக் கண்கள். நெற்றி நிறைய விபூதியும், குங்குமமும். சுருக்கமாகச் சொன்னால் வாலிபம் தாண்டியும் வனப்புக் குறையாத, ஆண்மகன்.
வீட்டினுள் இருந்து வந்த சிலர் முத்துக்காளையிடம் எதுவோ பேசினர். முத்துக்காளையும் உள்ளே சென்று சதுரியைப் பார்த்து விட்டு வந்தார். வெள்ளித்தம்ளரில், குங்குமப் பூ போட்டுப் பதமாகக் காய்ச்சிய பால் தரப் பட்டது. குடித்து முடித்தவுடன் பலகைகள் பந்தலில் போடப் பட்டன. முத்துக் காளை அமர்ந்து கொள்ள, தவில் வித்வான்கள் பக்கத்துக்கு ஒருவராய் அமர்ந்து கொண்டனர். பந்தல் முழு அமைதியானது. எல்லோர் மனங்களிலும் இனம் புரியாத ஆவல், இதோ இதோ என்று ஒரு தவிப்பு, எதிர்பார்ப்பு, பரபரப்பு.
கண்களை மூடி ஸ்வாமியைத் தியானித்துக் கொண்டுத் தன் கைப்பையில் இருந்து எதையோ எடுத்தார் முத்துக்காளை. ஒரு ஜோடி சதங்கை ! பெண்கள் மரியாதையாக அவைகளை ஏந்தி உள் சென்றனர். சதுரியின் கால்களில் சதங்கைகள் பூட்டப் பட்டன. அது வரை கண்களை மூடி தியானித்திருந்தார் முத்துக் காளை. சீவாளியை ஊதிப் பார்த்துக் கொண்டார். காவிரியின் புது வெள்ளம் போல மெல்ல எழுந்து, பரவி வியாபிக்கத் தொடங்கியது ஸ்ருதிப் பெட்டியின் இசை. மூடிக் கிடந்த அறைக்குள், ஜன்னலைத் திறந்தவுடன், குபுகுபுவெனப் புகும் காற்றைப் போலப் புகுந்துப் புறப்பட்டது த்வனி. தவில்காரர்கள் மெல்ல வாத்தியங்களைத் தடவி உயிரூட்டினர். மூடியக் கண்களைத் திறக்காமலேயே நாதஸ்வரத்தை உதடுகளில் பொருத்திக் கொண்டார் முத்துக்காளை. அவருடைய ஒவ்வொரு அசைவிலும் பிரார்த்தனைத் தெரிந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தது பந்தல்.
அந்தக் காலை வேளையில் அந்த அமைதி, தெய்வீகமாகத் தோன்றியது. பறவைகளும் கூட சப்தமெழுப்பாமல் நடப்பவைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கி இருந்தன. பந்தலின் கீற்றுகளை அசைத்து விளையாடிக் கொண்டிருந்த காற்று கூட எதற்கோ பிரமிப்புடன் காத்து நின்றது.
நாபியில் இருந்து மூச்சை எழுப்பி ஆரம்பித்தார் முத்துக்காளை. அதிகாலையில் ஸ்வாமியை எழுந்தருளப் பண்ணும் தேர் மல்லாரி. ஒடக்கூறு என்று பேச்சு வழக்கில் சொல்லப் படும் உடற்கூறு என்கிற ஒரு இசைவகையை வாசிக்க ஆரம்பித்தார். மாயாமாளவகௌளை அவர் உயிர் மூச்சிலிருந்து பீறிட்டு மென்மையாக எழுந்தது. உடல் நிலையற்றது என்பதை விளக்கும் இசைவகை அது. முதலில் சர்வலகுவில் ஒரு கடினமான நடையை வாசித்து விட்டு, பின் த கி ட த க தி மி, த கி ட த க தி மி என்று மிஸ்ரத்தில் நாதஸ்வரத்தை நெருக்கமாகத் தொடர்ந்தார் தவில் வித்வான். மிஸ்ர தாளத்தில் மட்டுமே வாசிக்கப் படும் மல்லாரி அது. மெல்ல மேலெழும்பி, கிளர்ந்துப் பரவியது நாதம் நாகத்தைப் போல சர சரவென்று.
உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது போலவேத் தோன்றியது. கண்களில் கண்ணீர்ப் பூக்கள் பூக்க, தன் சம காலத்துக் கலைஞர் ஒருவரின் வேதனையை வேரறுக்க, அவள் உயிர்தாகத்தைப் போக்க, தன் உயிர்காற்றைக் கொடுத்துப் போராட ஆரம்பித்தார் முத்துக்காளை. தெய்வீகப் போராட்டமல்லவா அது? அவரின் எத்தனை எத்தனை மல்லாரிகளுக்கு ஆடியிருக்கிறாள் சதுரி! முத்துக்காளையின் நாதஸ்வர த்வனியும், சதுரியின் கால சலங்கை மணிகளும் கூடிக் கூடிக் களித்த நாட்கள் எத்தனை!? அவர்களின் போட்டிக்காகவேக் காத்துக் கொண்டிருக்குமே சனம்!
மூச்சுக் காற்றோடு தனது ஆழமான பிரார்த்தனைகளையும் உட்செலுத்தினார் முத்துக்காளை. கூடத்தில் பெண்டுகள் நகர்ந்து அமர்ந்தனர். பேச்சையும், மூச்சையும் மறந்து குடிகாரர்களைப் போல இசையை மாந்தி அரவமற்றுக் கிடந்தது பந்தல்.
மல்லாரியின் லயவின்யாசங்கள் காதுகளைத் தொட்டதும் சிலிர்த்தது சதுரியின் உடல். நெட்டுக் குத்தி நின்ற கண்கள் மெல்ல உயிர் பெற்றன. அசைவற்றுக் கிடந்த கால்கள், மெல்ல அசைந்தன. பெண்கள் ஒருவரையொருவர் அண்டி அமர்ந்து விம்மியழத் தொடங்கினர். பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் வியப்பின் உச்சியில் எழுந்து நின்று கூடத்தைப் பார்க்கத் தொடங்கினர்.
தன்னைச் சுற்றி நடப்பவைகளை மறந்தவராக இறைவனிடம் இறைஞ்சியபடியே வாசிப்பில் மூழ்கினார் முத்துக் காளை. மாயமாளவக் கௌளையின் ஆலாபனையை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, லயத்துக்கு நேரம் கொடுத்து, இரண்டாம் காலத்துக்குத் தாவினார். ஒலியில் விறுவிறுப்புக் கூடியது. லயம் அதைத் தொடர்ந்தது. இரண்டு தவில் வித்வான்களுமே இயைந்து வாசித்தனர். எல்லோருமே விசையால் உந்தப் பட்டவர்கள் போல, இயக்கப் பட்டவர்கள் போல, மயங்கிக் கிறங்கிக் கிடந்தனர். இசையும் லயமும் ஔடதங்களாயின.
தன் நினைவில் ஸ்வாமி புறப்பாடைச் சிலிர்ப்பாக உணர்ந்தாள் சதுரி. அவள் கண்களில் உயிர் துடித்தது. அவள் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. மூச்சுக் காற்றுத் தாறுமாறாகக் கிளம்பிக் கிளம்பிப் பின் சீரானது. அந்த கிராமத்தின் எல்லைகளைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது தவில்களின் ரீங்காரம். குளிர்ந்துப் போயிருந்த சதுரியின் உடலில் சூடு பரவத் தொடங்கியது. இரத்த சொந்தங்கள் நடக்கும் இரசாயன விந்தையினைப் பார்த்து கண்ணீரில் மூழ்கிக் கிடந்தன.
மல்லாரி திடீரென வேகம் பிடித்தது. வெறி பிடித்தவர் போல வாசிக்கத் தொடங்கினார் முத்துக் காளை. அவரது வேகத்தை மிஞ்சுவதே தம் தர்மம் என்றுணர்ந்து விளாசத் தொடங்கினர் தவில் வித்வான்கள். மூன்றாவது காலம் திமிலோகப் பட்டது. சுற்றிச் சுழன்று சூறாவளியாய் புகுந்துப் புறப்பட்டன ஸ்வரக் கோவைகளும், லயச்சொற்களும்.
சதுரியின் கண்கள் உயிர்த்து மலர்ந்தன. காதுகள் விடைத்துக் கொண்டன. காலங்காலமாக அவளை ஆட்டுவித்திருந்த மல்லாரி அவள் காதுகளின் வழியே அவள் உயிர் நாடிக்குள் தண்ணென்று இறங்கியது. களைத்துச் சோர்ந்து போயிருந்த உயிர்த் திவலைகள் புத்துயிர் பெற்றன.
கால்களைப் பளார், பளார் என்று தரையில் அடித்துக் கொண்டே தாளத்தில் லயித்துக் கொண்டிருந்த முத்துக்காளை முழுவதுமாய் தன்னை மறந்தவராய் இசையைக் கட்டி எழுப்பினார். பந்தலில் பரவி, காற்றைக் கிழித்துக் கொண்டு, கதவுகளைத் தாண்டி, கூடத்தில் நுழைந்த இசை, ஏற்கனவே பல காலமாக ஆட்டுவித்திருந்த, அவள் காற்சலங்கைகளின் ஒவ்வொரு மணியையும் தடவித் தடவி வருடி அசைத்துப் பார்த்தது. அவளைச் சுரீரெனத் தட்டி எழுப்பியது.
“சதுரி, ஸ்வாமி புறப்பாடுக்கு நேரம் ஆச்சே” என்று யாரோ அவளைத் தட்டி எழுப்பினார்கள். திடும் என்று எழுந்தாள் சதுரி. கூட்டம் ஹா வென்று அலறியது. உடல் நடுங்க, சேலை கலைய வெறி வந்தவளைப் போல எழுந்தாள் சதுரி. மூச்சுத் தடுமாற, மிஸ்ரத்தின் மூன்றாவது காலம் அவளை சுழற்றி சுழற்றி அடித்தது. ஜல் ஜல் என்று பெரிய மணிகள் குலுங்க, வெற்றிடத்தில் அலையும் கைகள் முத்திரைகளைத் தேடித் தேடித் தடுமாற..…… ஒரே ஒரு அடி, ஒரே ஒரு அடி எடுத்து வைத்தாள் சதுரி. ஒரே ஒரு அடிதான். அந்த ஒரே அடியில் அவளின் உடலே நாதமாக உருமாறியது. அவளின் நாடி நரம்புகளில் மல்லாரி நிறைந்துத் தளும்பியது. பிறவிப் பயனை அடைந்தாள். ஒரே ஒரு அடிதான். சலங்கைக் குலுங்க அடித்து நிமிர்ந்தவள் திடீரென வேரற்ற மரம் போல விழுந்தாள். அதே நொடியில் நின்றது நாதம். ஆணியடித்தாற் போல நின்றது லயம். பந்தல் சிலிர்த்து எழுந்தது.
தன் இறுதி மூச்சு வரை இறைவனுக்கேத் தன்னை அர்பணித்துக் கொண்ட சதுரி, ஆடின கால்கள் ஆடினபடி, விழுந்துக் கிடந்தாள். அவளின் இறுதி மூச்சு நாதஸ்வர இசையோடும், லயத்தின் ஒலிகளோடும் கலந்து, மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது. பெண்கள் விக்கித்து நின்றனர். பந்தல் கலங்கி நின்றது.
அவள் கிளம்பினாள். மல்லாரி அவளைக் கிளப்பிப் பின் அடங்கியது.



ஐயா,
என்னுடைய இந்தச் சிறுகதையைப் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றிகள்.
அனந்த் ரவி.
LikeLike
மிகவும் அற்புதமான கதை.
LikeLike
பாராட்டுக்கு நன்றிங்க
LikeLike
அற்புதமான சிறுகதை. அந்தக் காலத்துக் கதை ஒன்றினைப் படித்த உணர்வு. இசை, மனிதம் தொடர்பான உணர்வுகளைத் தட்டியெழுப்பிய சிறுகதை. வாழ்த்துகள்.
LikeLike
நல்ல வார்த்தைகளுக்கு மிகுந்த நன்றிங்க
LikeLike
கதை அருமை. அதனுடன் தில்லானா மோகனாம்பாள் கோபுலு அவர்களின் ஓவியம் அற்புதம்
LikeLike
உங்கள் பாராட்டுக்கு நன்றி மா
LikeLike
மிகவும் அனுபவித்துப் படித்தேன். அழகான நடை. நுணுக்கமான விவரணைகள். படிப்பதே ஒரு சுகானுபவம் என்றால் அதுவே ஆசிரியரின் வெற்றி.
வாழ்த்துகள் அனந்த்ரவி.
LikeLike
கடந்து போன காலங்களைக் கண்முன்னே கொண்டு நிறுத்தியது. தூய்மையான எழுத்து நடை
LikeLike
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்
LikeLike