
குமுதம் என்னும் முத்திரை மோதிரம்
![]()
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸில் என்ன ஆயிற்று தெரியுமா?
என்ற கொக்கியுடன் கடந்த அத்தியாயத்தில் கமா போட்டிருந்தேன்.
எங்கள் ஹனி மூனை ஏற்கனவே ஒரு வாரத்துக்குத் தள்ளிப்போட்டு, பிறகுதான் கிளம்பியிருந்தோம்.
மற்ற யாராவது இப்படி ஒரு காரணத்துக்காகத் தேன் நிலவை ஒத்திப்போட்டதாகச் சரித்திரமே இருந்திருக்காது. நாங்கள் செய்தது கின்னஸ் ரெக்கார்ட். யெஸ். ஒரு மீட்டிங்குக்காகத் தள்ளிப்போட்டோம். ஆபீஸ் மீட்டிங்கா? நோ.
அப்போதென்று பார்த்து விகடன் பொன்விழாவுக்கு அற்புதமாய் ஒரு பத்திரிகை அனுப்பியிருந்தார்கள். மூன்று நாட்கள் விழா நடந்ததாக நினைவு.
தங்கத் தகடுபோல் விகடன் சைஸுக்கு இரண்டு பக்கங்களுக்கு விழா அழைப்பிதழ். முதல் பெருமிதம்… சில கதைகள் மட்டுமே எழுதியிருந்த என்னையும் நினைவு வைத்துக்கொண்டு விகடன் அனுப்பியதுதான். (எனக்கே சீனியர் என்பதால் எனக்கு முன்பே இவருக்கும் இன்விடேஷன் வந்துவிட்டது)
ஹனிமூனாவது இன்னொன்றாவது! விகடன் பொன்விழாவை முடித்துவிட்டுத்தான் எங்கேயும் போவது என்று இருவருமே ஏக மனதாக முடிவெடுத்தோம். நல்ல வேளையாய் இருவருக்கும் ஒரே நோக்கமாக இருந்ததால் பொன்விழாவுக்கு சந்தோஷமாகப் போனோம்.
விகடன்தான் எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் சிறப்பாகச் செய்வார்களே. அருமையாக விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.
அதனால் என்ன ஆச்சு தெரியுமா?
எத்தனை மணிக்கு விழாவோ அத்தனை மணிக்கு அங்கே இருக்கிறமாதிரி இருவரும் போய் நின்றால்…
ரோடில் நுழையக்கூட இடம் இல்லை. எப்படியோ நெரிசலில் நீந்தி உள்ளே போனோம். எல்லோரும் பல மணி நேரத்துக்கு முன்பே வந்து உள்ளே போய்விட்டார்கள்.
அப்போதெல்லாம் சிசி டிவி இருந்ததா என்பதெல்லாம் நினைவில்லை. நாங்கள் அரங்கத்துக்குள் போய்த்தான் பார்க்க வேண்டுமென்று சிரமப்பட்டு இன்விடேஷனைக் காட்டி உள்ளே போய்விட்டோம். அரங்கத்தின் கொள்ளளவைவிட ஒன்றரைப் பங்கு ஆடியன்ஸ் இருந்தார்கள். ஏராளமானவர்கள் வாசகர்கள்.
எப்படியோ போய்விட்டோம். முழு விழாவையும் ஓரத்தில் நின்று கொண்டே பார்க்க வேண்டிய நிலை.
அப்படி நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் பரபரவென்று கண்களை உருட்டிக்கொண்டு வேகமாக வந்தார். (யாரென்று தெரிந்தால் அசந்து போய்விடுவீர்கள்). முக்கிய நபர்களை வரவேற்று நல்லபடியாக உட்கார வைக்கவேண்டிய பொறுப்பில் இருந்தார் . தங்க நிற விகடன் பொன்விழா பேட்ஜ் அணிந்திருந்தார்.
நாங்கள் இருவரும் அன்றும் இன்றும் எப்போதுமே பிரபலம் கிடையாது. வந்தவர் யாரையோ நோக்கி வருகிறார் என்றுதான் நினைத்தோம்.
நேராக இவரிடம் வந்தார். அந்த நபரிடம் பேசுவதற்குப் பலர் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, கியூவில் காத்திருப்பது வழக்கம். அப்படிப்பட்டவர்..
“ஆர் யூ மிஸ்டர் பாமா கோபாலன்?” என்று கேட்டார்.
இவர் ஆமாம் என்றவுடன்,
“ரெண்டு பேரும் டக்குன்னு என் பின்னாடி வாங்க” என்றார்.
பெயரைக் கேட்டிருக்காவிட்டால் வேறு யாரோ என்று தவறுதலாக அழைத்துச் செல்வதாய்த்தான் நினைத்திருப்போம்.
ரிசர்வ் செய்த சீட்கள் இரண்டைக் காண்பித்து “ஒக்காருங்க ரெண்டு பேரும்” என்றார்.
“சார்.. நாங்க வி ஐ பி இல்லை.” என்று இவர் பயத்துடன் சொன்னார்.
“வி ஐ பிதான். பிகாஸ் நீங்க புதுசாக் கல்யாணம் ஆனவங்க..” என்று தனக்கே உரிய அழகான ஆங்கிலத்தில் சொன்னார்.
குமுதம் பேட்டி மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார்!
“நன்றி சார்.. ரொம்பவும் நன்றி” என்று இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல,
“மொதல்ல உட்காருங்க..எனக்குப் பல வேலை இருக்கு” என்று ஓடி விட்டார். (பக்தி சினிமாக்களில் கடவுள் வந்து உதவுகிற மாதிரி).
விகடன் பத்திரிகையுடன் நெருக்கமான அவர் வேறு யாரும் இல்லை.
துக்ளக் ஆசிரியர் சோ சார்தான் !!
இத்தனை அற்புதமான அனுபவத்தை அளித்த அந்த விழாவிற்கப் போக வைத்த இறைவனுக்கு நன்றி சொன்னோம்.
இப்போது…
ஹனிமூன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்க்கு மறுபடி வருவோம்..
ஹனிமூன் என்றில்லை.. எந்தப் பயணமானாலும் குழந்தைபோல் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன் நான். ரயிலோ, பஸ்ஸோ, காரோ ஓரசீட் பிடித்து வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
விடுவேனா? எனக்குப் பிடித்தமான ஓர சீட்டில் உட்கார்ந்தேன் உற்சாகமாக. அவர் சிரித்தார். தண்ணீர் பிடித்துவர இறங்கிப்போனார்- டிக்கட்டைக் கொடுத்துவிட்டு..
அப்போது ஓர் இளைஞன் வந்து தன் டிக்கெட்டையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தார்.
“மேம். இது என் சீட்” என்றார்.
மறுத்தேன். என் டிக்கெட்டைக் காண்பித்தேன். பயமும் டென்ஷனும் பிடித்துக்கொண்டது. தேதியைப் பார்த்தார். அன்றைய தேதிதான். கம்பார்ட்மென்ட்டும் கரெக்ட். சீட் நம்பரும் மிகச் சரியாக இருந்ததால் எனக்கு மூச்சு வந்தது.
ஆனால்… அந்த இளைஞரும் தன் டிக்கெட்டைக் காண்பித்தார். டிட்டோ டிட்டோ.
ஒரு வேளை தேதி மாறி வந்துவிட்டோமோ என்ற இருவருமே பார்க்க..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
எனக்கு டென்ஷனில் உடம்பு நடுங்கியது. ஓர சீட் இல்லாவிட்டால் போகிறது. பயணமே இல்லை என்றாகிவிடுமோ?
என் கணவர் வந்துவிட்டார். ‘அப்பாடா’.
இத்தனைக்கும் அவர் முரட்டு சிங்கமெல்லாம் கிடையாது. வேறு வழியில்லை என்றால் என்னையும் கூட்டிக்கொண்டு இறங்கிவிடத் திட்டமிடுமளவு அப்பாவி.. பயந்தாங்கொள்ளி.
ஆனாலும் அவர் ஏதாவது செய்வார் என்று நம்பிக்கைதான்.
அப்போது அவர் நீண்ட தலைமுடி வைத்திருந்தார். அவர் நா பார்த்தசாரதியின் ரசிகர். எனவே நா பா- மாதிரியே முடி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் அவரை முதலில் சந்தித்தபோது நீளமான தலைமுடியுடன்தான் இருந்தார். (பாகவதர் கிராப்) மற்றவர்களிலிருந்து அவரை அது வித்தியாசப்படுத்திக் காட்டியதால் நானும் அதை ஆதரித்தேன்.
இதோ வந்துவிட்டார். கடகடவென்று சொல்லிவிட்டேன்.
இப்போது அவர் வருவதைப் பார்த்து அந்த இளைஞன் டக்கென்று ஒரு கேள்வி கேட்டார்.
“சார் .. அட.. நீங்க எழுத்தாளர் பாமா கோபாலனா?”
‘ஆமாம்”
“போன வாரக் குமுதத்தில் உங்க ரெண்டு பேர் பேட்டி வந்திருந்தது. நீங்க புதுசாக்கல்யாணம் ஆனவங்கதானே? அப்பிடின்னா இது ஹனிமூன் ட்ரிப்பா” என்றார்.
என் கணவர் உற்சாகத் தலையாட்டினார்.
அவ்வளவுதான்.
“ஸாரி சார்.. ஸாரி மேடம். தேவையில்லாத சிரமம் கொடுத்துட்டேன். இது ரயில்வேக்காரர்கள் செய்துவிட்ட அபூர்வமான தவறு. டி டி ஆர் வந்தவுடன் வேறு சீட் கொடுக்கும்படி கேட்டு நான் போய்விடுகிறேன். அது வரை இதோ.. இப்டி ஓரமாய் உட்கார்ந்துக்கறேன்..” என்றார்.
குமுதத்தில் போட்டோவும் பேட்டியும் வந்தால் அது எவ்வளவு பெரிய அலையை ஏற்படுத்துகிறது என்பது அப்போதுதான் புரிந்தது.
டி டி ஆர் வந்தார். டிக்கெட்களைப் பார்த்து வியந்தார். அப்போதெல்லாம் டிக்கெட் விவரங்களைக் கையால் எழுதித் தருவார்கள் என்று நினைவு.
“வேற சீட் தரேன். அபூர்வமாய் இப்படி நடக்கறது உண்டு. உங்களில் யாரு வேற சீட் போறீங்க?” என்று கேட்டபோது அந்த இளைஞர் வேகமாய் இடை மறித்துச் சொன்னார்.
“நான் போறேன் சார். அவங்க புதுசாக் கல்யாணம் ஆனவங்க” என்றார்.
டி டி ஆர் எது பற்றியும் கவலைப்படாமல் வேறு சீட் அலாட் செய்துவிட்டுப் போய்விட்டார்.
குமுதத்தில் போட்டோவும் பேட்டியும் வந்தால் அது எவ்வளவு பெரிய அலையை ஏற்படுத்துகிறது என்பது அப்போதுதான் புரிந்தது. உங்களுக்கு அந்த சிலிர்ப்பைக் கடத்துவதற்காகவே இந்த மூன்று நிகழ்வுகளைச் சொன்னேன்.
இனி நேராக 151 புரசைவாக்கம் நெடுஞ்சாலைக்குப் போய்விடுவோம்.
ஆம். அதுதான் குமுதம் ஆபீசின் முகவரி. அத்தனை நாளும் வெறும் முகவரி மட்டுமே எனக்குத் தெரியும். கதைகளைப் போஸ்ட் செய்வோம். நேரில் போய்க் கொடுத்தவர்கள் கேட்-டில் உள் செக்யூரிட்டியிடம் கொடுத்துத் திரும்பியதாகச் சொல்வார்கள். (திருமணப் பேட்டிக் கட்டுரை கொடுப்பதற்கு கோபாலன் சென்ற சிமயம் தவிர அந்த காம்பவுண்ட் அதிகப் பரிச்சயமில்லை).
அது வரை என் கணவர் எழும்பூரில் இருந்த கட்டுமானக் கம்பெனி ஒன்றின் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பிரபல எழுத்தாளர் ஜே எஸ் ராகவன் அவருடன் வேலை பார்த்தார். (பழைய கல்லூரி நண்பர்களும்கூட).
அந்த வேலைக்கு ஒரு சோதனை வந்தது. உடனே இலங்கைக்கு மாற்றல் ஆகிப் போக வேண்டும் என்றார்கள். அப்போதுதான் எங்களுக்கு மகன் பிறந்திருந்து சில நாட்களே ஆகியிருந்தன. வயதான மாமனார் இருந்தார். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த சமயம்.
என் கணவரால் மாற்றலை ஏற்க முடியாத நிலையில் ராஜினாமா கொடுக்கச் சொன்னார்கள். கொடுத்தார்.
எதிர்காலம் கேள்விக் குறியானது. எந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்று அப்போது நான் உணராததால் கலங்கிப்போயிருந்தேன்.
ரிசைன் செய்துவிட்டு என் கணவர் கோபாலன் மின்சார ரயிலில் எழும்பூரிலிருந்து குரோம்பேட்டை வரும்போது சந்தித்த நபர் எங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றினார்…
எ.கு. நா தொடரும்.

அருமையான எழுத்து நடை. அருமையான நிகழ்வுகள். நல்லதொரு வாசிப்பு தந்தமைக்கு நன்றி அம்மணி.
LikeLike