ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal) - YouTube

நரி விருத்தம் என்னும் நூல், ஐம்பெருங்காப்பியங்களுள்‌ சிறப்பாகக் கருதப்படும் சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்க தேவரால்‌ இயற்றப்பட்ட அருமை வாய்ந்த நீதிநூல் ஆகும்‌. திருத்தக்கதேவர்‌ சோழர்‌ மரபில் வந்தவர்.  இவர்‌ இளமையிலேயே வடமொழியிலும்‌ தென்‌மொழியிலும்‌ தேர்ச்சி மிக்கவராய்த் திகழ்ந்தார். பின்னர் துறவு பூண்டார்.

ஒருசமயம்‌ அவர்‌ மதுரைக்குச்சென்று சங்கப்‌ புலவரோடு பழகி வந்தார்‌. அப்போது ஒருநாள்‌ சங்கப்புலவர்‌ தேவரை நோக்கி, ”அருகசமயப் புலவர்‌ துறவு நூல்களைப் பாடும்‌ திறம்‌ பெற்றிருக்கின்றனரேயன்றிச்‌ சிற்றின்பச்‌ சுவை பொருந்திய நூலைப் பாடும் திறமை பெற்றாரில்லை” என்று சொன்னார்கள், அதற்குத் தேவர்‌, “ஜைனர்‌ சிற்றின்பச்‌ சுவையை வெறுத்துத்‌ தள்ளினர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்குச் சிற்றின்பம் பற்றிப்‌ பாடத்‌ தெரியாமல்‌ இல்லை“ என்று கூறினார்‌. அதைக்‌ கேட்டுச்‌ சங்கப்புலவர்‌, “அங்ஙனமாயின்‌ நீர் சிற்றின்பச்‌ சுவை பொருதிய ஒரு நூலை இயற்றி எங்களுக்குக்‌ காட்டுவீராக,” என்றனர்.

 உடனே தேவர்‌ ஒப்புக்கொண்டார். தம்‌ ஆசிரியரிடத்தில் சென்று தம் கருத்தை வெளியிட்டார். அவர்‌, தம்‌ மாணவராகிய தேவர்‌ அவ்வாறு‌  நூலியற்றும் திறமை பெற்றவர்தாம் என்பதை உணர்ந்திருந்தார்.‌ இருந்தாலும் அவருடைய திறமையை எடை போடக் கருதினார். அப்பொழுது அங்கே ஒரு நரி ஓட, அதனை அவருக்குக்‌ காட்டி, ”இந்த நரிக்குலத்தின்‌ இயற்கையை ஆதாரமாக எடுத்துக்‌ கொண்டு உம்‌ மனத்தில் தோன்றியபடி ஒரு சிறிய நூலியற்றுங்கள்.” என்று கூறினார்‌.

திருத்தக்கதேவர்‌ அப்படியே அதனை ஆதாரமாகக்‌ கொண்டு ”தேகம்‌ செல்வம்‌ முதலியனவெல்லாம்‌ நிலையற்றன” என்பது தெளிவாக விளங்கும்படி விரைவில்‌, ”நரி விருத்தம்‌” என்னும்‌ இந்நூலை இயற்றிக்‌ காட்டினார்‌. ஆசிரியர்‌ இதனைப் பார்த்து   மகிழ்ந்து பின்னர்‌ சீவகனுடைய கதையை, காவியமாகப்‌ பாடும்படி உத்தரவளிக்க அவர்‌ அங்ஙனமே சீவக சிந்தாமணியைப்‌ பாடிப்‌ புகழ்‌ பெற்றார்‌.

இவ்வாறு திருத்தக்கத் தேவரால்‌ பாடப்பெற்ற இந்‌ நரிவிருத்தமானது மிகச்சிறிய நூலாயினும்‌, ஞானத்தைக் கற்றுத் தருவதில்‌ மிகவும்‌ உயர்ந்ததாகும்‌. உலக வாழ்வோ நிலையற்றது; இதனை நம்பிப்‌ பேராசை கொண்டு வீண்‌ ஆலோசனை செய்து நாசமடையலாகாது: நிலையான தருமங்களைச்செய்து முத்தியடைதற்குரிய வழிகளையே தேடவேண்டும்‌,” என்பன போன்ற கருத்துகள் இதில்‌ மிகவும்‌ விளக்கமாகச்‌ சொல்லப்பட்டிருக்கின்றன.

இவற்றிற்கு உதாரணமாக முதலில்‌ நரியைப் பற்றிய கதை ஒன்றும்‌, பின்னர்‌ அதன்‌ சார்பாக வேறு பதினெட்டுக்‌ கதைகளும்‌ கூறப்படுகின்றன. இவையனைத்தும்‌ ஐம்பது செய்யுட்களாலேயே கூறப்படுகின்றன. இவற்றுள்‌ முதலில் எடுத்துக்‌ கொள்ளப்பட்ட நரிவிருத்தம் பற்றிக்  கூறுவன எட்டுச்‌ செய்யுள்களாகும்.

மற்றைய பாடல்கள்‌ வேறு கதைகளையும்‌ நீதிகளையும்‌ கூறுகின்றன.

 

இந்நூல் இவ்வாறு எளிதில்‌ ஞானத்தைக் கற்றுத் தருவதால்தான் இதனை எல்லாரும் கொண்டாடி வருகின்‌றனர்‌.