Surrogacy (Regulation) Bill, 2016 Bill No. 257 of 2016)

சூரியன் சரிவில் இறங்கிக் கொண்டிருந்தான். வானம் சிவந்து அவனது சினத்தைக் காட்டுவதைப் போலத் தோன்றியது மணிக்கு. ‘என் ராஜா இறந்து கிடக்கும் இடத்தில் பூக்கும் ரோஜா செக்கச் சிவப்பாய் இருக்கும்’ என்ற உமர்கய்யாமின் வரி அவனுக்கு நினைவிற்கு வந்தது. செம்மை, செம்மை செம்மை என்று அவன் மனம் அரற்றியது. வானம் நிறம் மாறியது. இப்போது மஞ்சள் கரைத்த ஆரத்தி. வரவேற்பதா, விடை கொடுப்பதா இந்த நிறம்? தான் அங்கு போகையில், இங்கிருந்து ஆரத்தி சுற்றி அனுப்புவார்களா, என்ன? நிச்சயமாக இல்லை; அங்கேயாவது மஞ்சள் ஆரத்தி வரவேற்பு இருக்குமா? அதற்கு, தனக்குத் தகுதியுண்டா என்று நினைத்துக் கொண்டு சிரித்தான் மணி.

இருபத்தைந்து வருட வாழ்வில் அவன் மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறான், ஆனால், மகிழ்வை யாருக்கேனும் தந்திருக்கிறானா? சில நேரங்களில், பெற்றோர், நண்பர்கள் என்று சிலரை அவன் சிரிக்க வைத்திருக்கக் கூடும். இனி அழ வைக்கப் போகிறான்.

அம்மா சொல்வார் அவனது சிறார் பருவ விருப்பங்களை. “மணி, அதே செவப்பு கலர் சட்டயாவே போட்றியே? கலர் கலராய் எத்தன வாங்கி வச்சிருக்கேன், மாத்தி மாத்தி போட்டுக்கோடா.”

இப்போது அவன் உடுத்தியிருப்பதைப் பார்த்தான். முழு வெள்ளையில் வேட்டியும், சட்டையும். அவன் முதன் முதலாக தன் 25ம் வயதின் தொடக்கத்தில் முழுதாக சிவப்பை நிராகரித்து, வெள்ளைக்கு மாறிய அன்று அம்மா எப்படி அழுதாள்? “ஏன்டா, சந்தனக் கலர் ஷர்ட் போட்டுக்கோடா, அதுல கூட மெல்லிய கட்டமா ஆரஞ்சு கலர் வரதுடா. இது வேண்டாம்டா” என்று கத்தினாள். ‘ஏம்மா, எனக்கு இதப் போத்தற நா வந்துடுத்தேன்னு பயப்பட்றியா?’ அம்மா பதில் சொல்லாமல் அழுதுகொண்டே நறுக்கிய ஆப்பிள்களைக் கொடுத்தாள்.

மணிக்கு அந்த இரவு, ஆறு மாதங்களுக்கு முந்தைய இரவு நினைவிற்கு வந்தது. ரூமில் ஏ சி ஓடிக்கொண்டிருந்தும், அவன் உடல் தொப்பலாய் நனைந்திருந்தது. மூச்சு விட கடினமாக இருந்தது. ஏதேனும் கெட்ட கனவாக இருக்குமோ? சிவப்பு பைஜாமா, அல்லிப் பூக்கள் மென்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள மஞ்சள் வண்ணக் குர்தா எப்போதையும் விட உடலை விட்டு சற்று விலகி இருப்பதாகப் படுவது எந்த காரணத்தால்? இத்தனை மதிமயக்கம் தனக்கும்கூட ஏற்படுமா என்ன? அவனுக்கு சிரிப்பும் அழுகையுமாக வந்தது. அம்மாவின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்பா, தன் கைகளால் தன்னைத் தடவிக் கொடுக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. இந்த வயதில் இதெல்லாம் தகுமா, மணி, நீ இவ்வளவு பலவீனமானவனா என்று தன்னைத்தானே அடக்கிக்கொண்டான். எப்படியோ, அம்மா, அப்பாவை எழுப்பாமல் தூங்கி விட்டான். ஆறு மணிக்காவது எழுந்திருக்காவிட்டால், அப்பா அவனைக் கடுப்பாகப் பார்ப்பார். மணி தாக்குப் பிடித்து எழுந்து கொண்டான். “என்னடா, என்னவோ போல இருக்க, உடம்பு சரியில்லையா? டாக்டர்ட்ட வேணா போவோமா?” என்றார் அப்பா. அம்மா கேட்பாள், சமாளிக்கலாம் என்று நினைத்தவனுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை. “சும்மா வேண்டாததெல்லாம் கேட்டுண்டு? அவனுக்கென்ன நன்னாத்தான் இருக்கான். கொஞ்சம் டயர்டா இருக்கு போலிருக்கு. கார்த்தாலைக்கு இட்லியும், அரைச்சு விட்ட வெங்காய சாம்பாரும் பண்ணிருக்கேன். தக்காளி சட்னியும் இருக்கு. ஒரு பிடி பிடி. அப்றமா ஹாய்யாத் தூங்கு. ரிலாக்ஸ் செஞ்சுக்கக்கூட தெரியாத ஒரு புள்ள. நாளைக்கி போய்க்கலாம் ஆஃபிசுக்கு.”

இதமான இளஞ்சிவப்பில் சின்ன வெங்காயங்கள் சாம்பாரில் மனதைக் கொள்ளை கொண்டன. வழக்கம் போல் இட்லிகளை அவற்றில் மூழ்கடித்தாலும், அவனால் சாப்பிட முடியவில்லை. மூச்சு திணறுவதைப் போலிருந்தது. மெது மெதுவாகத் தண்ணீர் குடித்தான். உணவு, தட்டில் பாதி இருக்க எழுந்தவன் கீழே சாய்ந்தான்.

“என்ன மணி, நீ நல்ல பையனாச்சே. எங்கிட்ட மட்டும் சொல்லு. நேத்திக்கி குடிச்சயா?” என்றார் அவர்களின் குடும்ப டாக்டர். எரித்து விடுவதைப் போல அவரைப் பார்த்தான், “டெம்பரேச்சர் 101 இருக்கு. பிரஷர் சரியாத்தான் காட்றது. இந்த மருந்தக் கொடுங்கோ.”

இரு நாட்களில் அவன் சரியாகி விட்டான். ஒரு வாரம் அலுவலகமும் போய் வந்தான். வெள்ளியன்று மாலை வீட்டிற்குத் திரும்புகையில், ஏதோ புகையால் இருமியவன், கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டான். எடுத்துப் பார்க்கையில் அவன் உள்ளிருக்கும் குருதியின் நிறம் சிவப்பு என்று கைக்குட்டைப் புள்ளிக் கோலங்கள் சொன்னது.

குல்மொஹர் மரங்கள் வழக்கம் போல் கொள்ளையாய் பூத்திருந்தன. அந்த மரத்தடியில் தான் தன் அத்தை பெண் ராஜியை பல வருடங்களுக்குப் பிறகு அன்று அவன் பார்த்தான். அவளது தந்தைக்கு என்ன காரணத்தாலோ இவர்கள் குடும்பத்தைப் பிடிக்காது. அத்தை இறந்து போயும் பத்து வருஷம் ஆகி விட்டது. இரு குடும்பங்களுக்கும் இடையே போக்கு வரத்து நின்றுவிட்டது. ஸ்டார்ட் ஆகாத மொபெட்டுடன் போராடிக் கொண்டிருந்தாள் ராஜி. அவளால் அதைத் தள்ளிக் கொண்டும் செல்ல முடியவில்லை. தவித்துக் கொண்டிருந்த போது அவன் தான் அவளுக்கு உதவி செய்தான். பாழ் நெற்றியுடன் அவளைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. கல்யாணமாகி இரண்டே நாட்களில் அவள் கணவன் விபத்தில் இறந்து போனான். அந்த அதிர்ச்சியில் படுத்த அவள் தந்தை நடமாட்டமற்ற ஒரு மூச்சுவிடும் இயந்திரம்.

அதே மரத்தடியில், தனக்கு முதல் மணியோசை கேட்கிறதோ என அன்று பயந்ததை இன்று நினைத்து விரக்தியாய் சிரித்தான். அன்று நண்பனை காரில் மற்றொரு நண்பனுடன் தன்னைக் கூட்டிப் போக வரச் சொல்லிவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து விட்டான்.

“ஏம்ப்பா அர்விந்த், மணி வல்லியா?”

‘அவனுக்கு க்ளையன்டோட மீட்டிங் இருக்கும்மா கொஞ்சம் லேட் ஆகும் போல. சம்பத் கார்ல அழச்சுண்டு வருவான்.’

“காஃபி சாப்ட்றியா?”

‘இல்ல மாமி, காலேலேந்து நாலு ஆயிடுத்து. இன்னொரு நா சாப்டா போச்சு. பைக் சாவிய டேபிள் மேல வச்சிருக்கேன் நா வரேன்.’

டாக்டர் இம்முறை சற்று யோசனை செய்தார். மணியின் மூச்சு சீராக இல்லாமல், நீடித்தும், குறைத்துமாக வெளி வந்து கொண்டிருந்தது. தற்கால நிவாரணமாக மருந்து கொடுத்த மருத்துவர், அனைத்து பரிசோதனைகளுக்காக மறு நாள் முழுதும் மருத்துவ மனையில் இருக்க வேண்டும் என்றார்.

“நேத்து மீட்டிங்ல முழுசா முடிவுக்கு வரமுடியலம்மா, க்ளையன்ட் இன்னிக்கு திருப்பதிக்குப் போய்ட்டு சிங்கப்பூர் திரும்பறார். அதனால, சீக்ரமா போறேன். சம்பத் வரான், க்ளையன்டோட ப்ரேக்பாஸ்ட்.” ஏன் அம்மாவிடம் பொய் சொல்கிறோம் என்று மனது தவித்தாலும், பின்னர் அம்மாவை ஏன் கவலைப்பட வைக்க வேண்டும் என்றும் தோன்றியது.

நாள் முழுதும் சோதனை, சோதனை என்றே சென்றது. அவன் குருதியில் வெள்ளை இரத்த அணுக்கள் அதிகமாக இருந்தன, அவன் புற்று நோய் மருத்துவ மனைக்குப் போக வேண்டும். இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

நான்காம் நிலை நான்- ஹாட்ஜ்கின் (non-Hodgkin) குருதிப் புற்று நோய் அவனுக்கு. நிச்சயமாக மாத்திரைகள் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, தேவைப்பட்டால் ஸ்டெம் செல் சிகிட்சை, எல்லாம், எல்லாம் என்னென்னவோ எடுத்துக் கொள்ள வேண்டும். அவன் விரும்பினால், அவனது விந்துவை மருத்துவமனையில் க்ரையோ பாதுகாப்பில் வைப்பார்கள். அதிகக் குளிரூட்டப்பட்ட நிலையில் அதைப் பாதுகாப்பது அவசியம்; ஏனெனில், கீமோ போன்றவற்றிற்குப் பிறகு, ஆணின் விந்து, வீர்யம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். தற்சமயம் அவன் ஒரு பதினைந்து நாள் விடுப்பில் இருக்க வேண்டும்.

உடல் இளைத்துக் கொண்டே வந்தது. தாகம், தாகம் என்று தண்ணீராகக் குடித்தான். நுரையீரலில் நிணநீர்க்கட்டிகள் பல்கிப் பெருகின.

இனி அவன் செய்யக்கூடியது என்ன? நாற்பத்தேழு வயதில் அம்மாவும், ஐம்பத்துமூன்று வயதில் அப்பாவும், தங்கள் முதுமைக்கான துணை என்று நம்பியவன் அவர்களைக் கைவிடப் போகிறான். மணி இல்லாத சோகத்தில் அவர்கள் எப்படி வாழ்வார்கள்? ஒரே நேரத்தில், தன் புது மனைவியுடன் ஹனிமூனுக்கு கிரேக்கத் தீவான இகாரியாவிற்கு தான் செல்லும் போது அவர்களும் அந்தத் தீவில் தங்கள் செஹன்ட் ஹனிமூனை கொண்டாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்தானே? சில இளம் பெண்களைப் பார்க்கும் போது எவ்வளவு வசீகரக் கனவுகள், நினைவுகள் கற்பனைகள் தனக்கு ஏற்பட்டது? இனி அதுவும் கானல் நீரே.

தற்செயலாக நிமிர்ந்தவன் கண்களில் காற்றில் ஆடிய பசும் வாழை இலைகள் பட்டன. முன்னர் எங்கிருந்தன இவை? அவை குருத்தாய், அடி வாழையாயிருந்து இன்று இந்த வளர்ச்சியில் இருப்பது அவனுக்கு ஏதோ சொன்னது போலத் தோன்றியது. ஆஹா, வாழையடி வாழை, ஆஹா… நிலையாத வாழ்வில் நிலைத்துத் தொடர்வது வம்சம் மட்டும் தானே? இந்த எண்ணம் வந்தவுடன் மணிக்கு உற்சாகமாகிவிட்டது. நான் நிரந்தரமானவன், என்றும் அழிவதில்லை, காலனே, நான் ஒரு மணமகளைப் போல உன்னை வரவேற்கத் தயாராகிவிட்டேன்.

“நா நெறய வருஷம் வாழணும்னு ஆசப்பட்றேன். ஆனா, சூழல் அவ்ளோ பாசிடிவா இல்ல.”

“ஏண்டா, இப்படிப் பேசற?”

‘அவனப் பேச விடு சித்ரா, சொல்லுப்பா, ஃபாரினுக்குப் போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாமா?’

“அதில்லப்பா, எங்க போனாலும் இதே தான் ரிசல்ட். நாம் ஃபேஸ் பண்ணித்தானாகணும். உங்களுக்கு வயசாகும் போது ரத்த உறவுன்னு யாராவது வேண்டாமா? ஒத்தப் புள்ளயா போய்ட்டேன். இப்ப ஒரு ஐடியாவ சொல்லத்தான் கூப்டேன் உங்கள. எனக்கு ஏதாவது ஆயிடுத்துன்னா, என்னோட ஸ்பெர்ம க்ரையோல வச்சிருக்காளே, அத..”

‘அத?’

“அத நம்ம ராஜி இருக்காளே, அவளக் கருவா வளத்து உங்ககிட்ட, குழந்தையா தரச் சொல்லிடுங்கோ.”

‘என்னடா இது. ச(ர்)ரோகசி சுலபமில்லடா. அவ சம்மதிக்கணும், அவ அப்பாக்கும் நமக்கும் ஆகாது.’

“இல்லம்மா, கொஞ்சம் பொறுமையாக் கேளு. நா ராஜிட்ட பேசிட்டேன். அவ ஒத்துக்கறா”

‘என்ன விளையாட்டு இது? அவ பெத்து நம்மகிட்ட கொடுப்பாளா, அவளே வளப்பாளா?’
“இரு சித்ரா, அதெல்லாம் அப்றம். முதல்ல இதுக்கு சட்டம் இடம் கொடுக்கணும்.”

‘அவன் நூறு வயசு இருப்பான். இந்தக் கண்றாவிப் பேச்செல்லாம் வேண்டாம்.’

“அம்மா, மொதல்லேந்து ஆரம்பிக்கிறியே? நா ப்ராக்டிகலா பேசறேன்.”

‘சரிடா, அந்தக் க்ரையோ விந்துவ, எங்ககிட்ட எப்படிக் கொடுப்பா?’

“நா அப்படிச் செய்ய முழு சம்மதம்னு எழுதிக் கொடுத்தா என்ன ப்ரச்சனை வரும்?”

‘சரி, ஒத்த ஆளுக்கு தத்தெடுக்கவோ, குழந்தை பெத்துக்கவோ உரிம இல்லியே.’

“இது சிக்கல் தாம்ப்பா. ராஜிய நா கல்யாணம் செஞ்சுண்டா இத சரிப்படுத்திடலாம்.”

பெற்றவர்கள் அதிர்ந்தனர். இவன் என்ன ஒரே நேரத்தில் கல்யாணத்தையும், சாவையும் பற்றிப் பேசுகிறான்.
மணிக்கு அவர்கள் மேல் பரிதாபம் தான் வந்தது. அவர்கள் வார்த்தைக்குத் தவிப்பதும் புரிந்தது.

“அம்மா, ராஜிகிட்ட சொன்னேன். அவ சொல்றா ‘மணி, நா யார் மேல பாசம் வச்சாலும், அவா இல்லாம போய்டுவா. நா ஆசப் பட்றதும் கிடைச்சதேயில்ல. இப்பப் பாரு, அம்மாவோடவே இருக்கணும்னு ஆசப்பட்டேன், இந்தச் சிடுசிடு அப்பாவுக்கு எல்லாம் செஞ்சுண்ட்ருக்கேன். மஞ்சு என்னோட தெனம் பேசுவான்னு நெனச்சேன், அவ கல்யாணமாகி ஃப்ரான்சுக்குப் போனவ தான், அப்றம் ஒரு வாட்சப் கூட இல்ல. ஹஸ்பென்டோட நன்னா வாழலாம்னு மனக்கோட்ட கட்டினேன், அவர் ரெண்டே நாள்ல போயிட்டார். ஊர் சொல்றதெல்லாம் இருக்கட்டும், நானே சொல்றேன் மணி, நா ராசியில்லாதவ. என்னக் கல்யாணம் பண்ணின்டு உனக்கு ஏதாவது ஆய்ட்டா? மேரேஜெல்லாம் வேண்டாம், ஆனா, உங்கொழந்தைய பெத்துக் கொடுப்பேன். ஒரு பெண்ணா என்னைப் படச்ச இயற்கைக்கு நா செலுத்தற நன்றிக் கடன். பெக்கற வரைக்கும் நான் கவனமா இருப்பேன்; அது கிட்ட பாசமோ, அன்போ இல்லாமலிருக்கணும்னு நா திடமாவும் இருக்கேன். அதாவது வாழணும் பாரு?’”

மணி சொல்லும் போதே தழுதழுத்தான். அம்மா விசும்பி அழுதாள். அப்பா தன் கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கவில்லை. கனத்த மௌனம் அங்கு நிலவியது.

‘எப்பேர்ப்பட்ட பெண் இந்த ராஜி. அவ நம்ம கொழந்தை. அவ இங்க கொழந்தையோட, கடவுள் அனுக்கிரகம் இருந்தா உன்னோட, இங்க வாழட்டும்.’

“சொல்லு நீருக் குட்டி, தாத்தா”
‘த் தா’
“பாட்டி சொல்லு நீரஜா”
‘ட் டி டி’
“அம்மா சொல்லுடா செல்லம்”
‘மா’
“அப்பா சொல்லுடி ராஜாத்தி”
‘அப்பா’

மாலையும், சந்தனக் குங்குமமும் அலங்கரித்த தன் போடோவிலிருந்து மணி தன் மகளின் மழலையைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறான்.