![]()

அ ர சு
புஷ்பலதாவும் புதிய கட்டுப்பாடும்..
ரிசைன் செய்துவிட்டு என் கணவர் கோபாலன் மின்சார ரயிலில் எழும்பூரிலிருந்து குரோம்பேட்டை வரும்போது சந்தித்த நபர் எங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றினார்…
என்று கடந்த அத்தியாயத்தில் தொடரும் போட்டிருந்தேன்.
கும்பிடத் தோன்றாத தெய்வம் மின்சார ரயிலில் உடன் வந்தது எனலாம். அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன். காலையிலும் மாலையிலும் ரயிலில் ஏக கும்பல் இருக்கும் என்பதால் என் கணவர் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வாங்கி அதில்தான் பயணிப்பார். அதே காரணத்தால் விக்கிரமன் ஐயாவும் அதில் வருவாராம். எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும் அன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
“நீங்க எதுல வேலை பார்க்கறீங்க?” என்று கேட்டபோது பாரதவிலாஸ் சிவாஜி மாதிரி “வேலை பார்த்தேன்” என்று சுருக்கமாக விஷயத்தைச் சொன்னார்.
“அமுதசுரபியில் ஜாயின் செய்துடுங்களேன்.. நாளைலேயிருந்து வந்துடுங்க” என்று சொல்லியிருக்கிறார்.
அத்தனை நாள் வாங்கிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவான சம்பளம் வந்தாலும் பத்துமடங்கு திருப்தியும் சந்தோஷமும் கிடைத்ததோடு.. ஒரு நாள்கூட வீட்டில் உட்காரவில்லை என்ற சந்தோஷம் இணைந்தது.
இரண்டு மாதங்கள் அங்கு வேலை பார்த்தார். (ஃப்ரீலான்ஸ்)
ஒரு நாள் குமுதம் ஜ ரா சு (பாக்யம் ராமசாமி) அவர்களை அகஸ்மாத்தாகச் சந்திக்க நேர்ந்தது. இறைவன் ஒவ்வொரு சந்திப்பையும் திட்டமிட்டு நிகழ்த்துகிறான் என்ற உணர்ந்த தினம் அது.
பத்திரிகை உலகில் மட்டும் விஷயங்கள் சுலபமாய்க் கசியும். “என்ன ஓய்? அமுதசுரபியாமே?” என்று கேட்டிருக்கிறார்.
நிறையப் பேசிக்கொண்டே வந்தபோது… பேச்சுவாக்கில் “தினமும் மின்சார ரயிலிலா ஆபீஸ் போறீங்க?” என்று அகஸ்மாத்தாய்க் கேட்டிருக்கிறார்
“ஆம்”
“எத்தனை வருஷங்களாய்?”
ஒரு நாளுக்கு எத்தனை முறை.. ஒரு வாரத்தில் எத்தனை.. வருடத்துக்கு எத்தனை என்று கணக்கிட்டு.. அவரே குத்துமதிப்பாய் ஒரு கணக்குச் சொன்னார். “அப்டின்னா.. ஞாயிற்றுக் கிழமை தவிர இது வரைக்கும் பத்தாயிரத்து எண்ணூறு வாட்டி ரயில்ல போயிருப்பீங்க..”
ஞாயிற்றுக் கிழமைகளிலும் எழுத்தாளர் மீட்டிங் சினிமா என்று போவதற்கும் ரயில்தான் என்று சொல்ல வந்தார். அதற்குள்.. “தோராயாம இந்த நம்பரையே வெச்சுப்போம்.”
அவர் எதற்காக இதையெல்லாம் சொன்னார் என்று குழம்பினார் பாமாஜி.
“இத்தனை வருஷத்தில் எவ்ளோ அனுபவம் ஏற்பட்டிருக்கும்..! நீங்க என்ன செய்யறீங்க.. உங்க அனுபவங்களை ஒரு கட்டுரையா எழுதிண்டு வாங்க.. குமுதத்துக்காக” என்று சொன்னார்.
அன்றைக்கு வீட்டுக்கு வரும்போதே (ரயிலில்) ஹின்ட்கள் எழுதிக் கொண்டே வந்தபோதுதான் இவருக்கே பிரமிப்பு ஏற்பட்டிருக்கிறது. தனக்கு ரயில் அனுபவங்கள் இவ்வளவு ஏற்பட்டுள்ளனவா?
பல மரணங்கள்.. பல நட்புகள்.. பாடங்கள் என எவ்வளவு.
நான்கு பக்கங்களுக்குப் பிரசுரமாக வேண்டுமானால் அவர் கையெழுத்தில் எட்டுப் பக்கங்கள் எழுதினால் போதும். ஆனால் அவர் முப்பது பக்கங்கள் எழுதி எடிட் செய்து எட்டாக்கி… திங்கட்கிழமை அதை எடுத்துக் கொண்டு அமுதசுரபி அலுவலகத்துக்குச் சென்றார். விக்கிரமன் சாரிடம் அனுமதி கேட்டார்.
“யோவ் நீங்க ஃப்ரீலான்ஸர்.. அனுமதியே வேணாம். கொடுக்கலாம்” என்று அவர் சொல்ல..
“பத்தாயிரத்து எண்ணூறு முறை ரயில் பயணம்” என்றே டைட்டில் வைத்து எழுதிக் கொடுத்தார். அடுத்த வாரமே குமுதத்தில் இந்தக் கட்டுரை பிரசுரமாயிற்று.
“ பிரமாதமா வந்திருக்கு.. குமுத்தில் ஜாயின் பண்ணிடுங்களேன். ஃப்ரீலான்ஸ் நிருபரா… முனைஞ்சு வேலை செஞ்சா உங்க கட்டுமானக் கம்பெனியை மாதிரிப் பத்து மடங்கு சம்பாதிக்கலாம்” என்று சொன்னார்.
பாமாகோபாலனுக்கு என்றைக்குமே பணத்தின்மீது நாட்டம் கிடையாது. எதிர்பார்ப்பு.. பேராசை.. பொருட்களின்மீது பற்று என்ற எதுவுமே இல்லாதவர். எனவே சம்பாத்தியம் என்ற சொல் கவரவில்லை. ஆனால் .. குமுதம் என்ற அந்த நான்கெழுத்து ஆலமரத்தின்மீது இளைப்பார யாருக்குத்தான் ஆசை வராது?
“விக்கிரமன் சார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன்” என்றார்
வீட்டுக்கு வந்து விவரித்தபோது உற்சாகத்தில் துள்ளினேன். கம்பெனியில் வேலை போனது இத்தனை பெரிய நன்மைக்காகவா?
விக்கரமன் சார் ஜென்டில் மேன். “என் ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு. என்றைக்கு வந்தாலும் அமுதசுரபியின் கதவு மீண்டும் திறக்கும் என்ற நம்பிக்கையும் அளித்தார்.
மிகவும் பிரியமான வேலை. ராத்திரி பகல் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவில்லை. குமுதத்தில் பணியாற்றிய பதிமூன்று வருடங்கள் பொற்காலம்.
என் பெரிய கொடுப்பினை நானும் அங்கு பணி புரிந்தேன் என்பதுதான். அந்தக் காலத்தில் குமுதத்தில் பணி புரிந்த ஒரே பெண் நான்தான் என்று தைரியமாய்ச் சொல்ல முடியும் என்னால்,
பிறகு லோகநாயகி வந்தார். பிறகு எடிட்டோரியலில் பலரின் பூவாசம் புறப்பட்டது.
என் கணவர் பேட்டிகளைக் காஸெட்டில் ரெகார்ட் செய்து கொண்டு வருவார். நான் அதை ராத்திரி முழுக்கக் கேட்டு டைப் செய்து காலையில் கிளம்புவதற்குள் கொடுப்பேன்.
பல பேட்டிகளை நானே போய் எடுத்திருக்கிறேன். ஆனால் குமுதம் ஆபீசுக்குள் மட்டும் பெண்களுக்கு நோ என்ட்ரி.
அது ஏன்?
அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு. பிரபல நடிகை புஷ்பலதா, ஏ வி எம் ராஜனை ரகசியமாகக் காதலித்துக் கொண்டிருந்த சமயம் அது (அப்படியானால் எத்தனை பிந்தைய ஃப்ளாஷ்பேக் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.)
எவ்வளவுதான் ரகசியம் என்றாலும் பத்திரிகையாளர்கள் மோப்பம் பிடித்துவிட மாட்டார்களா? அதிலும் குமுதத்தின் சினிமா நிருபர்கள் என்றால் கேட்கவும் வேண்டுமா? எல்லோருக்கும் புரியும்படி கிசுகிசு எழுதுவதில் குமுதத்துக்கு நிகர் ஏது?
எழுதிவிட்டார்கள். அடுத்த நாள் புஷ்பலதாவும் அவர்கள் அம்மாவும் குமுதம் ஆபீசுக்கு வந்து எடிட்டர் எஸ் ஏ பியைச் சந்தித்து அழுஅழுஎன்று அழுதிருக்கிறார்கள். தன் மானமே போய்விட்டது என்றும் சினிமாக் கலைஞர்கள் முன்னால் எப்படித் தலை நிமிர்ந்து நடப்பேன் என்றும் அழுதார்களாம்.
எடிட்டர் வெலவெலத்துப் போய்விட்டார். பத்திரிகை என்றால் எத்தனையோ பேரைப் பற்றி எவ்வளவோ பிரசுரமாகும். எல்லோரும் வந்து தன் முன் அமர்ந்து அழுதால் என்னாகும் என்று யோசித்திருப்பார் போலும். விளைவு? அந்த நோ என்ட்ரி.
இதையெல்லாம் கேள்விப்பட்டு எனக்கு மிகுந்த ஏமாற்றம். சே. கணவர் அங்கு வேலை பார்ப்பதால் அடிக்கடி போய் எட்டிப் பார்த்து எடிட்டோரியல் நபர்களுடன் அரட்டை அடித்துவிட்டு வரலாம் என்றல்லவா எதிர்பார்ப்புடன் இருந்தேன்?
அந்த ஏமாற்றமெல்லாம் ஓரிரு நாட்கள்தான். மடமடவென்று அசைன்மென்ட்கள் வர ஆரம்பித்தன. சில பட்சணங்கள் தயாரிக்கும்போது மாவு ஒருபக்கம்.. பச்சை மாவில் முருக்கு மறுபக்கம்.. வெந்து முடிந்த முருக்கு மறுபக்கம் என்று ஒவ்வொரு ஸ்டேஜில் இருப்பது போல் பேட்டிகள் அடுத்தடுத்த நிலையில் இருந்தன.
குமுதம் ஆபீசில் ஒரு சுவாரஸ்யமான சிஸ்டம் உண்டு. கடகடவென்று இஷ்யூக்கள் அடுத்தடுத்துத் தயாராவதற்காக அந்த யுக்தி. அதாவது திருவாளர்கள் ராகி ரங்கராஜன், ஜ ரா சுந்தரேசன், புனிதன் என்று மூன்று பேர் ஆசிரியர் குழுவில் இருந்தார்கள் அல்லவா? (இவர்களில் ரா கி ர இணை மற்ற இருவரும் துணை). ஜனவரி மாதம் முதல்வார இஷ்யூவின் முழுப்பொறுப்பு ராகி ரவுக்கு என்றால் இரண்டாம் வாரம் ஜ ரா சு.. மூன்றாம் வாரம் புனிதன் என்று சுழற்சியில் வரும்.
பிறகு ரவி என்கிற பிரசன்னாவும் பிரியா கல்யாண ராமனாகிய பிரகாஷும் உள்ளே வந்தபிறகு.. பல காலம் அவர்களுடைய திறமையை ஊன்றி கவனித்து பிரகாஷுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
அவர் இஷ்யூ என்றால் அவர்தான் மு…ழுப் பொறுப்பு. முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரை அவர் தீர்மானிப்பதுதான்.
குமுதம் சில விஷயங்களில் உறுதியாக இருந்தது. நீங்கள் ஒருகோடியே ஒரு ரூபாய் கொடுத்தாலும் வெளிப்புறப் பின் அட்டையில் அவர்களை விளம்பரம் போட வைக்க முடியாது. இவர்களின் யாருடைய இஷ்யூவாக இருந்தாலும் ஐடியாக்களை அவர்கள் கொடுக்க வேண்டுமே தவிர ஆசிரியர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். யாராவது யார் பெயரையாவது சிபாரிசு செய்தால் அந்தப் படைப்பைப் பிரசுரிக்கக்கூடாது. இணை துணை ஆசிரியர்களின் குடும்பத்தினர் போட்டோக்கள் குமுத்தில் வரவே கூடாது. இதழில் ஒரு முறை ஒருவரின் பெயரோ போட்டோவோ வந்தால் அதே இதழில் மறுமுறை அந்த நபரின் போட்டோ அல்லது பெயர் வரக்கூடாது.
(இந்தக் கடைசி கண்டிஷனை மட்டும் அவர்கள் தளர்த்த வேண்டி வந்தது. ஏன் என்று பிற்பாடு சொல்கிறேன்).
இ மற்றும் து ஆசிரியர்களின் சுழற்சிமுறைப் பொறுப்பு பற்றி ஏன் குறிப்பிட்டேன் தெரியுமா?
பாமாஜியை ஒரு பக்கம் ராகி ர கூப்பிட்டு ஒரு வேலை கொடுத்திருப்பார். மறுபுறம் ஜ ராசு வேலை கொடுப்பார். மற்றொரு புறம் புனிதன் அழைப்பார்.
ஆக.. மாசம் முப்பது நாளும் எங்கள் இருவருக்கும் மூச்சுவிட நேரமின்றி வேலை அமிழ்த்தி மகிழ்வித்தது.
ஒரு பேட்டி குமுதம் ஆபிசின் கண்ணாடிகளைச் சில்லுச் சில்லாக்கியது.. அது யார் பேட்டி?
எ கு நா தொடரும்.

அந்தக் குமுத நாட்கள்! தமிழ்ப்பத்திரிக்கை உலகின் பொன்னான நாட்கள்!! அதைத் தேனாகத் தரும் வேத கோபாலன் எழுத்து!!! குவிகத்துக்கு இது ஒரு மகுடம்!
LikeLike