(குவிகம் அன்பர்கள் சிலர் கிருபானந்தன் வீட்டில் கூடியிருக்கிறார்கள். சுந்தரராஜன், மதுவந்தி மற்றும் வ.வே.சு. ஜூமில் கலந்துக் கொள்கிறார்கள்)

கிருபா : எல்லாருக்கும் வணக்கம்.. நாம இன்னிக்கு எதுக்காக கூடியிருக்கோம்னா.. பொங்கல் வருது..

ஆர்,கே. : வெண்பொங்கல்தானே? வெரி குட்.. வெரி குட்.. கூட வடை உண்டுல?

கிருபா : ஆர்.கே… நான் சாப்பிடற பொங்கலைச் சொல்லலை.. பொங்கல் பண்டிகையைச் சொல்றேன்..

ஆர்.கே.  : ஓ அப்படியா? காலைலேர்ந்து எதுவுமே சாப்பிடலை.. செம பசி.. அதான் நீங்க பொங்கல்னு சொன்ன உடனே சாப்பிடத்தான் கொடுக்கப் போறீங்கன்னு நினைச்சுட்டேன்.. ஆமா.. இன்னிக்கு ஏதாவது மெனு உண்டா?

கிருபா : சும்மா இருங்க ஆர்.கே.. பொங்கல் பண்டிகைக்கு ஏதாவது ஸ்பெஷல் புரோக்ராம் பண்ணணும்னு சுந்தரராஜன் ஆசைப்படறார்.. நாம ஒரு நாடகம் போட்டா என்ன?

நாணு : சார்.. இப்பவே சொல்லிட்டேன்.. நாடகம்னா காமெடி நாடகம்தான்

நாகேந்திர பாரதி : இவர் ஒருத்தர்.. எதுக்கெடுத்தாலும் காமெடி காமெடின்னு சொல்லிக்கிட்டு.. சார்.. டிராமான்னா நல்ல சீரியஸ் டிராமா போடணம்..

நாணு : என்ன சார் நீங்க.. பொங்கல் அன்னிக்கு சீரியஸ் டிராமா போட்டா அழுது வடியும்.. பண்டிகை நாள். சும்மா கலகலப்பா இருக்கணும்

ஹரிஹரன் : ஆமா சார்.. நாணு சொல்றது சரிதான்.. நாணு.. நான் கூட ரெண்டு மூணு காமெடி கதை வெச்சிருக்கேன்.. அதை கையில எடுத்தாலே சிரிக்க ஆரம்பிச்சுருவீங்க..

சுந்தரராஜன் : நான் ஒண்ணு சொல்லட்டுமா? பொன்னியன் செல்வனை நானும் ராமும் சேர்ந்து பாலைச் சுண்டக் காய்ச்சி சுருக்கர மாதிரி சுருக்கி வெச்சிருக்கோமே,, அதுலேர்ந்து சில காட்சிகளை நடிச்சா எப்படி இருக்கும்?

நாணு : பிரமாதமா இருக்கும்.. ஆனா ரிகர்சலுக்கு டைம்தான் பத்தாது.. இன்னும் ஒரு வாரத்துல பொங்கல்.. அதுக்குள்ள ஈசியா பண்ணக் கூடியது காமெடி டிராமாதான்..

ஹரிஹரன் : ஆமா.. ஆமா.. காமெடி டிராமாதான்.. கல்லடிக் காலம்.. அருமையான காமெடி கதை வெச்சிருக்கேனே..

மதுவந்தி : என்னுடைய சஜஷன்.. டிராமாலாம் வேண்டாம்.. கவியரங்கம் ஏற்பாடு பண்ணலாம்..

ஹரிஹரன் : ஏன்.. நீ கவிதை எழுதுவேங்கறதுனாலயா?

ஆர்.கே : கவலைப்படாதே மாப்ளே.. நான் நிறைய கவிதை வெச்சிருக்கேன்.. அதை மாடுலேஷனோட சொன்னாலே நாடகமாயிரும்..

பாஸ்கரன் : நோ நோ.. என்னால கவிதைலாம் ஒத்துக்க முடியாது.. நாடகம்தான் போடணும்.. அதுவும் தி.ஜா.வோட கதைல..

ஆர்.கே. : டாக்டர்.. கொஞ்சம் தி,ஜா.வுலேர்ந்து வெளில வரீங்களா?

நாகேந்திர பாரதி சார்.. நான் ஒரு சூப்பர் சஜஷன் தரேன்.. நாடகமும் வேண்டாம்.. கவிதையும் வேண்டாம்.. நம்ம இசைபுதிது அன்பர்களைவெச்சு இசை நிகழ்ச்சி நடத்திரலாம்..

கிருபா: அதான் அப்பப்ப இசை நிகழ்ச்சி நடத்திட்டே இருக்கீங்களே.. இதுல வேற எதுக்கு?

ஐசா : பேசாம கிவிஸ் புரோக்ராம்.. இல்லைன்னா கிராஸ்வோர்ட்.. ஏற்பாடு பண்ணினா என்ன?

நாணு : இந்த விளையாட்டுக்கே நான் வரலை.. க்விஸ்லாம் வேண்டாம்..

சாய் கோவிந்தன்: கரெக்ட்.. நீங்கதான் எந்த க்விஸ்லயுமே கலந்துக்க மாட்டீங்களே.. ஏதாவது பதில் தெரிஞ்சாத்தானே கலந்துக்க..

ராஜாமணி : சூ.. நான் சொல்றதை கவனமாக் கேளுங்க.. நாடகத்துக்கு அருமையான கரு.. ஆப்ரிகாவுல உகாண்டா தெரியும்ல.. அங்க ஒரு சின்னக் குழந்தையை..

நாணு : சார்.. நாம பாஸ்போர்ட் விசாலாம் வாங்கிட்டு ஆப்ரிகாலாம் போக முடியாது. உள்நாட்டுலயே இருப்போம்.. முடிஞ்சவரை சென்னைலயே இருப்போம்..

அழகிய சிங்கர்: உகும்.. இது எதுவுமே சரியில்லை.. என்ன பேசறீங்க நீங்க? ஒரு இலக்கியத்தரமே இல்லாமப் போச்சு.. நகுலனைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இல்லை பிரமிளைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க தெரிஞ்சுக்கணும்.. ஞானக்கூத்தனைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்.. அவங்களைப் பத்தி நாடகம் போடுங்க.. அவங்க எழுத்தை பிரபலப்படுத்தர மாதிரி நாடகம் போடுங்க..

பாஸ்கரன் : சார்.. நாம என்ன டாக்குமெண்டரியா எடுக்கப் போறோம்? பொங்கல் அன்னிக்கு கலகலன்னு ஜாலியா இருக்கணும்..

கிருபா : சதுர்புஜன்.. நீங்க என்ன எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?

சதுர்புஜன் : வந்து.. எனக்கு இது எதுவும் தெரியாது. நாடகம்லாம் என்னால நடிக்க முடியாது. வேணும்னா கணீர்னு வாய்ஸ் ஓவர் கொடுக்கறேன்.. கூட கிரிஜாவும் இருப்பா..

பானுமதி: நான் ஒண்ணு சொல்லலாமா? கல்தோன்றி மண் தோன்றா காலத்துலேர்ந்தே நம்ம பாரத கலாச்சாரத்தோட சாராம்சத்துல வந்த நம்ம வேர்களுடைய பெருமையை..

நாணு : தயவுசெய்து தமிழ்ல பேசறீங்களா?

பானுமதி : என்னது.. நான் சொன்னது புரியலையா? தமிழுக்கே அவமானம்..

அழகிய சிங்கர்: கிருபா உகும்.. எதுவும் சரியில்லை.. எதுக்கு இந்த கொண்டாட்டம்? அதுக்கு பதிலா எல்லாரும் புக்பேருக்கு வாங்க.. விருட்சம் ஸ்டாலுக்கு வந்து என் புத்தகங்களை வாங்குங்க.. அதுதான் உண்மையான கொண்டாட்டம்..

கிருபா : யாருக்கு.. உங்களுக்கா?

சுந்தரராஜன் :  வ.வே.சு. சார்.. என்ன நீங்க எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?

வ.வே.சு. : நண்பர்கள் சொன்ன கருத்துக்களையெல்லாம் கவனமா கேட்டிட்டுத்தான் இருந்தேன். எல்லாம் அருமையான கருத்துக்கள்.. “கருத்துச்செரிவு” வேணும்னு பாரதி சொன்னான்.. அவனைப் பின்பற்றியே நல்ல கிளாரிட்டியோட நம்ம நண்பர்கள் பேசினதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னைக் கேட்டா.. இப்ப இங்க நடந்த கலந்துரையாடலையே நாடகமாப் போட்டா பிரமாதமா வரும்னு தோணறது. நகைச்சுவைக்கு நகைச்சுவையும் ஆச்சு.. சில ஆழ்ந்த கருத்துக்களையும் அதுல பேசிரலாம்.. வேணும்னா நடுவுல நான் பாரதியோட சிந்தனைகளை அள்ளி வீசறேன்.. என்ன சொல்றீங்க?

கிருபா : அருமையான ஐடியா.. நாணு.. இதையே ஒரு ஸ்க்ரிப்டா எழுதிருங்க.. என்ன சுந்தரராஜன்.. ஓக்கே தானே?

சுந்தரராஜன் : டபுள் ஓக்கே.. இந்தத் தடவை நிஜமாவே கலகல பொங்கலாத்தான் இருக்கப் போறது..

ஆர்.கே. : மீட்டிங்க் ஓவர்தானே? கிருபா சார்.. மெனுவை சொல்லுங்க சார்.. பசிக்குது..

(என்றவுடன் எல்லோரும் சிரிக்க கலந்துரையாடல் இனிதே நிறைவடைகிறது)