
குவிகம் சிவசங்கரி மாதக் கதைத்தேர்வில் டிசம்பர் 2024 மாதத்திற்கான கதையினைத் தேர்ந்தெடுக்க என்னைப் பணித்த குவிகம் அமைப்பிற்கு நன்றி.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
டிசம்பர் மாத சிறந்த சிறுகதை
ஓடக்காடு பெரியப்பா வீடு….கோபாலகிருஷ்ணன் (அந்திமழை – டிசம்பர் 2024)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனதில் நிற்கும் கதைகள் இவை
தீச்சொல் நிகண்டு நாஞ்சில் நாடன் (சொல்வனம் 22.12.2024)
கதை முழுதும் நாஞ்சில் நாட்டு வாசம். சில நாஞ்சில் தேசத்து உரையாடல்கள் மலைக்க வைக்கின்றன.
சரளமான சொல்வளம். கடலைப் பொடியாக்கிய கறை மிடற்றனைப் போலத்தான் இன்று சராசரி இந்தியக் குடிமகனும் என்பன போன்ற சொற்றொடர்களை உதாரணம் கொள்ளலாம்.
“கெட்ட வார்த்தை சொல்லகராதி தொகுக்கப் போறதா சொன்னேருல்லா” மற்றும் “சரி பாட்டா நீ எதுக்குப் பம்முகேருன்னு நமக்குத் தெரியும்” என்ற நாஞ்சில் நாடனோடு நாமும் பயணிக்கிறோம்.
“பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன்” என்ற பாபநாசம் சிவன் பாடலையும் மாயா மாளவ கவுல ராகத்தையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். நகைச்சுவை கதையெங்கும் விரவியிருக்கிறது.
சொல்வளம்!! கற்பனைத்திறன்!! ஆகா!!
ககன்யாத்ரி … ஆயிஷா நடராஜன் (குங்குமம் 13.12.2024)
ரஷ்ய விண்வெளி வீரர்கள் காஸ்மோநாட் என்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆஸாட்ரோநாட் என்றும் அழைக்கப்படுவது போல இந்திய வீரர்கள் ககன்யாத்ரிகள் என்று அழைக்கப்படுவதாகக் கதை தொடங்குகிறது.
நண்பர்கள் இருவர். தன் நண்பனை உயர்த்திக்கொண்டு தானும் உயர்வது நண்பனை சந்தேகப்படுவது இறுதியில் நண்பன் செய்த உயிர்த் தியாகத்தால் மெய்சிலிர்ப்பது போன்றவை திறம்பட சொல்லப் பட்டிருக்கிறது.
வித்தியாசமான நோக்கு, கடைசி வாக்கியத்தில் திருப்பம் என்ற சிறுகதைத் தகுதிகளைப் பெற்றிருக்கிறது.
முடிவு… நிர்மல் (சொல்வனம் 22.12.2024)
அமெரிக்க தேசத்தில் பனியும் குளிரும் சேர்ந்த பொழுதில் ஒரு மலைச்சாலையில் காரில் மானசா பயனம்.உடன் மிகக் குழப்பமான மனநிலையில் மகன். கடும் இயற்கை உபாதையோடும் மகனைக் கண்காணித்துக் கொண்டும் கார் ஓட்டும் போது நாமும் பதட்டத்தோடே பயணிக்கிறோம்.
கதாநாயகிக்கு நாமும் ஏதாவது உதவமுடியாதா என்ற மனநிலைக்கு எழுத்தாளர் நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். வங்காள இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் நம்மை ரசிக்க வைக்கின்றன.
“இப்போது டிஜிட்டல் உலகம் டிசைனாகி இருக்கு. ஒவ்வொரு செய்தியும் அவசரம்.காத்திருக்க முடியாது என நம்ப வைக்கிறது” போன்ற நயமான சொல்லாடல்கள் தெரிகின்றன.
இயல்பான முடிவு. முடிவு திணிக்கப்படவில்லை.
உயிர் மல்லாரி… அனந்த் ரவி (குவிகம் மின்னிதழ் டிசம்பர் 2024)
சதுரன் சதுரி…வித்தியாசமான பெயர்கள்
தஞ்சை மண்ணும் காவேரி நதியும் கம்பீர நாட்டையும் மல்லாரியும் கதையெங்கும் விரவியிருக்கின்றன. படித்து முடித்த பின்னரும் கூட முத்துக் காளையின் தவில் ஓசை காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அற்புதமான கதை ஓட்டம். “அவள் கிளம்பினாள். அவளைக் கிளப்பியபின் மல்லாரி அடங்கியது” என்ற வாக்கியம் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது போன்ற கதைக் கருவை தேர்வு செய்தமைக்காக எழுத்தாளருக்குச் சிறப்பு பாராட்டுக்கள்
இந்திர லோகம்.. . வேலு ராஜகோபால் (அம்ருதா டிசம்பர் 2024)
இது போன்ற வித்தியாசமான கதைக் கருவைத் தேர்வு செய்ததற்காக எழுத்தாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆண் ஆதிக்கம் பொறுத்துக் கொள்ள முடியாதது. அதே சமயம். பெண்மைக்கு உண்டான பலன்களும் வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டிருக்கிறது.
“பெண்களுக்கு எதிரானவர்களால் பெண்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்த உலகம்” என்பன போன்ற யோசிக்க வைக்கும் வார்த்தைகள்.
தனக்கு மழலை இன்பம் திருமணமின்றி வேண்டும் என்பதற்காக அவளுடைய சிந்தனையும் செயல்பாடுகளும் திட்டங்களும் நியாயம் தானோ என்று நம்மை வேறு கோணத்திற்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
சபாஷ். அட்டகாசமான கதை ஓட்டம்
கேளடி கண்மணி… தி.வள்ளி (குங்குமம் 20.12.2024)
கணவரை டைவர்ஸ் செய்யும் எண்ணத்தோடு தாய்வீடு திரும்பும் நாயகி. நேர்மறை எண்ணம் கொண்டவள். வயது முதிர்ந்த தம்பதியின் விட்டுக் கொடுத்தலையும் அன்புப் பரிமாறலையும் பார்த்துத் திரும்புவதான அறதப் பழசான கதை.
இருந்த போதும் கதையை எடுத்துச் சொல்லுகின்ற விதம் நன்றாக இருக்கிறது. தென்காசிக்கே அழைத்துச் சென்ற திருப்தி. தெளிந்த நீரோடை போல கதை ஓடுகிறது.
கருத்து மாறுபாட்டைக் கூறும் போது ” நான் ஏனைன்னா அவர் கோணைம்பார்” என்பன போன்ற சொல்லாடல்கள் ரசிகக வைக்கின்றன
கடைசி மனிதன்….பட்டுக் கோட்டை பிரபாகர் (ஆனந்தவிகடன் 11.12.2024)
உலகின் கடைசி நகரம் இன்னும் சற்று நேரத்தில் வேற்று கிரக வாசிகளால் அழியப் போகிறது.அழிவுக் கோலத்தின் இறுதி நிகழ்வுகள் திரைப்படம் போல விவரிக்கப்பட்டிருக்கிறது.அந்த நேரத்திலும் இறந்து கிடக்கும் பெண்ணிடம் இது நாள் வரை சொல்லத் தயங்கிய காதலைச் சொல்லத் துடிக்கும் இடம் அருமை. அபாரமான கதை ஓட்டம்.
இதற்கான கதைக்கரு சுஜாதாவாக இருந்தாலும் கற்பனையோடு கதாசிரியர் எழூதியிருப்பது ஃபாண்டாஸ்டிக். கதாநாயகன் ஓடிக் கொண்டேயிருந்தான். கதையும்ஓடிக் கொண்டே இருந்தது. உலகம் அழியும் போது எப்படி இருக்கும்? இந்தக் கதையைப் படியுங்கள்.
கதவு தட்டப்பட்டது என்று முடித்திருப்பது அருமை
டிசம்பர் 2024 மாதத்திற்கான கதையாக தேர்வுபெறும் கதை
ஓடக்காடு பெரியப்பா வீடு….கோபாலகிருஷ்ணன் (அந்திமழை – டிசம்பர் 2024)
தம்பி புஷ்பா தியேட்டர் “எங்க பாட்டன் சொத்து” போஸ்டரைப் பிரமிப்பாகப் பாரத்துக் கொண்டிருந்தான் என்பதிலிருந்து கதை 1975 கால திருப்பூரைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அப்போது பல்லடம் தாலூகாவின் ஒரு சிறிய நகராட்சி தான் திருப்பூர்.
சிக்கண்ணா கல்லூரி, பெருமாநல்லூர்,பார்டர் போட்ட நெகமம் புடவை,தனலட்சுமி பஞ்சாலை, ஸ்பேரோ நிட்டிங், ஓடக்காடு ஊத்துக்குளி என திருப்பூரை அச்சு அசலாக அங்குலம் அங்குலமாக அக்யுரேட்டாக விவரித்தருக்கிறார் கதாசிரியர்.
ஓடக்காட்டிலுள்ள பெரியப்பா வீட்டிற்கு விடுமுறைக்காக கொண்டு போய் விடப்படுகிற அண்ணன் தம்பி இருவர் மூலமாக பஞ்சு மில்லில் வேலைபார்க்கும் நடுத்தர வாழ்விற்கும் கீழான தொழிலாளர்களின் வாழ்வை விவரித்திருப்பது அற்புதமோ அற்புதம்.
சீட்டிற்குப் பணம் கட்டுவது,சீட்டில் பண்ம் எடுத்துச் செலவைச் சமாளிப்பது, சின்னஞ்சிறு வீட்டில் வாடகை கேட்டு நெருக்கும் கிழவியின் நக்கலான நச்சரிப்பு, இந்த மாதத்தை எப்படி சமாளிக்கலாம் போன்றவற்றை அப்படியே விஷுவலாகக் காண்கிறோம்.
தினமும் பஞ்சாலைச் சங்கு ஊதியவுடன் டிபன் பாக்ஸுடன் உள்ளே செல்லுதல் இரண்டு கசங்கிய வெற்றிலையோடு சேர்ந்த பாக்கு சுண்ணாம்பு, வேலை முடித்துத் திரும்பும் போது தலையில் பஞ்சுத் துகள்களோடு களைப்புடன் திரும்புவது என படம் போட்டுக் காட்டியிருப்பது ஆச்சரியத்தின்.உச்சம்
கிடைத்த சொற்ப சம்பளத்தில் மது அருந்துவது லாட்டரி சீட்டு வாங்குவது ஆனால் குடும்பத்தின் மீது பாசமாக இருப்பது என யதார்த்தமாகக் கதை செல்கிறது.
சுவாரசியம் கூட்டுவதற்காகத் திருப்பங்களை செயற்கையாக அமைத்தல் போன்றவற்றைத் தவிர்த்து மிக இயல்பாக அட்டகாசமான நடையில் கதையை நடத்திச்.செல்கிறார்.
பரமு அழகர் ரமாக்கா அம்பிகாக்கா என திருப்பூருக்கே உரித்தான பெயர்கள்.
வீட்டுச் செலவுக்கே லாட்டரி அடித்த நேரத்தில் சாராய வாடையுடன் கையில் லாட்டரி சீட்டுகளோடு உள்ளே வந்த பெரியப்பாவும் பெரியம்மாவும்.விறகுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு அடித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துப்.பயந்த பதின்மூன்று வயது அண்ணன் அழுகின்ற தன் தம்பியையும் அழைத்துக் கொண்டு திரும்புகிறான்.
அப்போது பின் இரவு நேரத் திருப்பூரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் கதாசிரியர். ஆங்காங்கு குடித்து விட்டு மட்டையாகிக் கிடப்பவர்கள் ரகசியமாக கஞ்சா சாராயம் விற்பவர்கள் பவுடர் போட்ட இரவு ராணிகளின் உலா எனப் பின்னிரவுக் காட்சிகளைப் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ஒரு சிறுகதைக்குண்டான அனைத்து சாராம்சங்களையும் உள்வாங்கி மிகச் சிறப்பான பெர்வாமன்ஸ்.செய்திருக்கிறார்.கதாசிரியர்.
தெளிவுறவே அறிந்திடுதல்
தெளிவு பெற மொழிந்திடுதல்.என்ற பாரதியின் வார்த்தைகளுக்கேற்ப அமைந்திருக்கிறது ஓடக்காடு பெரியப்பாவின் வீடு.
சபாஷ்

என்னுடைய மல்லாரி சிறுகதையைப் பற்றிய பாராட்டுகளுக்கு மிகுந்த நன்றி. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
LikeLike