சங்கீதத் துக்கடா – 1

![]()
சின்ன அண்ணாமலையும் தமிழ் இசையும்
ஒருமுறை, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கச்சேரி செய்து கொண்டிருந்தபோது, இலக்கியவாதியும் தேசியவாதியுமாகிய திரு சின்ன அண்ணாமலை அவர்கள் குறுக்கிட்டு, கச்சேரியில் தமிழ்ப் பாட்டு வேண்டும், தெலுங்கு கீர்த்தனைகள மட்டுமே பாடக் கூடாது என்றவுடன், அடுத்த சில நிமிடங்களில்,யாரடா குரங்கு அங்கே என்ற அருணாசலக்கவிப் பாடலை பாட, சின்ன அண்ணாமலை உட்பட சபையினர் அதிர்ந்தனர்.
கச்சேரி முடிந்தவுடன், அரியக்குடி, சின்ன அண்ணாமலையைக் கூப்பிட்டு , தமிழ்ப் பாட்டு கேட்டதால், அருணாசலக் கவி பாடல் பாடினேன் என்றார். (இராவணன் சபையில் அனுமன் வந்தபோது பாடிய பாடல் அது) சின்ன அண்ணாமலையும் அவரிடம், மொழி முக்கியம் – எனவே தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டும், அதனால் தான் சொன்னேன் என்றார்.
ஆனாலும், அரியக்குடி அவர்கள், இசைக்கு மொழி அவ்வளவு தேவையில்லை, இசை தான் முக்கியம் என்று கூறினார். உடனே திரு சின்ன அண்ணாமலை அவர்கள், மொழியும் பாட்டும் முக்கியம் என்பதால்தான் பாடுகிற நீங்கள் நடுவில் உட்காருகிறீர்கள்- பக்க வாத்யமாக, இரண்டு பக்கங்களிலும், வயலின் மற்றும் மிருதங்கம் அமர்கிறார்கள் என்றார். மொழிக்கு முக்கியம் இல்லை
என்றால், வாய்ப்பாட்டுக்காரர் ஏன் நடுவில் உட்காரவேண்டும் என்று கூறியவுடன் அரியக்குடி, நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி, திரு சின்ன அண்ணாமலை அவர்களைப் பாராட்டினாராம்.
அது மட்டுமல்ல, அதற்குப் பிறகு, கட்டாயமாக தமிழ்ப் பாடல்களை கச்சேரிகளில் பாட வைத்தார், கல்கி, எம் எஸ், எம் எல் வி, பட்டம்மாள் என பலரும் அதை எடுத்துச் சென்றனர்.
அப்படித்தான் தமிழிசை கர்நாடக இசை மேடைகளில் கலந்து, இப்போது தனித் தமிழ்ப் பாடல்கள் கச்சேரி என்றெல்லாம் தொடர்கிறது.
சங்கீதத் துக்கடா – 2
காவிரி அந்தக் காலத்தில் தண்ணிரை மட்டுமா தந்தது ? சங்கீதம் உள்ளிட்ட கலைகளை எப்படி எல்லாம் தந்திருக்கிறது?
இன்று அங்கு வளர்ந்த சங்கீதக் கோட்டை இல்லை. அகண்ட காவிரியோ மணலையே ஆறாய் வைத்திருக்கிறது. இருந்தாலும் பலருக்கு அந்தக் காவிரியும், அது வளர்த்த இசையும் கலைகளும் இன்னும் நினைவில் இருக்கின்றன.
குளித்தலை நகரத்தில், கோட்டை போல அன்று இருந்த ராஜு அண்ணா என்று அழைக்கப்பட்ட ராஜு அய்யங்கார் அவர்களின் இல்லம், அதில் வந்து போன சங்கீதக் கலைஞர்கள் என எவ்வளவு விஷயங்கள். குளித்தலையில் ஶ்ரீ ராம நவமி மிகச் சிறப்பு. அதில் பங்கு பெறாத கலைஞர்களே இல்லை எனலாம். ராஜு அய்யங்கார் மகள் தந்த நினைவுகள் இன்னொரு சங்கீதம்.
வயலின் மேதை கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, அகண்ட காவிரியில் காலை 8 மணிக்குச் சென்றால், 11 மணி வரை குளிப்பார். காவிரியின் மீது அத்தனை ஆசை அவருக்கு. வேட்டியை துவைத்து, உலர்த்தி உடுத்திக்கொண்டு, குளித்தலையில் உள்ள கடம்பேஸ்வரர் கோயில் சென்று தரிசனம் செய்வார்.
வயலின் பாப்பா வெங்கட்ராமையருக்கு, கடாரங்காய் ஊறுகாய் மீது தனிப் பிரியமாம். வயலின் இசையில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்பதுபோல், இவர் ஊறுகாய் கேட்பாராம்.
அந்தக் காலத்தில் லால்குடி ஜெயராமன் அவர்கள் குடுமியுடன் இருந்தார். ஒரு முறை குளித்தலையில் கச்சேரிககு வந்த அவர், அன்று காலை குளிக்கும்போது தவறிப்போய், வெந்நீரில் கையை வைக்க, விரல் நுனிகள் கொப்பளித்துவிட்டன.
ஆனால் அந்தக் கையோடு, அன்றைய கச்சேரியை அற்புதமாக வாசித்தாராம்.
புளூூட் மாலி குளித்தலை வரவேண்டிய ரயிலைத்தவறவிட்டார். சென்னையில் ஹிந்து ரங்கராஜன் அவர்கள் மூலம், நடிகர் சந்திரபாபு காரில் குளித்தலை வந்து சேர்ந்தார் மாலி. இரவு 8 மணிக்கு தொடங்கிய கச்சேரி முடியும்போது அதிகாலை 3 மணி. அது அந்தக்காலம்.
சங்கீத மாமேதை ஜி என் பாலசுப்ரமணியம் கைக் கடிகாரம், கார் இவற்றின் மீது காதல் கொண்டவர். வாங்கிக் கொண்டே இருப்பார் – மாற்றிக்கொண்டே இருப்பார். வாழ்ந்தபோது அவர் குடியிருந்த வீடுகளும் அதுபோலத் தான். . மாறிக்கொண்டே இருப்பார் என்பார்கள்.
ஜிஎன்பிக்கு அபார சங்கீத ஞானம். தேவி உபாசகர். பயணத்தின்போது கையில் பூஜைப்பெட்டி இருக்கும். கச்சேரிக்கு செல்லும்முன், நெய்யில் வறுத்த நான்கு மிளகை வாயில் போட்டுக்கொள்வார். அப்புறம் என்ன – காவிரி ஆறாக சங்கீதம் – குற்றால அருவியாக ஸ்வரங்கள், பிருகாக்கள் என ரசிகர்களை இன்பத்தில் நனைக்கும். வயலின் மேஸ்ட்ரோ லால்குடி ஜெயராமன் அவர்கள் எனது இல்லம் வந்தபோதும், நான் அவரைச் சந்திக்கும்போதும், மறக்காமல் அவர் குறிப்பிடும் இரு மேதைகள் – ஜி என் பாலசுப்ரமணியம் மற்றும் தண்டபாணி தேசிகர்.
எனது தந்தைக்கு மிகவும் பிடித்தமான இசைக் கலைஞர்கள் ஜி என் பாலசுப்ரமணியன், மதுரை மணி அய்யர் மற்றும் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்.
ஜிஎன்பி கூடவே இருந்து, தம்புரா மீட்டிய திரு ராஜகோபால் நாயுடு சென்னை பரங்கி மலை ரயில் நிலையம் அருகில் இருந்தபோது நான் சில மாதங்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டேன். நல்ல சங்கீதம் – பொறுமை – பாராட்டும் குணம் – எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத மனம். நிறைய விஷயங்கள், தனது குருநாதரைப் பற்றிக் கூறுவார்.
எனது பணி,காஞ்சிபுரத்திற்கு மாற்றல் ஆனதால், அவரின் தொடர்பு விட்டுப்போனது. இதில் ஒரு வேடிக்கை – வருத்தமும் கூட – எனது மகன்களை வயலின் கற்றுக்கொள்ள, காஞ்சிபுரத்தில் இருந்து வாராவாரம், என் மனைவி, நான் என்று சென்னை வந்து லால்குடி சிஷ்யர்கள் ஶ்ரீ விட்டல் ராம்மூர்த்தி, ஶ்ரீ சீனிவாசமூர்த்தி என இவர்களிடம் பல வருடங்கள் போனது. அப்போது கூட, எனது சங்கீதம் , அதைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் வராமல் போனது எனது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். ஏதோ, குரு அருள், பெற்றோர் ஆசியால், மேன்மையான இசையை ரசிக்கும் ரசிகனாக இருப்பதே எனக்கு மகிழ்வுதான்.
சங்கீத நினைவலைகள் மனத்துக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்றால் மிகையாகாது.

சுவாரஸ்யமான தகவல்கள்…அத்தனையும் அருமை
ஜெயசீலன். த
LikeLike