
புராணத்தில் ஒரு கதை உண்டு, எறும்பு ஒன்று அதனை அனைவரும் சுலபமாக கொன்றுவிடுகிறார்கள் என்ற காரணத்தால் இறைவனை நோக்கி கடும் தவம் புரிகிறது. இறைவனும் வேண்டிய வரத்தை தர எறும்புக்கு காட்சியளிக்கிறார். எறும்பு பத்தாம்பசலித்தனமாக, ‘ நான் கடித்தால் கடிபட்டவர்கள் சாக வேண்டும்’ என்பதற்கு பதிலாக, ‘ நான் கடித்தால் சாக வேண்டும்’ என்று கேட்டு வரத்தைப் பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அது கடித்தவுடன் மரணிக்கிறது. இப்படி இறந்த எறும்புகளில் ஒன்று முடிகொண்டான் என்ற கிராமத்தில் மானுடனாக பல ஜென்மங்கள் கழித்து பிறக்கிறது.
அந்த மானுடன், வரதன் என்ற பெயரோடு முடிகொண்டானில் இப்போது வாழ்ந்து வருகிறான். சுயமாக தொழில் செய்து சிறப்பாக வாழ்ந்து வரும் முப்பது வயது வரதனுக்கு இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஒரே ஒரு குறைதான்.
“பாட்டி உனக்கு இந்த வயசுல ஒரு முடி கூட நரைக்கல, இவ்வளவு அடர்த்தியா இருக்கே, எனக்கு மட்டும் ஏன் பாட்டி தலையில முடியே இல்ல?” என்று ஆறு வயது வரதன் அங்கலாய்ப்பான்.
“நீ உங்க பாட்டன், அப்பன கொண்டிருக்க டா ராசா… தலையில முடி இல்லாட்டி என்ன? நீ உங்க தாத்தாவ போல பயில்வானா வருவ பாரு!” என்று தேற்றுவாள் பாட்டி. சிறு வயது வரதனும் பாட்டி பேச்சை நம்பிக்கொண்டு தலையை ஆட்டுவான். பாவம் அவனுக்கு அப்போது தெரியாதது,அவன் வழுக்கைக்கு காரணம் மரபணு கோளாறு என்று. அதனால் தலைமுறை தலைமுறையாக அவன் குடும்ப வாரிசுகளுக்கு அதிக முடி இல்லாமல் போனது என்று.
இனி நாம் இப்படித்தான் இருக்கப்போகிறோம் என்பதை அவன் உணரவே பதினாறு வயது ஆகிவிட்டது. அதற்குப் பிறகு, வெங்காயம், வெந்தயம், செம்பருத்தி, கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி என்று அவன் எந்த எண்ணை தேய்த்தாலும் அவன் தலையில் புல் பூண்டு கூட முளைக்கவில்லை. அமேசான் காடுகளில் உருவான அதிசய மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணை கூட அவனுக்கு பலன் தரவில்லை. விக் எனப்படும் செயற்கை முடியும் அவனுக்கு சரிவர பொருந்தவில்லை. ஒரு கட்டத்தில் அவன் முயற்சிகளை கைவிட்டு நிதர்சனத்திற்கு மனதை பழக்கிக்கொண்டான்.
இருந்தும், ‘டேய் சொட்டை!’ ‘வழுக்கை வரதா’ என்ற பட்டப்பெயர்கள் அவனை உருகொலையச் செய்தன . இவை அனைத்தையும் தாண்டி பல்வேறு பெண்கள் அவன் தலையை சுட்டிக்காட்டி அவனை மணக்க மறுத்தது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல பற்றிக்கொண்டு எரிந்தது அவனுக்கு.
இந்நிலையில்தான் பக்கத்து ஊரைச் சேர்ந்த பூங்குழலியை பெண் பார்க்க சென்றான் வரதன். குழலி தலையில் அவன் முதல் முதலில் கவனித்தது அவளது கூந்தலை. மூன்று தேர்வடங்களை இழுத்து பிண்ணியது போல குழலியின் குழல் அவள் பின்தொடை வரையில் நீண்டது. அவள் அசைந்து அசைந்து நடக்கையில் அந்த குழல் இரு பக்கமும் அசைந்து அசைந்து சென்றது. இதைப் பார்த்த வரதனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.
“நான் குழலியிடம் தனியாக பேச வேண்டும்,” என்று கூடியிருந்த பெரியவர்களை கேட்டுக்கொண்டான்.
“குழலி, நான் உங்களை அப்படி கூப்பிடலாம் இல்ல?” என்று தயங்கியபடியே தொடர்ந்தான், “என் தலையை பாருங்க, ஒரு முடி இல்ல, நான் ஏதோ கோயிலுக்கு போய் மொட்டை போடுக்கிட்டதா எங்க வீட்டுல சொல்லி இருப்பாங்க, ஆனா, அது பொய். எனக்கு பிறவியிலிருந்தே தலையில் முடி கிடையாது. உங்களுக்கு கடவுள் அத அள்ளிக் கொடுத்திருக்கான். நிச்சயம் நீங்க என்ன கல்யாணம் செய்துக்க மாட்டீங்கன்னு தெரியும், இருந்தாலும் நான் உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன், வேற ஏதாவது காரணம் காட்டி என்னை கட்டிக்க மறுத்துடுங்க,” என்று கேட்டுக்கொண்டான் வரதன்.
வரதனின் இந்த நேர்மை பிடித்துப் போனதால் அவனை கல்யாணம் செய்துக்கொள்ள சம்மதித்தாள் குழலி. வரதனுக்கு மகிழ்ச்சியில் கால்கள் தரையில் பதியவில்லை. திருமண நாளை எண்ணி இன்பக் கனவுகள் காணத்தொடங்கினான் அவன்.
ஆனால், அவனது சந்தோஷம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. குழலியின் பெற்றோர் வீடு தேடி வந்து சம்பந்தத்தை நிறுத்தினார்கள்.
“ புள்ளைக்கு ஏதோ சூடு காரணமா, இல்ல தண்ணி மாரியதால முடி கொட்டிப் போச்சுன்னா கூட பரவாயில்லை, உங்க குடும்பத்த சேர்ந்த குழந்தைகள் யாருக்குமே தலையில முடி இல்லாதது ஏத்துக்க முடியல. நல்ல வேளையா உங்க பரம்பரையில சில தலைமுறைகளா பொம்பள குழந்தை பொறக்கல, நாளைக்கு என் பொண்ணுக்கு பொறந்து, அது தலையில முடி இல்லாம இருந்தா ? நினைச்சு பார்க்கவே முடியல, இந்த சம்பந்தம் நடக்காது. மன்னிச்சுக்கிடுங்க!” என்று திருமணத்தை நிறுத்தினார்கள்.
நிலைகுலைந்து போனான் வரதன். “அந்த குழலி, அவங்க அம்மா, அவங்க ஊருல இருக்கற அத்தனை பேருக்கும் முடி கொட்டிப் போய் வழுக்கை விழணும். என்ன கேலி செய்த இந்த ஊர் காரங்களுக்கும், ஆம்பள, பொம்பள பேரம் இல்லாம அத்தனை பேருக்கும் வழுக்கை விழணும் !!” என்று கண்களில் தீப்பொறி தெறிக்க, கடும் சினத்தொடு சாபம் கொடுத்தான் வரதன்.
அவன் சாபத்திற்கு ஏற்ப சில மாதங்களில் அவ்விரண்டு ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் தலைமுடி கொட்ட ஆரம்பித்தது. முதலில் அவர்கள் அதை பெரிது படுத்தாத போதிலும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட வழுக்கை விழும் அபாயம் வந்தவுடன் அவர்கள் அந்த மாவட்ட சுகாதாரத் துறை தலைவரிடம் புகார் அளித்தனர். புகார் மனுவில் ஓர் சாட்சியாக கையெழுத்து போட்ட வரதன், மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ‘அட முட்டாள்களா! என்னையா வழுக்கைன்னு சொன்னீங்க! நான் கும்படற கடவுள் என்னை கைவிடல, கூடிய சீக்கிரம் நீங்க எல்லாரும் என்ன போல ஆகப்போறீங்க, அதை பார்த்து நான் கைகொட்டி சிரிக்கப்போறேன்,’ என்று மனதிற்குள் எக்காளமிட்டான் வரதன்.
திடீரென்று ஒரு நாள் இரவு அவன் வீட்டுக் கதவை யாரோ பாலமாக தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான் வரதன். வெளியில் ஒரு போலீஸ்காரர் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டான்.
“இங்க வரதன் என்பவர் யாரு?” என்று வந்த ஏட்டையா சற்று மிரட்டலாக கேட்டார்.
“நான்…நான்தான்… என்ன விஷயம்?” என்று தயங்கியபடி வரதன் கேட்டான்.
“அது ஒண்ணும் இல்ல, ஒரு கேஸ் விஷயமா இன்ஸ்பெக்டர் சார் உங்க கிட்ட பேசணுமாம், கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா?” என்றார் ஏட்டையா.
கதிகலங்கிப்போனான் வரதன். ‘என் மனசுல நான் சாபம் விட்ட விஷயம் இவங்களுக்கு எப்படி தெரிஞ்சிச்சு? ஒரு வேளை ஏதாவது மந்திரவாதி கூட்டிட்டு வந்து கண்டு பிடிச்சிருப்பாங்களோ? சே சே… அதெல்லாம் ஒண்ணும் இருக்காது, சாதாரணமா பேசத்தான் இன்ஸ்பெக்டர் கூப்பிடறார்…
நம்ம கிட்ட பேச அவருக்கு என்ன இருக்கு? அப்படியே நம்ம சாபம் விட்ட விஷயம் தெரிஞ்சாலும், இவங்களாள கோர்ட்ல புரூவ் பண்ண முடியுமா என்ன?’ என்று வாதமும், பிரிதி வாதமுமாக தன்னைத் தானே குழப்பிக் கொண்டு காவல் நிலையம் நோக்கி நடந்தான்.
“வாங்க தம்பி, நீங்கதான் இங்கயும், பக்கத்து கிராமத்திலும் விவசாய உபகரணங்கள் விக்கறீங்களா? ” என்று யதார்த்தமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பதிலளித்தான் வரதன். “ ஆமா சார், விவசாய உபகரணம் மட்டுமில்ல, தரமான விதைகள், உரங்கள் எல்லாம் விக்கறேன்.”
“சரி, அந்த ‘கேண்டி’ என்கிற பூச்சிக்கொல்லி மருந்து நீங்க தானே வித்தீங்க?”
“ஆமா சார், அரசாங்க வேளாண் அதிகாரிகள் தான் அந்த பிராண்ட் பரிந்துரை செய்தாங்க. மூணு வருஷமா நம்ம மாநிலத்த்துல பல ஊர்களில் இந்த மருந்து தான் பயன்படுத்தறாங்க!” என்றான் வரதன் இப்போது சற்று நம்பிக்கையுடன்.
“ஆறு மாசமா ‘கேண்டி’ மருந்தோட ‘ வோர்ம் எக்ஸ்’ என்ற பொடியை இலவசமா கொடுத்தீங்களா?”
“ஆமாம் சார் கொடுத்தேன்!”
“அது யார் பரிந்துரையின் பேரில் கொடுத்தீங்க?”
“அது பயன்படுத்தி விளைச்சல் ஒரு 10 சதவீதம் கூடியிருக்குல்ல? எனக்கு தெரியும்!” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்று குரலை தாழ்த்தி ரகசியமாக கேட்டான் வரதன்.
“சரி சொல்லுங்க, யார் பரிந்துரையின் பேரில் கொடுத்தீங்க?” என்று மறுபடியும் எதார்த்தமாக கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“சார், நான் வேதியல் பட்டதாரி. வேளாண் சாகுபடி குறித்து ஒரு வருஷம் டிப்ளோமா கூட பண்ணி இருக்கேன். இந்த சுற்றுவட்டாரத்திலேயே எனக்கு ஜிடி நாயுடுன்னு ஒரு பட்டப் பெயர் கூட இருக்கு. புழு தொல்லை நெறைய இருக்குன்னு என் ப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான். அரசாங்க மருந்து ஓரளவுக்கு தான் வேலை செய்யுதுன்னு சொன்னான். அதான், இந்த மருந்து கண்டுபிடிச்சு ஒரு சாம்பிள் அவனுக்கு கொடுத்தேன். நல்ல ரிசல்ட் தெரிஞ்சுதுன்னு சொன்னான். அதான் பேடென்ட் அப்பிளை பண்ணுவதுக்கு முன்ன ஒரு ஆறு மாசம் ஃப்ரீ சாம்பிள் கொடுக்கலாம்னு கொடுத்தேன். கொஞ்சம் கை கடிச்சுது தான், இருந்தாலும் விவசாயிங்க கஷ்டத்தை தீர்ப்பதால எனக்கு அது பெருசா தெரியல, எனக்கு எதாவது பரிசு கொடுக்கப்போகுதா அரசாங்கம்?” என்று தலைகனம் லேசாக தலைதூக்க விசாரித்தான் வரதன்.
“யூ ஆர் அண்டர் அரெஸ்ட்!” என்றார் இன்ஸ்பெக்டர் கறாராக.
விக்கித்துப்போனான் வரதன்.
“யோவ் இரண்டு கிராமத்த சேர்ந்தவங்க சொட்டை ஆனதுக்கு நீ கண்டுபிடிச்ச மருந்து தான்டா காரணம் படவா!” என்று சீறியபடி தனது தொப்பியை விசிறி எரிந்த இன்ஸ்பெக்டரின் தலையிலும் வழுக்கை விழுந்திருந்தது.
“டேய் ராஸ்கல்! உனக்கு என்னடா நான் பாவம் செய்தேன்? உன் மருந்து நிலத்துல நல்லா ஊடுருவி நிலத்தடி நீரை பாத்திச்சிருக்கு! அதனால இன்னும் கல்யாணம் கூட ஆகாத எனக்கும், ரெண்டு ஊரையும் சேர்ந்த மத்தவங்களுக்கு வழுக்கை விழுந்திருச்சு!” என்று அனலைக் கக்கிய இன்ஸ்பெக்டர், பரிதாபமாக அவர் வழுக்கை தலையில் துளிர்த்திருந்த வியர்வை துளிகளை கைக்குட்டை கொண்டு துடைத்தார். அதனைக் கண்ட வரதன் சாபம் பெற்ற எறும்பைப் போல துடித்தான்.
