
சாரணர் முகாம் என்பது சாதாரண விஷயமல்ல. அதில் ஒரு நூறு இருக்கு. ஒவ்வொன்றாய் விளக்குகிறேன். பயப்படவேண்டாம் . ஐ மீன் ஒன்றிரண்டை விளக்குகிறேன்.
நாங்கள் கேம்ப் போன இடம் கோத்தகிரி. பேரைக் கேட்ட உடனேயே எங்களுக்கு ( எனக்கும் என் சகோதரனுக்கும்) “ஜிவ் “ வென்ற உற்சாகம் . காரணம் நாங்கள் இருவருமே கேம்ப் போக செலெக்ட் ஆகி இருந்தோம். இதுதான் முதல் முறை ஒரு மலை வாசஸ்தலத்துக்கு செல்லும் அனுபவம். பெற்றோர் இல்லாமல் மூன்று வாரங்கள் வெளியூருக்குச் செல்வதும் இதுதான் முதல் தடவை. கல்லூரி சாரணர் தோழர்களோடு செல்வது மிகப் பெரிய மகிழ்ச்சி.
இப்படிப் பல மகிழ்ச்சிகளின் இடையே பரபரப்பான “டிராவல் பாக்கிங்” கேம்ப் போகிறோம் என்பதால் சாரணர் முகாமுக்காக எல்லா கேடட்டுகளுக்கும் “கிட்” வழங்கப்பட்டது. இரண்டு ஜோடி கம்பளிப் போர்வைகள், இரண்டு ஜோடி கம்பளி காலுறைகள். காலை உடற்பயிற்சிக்கான உடுப்புகள் , கான்வாஸ் ஷூக்கள், ஒரு கம்பளிக் குல்லா, டிரஸ் பரேடுக்கான ரெகுலர் உடைகள், கேப், பாட்ஜுகள், லெதர் மற்றும் மெட்டல் பாலிஷ் டப்பாக்கள், ஒரு தட்டு, டம்பளர் ஸ்பூன் ஆகிய கேண்டீன் ஐட்டம்கள், போன்ற இன்னபிற இப்போது நினைவுக்கு வராத பல வஸ்துகள் கொடுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அடைத்து எடுத்துச் செல்ல, தலைகாணி உறை போன்ற ஒரு நீள கறுப்பு கலர் , முனையில் சுருக்கு போடும் உறையும் வழங்கப்பட்டது.
இந்த ஒரு லக்கேஜ் மட்டும்தான் எடுத்துவரவேண்டும். அதில் கட்டப்பட்டிருக்கும் அட்டையில் அவரவர் பற்றிய தகவல்கள் இருக்கும். அவரவர் சுமையை அவரேதான் சுமக்கவேண்டும். இதுதவிர ஐந்து பேர்கள் கொண்ட குழுவிற்கு “டெண்ட் “ அமைப்பதற்கான கம்புகள் , கயிறு வடங்கள் , டார்பாலினால் செய்யப்பட்ட மேற்கூரைப் பொருட்கள் அடங்கிய நீளப் பெட்டிகள் வழங்கப்படும். இதை அந்தந்தக் குழுதான் சுமந்துவரவேண்டும்.
அதெல்லாம் விடுங்க !இது போல பல கண்டிப்புகள்; கட்டுப்பாடுகள். என்றாலும் இளமைக்கு இதெல்லாம் தெரியாது. அதன் உற்சாகம் என்பதே தனி!
சென்ட்ரல் ஸ்டேஷன்ல நீலகிரி எக்ஸ்பிரஸில் ஒரு கம்பார்ட்மெண்ட் பூரா நாங்கதான். ஸ்டேஷன்லேயே எங்களுக்குக் கிடைத்தது ஒரு “தித்திப்புச்” செய்தி. இதே வண்டியில் ஒரு பெட்டி தள்ளி இருக்கும் கம்பார்ட்மெண்டில் என். சி. சி. மாணவிகள் பிரிவு பயணம் செய்கிறார்கள் என்பதே. இந்த விஷயமெல்லாம் அத்துபடியான மாதவனிடம் இது பற்றி மேலதிகத் தகவல் கேட்டோம்.
“ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கேம்ப் ஒரே இடமாம். அவுங்களும் கோத்தகிரிதான் வராங்க” என்றான்.
கம்பார்ட்மெண்டே உற்சாகத்தில் உரத்த குரலில் பாடத் தொடங்கியது. பக்தர்களுக்கு பஜனை போல அந்தக் காலத்தில் எங்களுக்கு “பாய்லா” பாட்டு. அதன் ஆரிஜின் ஸ்ரீலங்கா என்பார்கள்.
“மீட் மீ டூ மீட் இன் த மூன் லைட் மீட் மீ டூ மீட் ஆல் அலோன் “
“ஒன்ஸ் அ பாப்பா மெட் அ மாமா அண்டர் தி வில்லோ ட்ரீ
செட் த பாப்பா டோல்ட் த மாமா வில் யூ மேரி மீ “
போன்ற பாடல்கள் நூற்றிருபது டெசிபிள்ஸ் தாண்டி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.
இந்தப் பயணத்தின் அடுத்த மிக இனிமையான அனுபவம், நீலகிரி பொம்மை ரயில் எனப்படும் மீட்டர் கேஜ் ட்ரெயின். ரயிலில் அமர்ந்து கொண்டே கை நீட்டி செடி கொடிகளைத் தொடும் நெருக்கத்தில் வண்டி ஓடும். எல்லாக் குட்டி குட்டி ஸ்டேஷன்களிலும் இறங்கி ஏறுவோம். பின்னாளில் பனாரஸில் படிக்கும் போது “டார்ஜிலிங் “ டூரில் இதே போல மலை ரயிலில் சென்றிருக்கிறேன். “ஆராதனா” படத்தில் வரும் “ மேரே சப்னோ கி ராணி” படப் பாடலை நினத்துப் பாருங்கள். எங்கெல்லாம் டிரைன் பக்கத்தில் ரோடு போகிறதோ அங்கெல்லாம் வண்டியோடு சேர்ந்து நடந்தும் ஓடியும் செய்த கூத்துகள் மிக இனிமையானவை.
கோத்தகிரி ஓர் எளிமையான மலைவாழிடம்; கிராமம். நான் குறிப்பிடுவது ஐம்பத்தைந்து ஆண்டுகள் முந்தைய கதை. குன்னூரில் இறங்கி ராணுவ லாரியில் சென்று சேர்ந்தோம். சேரும் போதே மணி மாலை நாலு ஆகிவிட்டது. முதல் வேலை “டெண்ட்” அமைப்பது. எங்கள் முகாம் என்பது பெரிய திடல். எல்லாப் பக்கமும் மலைவெளிகள். ஓரளவு தரையை சமன் செய்து வைத்திருந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் வரிசையாக இடம் ஒதுக்கப்பட்டு அங்கே நாங்கள் எங்கள் டெண்டுகளை அமைத்தோம். இதெல்லாம் எப்படி எங்களால் முடியும் என்று நினைத்தேன்.
அது ஒரு வித்தியாசமான அனுபவம். “கேம்ப் கிட்” ல் இதற்கு என்னென்ன தேவையோ அனைத்தும் வைத்திருந்தனர். “பெக்” எனப்படும் ஒரு முனை கூர்மையாக இருக்கும் சிறு கம்புகளில் இருந்து அதை மண்ணில் அடித்து உள் செலுத்த உதவும் சுத்தியல், டார்பாலின் கூரை கட்ட உதவும் வளையங்கள் ,கயிறுகள், டார்ச் லைட், அலாரம், குண்டூசி, வேஸ்ட் பேப்பர் என சகலமும் இருந்தன. சரியான திட்டமிடுதல் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை என். சி. சி. எனக்குக் கற்றுத் தந்தது. பின்னாளில் என் முதுகலை பட்டப்படிப்புக்காக வட இந்தியா செல்ல நேர்ந்த போது, இந்த அனுபவப் பின்னணி எனக்கு வெகுவாக உதவியது.
காலைக்கடன் கழிப்பிலிருந்து எல்லாமே காலத்துக்கு உட்பட்டே நடக்கவேண்டும். “கேம்ப்” க்கு எதுக்கடா அலாரம் என்பது அங்க போனபிறகுதான் புரிந்தது. டாய்லெட் , பல் தேய்ப்பது, குளியல் எல்லாம் நேரப்படி நடக்கணும். அப்படி முடியல்லன்னா ? முடிஞ்ச அளவு முடிச்சிட்டு நேர நடக்கணும். முதல் இரண்டு நாட்கள் ரொம்ப கஷ்டம்; சிலபேர் பல் விளக்காமலே பரேடுக்கு வந்தார்கள். குளிக்காமலேயே லஞ்ச் சாப்பிட்டார்கள்; நடு இரவில் டாய்லெட் போனார்கள்.
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு வாரத்துக்குள் எங்கள் குழுவில் எல்லோருக்கும் இது பழக்கமாகிவிட்டது. எல்லாம் குறித்த நேரத்துக்குள் செய்து முடிக்கக் கற்றுக் கொண்டோம். நோ பிராப்ளம் .அப்போதுதான் ஒன்று புரிந்தது. பழக்கங்களுக்கு அடிமையாவது மனித இயற்கை. நல்ல பழக்கங்களை கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொண்டால் போதும், வாழ்க்கை முழுவதும் அது கை கொடுக்கும். ஆம் ! நேர மேலாண்மை என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்த முதல் இடம் கோத்தகிரி கேம்ப்.
குடியரசுதின அணிவகுப்புக்கு மாணவர்களைத் தேர்வு செய்யப்படும் பயிற்சி முகாம் என்பதால் எங்களுக்கு “கேன் ட்ரில் “ :ரைபிள் மார்ச்” போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
துப்பாக்கியை கையில் ஏந்தித் தோளோடு சாய்த்துக் கொண்டு சீர் நடை போடுவதும் பரேட் செய்வதும் “ரைபிள் மார்ச்” இது அனைவரும் செய்தாக வேண்டும்.
கேன் ட்ரில் என்பது “கேன்” {cane) என்ற குறுந்தடியை ( 70- 80 செ.மீ நீளம்) வைத்துக் கொண்டு பயிற்சி செய்வது. இது வெறும் பயிற்சி மட்டுமல்ல. செரிமோனியல் பரேட் எனப்படும் சிறப்பு அணிவகுப்புகளில் இடம் பெறுவது. கலை அம்சம் பொருந்தியது. இதனைக் கற்றுக் கொடுக்க ஒரு சீனியர் ராணுவ ஹவில்தார் மேஜர் ( இப்போது இந்த ரேங்க் இல்லை ) வந்திருந்தார். மிகக் கடுமையான பயிற்சியாளர். அவர் உடல்வாகும் பெரிய மீசையும் , அப்போதிருந்த பாகிஸ்தான் ஜெனரல் ஆயூப்கான் போலவே இருக்கும். நாங்கள் அவரை “ நம்ம ஊரு ஆயூப்கான்” என்று பேசிக் கொண்டோம். ஒரு ஜெனரல் போல இருப்பது அவருக்குப் பெருமையாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம்.
கேம்பின் கடைசி வாரம் அவரோடு கொஞ்சம் ஜாலியாக “ரெஸ்ட்” நேரத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீசை பற்றிப் பாராட்டாக இதைச் சொன்னோம், அவருக்குக் பெரிய கோபம் வந்துவிட்டது. “ எனக்கு என்ன வேணா நிக் நேம் வையுங்க .. காலேஜுலேயும் அதத்தான் பண்ணுறீங்க .. ஐ டோன்ட் மைண்ட் .. ஆனா எப்படி ஒரு எதிரி நாட்டு பர்சனாலிட்டி யோட என்னைக் கம்பேர் செய்வீங்க .. இன்னொரு தடவை கேட்டா .. கிரவுண்ட சுத்தி மூணு ரவுண்ட் ஓடணும் “என்றார். ஒரு சல்யூட் வச்சிட்டு ஓடி வந்து விட்டோம். நமது இராணுவ வீரர்களின் தேசப்பற்று வேற லெவல்..
முகாமில் எல்லா நாட்களிலும் இரவு உணவுக்குப் பின் “கேம்ப் ஃபயர்” உண்டு. அப்போது பாட்டு கூத்து அமர்க்களப்படும். சொல்லவேண்டுமா ! முதல் நாளில் இருந்தே நான் அதில் ஆக்டிவ். கவிதைகள் பாடல்கள் எல்லாம் உண்டு. முகாமின் நிறைவு நாள் அன்று சென்னை ரெஜிமெண்ட் சார்பில் பதினந்து நிமிடம் கலைநிகழ்ச்சி எங்கள் பொறுப்புக்கு வந்தது.
இனிமையான குரலோடு திரைப் பாடல்களை பாடிப் பேரெடுத்தவன் குணா என்ற குணசேகரன். கொஞ்சம் புதுமையா இருக்கணும் என்று என்னைப் “பாட்டெழுதச் “ சொன்னார்கள், அது ஏதாவது சினிமாப் பாட்டு ட்யூன்ல இருந்தால்தான் அவனால பாட முடியும். நிகழ்ச்சி பற்றியும் இருக்கவேண்டும். யோசித்தேன்.
அக்காலத்தில் பாப்புலர் ஆக இருந்த பாடல் “என்ன என்ன வார்த்தைகளோ சின்னவிழிப் பார்வையிலே “ படம் வெண்ணிற ஆடை. பாடுவதும் சுலபம். ரொம்ப ஏற்ற இறக்கம் கிடையாது. எழுதிவிட்டேன்.
“ என்ன என்ன மாற்றங்களோ என். சி. சி. வாழ்க்கையிலே
இந்தக் கேம்ப் தந்ததெல்லாம் சொல்ல இங்கே வார்த்தையில்லே
கிட்டத்தட்ட இதுதான் எனது முதல் இசைப்பாடல். காப்பி டியூன் என்பதால் இது கணக்கில் சேராது. அப்புறம் என்ன எழுதினேன் என்று நினைவில்லை. சொல்ல மறந்துவிட்டேன். என் சகோதரன் கணேஷன் அப்போதே மிருதங்கம் முறையாகக் கற்றுக் கொண்டிருந்தவன். கலை நிகழ்ச்சியில் அவன் தாள கோஷ்டியில் பங்குபெற்றான்.
இதற்கிடையில் எங்கள் கோஷ்டி சுசிந்திரனுக்கும் பெண்கள் கேம்பில் இருந்த மஞ்சுளா என்ற திருச்சி பெண்ணுக்கும் இருந்த முதல் வார நட்பு கடைசி வாரத்தில் காதலாகி விட்டது என்ற சேதியை மாதவன் கொண்டு தந்தான். அதையெல்லாம் வேறு வியாசத்தில் பார்க்கலாம்!
இருபத்தி இரண்டாவது நாள் சுபமாக வீடு திரும்பினோம். வாசலிலேயே எங்கள் தமக்கை கேட்டாள் “ என்னடா! வீட்டை எங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினீங்களா ?”
“ஆமாம்” என்ற ஏக்கர் பொய்யை உரத்த குரலில் பதிலாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றோம்.
(தொடரும்)

கோத்தகிரி சாரணர் முகாமுக்கே சென்று ட்ரில் செய்த உணர்வு
LikeLike