இலண்டனில் சிவராத்திரி


விடிய விடிய அபிஷேகமும், தேவாரமும், திருவாசகமும் மணக்கும் சிவராத்திரி என்றால் இலண்டன் வெம்பிளி, ஈழபதீஸ்வரர் கோயிலை மறக்க இயலாது.
இலண்டனில் Tube என்று அழைக்கப்படும் Jubilee இரயிலைப் பிடித்தால் Wembly Park இல் இறங்க வேண்டும். மான்செஸ்டர் யுனைடெட், மேன் சிட்டி, ஆர்சனல், லிவர் பூல், செல்சிஸி போன்ற ‘ப்ரீமியர் லீக்’ டீம்களை அறிந்தவர்களுக்கு, Wembly ஸ்டேடியம் பற்றித் தெரிந்திருக்கும். அதன் வாசலில், லண்டன் 83 எண், சிவப்பு மூக்கு பஸ்..ஐப் பிடித்து ஈலிங் ரோடில் இறங்க வேண்டும்.
அல்லது, Jubilee யை விடுத்து, தடக் , தடக் என்று சோம்பலாக ஓடும் ‘Bakerloo’ லைனில் வந்தால், Wembly சென்ட்ரலில் இறங்கிப் பொடி நடையாக, நடந்தால் திரும்பிய பக்கம் எல்லாம் தமிழ்ப் பதாகைகள் காணலாம்.
சரவண பவன், சங்கீதா துணிக்கடை, கணபதி ஸ்டோர்ஸ் கடந்து, மலர் அங்காடியில் மதுரை மல்லியும், வில்வமும் (யெஸ், வில்வமும்) வாங்கிக் கொண்டு, குஜராத்தி பட்டேல்கள் போடும் சூடான ஜிலேபி + ஊரையே வாசனையால் அழைக்கும் Fafdaவைத் தவிர்த்து, தமிழ் நாவல்கள் கிடைக்கும், ஈலிங் ரோடு நூலகத்துக்கு அருகில் உள்ள, சந்தில் நுழைந்தால் பிரித்தானியாவின் ஈழபதீஸ்வரர் ..!!
கோயிலுக்கு எதிரில், ஒரு சிறிய அழகான ஸ்ரீ சாய் மந்திர். வெள்ளிக்கவசத்தில் ஜொலிக்கும் ஸ்ரீ சாய் மகராஜைப் பார்த்து விட்டு (ரவா கேசரி பிரசாதம் அற்புதம்!) ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நுழைகிறோம். இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட அழகிய, ஸாநித்யம் மிகுந்த ஆலயம்.
உள்ளே நுழைந்ததும் நம் பிள்ளையார், அவரை வணங்கி அருகிலிருக்கும் இருக்கும் நவகிரகங்களைச் சுற்றி நகர்ந்தால், ஒரு குட்டி வரிசை ஆரம்பித்திருக்கும். தேம்ஸ் நதி நீரைச் சொம்பில் ஏந்தி, நர்மதை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘பாணலிங்கத்திற்கு’ அபிஷேகம் செய்யலாம். தொடர்ந்து வேல்முருகன், ஐயப்பன், பெருமாள், தாயார், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதிகளைத் தரிசிக்கலாம்.
அடுத்து, கேட்டதும் வரம் அருளும் பர்வதவர்த்தினி சந்நிதி. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கருணை வடிவில் காணலாம். கோயிலின் மையப் பகுதியில், ஈழபதீஸ்வரர் குடிகொண்டுள்ளார். வெள்ளி நாகர் குடைபிடிக்க, சந்திரப்பிரபை மிளிர, காசு மாலை, ருத்ராட்ஷம் சூடி, காண்பவர் மனம் கவரும் அற்புத ஈசனாகக் காட்சியளிக்கிறார்.
சிவராத்திரி அன்று விடிய விடிய, அனைத்து கால அபிஷேகங்களும் நடைபெறும். ஹோமம் வளர்த்து கலச பூஜை முதலில் நடக்கும், அங்கு வருபவர்கள் ஒவ்வொருவராகக் குடத்தில் நிரப்பிய பாலை அர்ச்சகரிடம் எடுத்துக் கொடுக்க அபிஷேகம் நடக்கும். பிறகு தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் (பாக்கெட்) என்று வரிசைக்கிரமமாக அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து அற்புதமான அலங்காரம், பூஜை, பல வித ஹாரத்திகள், ஷோடச உபசாரங்கள் எனத் தொடரும்.
நிறைவாக, குழு பிரார்த்தனை. ‘சிவபுராணம் பாடுக..!’ என்பார் அர்ச்சகர். பக்தர்கள் ஒருங்கிணைந்து சிவபுராணம் பாட, அந்த இடம் முழுவதும் அப்படி ஒரு Vibration. பிறகு, பஞ்ச புராணம் பாட அழைக்க, நான் நீ என்று போட்டி இருக்கும். இவற்றை நன்கு பாடம் பயின்ற இலங்கைத் தமிழர்கள் பலர் உள்ளார்கள். பிறகு உலக நிம்மதிக்காக ஒரு நிமிட பிரார்த்தனை. தொடர்ந்து,
‘வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்’
என்ற கந்தபுராண பாடலுடன் நிறைவு பெரும். இதே போன்ற வைபவம் ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் நடைபெறுகிறது.
அந்த குளிரிலும் சிவாச்சாரியார்கள் சட்டை அணிவதில்லை, எல்லோரும் பால் அல்லது பழம், பூ என ஏதாவது வாங்காமல் வருவதில்லை. அதே போல், குழந்தைகள் உட்பட அனைவரும் பாரம்பரிய உடையில் வருகிறார்கள். பூஜை நடக்கும் பொழுது யாரும் பேசுவதோ, மொபைலில் தேடுவதோ, பொது விசாரிப்புகளோ, கவனச் சிதறல்களோ இல்லை. பூஜை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் நகர்வதில்லை. கோயிலில் பிரசாதம் சாப்பிட்டுவிட்டு இல்லம் திரும்புவார்கள்.
லண்டன் விஷ் லிஸ்டில் சேர்க்கவேண்டிய தலம் இது.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்

விசா இல்லாமல் லண்டன் சென்று டியூப் ரெயிலில் பயணம் செய்து ஈழ பதீஸ்வரர் தரிசனம்
LikeLike