பல வருடங்களுக்கு முன்னால் ஐம்பது வயது கடந்தவர்களுக்கு வர்க்ஷாப் ஒன்று நடத்தினேன். முடிந்த பிறகு பங்கேற்ற 57 வயதான சுகுணா என்னை அணுகி, ஆலோசிக்க வேண்டும் என்றார். நேரம் இடம் குறித்துக் கொடுத்தேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு கணவன் பார்கவுடன் சுகுணா வந்தாள். சுகுணா கடந்த சில மாதங்களாக தம் இளைய மகளான நேத்ரா வீட்டில் வசித்து வருவதாகக் கூறியதும் பார்கவ், “கரெக்ஷன் ப்ளீஸ், ஐந்தாறு மாதமா? வருஷம்னு சொல்லு. மாப்பிள்ளை சேதன், பொறுமையின் பூஷணம்!”. சேதன் அரசுப் பணி (UPSC) சேருவதற்குப் பயிற்சி தரும் நிறுவனத்தை நண்பனுடன் நடத்தி வருகிறார் என்றார்.
பார்கவின் விவரிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தாள் சுகுணா. கைகளைப் பிசைந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
இரு மகன்கள் ராஜு, மது. மகள் நேத்ரா. பல வாரங்களாக வீட்டின் விஷயம் எதிலும் மனம் லயிக்கவில்லை என்றார்கள். தம்முடைய இந்த நிலை மனச்சோர்வு என்ற முடிவுக்கு வந்தார்கள். வர்க்ஷாபில் நான் மன உளைச்சல் பற்றி அளித்த விளக்கங்களிலிருந்து மனநலம் சரியும் போது மனநலம் பயின்றவர்களிடம் உதவிக்குச் செல்வதின் அவசியம் புரிந்தது. மன வேதனையின் மூலகாரணங்களை அடையாளம் காண உதவுவார்கள் எனப் புரிந்ததால் வந்ததாகக் கூறினார்கள்.
தம்முடைய நெருங்கியோர் பற்றி வேற்று மனிதரிடம் பகிர்வது மனதை வருடுவதாகக் கூறினார்கள். மனித மேம்பாடு, நலன் மட்டுமே எங்கள் துறையினரின் குறிக்கோள் என விளக்கினேன். அதற்காகவே மனநலத்தைப் பற்றிப் படித்து பயிற்சி பெற்றதால், க்ளையன்ட் பகிர்வதை வம்பு வீண் பேச்சுக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம். மாறாகக் கூறப்படுகிற விவரங்கள் க்ளையன்ட் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தெளிவு பெறுவதற்கும், பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வழிகளை வகுக்கவும் உபயோகிக்கப் படும். எக்காலத்திலும் யாரிடமும் விவரங்களைப் பகிர மாட்டோம். வர்க்ஷாபில் செய்தது போலவே, பொது இடத்தில் பகிர நேர்ந்தால், பகிரும் தகவல்களையும் க்ளையன்ட் விவரங்களையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றி விடுவோம் என்றேன். தெளிவு பெற்றதும் விவரிக்க ஆரம்பித்தார்கள்.
கல்யாணமான முதல் ஆண்டுப் பண்டிகை விசேஷங்களுக்கு உதவ நேத்ராவின் வீட்டிற்கு சுகுணா-பார்கவ் வந்தார்கள். அச்சமயம் மகளுக்கு ஓய்வு தருகிறோம் என்று சுகுணா தானே சமையல், வீட்டுப் பராமரிப்பைப் பார்த்து கொண்டாள். பார்கவிற்கு சுவையான தேநீர் தயாரிப்புத் திறன் இருந்ததால் நேத்ரா வீட்டிலிருந்தபோதும் அவரே தொடர்ந்து செய்தார்.
மகளும் மகிழ்ந்ததால் பெற்றோர் வந்து தங்குவது அதிகரித்தது. இதைப் பற்றி, செஷன்களில் இருவரையும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தேன். நிகழும் சூழ்நிலையின் ஒவ்வொரு மூலகாரணத்தையும் அடையாளம் காணத் தொடங்கினார்கள்.
மூத்த மகன் ராஜு, சொந்த ஊரில் வயல் வியாபாரங்களைக் கவனித்துக் கொண்டார். வீட்டிற்கும், மருமகளுக்கும் உதவ ஆட்கள் இருந்தார்கள். வந்து போக முடிந்தது. இப்போது சுகுணாவிற்குத் தென்பட்டது, மகளுக்கு உதவிய உள்ளம் மருமகளுக்கு உதவத் தோன்றவில்லையே என்று. மருமகளும் இதை என்றும் எடுத்துக் கூறாதது சுகுணாவைச் சிந்திக்கச் செய்தது!
இளைய மகன் மதுவிற்குப் பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளர் வேலை. வேலை பொறுப்பினால் அடிக்கடி வெளிநாடு போவார். பெரும்பாலும் மற்றவருக்குத் தொண்டு செய்து வருவது அவரது பழக்கமே! பலருக்குப் பல தேவைகளைப் பூர்த்தி செய்வது நடத்தையானது. தனக்கென்று ஒரு குடும்பம் இருக்கவேண்டும் என்று தோன்றவில்லை, கல்யாணம் அவசியமென்று நினைக்கவில்லை. பிள்ளையின் கொள்கையைப் புரிந்து அவன் போக்கில் விட்டார்கள். மதுவுக்குத் தாம் எந்தவிதத்திலும் துணை தராததைப் பெற்றோர் செஷன் போகப் போக அடையாளம் கண்டார்கள்.
நேத்ரா கூப்பிட்ட குரலுக்கு வந்து கொண்டு இருந்தார்கள். இந்த செயல்பாட்டின் மூலமாக வளர்ந்த பிரச்சனைகளை, விளைவுகளை இப்போது எதிர்க்கத் தெரியாமல் நிற்பதைக் கண்டுகொண்டார்கள். அவர்கள் தானே சிக்கல் மற்றும் பதிலைக் காண்பதற்காக, குறிப்பிட்ட கேள்வி முறையை அமைத்தேன். இந்த செயல்பாடு பயனளிக்க, தெளிவு பிறந்தது!
குறிப்பாக மகளுக்கு உதவி என நினைத்துச் செய்ததில் அவளது அடம்பிடிப்பு நிலைத்தது. அதிகமான அரவணைப்பை அளித்ததில் விளைவுகளைக் காண, வெட்கம் சூழ்ந்தது. தங்களது பங்கு புரியவர, நிலைமையை மாற்ற இயலாதது சங்கடப் படுத்தியது.
நேத்ரா தன் நிலையைக் கிராமத்தில் பணியாட்களுடன் இருக்கும் அண்ணன் ராஜுவுடன் ஒப்பிட்டாள். பெற்றோர் தனக்கு உதவுவது தன் உரிமை எனக் கருதினாள். அவர்களின் கடமை என எண்ணியதால் பெற்றோரைத் தன்னுடன் இருக்கும்படி செய்தாள்.
இதன் உள்நோக்கத்தைத் தொடர்ந்து ஸெஷனில் ஆழமாக பார்கவ் சுகுணா பார்க்க, பல புரிதல்கள் பிறந்தன. உதாரணத்திற்கு, இவர்கள் அங்கு இருப்பதும் சுகுணா நாள் கிழமைகளில் சமைப்பதால் நேத்ரா மணந்து கொண்டு குடிபோன வீட்டின் மரபுகள் கலாச்சாரம் விடப்பட்டது. தாம் உதவும்போது, தங்கள் சம்பிரதாயங்களையே அங்குப் புகட்டியது சுகுணாவிற்குப் புரிந்தது.
பிறந்த வீட்டின் சம்பிரதாயம் பரிச்சயம் ஒரு பக்கம். சுகுணா எல்லாம் எடுத்துச் செய்வதால் பழகியதே தொடர்ந்தது. போகப் போக விசேஷங்களுக்குக் கூட மாமியார் இருந்தாலும் அவர்களின் பங்கேற்பு இல்லாதபடி நேத்ரா செய்வதை இப்போதுதான் பெற்றோர் கண்டுகொண்டார்கள்.
பொறுப்பை மட்டுமே சுகுணா ஆட்கொண்டதில் இவ்விஷயங்களைக் காணவில்லை. மெல்லப் புரிந்தது.
நேத்ரா கூப்பிட்ட குரலுக்குச் சேதனை வரச் சொல்வாள். அவர் வர தாமதித்தால் அவதூறான சொற்கள் எழும். இவர்கள் முன்னால் நேத்ராவை சேதன் என்றுமே ஒரு வார்த்தை கூடச் சொல்லாததைக் கூறினார்கள்.
மாமியார்-மாமனார் அளித்த எந்த பரிந்துரையையும் ஏற்க மறுத்தாள் நேத்ரா. அவள் கூறும் தேதிகளில் மாமனார் மாமியார் அவர்கள் வீட்டிற்கு வர வேண்டும். சிலமுறை அவர்கள் மற்ற பிள்ளைகளின் தேவைகளை அனுசரிக்க, வர இயலவில்லை. இதை நேத்ரா அவமதிப்பு என எடுத்துக் கொண்டதால் பரிந்துரைகளை நிராகரித்தாள்.
சேதனுக்குப் பொறுத்துப் போகும் குணமே. கல்யாணமான புதிதில், சேதன் தன் பெற்றோரை அழைத்து வரக் கிளம்பிய போது தான் கூறிய தேதி அல்லாததால் நேத்ரா தடுத்தாள். தை வெள்ளிக்கிழமைகளில் அவர் தாயார் பக்கத்தில் உள்ள ஆலயத்தில் அன்னதானம் தருவது வழக்கம் என்பதால் சேதன் நேத்ராவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து அழைத்து வந்தார்.
தன் விருப்பத்திற்கு விரோதமெனக் கொந்தளித்தாள் நேத்ரா. மாமியார் உதவி கேட்க, நேத்ரா கைவாட்டிலிருந்த சுடுதண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளப் போக, மாமியார் தடுத்துவிட்டார். அன்றிலிருந்து மறுபேச்சு கூறியதில்லை.
நேத்ரா வருந்தாததை, புரிந்துகொள்ள மறுப்பதைச் சுகுணா பார்கவ் பார்த்துத் தவித்தார்கள். பல எதிர்மறை முறைகளுக்கு ஈடு கொடுத்தோமென்று பார்கவ் சுகுணாவிற்கு ரோல்ப்ளே மூலமாகப் புரியவந்தது.
நேத்ராவின் கத்தல் கூச்சலுக்கு அஞ்சியதால் அவள் போக்கில் விட்டார்கள். நேத்ரா தன் வழியே சரி என்று அவ்வாறே நடந்து வந்தாள்.
நேத்ராவின் திருமண வாழ்வில் புகுந்த வீட்டைச் சேர்த்துக் கொள்வதில்லை. அங்குள்ள உறவுகளுடன் புரிந்து பழகவில்லை.
இதற்கெல்லாம் சேதனின் பொருளாதார நிலை பொறுப்பு எனக் கூறினாள். பார்கவ் பொருளாதாரத்தில் குறைவாக இருப்பவர்கள் உழைப்பைப் பெரிதாகக் கருதி இருப்பார்கள் என்ற நோக்கத்துடன் சேதனின் குடும்பத்தைத் தேர்வு செய்தார். அங்கு திருமணம் செய்தால், புகுந்த வீட்டில் நேத்ராவிற்கு மதிப்பு அதிகம் இருக்கும் எனக் கணித்தார்.
இப்போது நிகழும் நிலையைப் பார்க்கையில் இந்த முடிவு தோல்வி அடைந்ததை உணர்ந்தார். அதுவும் தங்கள் முன்னே சேதனின் வருமானத்தைக் குறைகூறிச் சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்ததையும், தனக்குக் குழந்தை பிறக்காததற்குக் காரணம் சேதன் என எல்லோர் முன்னாலும் கூறுவதையும் சகிக்க முடியவில்லை என்றார் பார்கவ். பெற்றோர் அறிந்திருந்தனர், மகளுக்குத்தான் குறைபாடு என.
சேதன் தன்னால் முடிந்த அளவிற்கு வருமானத்தை அதிகரிக்க ராப்பகலாக உழைத்தார். குடும்ப மானத்தைக் காப்பாற்றவே விவாகரத்துச் சிந்தனை செய்ய மறுத்தார்.
நேத்ரா ஓய்வு பெற்றிருந்த மாமனார் மாமியார் தன் வீட்டில் இருக்கப் போகிறார்கள் என்றதுமே தன் பெற்றோரை வரவழைத்து வீட்டில் இடம் இல்லாததைக் காட்டினாள். இந்த முறையீட்டிற்கு சேதன் மனம் இருந்தால் இடம் தானாக வரும் என்று சொல்வதைக் கேட்டு மாமனார் மாமியார் தவித்தார்கள்.
சேதனின் பெற்றோர் நீண்ட காலம் மூத்த மகனிடம் இருப்பார்கள். அவர் ஸ்தபதி. மனதிற்குப் பிடித்திருந்தது. மாமனாரும் ஸ்தபதி. ஆறு வருடங்களுக்கு முன் அவர் சிறு ஆபத்தில் சிக்கியதில் விரல்கள் சேதம் அடைந்ததால் ஓய்வெடுத்து, மகனின் வேலைப்பாட்டைப் பார்த்து மகிழ்ந்து திருப்தி அடைந்தார். அந்த மருமகளும் பாசமாகப் பார்த்துக் கொள்வதால் அங்கேயே பல மாதங்களைக் கழித்தார்கள். அவ்வப்போது சேதன் வந்து போவதில் ஆறுதல் அடைந்தார்கள்.
நேத்ராவையும் ஸெஷன்களுக்கு வரப் பரிந்துரைத்தேன். நான் பெற்றோரைப் பார்ப்பதால் என்னிடம் வர மறுத்தாள். நேத்ரா தன் சொல் செயல் இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதைப் பெற்றோர் உணர்ந்தார்கள். எங்கள் துறையில் மிகச் சிறந்த மனநல ஆலோசகர் ஒருவரைப் பார்க்கப் பரிந்துரைத்தேன். தயக்கத்துடன் நேத்ரா பெற்றோருடன் சென்றதாகக் கூறினார்கள். இதுவே மாற்றத்தின் முதல் கட்டமாகும்.
ஸெஷன்கள் தொடர, பார்க்வ் சுகுணா ஸெஷனில் ஆராய்ந்தபடி தாம் விலகி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள். வெளிநாட்டில் வந்த ஆலோசகர் வாய்ப்பை எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
சுதந்திரத்தையும் உதவியையும் அளவிற்கு மீறி
அள்ளிக் கொடுத்தால்
காலப்போக்கில் “என்னுடை உரிமை!” என்ற தவறான கருத்து உதிக்கும்!
எல்லைக் கோடுகளை அறியாமல் “உங்களது கடமை!” என நினைப்பார்கள்.
உதவுவோம்! தேவைக்கு ஏற்றவாறே!

உரிமையையும் கடமையையும் பற்றிய உதா’ரணங்’களோடு சிறப்பான மனநலக் கட்டுரை
LikeLike