Raag Pahadi

பஹாடி ராகம் – ஒரு சிறு பார்வை

பாடலும் பகாடியும்!

பஹாடியில், ஜாவளிகள், தும்ரிகள் என்று  பாடல்களும், அன்னமாச்சார்யா  கீர்த்தனங்கள் என  இருந்தாலும், பஹாடி என்ற ராகத்தை எனக்கு அறிமுகம் செய்துவிட்டது லால்குடி அவர்களின் தில்லானாதான். ஒருமுறை  அவரது கச்சேரியில் கேட்டபின், அந்தக் காசெட்டை வாங்கி, பலமுறை அது ரெக்கார்டரில் சிக்கித் தேயும் வரை கேட்டு மகிழ்ந்தேன்.

25 வருடங்களுக்கு முன், லால்குடி ஶ்ரீ ஜெயராமன் அவர்களின் இல்லத்திற்கு, அமுதசுரபி தமிழ் மாத இதழுக்காக நேர்காணல் நிகழ்விற்கு சென்று இருந்தேன். (பலமுறை அவர் இல்லம் சென்று இருக்கிறேன். அவரும் எனது இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள்).

அன்று தில்லானாக்கள், குறிப்பாக வீணை – வயலின் – புல்லாங்குழல் காம்போ பற்றி அவரிடம் பேசியபோது, பஹாடி ராகம் பற்றிக் கேட்டேன். அவரால்தான், தமிழக ரசிகர்களுக்கு, பஹாடி ராகம் கிடைத்திருக்கிறது என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் :

எனக்கு பஹாடி என்றால் நினைவில் இன்றும் நிற்பது இசை அமைப்பாளர் திரு கே வி மகாதேவன் அவர்கள் இசையில் திரு பி பி ஶ்ரீநிவாஸ் பாடிய (பொன்னித்திருநாள் திரைப்படத்தில் இடம்பெற்ற)

“ ஏன் சிரித்தாள் என்னைப் பார்த்து – உன் இதழ்தனைப் பாடவா கவிதை சேர்த்து “

என்ற பாடல்தான் என்று கூறி, பாடிக் காண்பித்தார். நீங்கள் கேட்டிருக்கிறீற்களா என்றும் கேட்டார். நான் நிறையக் கேட்டு இருக்கிறேன் – ஆனால் இன்றுதான் அதன் ராகம் புரிந்தது என்றேன்.   கே வி மகாதேவன் அவர்களை மிகவும் பாராட்டி மகிழ்ந்தார். பஹாடி ராகம் என்பது நாட்டுப்புற இசையாய் நம்மை மகிழ்விக்கிறது என்றார்.

மலைப் பிரதேசங்களிலிருந்து பிறக்கும் குளிர்ந்த காற்றுப் போல இந்த ராகத்தில் பிறந்த பாடல்கள் குளுமையும் , அமைதியும்,இனிமையுமிக்க பாடல்களாய் திகழ்கின்றன. அது உண்மையும் கூட. அதன் பெயர் குறிப்பிடுவது போல, இது இமயமலையின் மலைப்பகுதியிலிருந்து உருவானது. இது நாட்டுப்புற இசையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பீலு மாற்றும் மாண்டு ராகங்களை அடிப்படையாகக்கொண்டது.

பஹாட் என்றால் மலை என்று பொருள்படுகிறது என்றும்,  இந்த அழகிய ராகம், ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து, அங்குள்ள மலைவாழ் மக்களிடமிருந்து, தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. இங்குள்ள மக்களே பஹார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கீர்த்தனைகள், பாடல்கள் பெரிதாக இந்த ராகத்தில் இல்லை என்றுதான், நான் கேட்டவரை பல  இசை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

வட இந்தியாவில் அதிக புழக்கத்திலிருக்கும் இந்த ராகத்தில், இசையின்பத்தைக் கொட்டிக் குவித்த ஏராளமான தமிழ்த் திரைப் பாடல்கள்,  மெட்டமைக்கப் பட்டு, இசை ஆர்வலர்களின் , இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளன. பழரசத்தில் தேனும், இனிப்பும் கலந்து தருவது போல, இந்த இதமான,பதமான,ராகத்தின் சாற்றைப் பிழிந்து, வர்ணமான மெட்டுக்களில், பல்வேறுகாலகட்டங்களில் வெவ்வேறு இசை அமைப்பாளர்கள் ,சிறந்த பாடல்களை அளித்து, ரசிகர்களின்  நெஞ்சங்களை சிறக்க வைத்திருக்கிறார்கள்.

நீலச் சேலை கட்டிகிட்ட சமுத்திரப்பொண்ணு (திருவிளையாடல்)

மடி மீது தலை வைத்து ( அன்னை இல்லம்)

யார் யார் அவள் யாரோ ( பாசமலர்)

வான் மீதிலே இன்ப ( சண்டிராணி)

தண்ணிலவு தேனிறைக்க ( படித்தால் மட்டும் போதுமா)

பாலிருக்கும் பழமிருக்கும் ( பாவ மன்னிப்பு)

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து ( பொன்னித் திருநாள்)

கண்ணுக்குக் குலம் ஏது ( கர்ணன்)

பொன்மேனி தழுவாமலே( யார் நீ)

வான் மேகங்களே வாழ்த்துங்கள்

வானில் முழுமதியைக் கண்டேன்

உன்னைக் கண்டு நான் ஆட

காற்று வந்தால் தலை சாயும் ( காத்திருந்த கண்கள்)

நாணத்தாலே கன்னம் மின்ன (சி.ஐ.டி. சங்கர்)

பொங்குதே புன்னகை ( இது ஒரு தொடர்கதை )

இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் ( வல்லவன் ஒருவன் )

இனியவளே என்று பாடி ( சிவகாமியின் செல்வன்)

கோடி கோடி இன்பம் பெறவே ( ஆட வந்த தெய்வம்)

முள்ளில்லா ரோஜா ( மூன்று தெய்வங்கள்)

மலர் கொடுத்தேன்( திரிசூலம்)

ஒரே நாள் உனை நான் (இளமை ஊஞ்சலாடுகிறது)

மௌனமான நேரம் ( சலங்கை ஒலி)

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ( புன்னகை மன்னன்)

இந்த மான் எந்த சொந்த மான் ( கரகாட்டக்காரன்)

தில் தில் மனதில் (மெல்லத் திறந்தது கதவு)

 

ஹிந்தியில்

 

ஜ்வல் தீஃப் படத்தில் வரும் “தில் புகாரே”

கோரா காகஜ் தா யே மன் மேரா( ஆராதனா)

பியா பினா பியா பினா( அபிமான்)

இப்படிப் பல பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும், கிராமத்து இசை (folk) இருப்பதுதான் இந்த இராகத்தின் சிறப்பு.

ஒவ்வொரு இராகமும் ஒவ்வொரு அழகு. கரும்பின் எந்தப்பக்கம் இனிப்பு என்று கூறுவது எவ்வளவு கடினமோ, அதே போல் தான் ஒவ்வொரு இராகமும் ஒவ்வொரு அழகு. அவை தருவது இனிமையுடன் மனத் திருப்தி மற்றும் தெய்வீகத்தன்மை என்றால் மிகை ஆகாது.