சுந்தரபாண்டியன் -2 ராஜமுத்திரை

ராஜ முத்திரை (பகுதி I & II) | Purple Book House | Online Tamil Book Store

 

சரித்திரப்பாதையில் நாம் நடந்து வரும்போது, ஒரு முத்துக்குவியல் கிடைக்கிறது. அது சாண்டில்யன் எனும் பொற்கொல்லனின்  கரங்களில் ராஜமுத்திரை என்று அற்புத நகையாகிறது. அதைப் பற்றி சுருக்கமாவது சொல்லாமல் அடுத்த அடி வைக்க முடியுமா?

இந்த முத்துக்குவியல், சாண்டில்யனுக்கு சமர்ப்பணம்.

May be an image of book and textMay be an image of book and text

பொருநை ஆறு, கடலில் சங்கமிக்கும் இடம் கொற்கை நகர். முத்துக்களுக்கு பிரசித்தி பெற்ற அந்த கொற்கைத் திருநகர், பாண்டியரில் இரண்டாவது தலைநகராகத் திகழ்ந்தது. கொற்கைக் கோட்டைத் தலைவன் மகள் – அழகி – இளநங்கை, நம் கதாநாயகி. அவள், கொற்கையிலிருந்த முத்தங்காடியில் முத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அவளை ஒரு உருவம் தொடர்ந்தது. வேகமாக, ஆற்றைக்கடந்த இளநங்கை, எதிரிலிருந்த தோப்பில் மறைந்தாள். அங்கு இரு முரட்டுவீரர்களிடம், அகப்பட்டுக்கொண்டாள். அவளைத் தொடர்ந்த அந்த உருவம் ஒரு இளைஞன் – பாண்டிய இளவரசன் வீரபாண்டியன். அவன், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் தம்பி. அவன் அவளைக் காப்பாற்றினான். பெருமதிப்பு கொண்ட பாண்டிய முத்துக்கள் கொற்கையிலிருந்து களவு போவதை அறிந்து, அதைக் கண்டுபிடிக்கவே இளவரசன் கொற்கைக்கு வந்திருந்தான். சேரமன்னன் வீரரவியின் கை இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும், மற்றும் சேரர்களுக்கு உதவியாக இதில் போசளர்களும், சிங்களர்களும் இருப்பதை வீரபாண்டியன் ஊகித்துக் கொண்டான். அதனால், கொற்கையிலேயே இருக்கும் சேரமன்னன் வீரரவி உதய மார்த்தாண்ட வர்மனின் நடவடிக்கைகளையும் கவனிக்கலானான்.

சேரமன்னனைக் கண்காணிக்க கொற்கை கோட்டைத் தலைவரின் மகளான இளநங்கையை தன் சார்பில் அனுப்புகிறான். தோப்புக்கு விளிம்பிலிருந்த மாளிகைக்கு இளநங்கையைச் செல்லப் பணித்தான். அங்கு சென்ற இளநங்கை, சேரமன்னன் வீரரவி மற்றும் சேர வீரர்களிடம் சிக்கினாள். வீரபாண்டியன் அங்கு சென்று அவர்களிடம் போரிட்டான். அவனெறிந்த ராஜமுத்திரை என்ற பொற் கோடரி, வீரரவி தோளில் பாய்ந்து அவனைக் காயப்படுத்தியது. இளநங்கையும், வீரபாண்டியனும் தப்பினர்.

வீரபாண்டியன், சுந்தரபாண்டியனின் மகள் இளவரசி முத்துக்குமரியையும் , இளநங்கையையும் பொதிகை மலை அடிவாரத்துக்கு அனுப்பினான். கூடவே இந்திரபானு என்ற வீரனை அவர்கள் துணைக்கு அனுப்பினான். இந்திரபானு, கடார மன்னன் சந்திரபானுவின் மகன். மூவரும் கொட்டுந்தளம் என்ற பீடபூமிக்குச் சென்றனர். அங்கு இந்திரபானுவுக்கும், முத்துக்குமரிக்கும் காதல் அரும்பாகித் துளிர்விட்டது. மூன்றுநாட்கள் கழிந்து, அருகில் இருந்த அருவிக்கரையில், முத்துக்குமரி, இந்திரபானுவுக்காகக் காத்திருக்கும்போது, கடத்தப்படுகிறாள். சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் அங்கு வந்து புலனாய்கின்றனர். வீரபாண்டியன் காட்டுக்குள் சென்று சில கள்ளர்கள் பேசுவதைக் கேட்கிறான். அவர்கள் முத்துக்குமரியைக்கடத்தி சேரநாட்டுக்கு அனுப்பியதை அறிகிறான். இந்திரபானு முத்துக்குமரியைத் தேடிச் சென்றிருப்பதை அறிகிறான் அதே கள்ளர்கள், இளநங்கையையும் கடத்தத் திட்டமிடுவதை அறிந்து அதை முறியடிக்கிறான். கடத்தியவன் தலைவன் போசளநாட்டு படைத்தலைவன் சிங்கணன் என்பதை வெளிச்சமிட்டுக்காட்டினான். சிங்கணனிடம், ‘முத்துக்குமரியையும், களவு போன முத்துக்களையும் திரும்ப கொண்டுவர’ உறுதி மொழி வாங்கிக்கொண்டு அவனை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறான்.

கோட்டாற்றுக்கரை (இன்றைய கொட்டாரக்கரா – கொல்லம் அருகில் உள்ளது). கொல்லத் துறைமுகத்துக்கு அங்காடியாக இருந்தது. அதன் கோட்டை, சேரர்களின் பலம் வாய்ந்த கோட்டை. வீரபாண்டியன், இளநங்கை இருவரது தலைமையில் இருகூராகப்பிரிந்து, திறமையான அணிவகுப்பாலும், எதிர்பாராதத் தாக்குதலாலும், கோட்டாற்றுக்கரைக் கோட்டையைக் கைப்பற்றுகிறான். அங்கு வீரபாண்டியன் இளநங்கையை காந்தர்வத் திருமணம் செய்து கொள்கிறான்.

சேரப்படைகள் சிங்கணன் தலைமையில் கோட்டாற்றுக்கரையை முற்றுகையிட வந்துகொண்டிருக்கும் போது, வீரபாண்டியன் எதிரி நிலையை ஆராயப்போகிறான். அங்கு எதிரி வீரர்களால் தாக்கப்பட்டு மரணகாயம் அடைகிறான். அந்த நிலையில், அவன் குதிரை அவனைக் கோட்டைக்குள் கொண்டுவந்து சேர்த்தது. வீரபாண்டியன் இறப்பது உறுதி என்று மருத்துவர் முடிவுசெய்தார். இளநங்கை, கண்ணீருடன் அவனை முத்தமிட, அந்த அன்பில், தெய்வாதீனமாக வீரபாண்டியன் உயிர் நிலைகொள்கிறான். உயிர் பிழைக்கிறான். விரைவில் நன்கு குணமடைகிறான்.

கோட்டையை முற்றுகையிட்ட சிங்கணனிடம், தான் சரணாகதி அடைவதாகச் சொல்லி, வீரபாண்டியன் அவனை ஏமாற்றுகிறான். சிங்கணன், வீரபாண்டியன் சரணாகதி அடையப்போவதையும், தனது வெற்றியையும் ஓலை மூலம் சேரமன்னனுக்கு தூதுவனிடம் அனுப்புகிறான். முற்றுகையிட்ட சிங்கணனின் பெரும் படையை, வீரபாண்டியன் தனது தந்திரத்தால் முறியடிக்கிறான்.

பரலி ஆற்றங்கரையிலிருந்தது சேரனின் தலைநகர் பரலி மாநகர். அங்கு பாண்டிய இளவரசி முத்துக்குமரி சிறைவைக்கப்பட்டிருந்தாள். அவள் கடத்தப்பட்டபொழுதிலிருந்து அவளைத் தொடர்ந்து வந்த இந்திரபானு, பரலி நகருக்கு அருகில் இருந்த கிராமத்தில் தங்கியிருந்தான்.

சேரநாட்டின் குருவாக பரதபட்டன் என்ற வயோதிகன் இருந்தான். அவன் அறிவிலும், தர்மத்திலும், போர்த்திட்டத்திலும் சிறந்த விவேகியாக இருந்தான். சேரமன்னன் வீரரவிக்கு அறிவுறை கூறுகிறான் – ‘இளவரசி முத்துக்குமரியை சிறைவிடுத்து, களவாடிய முத்துக்களையும் திரும்பக்கொடுத்து, பாண்டியனுடன் சமாதானம் செய்து கொள்ள’ வற்புறுத்துகிறான். சேரன் அதை மறுத்து, புறக்கணிக்கிறான். பரதபட்டன், முத்துக்குமரியை சிறைமீட்க இந்திரபானுவுக்கு உதவுகிறான். ‘எல்லோரும் காதலுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். ஆனால், இந்திரபானுவின் தியாகத்திற்கு எல்லையே இல்லை’. தன் அழகையே தியாகம் செய்ய முன் வந்தான். சேர நாட்டு மூலிகைகளின் மூலம், பரதபட்டனால், பச்சிலைகளால் தன் முகத்தையே விகாரமாக மாற்றிக் கொண்டான். மாற்றிக் கொண்ட முகத்துடனேயே, சேர அரண்மனையில் நுழைந்து, தன் காதலியைப் பார்த்து அவளுக்குப் பாதுகாப்பாகத் தான் இருப்பதைச் சொன்னான். சேரமன்னன் வீரரவி, இந்திரபானுவை அழித்துவிடத் திட்டம் தீட்டினான். செண்டுவெளிப்போரில் அவனைக் கொலை செய்யத் திட்டமிட்டான். வீர விளையாட்டுக்களில் ஒன்றான செண்டுவெளியில், வேலும், வில்லும் வீசி, இந்திரபானு தப்பினான்.

சுந்தரபாண்டியன், சேரநாட்டுக்குள் ஊடுருவும்போது ‘எரிப்பரந்தெடுத்தல்’ முறையைக் கையாள்கிறான். கிராமமக்களை சேரத்தலைநகருக்கு அனுப்பிவிட்டுப் பின் கிராமத்தைக் கொளுத்திவிட்டு சேரன் தலைநகரை நோக்கி முன்னேறுகிறான். சேரன் வீரரவிக்கு, சிங்கணன் கோட்டாற்றுக்கறையில் தோல்வியடைந்த செய்தி வெகு தாமதமாகத் தெரியவருகிறது. அதற்குள், சேரக்கடற்படையும், பாண்டியரின் தாக்குதலால் எரியூட்டப்பட்டுத் தோல்வியடைகிறது.

சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் இணைந்து சேரநாட்டுப்படையெடுப்பைத் துவங்குகின்றனர். பரலி நகரை நெருங்கினர். சேரனை ஒழிப்பதற்காக, வீரபாண்டியன் எந்திரப் பொறி ஒன்றையும் அமைத்திருந்தான். அதன் பெயர் ‘இடங்கணிப் பொறி எரிமுகப்பேரம்பு’. அது பெரும் நெருப்புக்கோளங்களை வெகுதூரம் வீசியெறியும் ஒரு விசைக்கருவி. இந்தப் பொறியை இயக்குவது பற்றிய விபரங்களை எழுத சாண்டில்யனால் மட்டுமே இயலும். தமிழ் நாட்டில் ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் துறையில் மேலான தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

வீரபாண்டியன், சேரனுடன் நேர் போரில் ஈடு பட்டான். தனது ஆயுதமான ராஜமுத்திரை என்ற கோடரியை வீரரவி மீது வீசி எறிகிறான். அது அவனது மார்புக் கவசத்தை உடைத்து, மார்பில் பாய்ந்து அவனை மரணக்காயத்துக்கு உள்ளாக்கியது. வீரரவியின் மரணத்துக்குப்பின், சேரநாடு பாண்டியர் வசமாகிறது.

இது ராஜமுத்திரை என்ற காவியம்.

சுந்தரசோழனின் வீரம் சேரப்படையெடுப்பில் வெளியானது. இது சுந்தரசோழன் அடைந்த முதல் வெற்றி. பல வெற்றிகளுக்கு இது முதல் படி.

மற்றவை விரைவில்.