பேய் வீடும் பன்னார் கட்டாவும்

பேய் வீடு என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓர் ஆர்வம் வரும்.
பேயைப் பற்றிய பயம் பரவலாக எங்கும் உள்ளது. பேய், ஆவி என்ற பெயர் சொல்லி பொய்யாய் பணம் பறிப்பவர் உலகெங்கும் பல கோடி.
அமெரிக்காவில் ‘Maine’ என்ற மாநிலத்தில் உள்ள ‘பாத்’ (Bath) என்ற நகருக்கு என் மகளுடன் சென்றிருந்தேன். ஆங்கிலேயர்கள் கப்பலில் இருந்து இறங்கி அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த செவ்விந்தியர்களை கொன்று குவித்து ஆக்ரமிப்பை ஆரம்பித்த ஆதி நகரமாம். அங்கு தெருவிற்கு ஒரு பேய் வீடு (haunted house) என பலகை வைத்து கல்லா கட்டுகிறார்கள். டிஸ்னிலாண்டில் கூட ‘ஹான்டட் ஹவுஸ்’ பார்க்கத்தான் நீண்ட க்யூ. அந்த வியாதி இங்கிலாந்தில் இன்னும் அதிகமாம். ஒரு ஆய்வில் உலகளவில் 37% மக்கள் பேய்கள் இருப்பதாக நம்புகிறார்களாம்.
பல ஆயிரக்கணக்கானவர் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ பேயைத் தேடியும் பேயைப் பற்றிய ஆராய்ச்சியிலும் வாழ்வைக் கழிக்கிறார்கள். பேயைப்பற்றிய ஆராச்சியின் முன்னேற்றம் கடந்த நூறுஆண்டுகளில் 1% கூட கிடையாது என்கிறார்கள். பொதுவான கணிப்பு பேய்கள் மிகவும் நல்லவை. யாருக்கும் தீங்கு செய்யாது.. நம் ஊர் பெரியவர்களும் பேய்களைப்பற்றி நிறைய சொன்னதனாலே கொஞ்சம் உண்மை இருக்குமோ என அவ்வப்போது சந்தேகம் வருகிறது.
மாணிக்க வாசகர் கூட” பேயாய் பிறந்து இளைத்தேன்” என்று கூறுகிறாரே. பட்டுக் கோட்டையார் இல்லையெனப் பாடுகிறார்
நான் பேயே இல்லை எனசொல்லப் போய், எந்த பேய்க்காவது கோபம் வந்து என்னை விசாரிக்க வந்து விடப்போகிறது. எதுக்கு வம்பு. நான் என்னை பயமுறுத்திய பேயைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன். வேறு எங்கோ போய்விட்டேன்.
சிறு வயதில் பேய் பற்றிய கதைகள் நிறைய கேட்டாலும் அது என்னைத் தேடியோ அல்லது அதைத்தேடி நானே போகும் அளவிற்கு தனிமையில் இருந்தது இல்லை. எங்கள் ஊர் குளக்கரையில் முனி கோயில் ஒன்று உண்டு. இள வயதில் இரவு நேரங்களில் அதைக் கடக்கும் பொழுது மட்டும் சைக்கிள் சற்று வேகமாக செல்லும். பின்னர்தான் பயத்தில் கால்கள் வேகமாக மிதிப்பதாக உணர்ந்தேன்.
நம் வங்கிக்கு வருவோம். 1982, வேலூர் கிளையில் பணி. பெங்களூர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டேன். அதுவரை மும்பை மலபார் ஹில்ஸ், காஷ்மீர் பேலஸில் மட்டும் இருந்தன கல்லூரிகள்.
1979 ல் மும்பைக்கு ‘ஃபாரின் எக்ஸ்சேஞ்’ பயிற்சிக்கச் சென்று மூன்று மாதங்கள் வாழ்ந்தது ராஜ வாழ்க்கை. அரண்மனையில் இருந்ததால் ராஜ வாழ்க்கைதானே. நான் இருந்த ராணியின் அறையில் மருத்துவமனையின் ஜெனரல் வார்டு போல பத்து படுக்கைகள் இருக்கும். குளியல் அறையில் நான்கு படுக்கைகள் போடலாம். அவ்வளவு பெரிசு.
அன்றைய தங்க மனிதர்கள், மண்டல மேலாளர் K P மேனன். வாட்டர மேலாளர் சாக்கோ வல்லவன்தாரா இருவரும் இன்டர்வியூ செய்து எங்களில் நால்வரை தெரிந்தெடுத்து அனுப்பினார்கள். வங்கியின் நோக்கம் நிறைவேரவில்லை. ஆனால் நல்ல அனுபவம் கிட்டியது.
பின்னர் பெங்களூர், பன்னார் கட்டாவில் துவக்கிய சில மாதங்களில் ‘ட்ரயல்’ பார்க்க என்னை அனுப்பியது வங்கி.
அன்று அது ஒரு காடு. பாதிரியார்கள் வசித்த விடுதி ஒன்றை வங்கி விலைகொடுத்து வாங்கி இருந்தது. நீண்டநாள் மூடியே இருந்ததால் விடுதியைப்பற்றி நிறைய வதந்திகள். அருகே வசிப்பவர்கள்கூட அந்த விடுதியில் பேய் இருப்பதாக நம்பினர். சுற்றி காடுகளும், புதர்களும், திராட்சைத் தோட்டங்களும் மட்டும் அல்ல எண்ணில் அடங்காத பாம்புகளும். பெரும்பாலும் ராஜநாகம். அதிகாலை ரோடில் நடந்து சென்றால் லாரியில் அடிபட்டு இறந்து கிடக்கும் பாம்புகளை எண்ணிக் கொண்டே போகலாம்.
எங்களுக்கு முதல் அறிவிப்பே மாலை 6 மணிக்கு மேல் வாசலைத் தாண்டி வெளியே செல்லக் கூடாது, அப்படிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படின் காற்று வாங்க வெளியே வரும் பாம்புகளை மிதித்து விடாமல் இருட்டில் நடந்து செல்ல வேண்டும் என்பதே.
பெங்களூர் சென்று இரவில் திரும்பினால் கல்கரே கிராம நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து நம்மை தள்ளி விட்டு விடுவார்கள். கருணை உள்ளம் கொண்ட டிரைவர்கள் ஹாஸ்டல் முன்பே நிறுத்துவார்கள். அங்கிருந்து வாங்கிய சாமானை இடது கையிலும் உயிரை வலது கையிலும் பிடித்துக் கொண்டே ஹாஸ்டலை அடைய வேண்டும். இருளில் நாம் மிதித்து பாம்புகளுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்ற பயம்.
ஓரிரு நாட்கள் பம்ப் வேலை செய்யாது அங்குள்ள கிணற்றில் குளித்த ஞாபகம். இன்று swimming pool வுடன் கட்டமைப்பு பிரமாண்டமாக உள்ளதாம்.
அங்கு நான் உடன் பணி புரிந்த திரு A.B. குனாளன், திரு. சுந்தர்ராஜன் ஆகியோர் விரிவுரையாளர்களாக இருந்தனர். கேர் டேக்கராக சேமியர்ஸ் ரோடில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பெரியவர், பெயர் நினைவில் இல்லை. அவர் என் காதுகளில் மட்டும் ரகசியமாக்க் கூறிய கதை
“ இங்கு ஒரு காலத்தில் பாதிரியாரால் கொலை செய்யப்பட்ட பெண் இரவில் நடமாடுவதாகச் சொல்கிறார்கள். இரவில் கொளுசு சத்தம் கேட்டால் பயப்படாதே, தைரியமாக இரு” என்பதே. அதை அவர் சொல்லாமலே இருந்திருக்கலாம்.அது போதாதா நமக்கு. தமிழ்நாட்டில் இருந்து சென்றது நான் ஒருவன் மட்டுமே. பேய்க்கு கன்னடம் மட்டுமே தெரியும். பயத்தை தமிழில் பேசஆள்கிடையாது. நமக்கு ஹிந்தியில் பேயைப் பற்றி பேச வராது.
பெங்களூர் தூர்தர்ஷன் சென்னை தூர்தர்ஷனிடம் நிகழ்ச்சிகளை ஓரிரண்டு மணி நேரங்கள் கடன் வாங்கி ஒளிபரப்பிக் கொண்டு இருந்த சமயம் அது. ஞாயிற்றுக்கிழமைகளில் இராமயண் வெள்ளி மாலை சித்ரகார் பார்க்க மட்டும் சிலர் ஹாலுக்கு வருவர். மற்றபடி அந்தமானுக்கு அடுத்த படியான தனிமை.
நல்ல குளிர்காலம். அப்ப நிறையவே குளிரும்/கம்பளியை போர்த்திக்கொண்டு பத்துமணிக்கே முதல் தூக்கத்தை முடித்துக் கொண்டு இருந்தநாட்கள். ஒருநாள் முதல் தூக்கத்தில் இருந்த பொழுது கலீர் என்ற சப்தம். என் அருகில் இருந்த ஜன்னல் கண்ணாடி தானாக உடைந்து கம்பளி முழுதும் கண்ணாடித்துகள்கள். நல்ல வேளை முகத்தையும் போர்த்தி இருந்தேன். என் சத்தம் கேட்டு விடுதியே அல்லோகல்லபட்டது.
படுத்திருந்த இருந்த கேர் டேக்கர் ஓடி வந்தார். சமீபத்தில் ஐந்து வைதீகர்களை வைத்து ஹோமம் நடத்தியதாகவும் தீயசக்தி இருக்க வாய்ப்பு இல்லை, பேய் கண்டிப்பாக போய் இருக்கும் என உறுதியாக கூறினார்.
அவரே முன்னர் கொளுசு சத்தம் கேட்டு இருப்பதாகவும் இப்பொழுது கேட்பதில்லை எனவும் கூறினார். என்னை வேறு அறையில் படுத்துக் கொள்ளச் செய்தார்கள். அடுத்த நாள் காலை சுந்தர்ராஜன் சார் என் அறைக்கு வந்து எனக்கு ஆறுதல் கூறினார்
. அடுத்த நாள் மாலை நான் துப்பறியும் நோக்குடன் வெளியே சென்றேன். கீழே மெஸ்ஸில் வேலை பார்க்கும் பதின்ம வயது சிறுவர்கள் மாமரத்தடியில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். மேலேநிமிர்ந்து பார்த்தேன் என் ஜன்னலுக்கு அருகே மாங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
எனக்கு விஷயம் புரிந்தது. பாவம். காட்டிக் கொடுக்கவில்லை. அங்கு வசிக்கும் பேய் வசிப்பதாகவே இருக்கட்டும்.
மீத நாட்களை தியாகியாய் அனுதாப அலைகளோடு ஓட்டிவிட்டு திரும்பினேன்.
உங்களில் யாராவது பேயை நேரில் சந்தித்து இருந்தால் கூறுங்களேன்.

எந்த வீட்டின் படத்தையும் இதில் இருப்பது போல் ப்ளாக் அண்ட் ஒயிட் டில் பார்த்தால் ,இனி பேய் வீடு போல் தான் தோன்றும்.
LikeLike