(ஓர் அடியார் – ஒரு வெண்பா)
51)கழற்சிங்க நாயனார்

கழற்சிங்கர் தொன்மையான பல்லவர் குலத்தில் தோன்றியவர்.
சிவபெருமானின் மலரடிகளையே எப்பொழுதும் சிந்தித்திருக்கும் செம்மையான இயல்புடையவர்.காடவர் குலத்து அரசரான கழற்சிங்கர், சிவனருளால் வடபுலத்து மன்னர்களைப் போரில் வென்று அவர்களின் நாடுகளைக் கைப்பற்றி அறநெறியில் நல்லாட்சி செய்து வந்தார்.
பல கோவில்களுக்குச் சென்று சிறந்த தொண்டு செய்து வந்த கழற்சிங்கர், சிவபுரி என்று போற்றப்படுகின்ற தென் திருவாரூரை அடைந்தார்.அங்கு அவர் இறைவனின் கோவிலுக்குள் சென்று வணங்கும் போது அவரது பட்டத்து அரசி கோவிலை வலம் வந்து அதன் பெருமைகளைப் பார்த்து வந்தாள். அப்போது, பூத்தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் விழுந்த புதிய பூவொன்றை எடுத்து மோந்தாள்.பூமண்டபத் திருமுற்றத்துள் விழுந்த புதுப் பூவை அவள் எடுத்து மோந்ததைக் கண்ட செருத்துணையார் என்ற புனிதத் தொண்டர் அவளது மூக்கை ஒரு கருவியால் அரிந்தார்.
குருதி வழிய, மலர் சூடிய கூந்தல் அவிழச் சோர்ந்து தரையில் விழும் மயில் போன்ற பட்டத்து அரசியார் புலம்ப, கோவில் உள்ளே இருந்த அரசர் அங்கு வந்தார். “இந்தக் கொடிய செயலை அஞ்சாமல் செய்தவர் யார்?” என்று வினவினார்.
அப்போது பக்கத்தில் வந்த செருத்துணையார் நிகழ்ந்தவற்றை
அவரிடம் எடுத்துரைத்தார்.உடனே கழற்சிங்கர், “மலரைத் தொட்டு எடுத்த கையை அன்றோ முன்னால் துணிக்க வேண்டும்?” என்று கூறித் தம் உடை வாளை உருவி அவளது கையை வளையல்களுடன் துணித்தார். அச்சமயம் தொண்டர்கள் எழுப்பிய ஒலி புவியெங்கும் பொங்கியது.தேவர்கள் முழங்கினர். தெய்வ மணம் நிறைந்த மலர்மழை பொழிந்தது.
அரிய அத்தொண்டைப் புரிந்த அரசர் நெடுங்காலம் ஆட்சி செய்து திருத்தொண்டும் ஆற்றிப் பின்னர்ச் சிவபெருமானின் திருவடி நிழலில் இருக்கும் பேர்ருளைப் பெற்றார்.
“கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகிறது.
கழற்சிங்க நாயனார் வெண்பா
மாலை தொடுக்கும் மலரினை மாதேவி
சாலவே மோந்தவத் தன்மையால் – சீலர்
செருத்துணையார் மூக்கரியச் செய்தகை வெட்டும்
திருத்தொண்டர் சிங்கரெனச் செப்பு
********”****””****””””””””****
52) இடங்கழி நாயனார்
![]()
இயற்கை எழிலும், நீர் வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர் ஆகும். அந்தக் கொடும்பாளூரில் வேளிர் குலத்தில் தோன்றியவரும், ஆதித்த சோழனின் புகழ் மிக்க மரபின் முதல்வருமான இடங்கழியார் என்பவர் சிவபெருமான் மீது பெரும் விருப்பம் கொண்டு தொண்டு செய்து வந்தார்.சைவ நெறியும், வைதிக நெறியும் தழைக்கவும் ,கோவில்களில் வழிபாடு சிறக்கவும் நல்லாட்சி செய்து வந்தார்.
சிவபெருமானின் அடியவர்க்கு அமுதளிக்கும் அரிய தொண்டு செய்து தவநெறியில் வாழும் ஒருவர், ஒருநாள் பண்டங்கள் பெற இயலாமல் திருத்தொண்டு முட்டுப்படத் தாம் செய்யும் செயலின் தன்மை தெரியாமல், இடங்கழியாரின் களஞ்சியத்தில் இருந்து நெல்லை எடுக்க முனைந்தார். காவலர்கள் அவரைக் கண்டு பிடித்து அரசர் முன் கொண்டு வந்தனர். அரசரான இடங்கழியாரிடம் அவர் “ சிவபெருமான் அடியாரை யான் அமுது செய்விப்பது தடைப்பட்டதால், அவர்க்கு உணவளிக்கக் களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுத்தேன்” என்று கூறினார். மனம் இரங்கிய இடங்கழியார் அவரை விடுவித்து, ,” இவர் அன்றோ எனக்குப் பண்டாரம் (களஞ்சியம்) போன்றவர்” என்று உரைத்தார்.
உள்ளம் உருகி நெகிழ்ந்த இடங்கழியார், நெற்களஞ்சியம் மட்டும் அல்லாமல் செல்வம் நிறைந்த பொக்கிஷம் அனைத்தையும் இறைவன் அடியார்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று பறையறைந்து அறிவித்தார்.அளவில்லாத செல்வம் எல்லாம் இறைவனின் அடியார்களுக்கு அளித்த அன்பும், கருணையும் கொண்ட இடங்கழி நாயனார் திருநீற்றின் நெறி உலகில் தழைக்கச் செய்து சிவபெருமானின் மலரடியின் நீழலைச் சேர்ந்தார்.
“மைதழையும் மணிமிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்துபெருஞ் சிறப்புடைய இடங்கழியார்”
என்று சேக்கிழார் இவரைப் பெரிய புராணத்தில் போற்றுகிறார்.
இடங்கழி நாயனார் வெண்பா
அத்தன் அடியார்க்(கு) அமுதுசெயல் முட்டவும்
மெத்தநெல் கொள்ளையிட்டார் மெய்த்தொண்டர்- அத்தகவு
கண்டார் இடங்கழியார் காணீர் இவரெனக்குப்
பண்டாரம் என்றார் பணிந்து.
*********************************
53) செருத்துணை நாயனார்

தெள்ளிய அலைகள் மதகுகள் தோறும், சேல் மீன்களையும், கயல் மீன்களையும், செழு மணிகளையும் கொண்டு சேர்த்துக் குவிக்கின்ற காவிரி பாயும் நீர் நாடாகிய சோழப் பெரு நாட்டில், ‘மருகல்’ நாட்டில் உள்ள தஞ்சாவூர் ஒழுக்க நெறியில் வாழும் குல மரபினர் வாழும் பெருமையுடைய ஊராகும்.
சிறப்பு மிகுந்த இவ்வூரில் வேளாளர் குடியில் தோன்றிய செருத்துனணையார் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து வந்தார்.
திருவாரூர்க் கோவிலில் இவர் வழிபட்டு வணங்கித் திருத் தொண்டாற்றி வந்தார்.
பல்லவ அரசரான கழற்சிங்கரின் பட்டத்து அரசி,அக்கோவிலின் பூமண்டபத்தின் அருகில் விழுந்த ஒரு புது மலரை எடுத்து மோந்தாள்.
அதைக் கண்டு சினந்த பெருமை மிகுந்த சிவநெறியில் வந்த ஒப்பில்லாத தலைமைத் தொண்டராகிய செருத்துணையார், ஒளி பொருந்திய கூரிய வாயுடைய கருவியால், இறைவன் சடைமுடிமேல் சூடும் திருப்பூமண்டபத்து மலரை மோந்த அரசியின் மூக்கை அரிந்தார்.
தம் திருத்தொண்டை உலகறியச் செய்த அடலேறு போன்ற செருத்துணையார், இறைவனின் அடிமைத் தொண்டினை உலகத்தில் உயிர்கள் உய்ய விளங்கச செய்து அவன் திருவடியின் நிழலை அடைந்து இறவாத இன்பம் எய்தினார்.
“செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித்தாமம்
அங்கண் எடுத்து மோந்தஅதற் கரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க லணிமூக் கரிந்தசெருத் துணையார்”
என்று பெரிய புராணம் இவர் வரலாற்றை விதந்தோதுகிறது
செருத்துணை நாயனார் வெண்பா
மொய்கோவில் பூவெடுத்து மோந்தாள் கழற்சிங்கர்
பெய்வளை மாதேவி பேதைமையால் – வெய்யசினம்
கொண்டுமங்கை மூக்கரிந்த கோதில் செருத்துணையார்
கண்டறிந்தார் ஈசன் கழல்
( தொடரும்)

தில்லை வேந்தன், வெண்பா வேந்தன் என்பதை நிரூபிக்கும் நாயன்மார் வெண்பாக்கள் தொடர்கின்றன
LikeLike