
இந்த முறை நாம் பார்க்கப் போவதும் ஒரு ஹிந்திப் படம். சாந்தாராம் என்ற மஹா கலைஞனின் “பிஞ்ரா” என்ற படம். “கூண்டு” (Cage) என்று அர்த்தம். 45+ வருடம் முன்னால் பார்த்தது.
மிக மிக வித்தியாசமான கதை / படம்.
Mr X – கைது செய்யப்பட்டு கேஸ் நடக்கிறது – Mr X ஐ கொலை செய்ததற்காக.
என்னை கொலை செய்த குற்றத்துக்காக என்னையே கைது செய்திருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள்.
இப்போது கதை –
ஒரு சிறு கிராமம், மிக மிக அழகான, மக்கள் எல்லோரும் நல்லவர்களாக, ஒற்றுமையாக உழைப்பவர்களாக, பொதுநல எண்ணம் கொண்டவர்களாக வாழ்கிறார்கள். மிகச் சிறந்த கிராமம் ( model village) என்று அரசாங்கத்திடம் பரிசு வாங்கிய கிராமம். விவசாயம், சிறு தொழில், முதியோர் கல்வி என்று வளமையாக இருக்கும் கிராமம்.
இந்த எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊரில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது வாத்தியார். மற்ற கிராமம் போல இருந்த கிராமத்தை தனி மனிதனாக, எல்லாரிடமும் பேசி, சொல்லிக் கொடுத்து, ஒரு உதாரணமான / சிறந்த கிராமமாக மாற்றியவர்.
எந்த விஷயத்திலும் அவர் சொல்வதுதான் முடிவு. 100 சதவிகிதம் எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். அவரும் நியாயம் தவரமாட்டார். எந்த பிரச்சனையும் இல்லாத கிராமம்.
அந்த கிராம மக்கள் சிறந்த கிராமம் என்ற பரிசு கிடைத்த உடன் வாத்தியாருக்கு நன்றி சொல்லி, பாராட்டிய தோடு, அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அவருக்கு ஊர் நடுவில் சிலை வைப்பார்கள்.
வாரத்தில் 5 நாள் முதியவர்களுக்காக, பள்ளிக்கூட அறையிலேயே, இலவசமாக இரவு பாட வகுப்புகள் எடுப்பார்.
கடந்த இரண்டு நாட்களாக வருகை குறைந்து வருவதும், வருபவர்களும் எப்படா வகுப்பு முடியும் என்று உடனே ஓடுவதும், ஏன் என்று அவருக்குத் தெரியவில்லை. சில நாட்களுக்குப்பின் தெரியவந்தது, ஊர் எல்லையைத் தாண்டி ஒரு கூடாரம் அமைத்து ஒரு நாடோடிக் குழு நாடகம், நாட்டியம், பாடல் என்று நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த கிராமத்தில் இருந்து பெரும்பானவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் அங்கு சென்று பார்க்கிறார்கள் என்று.
மக்களின் கவனம் திசை திருப்பி கற்பதை விட வேடிக்கை பார்க்க விரும்புவது அவருக்கு வருத்தத்தத்தையும் கோபத்தையும் தந்தது. அந்த நாடக்குழுவைப் பார்த்து பேசி ஊரை விட்டு விரட்டிவிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.
வகுப்பு முடிந்ததும் முகத்தை மறைத்து துண்டு போட்டுக் கொண்டு, இருட்டில் நாடகக் கொட்டகைக்குச் சென்று பார்க்கிறார். 5 நிமிடம், 10 நிமிடம் என்று கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பார்க்கிறார். அந்தக் கதாநாயகி என்ன அழகு, எத்தனை அழகாக, நடனமாடுகிறார், நடிக்கிறார், பாடுகிறார்… என்று நினைக்கிறார். ஆனால் பாடம் கெடுகிறது மற்றும் கட்டுப்பாடு தளர்கிறது என்பதால் அவளை சந்தித்து ஊரை விட்டுப் போய் விடும்படியும் கேட்கிறார். அவள் மறுக்கிறாள். ஆனால் அவரை மிக மரியாதையாக நடத்துகிறாள். அந்தக் குழுவில் அவள் வைத்தது தான் சட்டம். தினமும் அவரும் வந்து நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
அவர் திரும்ப வீட்டுக்கு வந்து குழப்புகிறார். அவள் அழகும் திறமையும் அவரைக் கவர்கிறது.
ஒருநாள் அந்த நாயகி இவரின் வீட்டுக்கு வருகிறாள். மிகவும் மரியாதையோடும் அன்போடும் பேசி அவர் கையைப் பிடிக்கிறாள். அவருக்கு உதற மனமில்லை. ஆசை பெருகுகிறது. ஆனால் ஊரின் நலம் கருதி விலகிவிட நினைக்கிறார்.
அப்போது வெளியே ஒரு திருடன் அவர் வீட்டில் கொள்ளை அடிக்க கத்தியோடு வருகிறான். அவரின் வீட்டின் கதவை நெருங்கும் போது, அந்தப் பக்கம் வந்த ஒருவன் அதை பார்த்து விடுகிறான். பின்னாலிருந்து ஒரு உதை விடுகிறான். இந்தத் திருடன் கீழே விழுகிறான். அவன் கொண்டுவந்த கத்தி குத்தி இறந்து விடுகிறான். அவன் பயத்தில் நடுங்கி பக்கத்தில் இருந்த ஒரு பாறையை எடுத்து அவன் முகத்தில் போட்டு விட்டு ஓடி விடுகிறான்.
சப்தம் கேட்டு வாத்தியாரும், நாயகியும் கதவைத் திறந்து பார்க்கிறார்கள்.
யாரோ கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து திகைக்துறார்கள். கதவு க்குப் பின்னால் நின்று கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்க்கும் போது, அந்த பக்கம் வரும் ஒரு கிராமத்தான், அந்த பிணத்தைப் பார்த்து விட்டு “ஐயோ யாரோ வாத்தியாரைக் கொன்று விட்டார்கள்” என்று கத்தியபடி கிராமம் நோக்கி ஓடுவான்.
என்ன செய்வது என்று திகைத்த இருவரும் ஓடி நாடகக் குழு இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அடுத்த நாளே அந்தக் குழு அந்த இடத்தைவிட்டு வெகு தொலைவான வேறு இடத்துக்குப் போகும் போது இவரும் அந்த கும்பலோடு போய் விடுகிறார்கள்.
கிராமத்தில் போலீஸ் வந்து விசாரிக்கிறது. அவருக்கு யாரும் பகை கிடையாது. மிக மிக நல்லவர் என்று சொல்கிறார்கள். அவர்களும் கடமைக்காக விசாரணை செய்து விட்டு, கைரேகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
அந்தக் கொலையை செய்தவன், தான் தெரியாமல், நல்ல மனிதரான வாத்தியாரைக் கொன்று விட்டோமே என்று மனம் நொந்து அவரின் சிலையின் பீடத்திலேயே தலையை முட்டிக் கொண்டு உயிரை விட்டு விடுவான். வாத்தியார் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு விட்டான் என்று எல்லோரும் நினைத்து விடுவார்கள்.
வாத்தியார் தான் கொலை செய்யப்பட்ட செய்தியை பத்திரிகையில் படித்து மன வேதனைப் படுவார்
போலீஸ் இந்த நாடகக் குழுவைப் பற்றி கேள்விப்பட்டு அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து அவர்களின் கைரேகைகள் பதிவு செய்து கொண்டு சில கேள்விகளை கேட்டு விட்டுச் செல்வார்கள்.
எப்போதாவது நாயகி வந்து இவரிடம் அன்பாகவும், மரியாதையாகவும் பேசி விட்டுச் செல்வாள்.
தாடியும், மீசையுமாக, அழுக்கு உடையோடு அடையாளம் தெரியாத மாதிரி மாரி இருப்பார்
அந்தக் குழு ஊர் ஊராகப் போகும் குழு. அவர் கூடவே வேறு சிலரும் வருவார்கள். அவர்களும் அந்த குழுவில் நடிக்காத, பங்கு பெறாதவர்கள். விசாரித்த போதுதான் தெரிந்தது, அவர்களும் இவரைப் போலவே அவள் அழகில் மயங்கி இந்தக் குழுவோடு சுற்றுகிறார்கள் என்று. அதில் ஒருவர் மிராசுதார், ஒருவர் பெரிய ஜமீன்தார், ஊர் பெரிய மனிதர்கள் என்றும், பெரும் செல்வத்தையும் இந்த குழு வுக்காக இழந்திருக்கிறார்கள் என்றும்.
வாத்தியாருக்கு ஊருக்குத் திரும்பிப்போகத் தயக்கம். எவ்வளவு நல்ல பெயரோடு வாழ்ந்த ஊர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். தன்னை ஒரு உதாரணமாக பார்த்கிறவர்களிடம் எப்படிப் போக முடியும். அதே போல இந்தப் பெண்ணை விட்டுப் போகவும் மனமில்லை. அவளும் எல்லாரையும் விட இவரை மரியாதையாக நடத்தினாள். ரொம்ப மதித்தாள்.
அந்த கிராமம் வழக்கம் போல வாழத் துவங்கியது. எந்த நல்ல காரியமும் வாத்தியார் சிலைக்கு முன்னால் தான் நடக்கும். வாத்தியார் முன் சத்தியம் செய்யச் சொல்வார்கள். அவரை தெய்வமாகவே கொண்டாடுவார்கள்.
சில மாதங்கள் கழித்து, கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகையும், நாடகக் குழுவில் எடுத்த ஒருவரின் கைரேகையும் ஒத்துப் போவதை போலீஸ் கண்டு பிடிக்கிறார்கள். அந்த நாடகக் குழு எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து வருகிறார்கள். வாத்தியாரின் கைரேகை ஒத்துப் போவதை சொல்லி அவரை கைது செய்வார்கள். அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் போலீஸோடு கிளம்புகிறார். நாயகி முடிந்தவரை தடுத்து போலீசிடம் பேசுகிறாள். போலீஸ் அவளின் பேச்சைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், வாத்தியாரை கைது செய்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
சிறையில் இருக்கும் அவரை சந்தித்து உண்மையைச் சொல்லி விடுதலை யாகச் சொல்லுவாள். தன்னால் தான் எல்லா கஷ்டமும் அவருக்கு வந்தது என்று கலங்குவாள்.
வாத்தியார் மறுத்து விடுவார். ஊருக்குள் சென்று பார்த்தாயா. என் பேரில் உள்ள நம்பிக்கையால் அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். உண்மை தெரிந்தால் என் பெயர் கெட்டுவிடும். என்னை தெய்வமாகக் கொண்டாடி, நேர்மையாக நடக்கும் கிராம மக்கள் மாறி விடுவார்கள். என் உயிரையும் விட இந்த கிராமம் எனக்கு முக்கியம். இந்த கிராமம் தான் என் உயிர்.
கோர்ட்டில் நான் தான் குற்றவாளி என்று என் புதிய பெயரில் தண்டனை வாங்கிக் கொள்வேன். என்று சொல்லி விடுவார். நாயகி வெளியே சென்று குலுங்கி அழுவாள்.
படம் முடியும்.
அபாரமான திரைக்கதை, நடிப்பு, இயக்கம்… இன்றும் நினைவில் நிற்கிறது

தன்னைக் கொலை செய்ததற்காகத் தானே கைது செய்யப்படும் வித்தியாசமான கதை தான் சாந்தாராம் அவர்களால் .
LikeLike