“ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும்” என்ற ஆசை கல்லூரி நாட்களிலே படிக்கும் போதிலிருந்தே மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது. ஆரம்பத்திலிருந்தே அல்ல. ஒரு வருடம் ஆன பிறகே!
நான் படிக்கும் காலத்தில் எங்கள் விவேகானந்தா கல்லூரியில் மொத்தமே மாணவர் சார்பில் ஒரு பத்து “டூ வீலர்ஸ் ‘இருந்தால் அதிகம். பெருவாரி சைக்கிள்தான் . நானும் கல்லூரி நாட்களில் சைக்கிள்தான்!
தி. நகரில் வீடு. மயிலாப்பூரில் காலேஜ். இந்த ரூட்டில் பாதி நேரம் போக்குவரத்து நெரிசல் இருந்தது கிடையாது. நோ ஒன் வே பிராப்ளம் . பாண்டி பஜார் , எல்டாம்ஸ் ரோட் எல்லாம் டூ வே. மவுண்ட் ரோட் தாண்டும் இடத்தில் மட்டும்தான் சிக்னல். வீட்டிலிருந்து கிளம்பினால் பதினைந்தாவது நிமிடம் காலேஜ். டென்னிஸ் டீமில் இருந்ததால் , மறுபடியும் மாலையில் கல்லூரி “கோர்ட்” டுக்கு விளையாடப் போவதும் சைக்கிளில்தான். பி. யு. சி. வரை இதுதான் ரூட் .
கதீட்ரல் கார்டன் சாலை, எட்வர்ட் எலியட்ஸ் சாலை ஆகிய சாலைகளை (இன்றைய டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை) நாங்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது. காரணம் அந்த சாலையில் இருபுறமும் மரங்கள் அடர்ந்திருக்கும்; வழியில் கடைகள் எதுவும் இருக்காது . இருட்டிய பிறகு அங்கே ஆள் நடமாட்டமே இருக்காது. இந்த ‘ரூட்’ டிகிரி படிக்கும் போது அழகாக மாறியது.
பெரிய தோட்டத்துக்குள் பங்களா போலிருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டல் ( அது ஹோட்டல் என்று தெரிவதற்கே சில மாதங்கள் ஆயின .) பக்கத்தில் இருக்கும் “ஸ்டெல்லா மரிஸ்” லேடீஸ் காலேஜ் ஆகியவை கவனத்தை ஈர்த்ததால், பனகல் பார்க்கிலிருந்து இடது புறம் திரும்பி ஜி. என். செட்டி சாலை, ஜெமினி சர்கிள் சுற்றி எட்வர்ட் எலியட் சாலை, சல்லிவான் கார்டன் சாலை என்று எங்கள் ‘ரூட்’ மாறியது.
வாரத்தில் ஒருமுறையேனும் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் சிற்றுண்டி ( பிரட் பீஸ் மசாலா, கட்லெட் ,கிச்சடி , தயிர்வடை, ரவா மசாலா, ரொம்ப சுமார் காப்பி ) பழக்கமும், லேடீஸ் காலேஜில் சில அறிமுகங்களும் இந்த வழித்தடத்தை மிக உற்சாகமான பயணமாக மாற்றியது. கல்லூரி இல்லா நாட்களிலும் நண்பர்களோடு இங்கே கூடுவோம். ( அன்று தொடங்கிய பழக்கம் அந்த ஹோட்டல் எடுக்கப்பட்டு செம்மொழிப் பூங்காவாக மாறும் வரை தொடர்ந்தது. இது பற்றித் தனியாக ஒரு வியாஸம் எழுதவேண்டும்).
சரி! விஷயம் என்னவென்றால் இந்த புதிய ரூட்டில் போகப் போக ஒரு டூ வீலர் இருந்தால் இன்னும் “ஜோராக” இருக்குமே என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. எங்கள் குரூப்பில் எவனிடமும் டூ வீலர் கிடையாது. ( எல்லோரிடமும் இரண்டு வீல் இருக்கும் சைக்கிள் இருந்தது. ஆனால் அதை டூ வீலர் என்று மரியாதையோடு இன்றுவரை யாரும் அழைப்பதில்லை,)
பாலு என்று ஒரு நண்பன். இராயப்பேட்டையில் இருந்தான். காலேஜ் பக்கம்தான் என்பதால் அவன் அண்ணனுக்கு லீவ் இருக்கும் நாட்களில் அழுது பிடித்து எப்படியோ ஒரு பழைய “வெஸ்பா” ஸ்கூட்டர் -ஐ எடுத்துக் கொண்டு வந்துவிடுவான். “டிரைவ் இன் -க்கு அவன் வண்டியில் பெருமையோடு சில முறைகள் போய் இறங்குவதுண்டு. அந்த பெருமைக்கு விலை, சாப்பிட்ட பில் தொகை என் பொறுப்பு.
எங்கள் குழுவில் சில நண்பர்கள் சில நாட்களில் இது போல வீட்டிலிருந்து “தேத்தி வந்த” ஸ்கூட்டர் களில் நாங்கள் ஹோட்டல் சினிமா என்று சுற்றியுள்ளோம். இந்த காலகட்டத்தில்தான் “ஸ்கூட்டர் ஆசை” என்ற விதையில் சலனம் நிகழத் தொடங்கியது. அது என்னை அடுத்த “லெவலுக்கு “ அழைத்துச் சென்றது. அதில் முதன்மைப் பங்கு வகித்தவன் என் நெருங்கிய நண்பன் பாலு. டென்னிஸ் டீம் பார்ட்னர்.
ஒருநாள் மாலை டென்னிஸ் ஒரு செட் விளையாடி முடித்தோம். அன்று கூட்டம் அதிகம். எங்கள் கல்லூரியில் மொத்தம் மூன்று கோர்ட் கள்தான் உண்டு. அடுத்து விளையாட வாய்ப்பில்லை.
“ பாலு அடுத்த செட் விளையாட முடியாது . கோர்ட் காலி இல்லை. வா! பீச் வரை போகலாம்” என்றேன். அன்று அவன் வெஸ்பாவில் வந்திருந்தான்.
பீச் ரோட்டில் போகும் போது கேட்டேன். “டேய் வண்டியைக் கொடேன் கொஞ்ச தூரம் நான் ஓட்டறேன்”
“ உன் கிட்டதான் லைசென்ஸ் கிடையாதே ?”
வண்டி ஓட்டத் தெரியுமான்னு கேட்டிருக்கணும். அத விட்டுட்டு இதைக் கேட்டான்.
“ அதனால் என்ன ? நான் உள்ளே இன்னர் ரோட்டில் ஓட்டறேன்” என்று சொல்லி வண்டியைக் கேட்டேன். ரவா தோசை வாங்கித் தருகிறேன் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டு, வண்டி சாவியை என்னிடம் தந்தான்.
சாவியைப் பொருத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து கம்பீரமாக அமர்ந்தேன். கிளட்ச்ஐ வேகமாக விட்டதால் இரண்டு முறை வண்டி “ ஆஃப் “ ஆகியது. மூன்றாம் முறை ஸ்டார்ட் செய்யும் போது
“ டேய் உனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா?” என்றான்.
பத்து நிமிஷம் முன்னாலேயே இந்தக் கேள்வியை அவன் கேட்டிருக்கணும் என்று நினைத்துக் கொண்டு, வைத்த காலையும் கையையும் பின்வாங்கக் கூடாது என்று “தெரியும்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஸ்டார்ட் செய்து கிளட்ச்ஐ மெதுவாகத் தளர்த்தி ஆக்ஸிலேட்டரைத் திருகினேன்.
வண்டியை என்னிடம் தனியாகத் தருவது தவறோ என நினைத்து அதே நேரத்தில் பாலு பில்லியனில் ஏறி அமர்ந்துவிட்டான். இதை ஒரு சில நிமிடங்கள் கழித்தே நான் உணர்ந்தேன். வண்டி தடையேதுமின்றி அந்த இன்னர் சாலையில் மெதுவாக எங்கள் இருவரையும் சுமந்து கொண்டு நகர்ந்தது,
“நான் தான் சொன்னேனே .. எனக்கு ஓட்டத் தெரியும் டா “ என்று கம்பீரமாகச் சொல்லிக்கொண்டே கொஞ்சம் வேகம் கூட்டி தைரியமாக சிறு புன்னகை மலர அரை நொடி பின்னால் திரும்பி அவனை பார்த்துவிட்டு முன்னால் பார்த்தால் பத்தடி தூரத்தில் வலது பக்கமாக உள் ரோடு மெயின் ரோடுக்குத் திரும்புகிறது. நான் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ( தெரியாமல் என்ன ? இதுதானே முதல் தடவை ) இடது பக்கமாக ஹாண்டில்பாரைத் திருப்பினேன்.
வண்டி குதித்துக் கொண்டு கடற்கரை மணலில் ஏறி , சக்கரங்கள் மண்ணில் சிக்கி , திரும்பிய ஹாண்டில்பார் பக்கமாக நாங்கள் இருவரும் சிதறினோம். யாரோ இருவர் ஓடி வந்து எங்களையும் வண்டியையும் தூக்கி நிறுத்தினார்கள். நல்ல வேளை; எங்களுக்கும் வண்டிக்கும் எந்த சேதாரமும் இல்லை. ( ரியர் லாம்ப் கவர் உடைந்து இருந்ததை மறுநாள்தான் அவன் அண்ணன் கண்டு பிடித்தான், என் உடலில் சில சில்லறை சிராய்ப்புகள் இருந்தது மறுநாள் குளிக்கும் போதுதான் தெரிந்தது,)
தூக்கிவிட்ட பெரியவரில் ஒருவர் சொன்னார்.
“பசங்களா! ஜாக்கிரதையா போங்க.. ஏம்பா நீ மெதுவாகத்தான் வந்தே ஆனா கீழே இங்கே பீச் மணல் நிறைய இருக்கும் அதுதான் டயர் சறுக்கிடுத்து !”
( யாருன்னு இன்னி வரை தெரியாது .. ஆனால் வாழ்நாள் முடிய அவருக்கு நன்றி சொல்லியாகணும். ஏதோ நல்ல ஓட்டத் தெரிந்தவன் மணல் தரையில தெரியாம விழுந்துட்டான் என்ற தொனியில் சொன்னதற்கு அவருக்குப் பன்னீர் அபிஷேகம் பண்ணனும் )
அத அப்படியே மெயிண்டைன் பண்ணி “ ஆமாம் சார் “ என்று சொல்ல , கொஞ்சம் சந்தேகத்தோடு என்னைப் பார்த்த பாலு
“ பரவாயில்ல விடு. இனிமே மெயின் ரோட்ல நானே ஓட்டறேன்” என்றான்.
இந்த நிகழ்வு என் ஸ்கூட்டர் ஆசையில் ஒரு சின்ன பிரேக் போட்டாலும், ஒரு மாதத்திற்குள் எல்லாம் பழையபடி மாறியது. பாலு ஸ்கூட்டர்ஐ நானும் அவனும் மாறி மாறி ஓட்டும் அளவுக்கு எங்கள் நட்பும் இறுகியது.
இதெல்லாம் நடந்து முடிகையில் ஃபைனல் எக்ஸாம் வந்து, ரிசல்ட் தெரிந்து தேர்வில் வென்று நான் வட இந்தியாவுக்கு முதுகலைப் பட்டம் பெறச் சென்றுவிட்டேன். எனது ஸ்கூட்டர் ஆசையும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
எம். எஸ்சி. பட்டம் தேர்வு முடிவுகள் வரும் முன்பே நான் சென்னை திரும்பிவிட்டேன். முடிவுகள் தெரிய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். அந்த நேரத்தில் சும்மா இருக்காமல் சில வேலைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி இருந்தேன்.
பதினைந்து நாட்களுக்குள் நாலு சுற்று இன்டர்வியூ நடந்து “சாண்டாஸ் “ கம்பெனி மருந்து விற்பனையாளனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். ( இந்த முதல் வேலை மற்றும் இன்டர்வியூ வெற்றி பற்றிய சுவையான சேதிகளை வேறிடத்தில் சொல்கிறேன். இப்போது சொன்னால் திசை மாறிவிடும்.)
வேலை கிடைத்துவிட்டது. அதுவும் நகரம் எங்கும் சுற்றும் மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ். டூ வீலர் தேவை நியாயமானது. ஸ்கூட்டர் ஆசை பழுத்துக் கனிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போது இருந்த வகைகள்- எனபீல்ட் புல்லட்; ஜாவா, ராஜ்தூத் , லாம்பரேட்டா ,வெஸ்பா. மோட்டார்சைக்கிளில் வேகம் ஆபத்து இரண்டும் அதிகம்; ஸ்கூட்டர் ஓகே. அவற்றில் ஸ்டபிலிட்டி லாம்பரேட்டாவுக்கே அதிகம். அதையே வாங்கிக் கொள் என்று வீட்டில் பச்சை விளக்கு காட்டப்பட்டது.
“நீ வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாய். அதனால் உனக்கு வண்டி வாங்க லோன் கிடைக்கும். ஆனால் கடன் வாங்கும் பழக்கம் நல்லதல்ல. வெளியே வட்டியும் அதிகம். உன் பெயருக்கு ஒரு வங்கி டெபாசிட் போட்டிருக்கேன். அதிலிருந்தே பணம் வாங்கி மாதா மாதம் திருப்பிக் கட்டிவிடு. வட்டி மிகவும் குறைவு “ என்றார் அப்பா. மிகச் சிறந்த அறிவுரை. என் வாழ்நாளில் ( நானும் துணைவியும் லோன் போட்டு வாங்கிய வீடு தவிர ) கார், ஃபிரிட்ஜ் டிவி வாஷிங் மெஷின் போன்ற எதற்கும் நான் கடன் வாங்கியதில்லை.
ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை முனையில் இருந்த ஏபிஐ ஷோ ரூமில் முதல் டூ வீலர் – 1972- ல் ரூ 3452 / க்கு வாங்கினேன். லாம்பரேட்டா நம்பர் TMP 8352.
வண்டி டெலிவெரி எடுக்க என் தந்தையார் உடன் வந்தார்.
“ உட்கார் பின்னால் நான் ஓட்டட்டா ” என்று பில்லியனைக் காட்டினார்.
“இல்லப்பா நானே ஓட்டறேன்” என்றேன்.
சரி என்று அவர் பில்லியனில் அமர்ந்து கொண்டு வண்டி நகரத் தொடங்கியதும் “ கேக்க மறந்துட்டேன் உன் கிட்ட லைசென்ஸ் இருக்கா?” என்றார்.
“ இருக்கு அப்பா” எனச் சொல்லிவிட்டு ,பழசை நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

மலரும் நினைவுகள் மணம் குறைவதே இல்லை.
LikeLike