Kumudham Office-il Gopalan | Tamil | eBooks online | Bhama Gopalan

பத்திரிகை நிருபர் உத்தியோகம் என்பது ஒரு புறம் ஜாலியாக  , மனநிறைவளிக்கும் விஷயமாக.. கரும்பு தின்னக் கூலி தரும் அம்சமாக இருந்தாலும்.. மறுபுறம் ரிஸ்க் நிறைந்த பயமுறுத்தும் விஷயமாகவும் இருக்கும். கத்தி முனை சமாச்சாரங்கள் ஏராளம்.

 மிகப்பெரிய மனிதர்களைச் சந்தித்து பேட்டிகள் வாங்கும் போது குமுதம் என்பது முத்திரை மோதிரமாகச் செயல்படும். ஆரம்ப நாட்களில், குமுதம் ஆபீஸில் ஐடி கார்டு கொடுக்கும் வழக்கம் இல்லை.

பிற்பாடு தான். கொடுத்தார்கள் 

ஆனால் அதுவரை சந்தித்த பிரச்சினைகள்… ஒருவேளை ஏதேனும் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டால் குமுதம் பெயரைச் சொல்ல எந்த தடையும் இல்லை. பெரும்பாலும் நம்புவார்கள். ஆனால் சில இடங்களில் ஐடி கார்டு கொடுக்காமல் எதுவுமே நடக்காது.

 அந்த மாதிரி இடங்களில் மீட்டிங்குகளைக் கவர் செய்ய முடியாமலோ, உயர் அதிகாரிகளின் பேட்டிகளை வாங்காமலோ வந்ததும் உண்டு. “அதனால் பரவாயில்லை அடுத்த வேலையைக் கவனியுங்கள்” ரெண்டு புன்னகையுடன் சொல்லிவிடுவார்கள் ஆபீஸில்.

 ஒரு சமயம் ஜரா சுந்தரேசன் அவர்கள் ஒரு ஐடியாவைச் சொல்லி பாமா கோபாலனுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்தார்.

 கல்லூரி மாணவர்களின் உற்சாகமான பங்களிப்பு எப்போதுமே குமுதத்திற்கு  ஒரு பெரிய வரப்பிரசாதம்.

 ஒருமுறை ஜ ரா சுந்தரேசன் அவர்கள் கடற்கரைக்குப் போனபோது, அங்கே சிலைகளின் மீது பறவைகளின் எச்சம் அசுத்தம் செய்திருப்பதைக் கவனித்திருக்கிறார்.

 எனவே என் கணவர் பாமா கோபாலனிடம், நாளை இந்தக் கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று சிலைகளைச் சுத்தம் செய்யும்படியும், அந்த அனுபவத்தையும் அவர்கள் பேசிக் கொள்ளும் முறைகளையும் கட்டுரையாக எழுதிக் கொடுக்கும் படியும் சொன்னார். குமுதத்தைப் பொறுத்த வரைக்கும் சுவாரஸ்யம் அல்லாத கட்டுரைகள் இரண்டு பக்கத்துக்கு மேல் போக முடியாது. ஆனால் இந்தக் கட்டுரைக்கு மூன்று பக்கம் அனுமதித்திருந்தார்.

 பாமா கோபாலனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. மாணவர்கள் ஒப்புக் கொண்டார்கள். மாணவிகள்.. இளம் பெண்களுக்கே உரிய உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டாலும், அவ்வளவு உயரத்தில் ஏறி சுத்தம் செய்யக்கூடாது என்று பெற்றோர் மறுத்துவிட்டனர்.

 ஜா ரா சுந்தரேசன் சாரிடம் இதைச் சொன்ன போது “அதனால் பரவாயில்லை மாணவர்களை வைத்து முடித்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

 மாணவர்களையும் போட்டோகிராபர் கே எஸ் அருணாச்சலத்தையும் அழைத்துக் கொண்டு போயாகிவிட்டது. முன்யோசனையுடன் பக்கெட், துடைப்பதற்காக ஸ்பாஞ்ச், துணி, சர்ஃப்.. போன்றவற்றை எடுத்துப் போனார்கள். மாணவர்கள் சந்தோஷமாய் ஓடிப்போய், பீச் தண்ணீரிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து விட்டார்கள்.

 மடமடவென்று ஏரி, தண்ணீர் ஊற்றி சிலைகளைத் துடைக்க ஆரம்பித்தார்கள்.

 நாலைந்து பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

 “பரவாயில்லையே பசங்க பொறுப்போடு செயல்படறாங்க” என்று ஒருத்தர் கமெண்ட்.

“ஊர்ல உலகத்துல எத்தனையோ முக்கியமான வேலை இருக்கச்சே இது ரொம்ப முக்கியமாக்கும்” என்று மற்றொருவர் கிண்டல்.

 இதையெல்லாம் என் கணவர் குறிப்பில் எழுதிக் கொண்டார்.

 மாணவர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. வாழ்க்கையிலேயே அன்று தான் மிகுந்த சந்தோஷமான தினம் என்பது போல் நடந்து கொண்டார்கள். இளைஞர்களுக்கே உரிய குறும்பான கமெண்ட்டுகளும்..

” சார் இத்தனை உயரத்திலிருந்து நாங்கள் பீச்சைப் பார்த்ததே இல்லை… அடுத்த முறை லைட் ஹவுஸை சுத்தம் செய்ய சொல்றீங்களா” என்றார் ஒரு மாணவர்.

 

“காந்தியை தொட்டுத்  துடைக்கும் கொடுப்பினை எத்தனை பேருக்குக் கிடைக்கும்” என்று நிஜமாய்ச் சிலிர்த்தார் ஒரு பிள்ளை.

எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.

 அரை மணி நேரம்தான் மொத்த அசைன்மென்ட் நேரம் கொடுத்திருந்தார்கள். இன்னும் ஐந்து நிமிடங்களில் எல்லாம் சுகமாய் முடிந்து விடும்.. என்ற நிலையில் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.

 போலீஸ்!

“யார்ரா நீங்கள்ளாம்? என்ன நடக்குது இங்க?” லத்தியைச் சுழற்றியவாறு இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்தார்.

 மாணவர்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை. ” சிலைகளைச் சுத்தம் செய்யறோம் சார்” என்று காஷுவலாய்ச் சொல்லி விட்டார்கள்.

 “உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று இன்ஸ்பெக்டர்  அதட்டலாகக் கேட்டார்.

 மாணவர்கள் அதைப் பெருமிதமாக நினைத்து ” சார் நாங்க குமுதத்துக்காக வந்திருக்கோம் சார்”என்று சொல்லி இருக்கிறார்கள்.

 நிருபரையும் கைகாட்டினார்கள்.

இன்ஸ்பெக்டரின் பார்வை இருவரின் பக்கம் திரும்பியது.

 “என்ன சார் இதெல்லாம்?” ஆங்கிலத்தில் அதட்டலாகக் கேட்டார்.

 இவருக்கும் உள்ள நடுக்கம் பயம் தான் அதை மறைத்துக் கொண்டு புன்னகையுடன் விஷயத்தைச் சொன்னார்.

” பசங்க கீழ விழுந்து உயிர் போச்சுன்னா இந்த ஏரியாவோட போலீஸ்காரன் எனக்கு தான் சார் தலைவலி. அனுமதி கடிதம் வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டிருக்கிறார்.

 அடுத்து ஐடி கார்டு எங்கே என்று கேட்டார்.

 மேற்சொன்ன இரண்டு விஷயங்களுமே இவரிடம் கிடையாதே.

 

” நடங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு” என்றார்!

 இவரும் நடந்தார்.

 நல்ல வேலையா மாணவர்கள் அதற்குள் ஓடியே போய்விட்டார்கள்.

 புகைப்பட நிபுணரையும் நகர்ந்து விடும்படி கண்காட்டினார் பாமாகோபாலன்.

 நிருபருக்கு ஏற்படும் சேதத்தை விட புகைப்படக் கருவி நிபுணருக்கு ஏற்படும் சேதம் மிக அதிகம். அந்தக்  காலத்திலேயே கே எஸ் அருணாச்சலத்தின் கேமராவின் விலை ஒரு லட்சத்துக்கு அருகில் இருக்கும். கேமராவைப் பறிமுதல் செய்தால் நஷ்டம் ஆகிவிடும். போலீஸ்காரர்கள் திருப்பிக் கொடுப்பார்களா என்பது கூட தெரியாது.

 இவர்கள் காமித்து அவர் புரிந்து கொண்டு  நகர்வதற்குள், ” இவர் என்ன போட்டோ எடுக்க வந்தாரா? பொது இடத்தில் போட்டோ எடுப்பது தவறு. யாராவது பொண்ணுங்க புகார் கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?”

 என்றவர் பட்டென்று அதைப் பிடுங்கி வைத்துக் கொண்டு விட்டார்.

 ஆனால் ஒன்று.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பிறகு இன்ஸ்பெக்டரின் குரல் மிகவும் கனிவாகிப் போனது.

“சார் பிரபலப் பத்திரிகையின் சார்பில் வந்திருக்கீங்க.. நான் அதை எப்படி நம்ப முடியும்?

 மாணவர்களுக்கு எதுவும் ஆனால் என்னாகும்? பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன ஆகும்?” என்ற மென்மையான குரலில் கேட்டவர், கேமராவையும் திருப்பிக் கொடுத்து.. பத்து நிமிடங்களில் அனுப்பியும் விட்டார்.

 மாணவர்கள் ஓடிப்போனது பற்றி பாமாஜி சாரி கேட்டார்.

 “அதனால் பரவாயில்லை அவங்க அப்படித்தான் செய்வாங்க. நின்னிருந்தால் கூட நாங்க அனுப்பியிருப்போம்” என்றாராம்

 படத்தையும் கட்டுரையையும் பிரசுரிக்கலாமா என்று அனுமதி கேட்டபோது “தாராளமா” என்று பதில் வந்தது.

ஆனால் போலீஸ் அனுமதி இல்லாமல் செய்தீர்கள் என்று குறிப்பிட வேண்டாம் என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டார்.

 ஆபீசுக்கு வந்து விஷயத்தைச் சொன்னபோது எடிட்டர் எஸ் ஏ பி, அந்தக் கட்டுரை பிரசாரமாகக்  கூடாது என்று கட்டாயமாகச்  சொல்லிவிட்டார்,

 அதற்கடுத்த வாரம் “என்னுடைய தொடர்கதை அத்தியாயம் பாமாஜி படித்தாரா?” என்று கேட்டிருக்கிறார் எஸ் எ பி அவர்கள்.

 திருமணங்கள் குழந்தைகளால் நிச்சயிக்கப்படுகின்றன என்ற தொடர் எழுதிக் கொண்டிருந்தார் எஸ் ஏ பி அவர்கள்.

 அதில் கதாநாயகன் இப்படி செய்வதாக இந்த சிலை சுத்தம் நிகழ்ச்சியை முழுவதும் குறிப்பிட்டு இருந்தார் எஸ்ஏபி அவர்கள்!!

 

குமுத நாட்கள் தொடரும்