பகவத படம இரதத manjunaths88@gmail.com மூலம் பங்கு திசையன் © 430934534

வாழ்க்கையில் தார்மீக வாழ்க்கையைப் பின்பற்ற சரியான அணுகுமுறை மிகவும் அவசியம். சரியான அணுகுமுறையே சரியான செயலுக்கு வழிவகுக்கும். சனாதன மார்க்கம், தர்மம் என்பதை நேர்மையான மற்றும் தூய்மையான அணுகுமுறையைக் கொண்டிருதளைக் குறிக்கும். கடந்த அத்தியாயத்தில் மனத்தின் மாசுக்களாக விளங்குபவை சுயநலச் சிநதனைகளும், கோபம் வெறுப்பு பொறாமை போன்ற தீய எண்ணங்களும் என்பதைப் பார்த்தோம். இதனால், சரியான அணுகுமுறை என்பது சுயநலமற்ற தன்மையோடு செயல்படுவதே. சுயநலம் நிறைந்த ஒருவன் தனக்கு முக்கியத்துவம் தேடுவான்; தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவான். இது தவறான செயல்முறைக்கே வழிவகுக்கும். சரியான அணுகுமுறை இருக்கும் ஒருவருக்கு சுயநலச் சிந்தனையும் தன்னை முன்னிலைப் படுத்திப் பார்க்கும் குணமும் இருக்காது. இதனாலேயே சரியான அணுகுமுறையோடு வாழ்க்கை நடத்துவது மிகவும் அவசியம்.

அணுகுமுறை என்பது ஒருவரது சுயசிந்தனையாலும் மற்றவர் கூறக் கேட்கும் வார்த்தையாலும் ஏற்படும். திருவள்ளுவரது குறளை இப்பொழுது நாம் நினைவு கூற வேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற குறளில் தன் சுயசிந்தனையின் மூலம் மெய்ப்பொருள் கண்டறிவதே சரியான அணுகுமுறைக்கும் வழிவகுக்கும். எந்த விஷயத்திலும் உண்மையை நாடிச் செல்லும் ஒருவனுக்கு, மெய்ப்பொருளின் தன்மை புரிவதும் இந்தப் புரிதலினால் ஞானம் சாத்தியமாவதும் உறுதி. இதனாலேயே ஸ்ரீ கிருஷ்ணர் சரியான அணுகுமுறைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார் பகவத் கீதையில்.

கர்ம யோகத்தின் அடிப்படையே அனைத்து விஷயத்தையும் சரியான அணுகுமுறையோடு அணுகுவது. செய்யும் கர்மம் அனைத்தையும் ஒரு யாகமாக, ஒரு யோகமாக, ஒரு தவமாக மாற்ற இந்த அணுகுமுறை வழி வகுக்கும். எந்த வேலையாக இருந்தாலும் நாம் நடந்து கொள்ளும் நடத்தையும், அர்ப்பணிப்பு உணர்வுமே நம்மை உயர்த்தும். இதற்கு அடிப்படையாக இருப்பது நமது அணுகுமுறை. இதனை அடிப்படையாக வைத்தே ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று விதமான கர்மங்களைப் பற்றிக் கூறுகிறார். சாத்வீக கர்மா என்பது சுயநலமற்ற செயல்களை அதிகமான மனிதர்களுக்கு உதவும் விதத்தில் செய்வது. இந்த அணுகுமுறை ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும், உள்ளத்தில் உண்மையான மகிழ்ச்சி உண்டாக வேண்டுமென்றால், அன்பின் மூலமாக அனைவரையும் அணைத்துக்கொண்டு உதவும் மனோபாவம் வேண்டும். இதற்கு கர்ம யோகம் மாத்திரமே உதவ முடியும்.

சாத்வீக குணம் சாத்வீக கர்மத்திற்கு முன்னோடி. சாத்வீக குணம் கொண்ட ஒருவனின் அணுகுமுறை உயர்ந்தது; பிறர் நலனை முன்னிறுத்தியது. திருவள்ளுவர் கூறுவது போல:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான்.

எல்லா உயிர்கள் மீதும் செம்மையான அருளைக் காட்டுபவனே அந்தணன் எனப்படுகிறான். இவன் ஒருபோதும் தன நலனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதில்லை. இந்த அணுகுமுறையே அவனது ஏற்றத்துக்குக் காரணமாகிறது.

ஸ்ரீகிரிஷ்ணர் விவரிக்கும் ரஜோ குணம் தன்னை முன்னிலைப் படுத்துவதை பிரதானமாகக் கொண்டது. சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. செல்வம், புகழ், அதிகாரம் முதலியவற்றில் பற்று உள்ளவர்கள், ரஜசிக கர்மத்தையே அதிகம் விரும்புவர். இவர்கள் சுயநலமாகச் செயல்பட்டாலும் பிறருக்குத் தீங்கு விளைவிக்க மாட்டார்கள். ஆனால் தமோ குணத்தோர் சுயநலத்தோடு செயல்படுவதோடு, பிறரைத் துன்புறுத்தவும் அவர்களுக்குத் தீங்கு செய்யவும் தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு சுயநலச் சிந்தனை ஒன்றே முக்கியமாக இருக்கும். தன் நோக்கம் நிறைவேற மற்றவர்களை அழிக்கவும் தயங்காதவர்கள் இவர்கள்.

இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும். சாத்வீக சிந்தனை சரியான அணுகுமுறைக்கு வழிவகுக்கும்; ரஜச சிந்தனையும் தாமச சிந்தனையும் தவறான அணுகுமுறையை அடிப்படியாகக் கொண்டவை. எனவே கர்ம யோகத்திற்கு ஏற்புடையானவை அல்ல.

நாம் சாதாரணமாக ஒருவனை அவனது வெளியே தெரியும் வெளிப்புறச் சாதனைகள், மற்றும் அவன் சேர்த்து வைத்துருக்கும் செல்வம், பேர், புகழ் இவற்றை வைத்துத் தான் மதிப்பிடுகிறோம். பகவான் ஸ்ரீகிருஷ்ணரோ, கர்ம யோகம் மூலம் ஒருவனது உள்ளத்தில் மாசு இல்லாமல் இருப்பதை வைத்து, அவனது ஆன்மீக வளர்ச்சியை மதிப்பிடக் கற்றுத் தருகிறார். பொருளும் புகழும் இருந்தாலும் கர்ம யோகி மகிழ்ச்சியுடன் இருப்பான். பொருளும் புகழும் இல்லாமல் இருந்தாலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். பொருளாதார ஆதாயங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு முன்பு இவனுக்கு முக்கியமாகத் தோன்றாது. இப்படி ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கிய கவனம் கொடுப்பதே சமத்துவத்தில் இருப்பது என்று கூறுவார். இந்த அணுகுமுறையே, பொருட்கள் மேலும், உறவுகள் மேலும் நாம் கொள்ளும் பற்றை பலவீனமடையச் செல்லும். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்

கர்ம யோகம் எந்தச் செயல் மேலும் சார்ந்திருப்பது அல்ல; அந்தச் செயலைச் செய்யும் அணுகுமுறையைச் சார்ந்திருக்கும்.

கர்மயோகத்தின் முக்கிய நிலைகள் என்னென்ன? விவேகத்தின் மூலம் உள்முகமான ஆன்மீக வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சி,  புகழ் மற்றும் அதிகாரம் முதலியவற்றை விட முக்கியமானது என்ற உண்மையை உணர்ந்து கொள்வது. இரண்டாவது நிலை என்பது இந்தப் பாகுபாடு புரிந்து ஆன்மீக வளர்ச்சியே முக்கியம் என்ற முடிவை வாழ்வில் எடுப்பது. இவ்வாறு ஒருவன் வாழ்க்கையை நடத்தும்போது மனம், உணர்ச்சி மற்றும் அறிவுசார் வளர்ச்சி சாத்தியமாகும்; உலகளாவிய அன்பு சாத்தியமாகும்; இதையே கருணை என்பர். இதோடு வசுதைவ குடும்பகம் என்ற உணர்வுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாவனையுடன் ஆத்ம ஞானத்தைத் தேடும் மனோபக்குவமும் வரும். ஆத்ம சாக்ஷாத்காரமும் சாத்தியமாகும்.

ஆத்ம சாக்ஷாத்காரம் கிட்டினாலும் சில தடைகள் இன்னும் தொடரலாம். இரண்டு விதமான தடைகளைப் பற்றி ஸ்ரீகிருஷனர் விளக்குகிறார். நான் பூரண பிரும்ம ஸ்வரூபமா என்ற ஐயம் இந்த நிலையிலும் வரலாம். இதோடு நாம் எந்நேரமும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் மீதும் உறவுகள் மீதும் சார்ந்து நிற்கும் பழக்க வழக்கமும் சில நேரங்களில் நம்மை ஆட்கொண்டு நம்மை மயக்கும்.

ஸ்ரீகிருஷ்ணரின் கர்ம யோகத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம். இவ்வாறு கிருஷ்ணரால் பாராட்டப் பெற்ற ஒரு கர்ம யோகி எப்படி இருப்பார். கிருஷ்ணரிடமே இது பற்றிக் கேட்கிறான். இவ்வாறு கர்ம யோகம் மூலமாக ஆத்மஞானம் பெற்ற ஒருவர் எப்படி இருப்பார், அவரது குணாதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறும் பதில் நாம் பின்பற்ற ஒரு முன்மாதிரியாகவும்  நமக்கு வழிகாட்டவும் செய்கிறது. ஆத்ம சாக்ஷாத்காரம் ஒரு மனிதனுக்கு முழுமையான விடுதலையைக் கொடுக்கும். பிறர் மேல் எந்த விதத்திலும் சார்ந்திருக்காமல் இருக்கத் தெரிந்தவனாக மாற்றும். செல்வம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, மற்றவர் இவனைப் போற்றினாலும் சரி போற்றாவிட்டாலும் சரி, தன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் தன்மையைக் கொடுக்கும். எந்த நிலையிலும் தன நிலையிலிருந்து மாறாமல் அகமகிழ்வோடு வாழ்க்கையை ரசிக்கச் செய்யும். அமைதியும் ஆனந்தமும் அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் புலப்படும். இப்படிப்பட்ட மனிதனை ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரஞன் என்று அழைக்கிறார். அன்பே சிவமாக இவனது ஆன்ம நேயம் வெளிப்படும். அறமே செயலாக இவனது தார்மீக வாழ்க்கை மலரும். சீர்மை பொருந்திய சரியான அணுகுமுறையோடு, முழு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து விண்ணுலகத்தோறும் போற்றி வணங்கும் பேறு பெற்றவனாகிறான்.

இனி வரும் அத்தியாயங்களில் கர்ம யோகத்தைப் பற்றியும், ஞான யோகத்தைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

 

*******************