பார்வதிப் பாட்டியைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. அவருக்கு வயது எழுபத்தைந்து இருக்கலாம். நடையில் சிறிதுதான் தள்ளாட்டம். காதுகளில் அந்தக்காலத்தில் தொங்கட்டான் போட்டிருப்பார்கள் போல இருக்கும். அதனால் சற்று இழுத்துக் கொண்டு தொங்கியது. முகத்தில் லேசான சுருக்கங்கள் அவரின் உழைப்பின் திறமைக்குப் பறை சாற்றின. சற்று சாயம் போன ஒரு சிகப்புப் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்தார். காலையில் சுமார் எட்டு மணிக்கு இப்புறநகர்ப் பகுதியில் என் வீட்டு வழியாக மேற்கு நோக்கிப் போவார். பகல் பதினொன்று அல்லது பன்னிரண்டு மணிக்குத் திரும்பி வருவார்,
திரும்பிப் போகையில் தலையில் ஒரு சுமை கண்டிப்பாகத் தினம் இருக்கும். ஒரு பழைய துணியால் கட்டப்பட்ட அட்டைகள் அல்லது தினத்தாள்கள், இல்லையேல் புத்தகங்கள் இருக்கும். கைகளில் ஒரு பையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும். நான், “தினமும் இவருக்கு எங்கிருந்துதான் கிடைக்கிறதோ” என்று நினைப்பேன்.
போன வாரம் ஒரு நாள் பாட்டி திரும்பச் சற்று நேரமாகிவிட்டது. சூரியன் உச்சியில் வந்துவிட்டான். தற்செயலாக வெளியே வந்தவன் பாட்டி வருவதைப் பார்த்தேன். உடலெங்கும் வியர்வை வழிய சுமையைத் தூக்க முடியாமல் வந்து கொண்டிருந்தார். இன்று அட்டைகளும் கொஞ்சம் அதிகம். ஒவ்வொன்றும் நான்கடிக்கு நான்கடி அகலம் இருக்கும். கையில் உள்ள பையும் நிரம்பி வழிந்தது.
சட்டென்று வாசல் சுற்றுச்சுவரின் கதவைத் திறந்தேன். அவர் எதிரே நின்றுகொண்டு “பாட்டி, வெயில் ரொம்ப அதிகமாயிருக்கு. கொஞ்சநேரம் போர்டிகோவில ஒக்காந்துட்டுப் போங்க” என்று சொல்லிக் கொண்டே அவர் கையில் இருந்த பையை வாங்கினேன்.
அவர் விடவில்லை. “வாணாம் தம்பி எனக்குப் பழகிப்போச்சு” என்று சொல்லியவாறே நடக்க ஆரம்பித்தார். உள்ளே இருந்து வந்த என் மனைவி, “அவருதான் சொல்றாரில்ல; பாட்டி இங்க வாங்க” என்று வீதிக்கு வந்தாள். கையைப் பிடித்து அப்பாட்டியைப் போர்டிகோவிற்குள் அழைத்து வந்தாள்.
தலைச்சுமையை இறக்கி வைத்துவிட்டபாட்டி ‘அம்மாடி’ என்று சொல்லிக் கொண்டே கீழே உட்கார்ந்தார். சுற்று முற்றும் பார்த்தார். சுவர் ஓரத்தில் இருந்த பூச்செடிகள் அவரைக் கவர்ந்தன. வண்ணத்தில் போடப்பட்டிருந்த கோலத்தைக் கவனித்தார். சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். புடவைத் தலைப்பால் விசிறிக் கொண்டார்.
அதற்குள் என் மனைவி மோர் கொண்டுவந்து கொடுக்க, “இதெல்லாம் வேணாம்மா” என்றார். “இருக்கட்டும் பாட்டி, குடிங்க என்று நானும் வற்புறுத்த வாங்கிக் குடித்தார்.
”ஒங்க பேரு என்னா பாட்டி” என்று கேட்டேன்.
“பார்வதின்னு கூப்பிடுவாங்க”
”வீட்ல யார் யாரு இருக்கீங்க” என்று தொடர்ந்தேன்.
அருகில் உட்கார்ந்த என் மனைவியும், “ஏன் பாட்டி பேரன் பேத்தி யாராவது இருந்தா இந்த வேலைக்கு அனுப்பலாம்ல” என்றாள்.
பார்வதிப் பாட்டி பதிலேதும் பேசவில்லை, வீதியையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஓடின. பழைய சாமான்களை வாங்கும் வண்டி ஒன்று போனது. ஐஸ் விற்பவர் மணியடித்துக் கொண்டே தன் வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றார்.
“ஊட்ல யாரும் ஆம்பளங்க இல்லம்மா; பேரப்புள்ளங்க ரெண்டு பேரும் சிறிசுங்க. ஒண்ணு மூணாம் வகுப்பு இன்னொண்ணு அஞ்சாம் வகுப்பு படிக்குதுங்க”
”ஏன் பொண்ணு வரலாம்ல”என்று கேட்டேன்.
“ஒரு பொண்ணு ஊட்டு வேலையெல்லாம் பாக்கும். இன்னொண்ணு கொல்லி வேலைக்கு இல்லன்னா வெறகு பொறுக்கப் போகும்” என்றார்.
“ரெண்டும் பொண்ணா” என்று கேட்டாள் என் மனைவி.
அதன் பின்னர் பாட்டி தன் கதையை விறுவிறு என்று சொல்லி முடித்து விட்டார். இதேஊர்தான் சொந்த ஊராம்.
” நான் கட்டிக்கிட்டக் கொஞ்ச நாள்லயே ரெண்டும் பொறந்ததுங்க. ஒண்ணுக்கு மூனு வயசு இன்னொண்ணுக்கு ஒரு வயசு இருக்கச்சே அவரு மாரடைப்புலப் போயிட்டாரு. அப்பறம் ரெண்டையும் காத்துக் காத்துப் பெரிசாக்கினேன்”
”ஏன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வைச்சியா” என்றேன்.
“எல்லாம் அனுப்பிதான் வச்சேன். எதுக்கும் எழுத்து ஏறல. சரி காயிதம் படிச்சுக்கத் தெரிஞ்சா போதும்னு நிறுத்திட்டேன்.”
”கல்யாணம் ஆயிடுச்சா” என்றாள் என மனைவி.
”அது பெரிய கதைம்மா” என்று சொல்லி விட்டு மேலேபார்த்தார் பாட்டி.
பெரிய பெண் கோகிலாவை ஊரே மெச்சும் அளவிற்குத் தனக்கு இருந்த நெலத்தைக் கொஞ்சம் விற்றுவிட்டுத் திருமணம் செய்து கொடுத்தார் பார்வதி. ஆறு பவுனு நகையும் டி,வி,எஸ் வண்டியும் வாங்கிக் கொடுத்தார். பண்ருட்டி பக்கத்துல அங்குசெட்டிப்பாளையம்தான் மாப்பிளை மாதவனின் ஊர்.
கோகிலா கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தாள். கணவனுக்கு நிலம் சொந்தமாக இல்லையே தவிர அறுப்பு அறுத்தல், அண்டை வெட்டுதல், வண்டி ஓட்டுதல் என்று எல்லா வேலைகளையும் செய்வான். நான்கைந்து ஆண்டுகள் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தன. இரு மகன்களும் பிறந்தார்கள்
ஒருநாள், “ஏங்க அவரு இல்லியா” என்னும் குரல் வாசலில் கேட்க கோகிலா எட்டிப் பார்த்தாள். ஒரு பெண்ணும் ஐந்து வயது இருக்கக்கூடிய ஒரு பிள்ளையும் இருந்தனர். கணவனுக்கு ஏதோ வேலை கொடுக்க வந்திருக்கிறாள் என்றெண்ணி, “உள்ள வாம்மா; இதோ வந்திடுவாரு” என்று அழைத்தாள் கோகிலா.
தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள் கோகிலா. குடித்து முடித்தவள் “நீதான் கோகிலாவா” என்று கேட்டாள் வந்தவள்.
“ஆமாம்மா, என்பேரு ஒனக்கு எப்படித் தெரியும்”
“அவரு சொல்லியிருக்காரு” என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாதவன் வந்துவிட்டான்.
அவளைப் பார்த்து சாதாரணமாக, நீண்ட நாள் பழக்கம் இருப்பவன் போல “அமுதா, எப்ப வந்த?” என்று கேட்டான்.
அன்று இரவுதான் கோகிலாவிற்குத் தன் வாழ்வில் இடி விழுந்தது போல இருந்தது. ஏற்கனவே திருமணமாகி ஐந்து வயதில் மகனும் இருக்கும் மாதவனுக்கு அவளை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
மாதவன் கெஞ்சினான், “கோகிலா. நெலமையைப் புரிஞ்சிக்கோ. அதான் ஒனக்கு நல்லது. அவ வேற சாதி. கரும்பு வெட்ட வெளியூர் போகச்சே பழக்கமாயிடுச்சு. அதான் நம்ம சாதியிலியே வேணுமுன்னு என் அப்பா அம்மா ஒண்ணைக் கட்டி வைச்சாங்க. நான் எவ்ளோ சொல்லிப் பாத்தேன் வேணாம்னு. கேக்கல மருந்து குடிச்சிடுவோம்னு மெரட்டினாங்க. நான் ஒண்ணையோ புள்ளங்களயோ உட்டுடமாட்டேன். அவளும் இங்க இனிமே வரமாட்டா.
கோகிலா வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. செயலில் காட்டிவிட்டாள். மாதவன் மாலை வீடு வரும்போது கோகிலா வீட்டில் இல்லை. தன் பிள்ளைகளுடன் தாய் பார்வதி வீட்டிற்கு வந்து விட்டாள். பார்வதியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். மாதவனும் பலமுறை வந்து அழைத்துப் பார்த்தான். அதிகம் வற்புறுத்தினால், ”என்னையும் என் புள்ளங்களயும் உசிரோடப் பாக்கமாட்டீங்க” என்று கோகிலா இறுதியாகக் கூறிவிட்டாள்.
“அப்பறம் என்னா தாயி செய்யறது? அவளுக்கும் ரெண்டு பேரப்புள்ளங்களுக்கும் சேத்து ஒழைக்கிறேன். இதை மாதிரி பொறுக்கிக் கொண்டு போயி ஊட்ல சேத்து வச்சா பாஞ்சு நாளைக்கு ஒரு தடவை வியாபாரி பாய் ஒருத்தரு வந்து எடுத்துக்கிட்டுக் காசு கொடுப்பாரு. செலவுக்கு ஆகும்” என்று முடித்தார் பார்வதி. “ஏன் கேட்டோம்” என்றாகி விட்டது எனக்கும் என் மனைவிக்கும் இருவர் மனங்களும் கனத்துப் போய் விட்டன.
பாட்டி அங்கிருந்து அகன்றபிறகும் எங்கள் பேச்சில் நிலைத்திருந்தார். நீண்ட நேரம் அவரைப் பற்றியே பலவகைகளில் பேசிக்கொண்டிருந்தோம். அதேபோல சில நாள்கள் அவரை அழைத்துப் பேசி மோர் கொடுப்பது வழக்கமாகி விட்டது.
ஒரு நாள் காலையிலேயே வீட்டுக்கு வந்தார். நாங்கள் வெளியே வந்ததும் தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து தட்டு ஒன்று எடுத்து வெற்றிலை, பாக்கு, பழம் இவற்றையும் அவற்றின் மீது ஒரு திருமண அழைப்பிதழையும் வைத்துக் கொடுத்தார்.
“என்னா பாட்டி இது? யாருக்குக் கல்யாணம்?” என்று என்மனைவி கேட்க, “ரெண்டாவது பொண்ணுக்கு முடிஞ்சிருச்சும்மா, பையன் லாரி டிரைவர். சொந்தமா லாரி ஓட்டறான். சிதம்பரம்தான் சொந்த ஊர் ஒரேபுள்ள; ஊடு இருக்கு” என்று கூறி முடித்தார்.
“அப்பாடா; ஒனக்கும் ஒரு நிம்மதி கெடைச்சிருக்கு பாட்டி. நீ கஷ்டப்பட்டதுக்கு விடிஞ்சிருச்சு. இனிமே ஒனக்கு நல்ல காலம்தான்” என்றாள் என் மனைவி.
“ஆமாமா. இனிமே தெருவெல்லாம் சுத்த வாணாம். பேரப்பசங்க பள்ளிக்கூடத்துல சாப்பிட்டுக்குவாங்க. எலவச அரிசி வருது போதும்; பொண்ணு ஏதாவ்து வேலைக்குப் போயிட்டு வரும்” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார் பாட்டி
”கொஞ்சம் இரு பாட்டி என்று கூறிவிட்டு நான் உள்ளே சென்றேன். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று எடுத்து அவரிடம் தந்தேன்
“ஐயா, ஐயா, இதெல்லாம் வேணாம்யா, ஒங்க ஆசீர்வாதம் போதுங்கய்யா. என்னமோ ஒங்க ரெண்டு பேருக்கிட்டயும் வந்து பேசிட்டு போனா மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு அதாலதான் வந்திட்டிருக்கேன்” என்று கூறி வாங்க மறுத்தார்.
“பாட்டி நாங்கக் கல்யாணத்துக்கு வர முடியாது. அதால எங்க ஆசிர்வாதத்தோட நீ இதையும் வாங்கிக்கணும் என்று கூறிய என் மனைவி அந்தத் தொகையை அவர் கையில் திணித்து விட்டார்.
பாட்டி போனபின் மனைவி சொன்னாள். பாவங்க இத்தினி வருசமா ஒழச்சது போதும்னு நெனச்சு கடவுள்தான் அவருக்கு நல்ல வழி காட்டியிருக்கு” என்றாள் என் மனைவி.
”இனிமேலாவது அவங்க நிம்மதியா பொழுதைக் கழிக்கட்டும்” என்றேன் நான். ஒவ்வொருவருக்கும் ஒரு காலக்கட்டம் கொஞ்சம் கஷ்டம்தான். அதுக்கப்பறம்தான் நிம்மதி வருது. பாட்டிக்கு இப்பத்தான் நல்ல காலம் பொறந்திருக்கு” என்றேன் நான்.
பாட்டி வந்து திருமணத்தின் இனிப்புகள் தாம்பூலப்பை கொடுத்து விட்டுப் போனார். அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. காலம்தான் வேகமாகப் போகிறதே. ஆறு மாதங்கள் ஓடியிருக்கும்.
ஒரு நாள் காலை வாசலில் உட்கார்ந்து கொண்டு செய்தித்தாளைப் ப்டித்துக் கொண்டிருந்தேன். நாய்கள் அண்டையிட்டுக்கொண்டு குலைத்தது என் கவனத்தைக் கவர்ந்தது, தலை நிமிர்ந்து பார்த்தேன். அதிர்ச்சியாயிருந்தது. பர்வதிப் பாட்டி ஓர் உர சாக்கை மடித்து அக்குளில் வைத்துக் கொண்டு தலைகுனிந்து போய்க்கொண்டிருந்தார்.
சற்று உரத்த குரலில் “பாட்டி, பாட்டி என்று சத்தமிட்டேன். என் குரல் கேட்டு உள்ளே இருந்த என் மனைவியும் வெளியே வந்தாள். நான் கூப்பிட்ட குரல் கேட்ட பாட்டி போர்டிகோவில் வந்து உட்கார்ந்தார்.
“ஏன் வீடல ஒக்காராம மறுபடியும் கெளம்பிட்ட” என்றாள் என் மனைவி.
“கொஞ்ச நாளைக்கு சும்மா ஒக்காரலாம்ல” என்றேன் நான்.
பாட்டி ஒன்றும் பேசவில்லை. வீதியைப் பார்த்தார். சுமையை இழுத்துக்கொண்டு போகும் ஒற்றை மாட்டை அடித்து ஓட்டினான் ஒருவன்.
“என்னா பாட்டி பதிலே பேசல; எல்லாரும் நல்லா இருக்கங்க்ளா; கல்யாணம் ஆகிப் போனவ எப்படி இருக்கா?” என்றேன் நான்.
அவ்வளவுதான், பாட்டியின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வழியத் தொடங்கியது. குரலை அடக்கிக் கொண்டு அழுதார். கொஞ்ச நேரம் அழட்டும் என்று நாங்கள் இருவரும் சும்மா இருந்தோம். தானாகவே அழுகை அடங்கியது.
பாட்டியே ஆரம்பித்தார். “எனக்கு விடிவு காலமே வராதாம்மா; இப்படியே எத்தினி காலம்தான் இந்தக் கட்டை ஒழைச்சிக்கிட்டிருக்கும். முடியலம்மா” என்று மறுபடியும் கண் கலங்கினார்.
“என்னாச்சு பாட்டி? புது மாப்பிள்ளைக்கிட்ட ஏதாவது சண்டையா” என்று கேட்டேன் நான்.
பாட்டி இப்பொழுது தெளிவாகப் பேசினார். ”சண்டையெல்லாம் ஒண்ணுமில்லீங்க. சண்டை போட யார் இருக்காங்க. வந்தான் போயிச் சேந்துட்டானே.
திடுக்கிட்டுப் போன என் மனைவி “என்னாச்சு” என்று கேட்டாள்.
“ஆமாம்மா; ஒரு மாசம் ஆயிடுச்சும்மா. மெட்ராசுக்கு லாரி ஓட்டிக்கிட்டுப் போனான். ராத்திரி வேளை. எதுத்தாப்ல வந்த இன்னொரு லாரி மோதிடுச்சு. போயிச் சேந்துட்டான். அந்தப் பொண்ணும் இங்கியே வந்திடுச்சு. வவுத்துல வேற ரெண்டு மாசம்” கண்களத் துடைத்துக் கொண்டு மூக்கைச் சிந்தினார் அவர்.
எங்கள் இருவருக்கும் பேச்சே வரவில்லை. கண்கள் கலங்கி விட்டன. . “நீங்க ஏம்மா கஷ்டப்படறீங்க? வரவேண்டியது வந்துதான் தீரும்மா; அதுக்காக நாம் சும்மா இருக்கலாமா? அதான் கெளம்பினேன்”. என்று தன் உரசாக்குப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். என்ன பேசுவது என்று தெரியாமல் நாங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டோம்.

மனத்தை உருக்கும் கதை.
LikeLike