
குவிகம் பிப்ரவரி மின்னிதழை அலச வேண்டும் என்றதுமே அதில் உள்ள முப்பது படைப்புகளையும் முதலில் படித்து விட்டு , ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு வரி கமெண்டும் இணைய இதழில் போட்டுள்ளேன். குவிகம் நண்பர்கள் சிலர் அவற்றைப் படித்திருக்கலாம். அதையே விரிவுபடுத்தி , நான் குவிகம் இதழை முழுவதும் ரசித்த விதத்தை இந்த முப்பது முதல் நாற்பது நிமிடங்களில் பகிர்ந்து கொள்கிறேன் .
அட்டைப் படத்திலேயே அசத்தி விட்டார் சுந்தரராஜன் . உள்ளுக்குள் நீல நிறம் பற்றி கவிதைக்குள் கதை எழுதி உள்ளவர் ஆயிற்றே. இந்த நீல நிறக் கண்ணழகியைத் தனது புகைப்படக் கண்களால் பார்த்துப் போட்டு விட்டார் அட்டையில் .
கும்ப மேளாவில் ருத்ராக்ஷ மாலை விற்று, தன் புன்னகையால், ஒரே நாளில் சோஷியல் மீடியாவால் உலகப் புகழ் பெற்று விட்ட புன்னகை அரசி மோனலிசாவை குவிகம் இதழின் அட்டையில் போட்டு சிறப்பித்ததும் , குவிகம் எப்போதும் எங்கும் அப்டேட்டட் என்பதை நிரூபிக்கிறது .
அழகை ஆராதனை செய்து விட்டு அடுத்த நிமிடம் இறை அருளும் கிடைக்கச் செய்து விட்டார்.
முதல் கட்டுரையில் இருக்கின்ற காணொளி மூலம், நம்மையும் கும்ப மேளாவிற்குக் கூட்டிச் சென்று அந்தத் திரிவேணி சங்கம வீடியோ மூலம் இங்கிருக்கும் நமக்கும் இறை அருள் கிடைக்க வைத்து விட்டார். நன்றி ஐயா.
அடுத்த கட்டுரை குவிகம் குறும் புதினப் போட்டி (25-26 ஆம் ஆண்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் பற்றிய விபரம் . வந்திருந்த 135 கதைகளைக் குவிகம் குழுவினர் படித்து, அதில் 24 கதைகளைத் தேர்ந்தெடுத்த விபரம். இது எளிதான செயல் அல்ல. இமாலயச் செயல். எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் , பிரமிக்க வைக்கும் சாதனை. முதல் அட்டைப்படத்துக்கு நன்றி என்றால் அடுத்த கட்டுரைக்கு வாழ்த்துகள்.
மூன்றாவது குவிகம் குறுக்கெழுத்து – பிப்ரவரி 25 – சாய் கோவிந்தன் அளிப்பது. பார்த்தவுடன் முதலில் அதைப் போட்டு முடித்து அனுப்பி விட்டேன். அதிர்ஷ்டப் பரிசு, அடையாள பரிசு நூறு ரூபாய் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் விடைகள் அத்தனையும் சரி என்ற பேர் வரும் அடுத்த மாத இதழில் .
குறுக்கெழுத்து போட்டு முடித்தவுடன் வரும் குதூகலம் தனிதான். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நமக்கு மூளைக்கு வேலை கொடுத்து வரும் சாய் கோவிந்தன் அவர்களின் மூளைக்கு நன்றி. இத்துடன் மெய்ப்புப் போட்டி ஒன்றும் போனஸாக உள்ளது. இன்னொரு நூறு ரூபாய் அடையாள பரிசு, போட்டு மகிழுங்கள்.
நான்காவது ‘குழலினிது – ஆர் வி’
பாண்டவர்களின் பரம்பரையில் தொடரும் கதைகள் எங்களைப் போன்றவர்க்குப் புதியவை. புராணங்களில் இருக்கும் எத்தனையோ கதைகள் எல்லோர்க்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்தத் தொடர் அளித்து வரும் ஆர் வி அவர்கள் பாராட்டுக்கு உரியவர் . நன்றி.
ஐந்தாவது , நமது எஸ் எஸ் வேறு யார் நமது எஸ் சுந்தரராஜன் அவர்கள்தான். அவர்களின்
நீலம் – கதைக்கவிதை- எஸ் எஸ்
வானுக்கும் கடலுக்கும் மட்டும் அல்ல, இந்தக் கவிதையின் கதைக்குள்ளும் எத்தனையோ நீல நிறங்கள். அவர் மட்டும் அல்ல, நம்மையும் குவிகம் நிகழ்வு ஒன்றில் ‘கவிதைக்குள் கதைகள்’ சொல்ல வைத்த எஸ் எஸ் அவர்களை எஸ் எஸ் எஸ் எஸ் என்று சொல்லி இன்னும் இது போன்ற பல புதுமைகளைச் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது .
ஆறாவது குவிகம் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு – ஜனவரி 25 – நேசராஜ் செல்வம் கிருஷ்ணகிரி
சிவசங்கரி அவர்கள் காட்டும் ‘சிறுகதையின் ‘ விளக்கம், நம் எழுத்துக்கு ஒளி கூட்டும் விளக்கு அல்லவா. அந்த விளக்கின் ஒளியோடு நேச ராஜ் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள சிறுகதைகளின் சுருக்கம், அந்தப் பத்திரிகைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தூண்டுகின்றன. அதுதானே குவிகம், சிவசங்கரி அவர்களின் நோக்கமும் கூட.
ஏழாவது தகவல் சங்கிலி – 5- ஐ சா
ஒரே வரியில் சொல்வது என்றால், இது கல்கண்டுச் சங்கிலி. தமிழ்வாணனின் கல்கண்டு போல், இது குவிகத்தின் கல்கண்டு.
குவிகம் மின் இதழ் ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் சுந்தரராஜன் அவர்கள் இது குமுதம், விகடன், குங்குமம் கலந்த கல்கண்டு ஆகக் கொண்டு வர நினைத்த விருப்பத்தை ஒரு நிகழ்வில் வெளியிட்ட ஞாபகமும் வருகிறது .
எட்டாவது படிக்க ஒரு சவால் !.
பல போட்டிகள் வைத்து நம் ஆர்வத்தை தூண்டி விடும் குவிகத்தின் மற்றும் ஒரு போட்டி இது. படிக்கும் பழக்கத்தை நமக்குள் கொண்டு வர ஏற்படுத்திய சவால்.
இந்த சவாலைச் சமாளித்துப் பரிசு பெற்ற சாந்தி மேடத்திற்கு வாழ்த்துகள்.
ஒன்பதாவது இன்றைய சிறுகதைகள் பற்றி எஸ் ரா.
ஏராளம் படித்தவர், தேசாந்திரி . அவர் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் இன்றைய சிறுகதைகள் என்றால் நாம் விட்டு விடுவோமா. அதுவும் ஒவ்வொரு படைப்பையும் அந்த ஆசிரியர்களையும் பற்றி அவர் எழுதி இருக்கும் விமர்சனங்கள் அவருக்கே உரித்தான தனிப் பாணியில் நம்மை அவற்றைப் படிக்கத் தூண்டுகின்றன. நம்மைச் சிறுகதைகளைப் படிக்கவும் படைக்கவும் தூண்டும் ஆய்வு
-பத்தாவது மெய்ப்பு – 11 வது வகுப்புப் பாடம்
இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை இல்லாமல் எழுதி மெய்ப்புப் பணியாளர்களின் வேலையைக் குறைப்பது நாம் தமிழுக்குச் செய்யும் மரியாதை . இந்த வரியில் ஒற்றுப் பிழை இல்லை என்றே நினைக்கிறேன். ஒற்றுகள் ‘ப் , க் , ச் ‘ சரியாகப் போட்டு விட்டேன் என்றே நினைக்கிறேன் . இது போன்று குவிகத்திற்குப் படைப்புகள் அனுப்புவோரும் இந்தப் பிழைகளைத் திருத்தி அனுப்பினால் , இந்த இதழில் உள்ள சில பிழைகள் இல்லாமல் இருந்திருக்கும். சுந்தரராஜன் ஒற்றை ஆளாக எத்தனை தான் பார்ப்பார். நாமும் தோள் கொடுத்துத் துணை நிற்போம்.
நன்றி சார்.
அடுத்து பதினொன்றாவது, கதை
பாசவலை – ரேவதி ராமச்சந்திரன்
கலங்க வைத்த கதை. பலவற்றை விளங்க வைத்த கதையும் கூட.
பாசம் என்பது ரத்த பந்தத்தில் மட்டுமல்ல, பாச வலையை வீசத் தெரிந்தால் எந்தவிதமான மீன்களும் அந்த வலையில் சிக்கிவிடும் என்ற முடிவு ,’யாரும் யாரையும் நம்பி இல்லை, உலகம் பெரிது’ என்ற நம்பிக்கையை முதியோருக்கு அளிக்கும் நம்பிக்கைக் கதை.
நன்றி மேடம்.
அடுத்து பன்னிரெண்டாவது
சரித்திரம் பேசுகிறது! ஐந்தாம் பாகம் – 2 – யாரோ ராமமூர்த்தி அவர்களால்.
அண்ணன் கல்கி கதையைச் சுருக்கித் தருகிறார் என்றால் தம்பி சாண்டில்யன் கதையைச் சுருக்கித் தருகிறார். சரித்திர சகோதரர்கள். தொடரட்டும் இவர்களின் தமிழ் இலக்கியப் பணி. இதன் இறுதியில் அண்ணனின் பொன்னியின் செல்வன் கதை மேல் உள்ள ஆர்வத்தால், தம்பி யாரோ ராமமூர்த்தி , சுந்தர பாண்டியனை, சுந்தர சோழன் என்று இறுதி வரியில் மாற்றி விட்டார். இப்போது சரி செய்திருப்பார் என்று நினைக்கிறேன் .
பதின்மூன்றாவது இலக்கிய வாத்தி – பாரதன் அவர்களின் தொடர்
OTT தொடர் போல் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் போகிறது ‘இலக்கிய வாத்தி’ தொடர். நகைச்சுவையும். திகிலும் கலந்து எழுதும் கலை இவருக்குக் கை வந்திருக்கிறது .
பதினான்கு, லேடீஸ் ஸ்பெஷல் – கிரிஜா ராகவன் அவர்களால் .
அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் கிரிஜா ராகவன் அவர்கள், கொஞ்சம் தேநீர் ! கொஞ்சம் சிந்தனை !
அமெரிக்க வாழ்க்கையின் நுணுக்கங்களை அப்படியே உணர்ந்து விளக்கி உள்ளார். நல்ல மாமியார் என்றும் நமக்குத் தெரிய வருகிறது .
பதினைந்தாவது பாய்கிறது ,குடும்ப வாழ்க்கையில் இருந்து அரசியல் வாழ்க்கைக்கு.
புத்தாண்டே வருக! புதுப் பொலிவு தருக! – கதை அரசி ரேவதி பாலு அவர்களால்.
அரசியல்வாதிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தும் கதை. பிட்டுப் பிட்டு வைக்கிறார் அவர்களின் புரட்டுகளை. உண்மைகளை உரக்கச் சொல்லும் கதை. தேர்ந்த மூத்த எழுத்தாளர் அல்லவா, கதை விறு விறு என்று செல்கிறது முடிவு வரை.
பதினாறாவது வழக்கு. இல்லை , இல்லை பதினாறாவது படைப்பு
இரு வழக்குகள் – எஸ் எஸ். … எஸ் எஸ் , நமது சுந்தரராஜன் அவர்கள்தான். கவிதைக்குள் கதை கொண்டு வந்தவர், இப்போது நம்மை அயல் நாட்டு உண்மைச் சம்பவங்களுக்குள் இழுத்துச் செல்கிறார்.
பராசக்தி வசனம் போல் இப்படிச் சொல்லத் தோன்றுகிறது .
‘இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது’ . அவற்றில் இவையும் இரண்டு. இரண்டும் இரண்டு விதம். படித்து ரசியுங்கள். வியக்க வைக்கும் வித்தியாசமான உண்மைச் சம்பவங்கள் . ஆங்கிலத்தில் இருப்பவற்றை எல்லாம், அமெரிக்காவில் இருந்து கொண்டு தேடிப் பிடித்து நமக்குத் தெரிய வைக்கும் சுந்தரராஜன் அவர்களுக்கு நன்றி
பதினேழாவது இலக்கியத் தகவல்கள்
நடந்தவை , நடக்க இருப்பவை என்று இரண்டு கால இலக்கிய நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி இருக்கும் விதம், இதம். புகைப்படங்களும் காணொளியும் கலந்து தந்திருக்கும் விதமும் இதம். ‘கவிதைக்குள் கதை ‘நிகழ்வைப் பற்றிய என்னுடைய கருத்துரை ஒன்றையும் இதில் இணைத்திருப்பதற்கு மிக்க நன்றி.
பதினெட்டாவது படைப்பு டாக்டர் பாஸ்கரன் அவர்களுடையது
நாளைக்கேனும் 500 கிடைக்குமா? – ஜெ.பாஸ்கரன்.
வயதானவர் வாழ்வின் நிகழ்வு ஒன்று நம் கண் முன் விரிந்து நம் கண்களைக் கலங்க வைக்கிறது .
மருத்துவர் பாஸ்கரன் அவர்கள் உணர்ந்த நோயாளி ஒருவர் இங்கே மருந்து வாங்க மன்றாடுகிறார். அவரின் எழுத்துத் திறமை நம்மை அந்த முதியவரிடம் கொண்டு சேர்க்கிறது . நிஜங்கள் நெகிழ வைக்கின்றன. விதி வலியது . அவரவர்க்கு விதித்தது விதிப்படி என்ற தத்துவ விசாரமும் நமக்குள் வந்து சேர்கிறது .
இப்பொழுது பத்தொன்பதாவது படைப்பு , நடுப்பக்கத்திற்குள் செல்லலாம்.
நடுப்பக்கம் – சந்திரமோகன்.
இந்தத் திகில் கதைக்குள் சந்திரமோகன் அவர்களோடு சேர்ந்து நமது சுந்தரராஜன் அவர்களும் வருகிறார். இருவரும் மிகவும் தைரியசாலிகள் என்று தெரிகிறது .
ஆனால் நமக்கோ , இனி எந்த வீட்டின் படத்தையும் இதில் இருப்பது போல் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தால் ,இனி பேய் வீடு போல் தான் தோன்றும். படித்துப் பாருங்கள். அதுவும் அந்தக் கண்ணாடிச் சில்லுகள் தெறிக்கும் இடத்தைக் கவனமாகக் கடந்து போக வேண்டும் . காலில் குத்திவிடலாம். பாம்புகள் வேறு பாதையில். இதய பலவீனம் ஆனவர்கள் , இதைப் படிப்பதைத் தவிர்க்கலாம்.
இருபது. இது நம்ம ஏரியா.அழகியசிங்கரின் ‘ சொல் புதிது ‘ குழு நண்பர் அதிரன் கவிதை – ‘எனக்குந்தான்’
‘எனக்கும்தான் பிறந்தநாள் ‘ என்று அந்த மனைவி சொல்கின்ற வார்த்தை , பாலச்சந்தரின் பழைய படம் ஒன்றில் ‘ அச்சா ‘ என்று ஜெயந்தி , ஜெமினியிடம் சொல்லும் ஒரு வார்த்தை போல் அந்தக் கணவனுக்கு குத்தி இருப்பதால் தான் அவன் கண் கலங்குகிறான் கடைசியில் கவிதையில் என்று தோன்றுகிறது . ஆனால், அதுவும் சில நிமிடங்கள் தானோ என்றும் தோன்றுகிறது எனக்கு .
‘இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சை தான்’ . அவன் அக்கரைப் பச்சையைத் தேடி அலையாமல் இருக்க மாட்டான் என்றும் தோன்றுகிறது. கவிதையைப் படித்துப் பாருங்கள் .
இருபத்து ஒன்று சங்கீதத் துக்கடா – பகுதி 3 – முனைவர் தென்காசி கணேசன் . எனக்கு ரெம்ப ரெம்பப் பிடித்த, மிகவும் ரசித்துப் படித்த கட்டுரை இது .
பஹாடி ராகத் திரைப் படப் பாடல்களைப் பாடிப் பழக வைத்து விட்டார் நண்பர்.
இந்த இசைக் கட்டுரையைப் பாராட்டி ஏற்கனவே இரண்டு மூன்று பாராக்களில் முன்பே குவிகம் இலக்கியத் தகவலில், அழகியசிங்கரின் , இசை புதிது குழுவில் போட்டு விட்டேன். அதன் சாரம் சங்கீதம் தான். அதிலும் குறிப்பாக பஹாடி ராகம் தான். அதில் வரும் சினிமாப் பாடல்கள்தான்.
இதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் பாடல்களைப் படித்தால், நீங்கள் அவற்றைப் பாடித் திரிந்த பழைய காலம் ஞாபகம் வரலாம். உதாரணத்திற்கு இது .
‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது .உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது ‘
மற்றும்
‘ மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம். ‘
இவை எல்லாம் நாங்கள் அழகியசிங்கரின் ‘இசை புதிது ‘ குழுவில் பாடிப் பழகிய பாடல்கள்.
இருபத்து இரண்டு
நரி விருத்தம் -2 – ஆசான் பாச்சுடர் வளவ. துரையன் அவர்களால்
சுற்றின்ஆர் வில்லின் வீழ்ந்த சூழ்ச்சியின் நரியைப் போலப்
பற்றினார் பெரிதும் வவ்விப் பகுத்துணாது ஈட்டினார்கள்
மற்றுணா வெறுக்கை தன்னை மன்னரும் பிறரும் வவ்வத்
தெற்றென வெளிறு நீரார் செல்வழ மிழப்ப ரன்றே.
நன்கு கட்டப்பட்டவில் நிமிர்ந்ததாலே வீழ்ந்து மாண்ட அறிவில்லாத நரியைப்போல உலகப் பொருளில் மிக்க ஆசையுடையவராய், பிறரிடம் இருந்து பொருள்களை மோசத்தால் கைப்பற்றித் தம்மிடம் இருப்பவற்றைத் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தாமும் உண்ணாமல், பலவழியிலும் பொருளைச் சம்பாதித்தவர்கள், தங்களிடமுள்ள உணவாகும் தானியங்களையும், செல்வத்தையும், அரசர்களும், திருடர் முதலிய மற்றவர்களும், அபகரிக்க அறிவற்ற தன்மையராய், செல்வமும் இழப்பர்.
நரிவிருத்தப் பாவில் விரியும் இந்தக் காட்சி
‘நன்றியில் செல்வம்’ அதிகாரத்தில் வரும் இந்தக் குறட் பாவை ஞாபகப்படுத்தி யது
‘வைத்தான் வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் ‘
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்து போனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை ‘
இப்படி நம் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது ஆசான் வளவதுரையன் அவர்களின் இந்தத் தொடர். அழகியசிங்கரின் ‘ கலை புதிது ‘ குழுவில் அவர் தினசரி வழங்கி வரும் தமிழ் இலக்கிய வினாக்கள் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவது போல.
இருபத்து மூன்று
பார்த்தது, கேட்டது, படித்தது, ரசித்தது – நினைவில் நின்றது- சுவாமிநாதன் அவர்கள்.
தன்னைக் கொலை செய்ததற்காகத் தானே கைது செய்யப்படும் வித்தியாசமான கதை தான் சாந்தாராம் அவர்களால் . ஒரு வாத்தியாரின் கதை. நமது வாத்தியாருக்கே வாத்தியார் ஆயிற்றே அவர் . தமிழ்ச் சினிமா வாத்தியார் எம் ஜி ஆர் அவர்கள் தனது குரு சாந்தாராம் ஜி என்று சொல்லி வணங்கியதைப் படித்திருக்கிறோமே பத்திரிகைகளில். அவரின் இயக்கத்தில் உருவான படம் பற்றிய அருமையான விமர்சனம்
இருபத்து நான்கு
பிரமிக்க வைத்த புத்தகங்கள்-14 – மீனாக்ஷி பாலகணேஷ் அவர்கள். இவரே ஒரு பிரமிக்க வைக்கும் படைப்பாளிதான். இயல் ,இசை என்று இவர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் நாம் அனைவரும் அறிந்தது .
இந்த மாதம் இவரைப் பிரமிக்க வைத்த புத்தகம். சுழிக்காற்று- (மர்ம)நாவல்- கௌசிகன் என்கிற வாண்டுமாமா எழுதியது .
கதையின் முடிவு தெரியவில்லையே என்று நாம் நினைக்கும்போதே . நம் மனம் அறிந்த சுந்தரராஜன் அவர்கள் கேட்டுக்கொண்டு , கடைசியில் மீனாக்ஷி மேடம் அவர்கள் முடிவையும் சொல்லி விடுவதும் ஒரு எதிர்பாராத திருப்பம் தான். நமக்குத் திருப்தி தான்.
இருபத்து ஐந்து இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? – ஜி பி சதுர்புஜன். இப்போதெல்லாம் இவரை கிரிஜா சதுர்புஜனின் கணவர் என்று சொன்னால் தான், குழு நண்பர்கள் பலருக்குத் தெரியும் . அந்த அளவு கிரிஜா மேடம் அழகியசிங்கரின் கலை புதிது குழுவில் ஓவியங்கள் வரைந்தும் , புகைப்படங்கள் பகிர்ந்தும் குழு நண்பர்களின் மனம் கவர்ந்து வருகிறார். அந்த woman என்ற வார்த்தைக்குள் இருந்து உற்சாகப்படுத்தும் ‘man ‘ என்ற வார்த்தையான நமது நண்பர் சதுர் புஜன் அவர்கள் . BITS pilani அறிஞர், திரைப்படக் கலைஞர், குவிகம் ஒலிச்சித்திரம், இப்போது சொலவடை என்று பல்கலை வித்தகர் . லா ச ரா அவர்களின் புதல்வர் சப்தரிஷி அவர்கள் தொகுத்த லா ச ரா அவர்களின் சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய கட்டுரை .
‘நெருப்பு என்று எழுதினாலே படிப்பவர்க்குச் சுட வேண்டும் ‘என்று சொன்னவரல்லவா லா ச ரா . அவரின் வாக்கியங்கள் சில இங்கே . உதாரணத்திற்கு ஒன்று.
‘தூரத்தில் இருந்து பார்த்தால் கோபுரமே வானத்துல சாய்வா போடப்பட்ட கையெழுத்து மாதிரிதானே இருக்கு” .கவிதை , கவிதை . படித்து ரசியுங்கள்.
அடுத்து இருபத்து ஆறாவது என் குமுத நாட்கள் அத்தியாயம் 4- -வேதா கோபாலன்-
பத்திரிகை வேலை பத்திரமான வேலை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் இதில் இருக்கிறது , இன்னும் தொடரும் பல உதாரணங்கள் இதில் என்று தோன்றுகிறது .
நன்றி சார். அடுத்து இருபத்து ஏழாவது
இடம் பொருள் இலக்கியம் – என். சி. சி. அலப்பறைகள் 6 – ஆசான் முனைவர் வ வே சு அவர்கள் .
நம்மில் மூத்தவர்கள் அவர்களின் இளம் பருவம் பற்றிப் பேசும்போது , எழுதும்போது, கேட்கும், படிக்கும் நமக்கும் அவர்களின் அந்தக் கால வாழ்வு அளிக்கும் படிப்பினைகள் எவ்வளவோ .
தம் பேச்சுகள் மூலம் நம் அறிவு நலத்திற்கு உதவி செய்து வரும் ஆசான் அவர்கள் , நம் உடல் நலத்தை நாம் பேண வேண்டியதின் அவசியத்தை தனது இளம் பருவ வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டுகிறார் இந்தப் பகுதியில் நகைச்சுவை கலந்து . கோத்தகிரி சாரணர் முகாமுக்கே நாம் சென்று ட்ரில் செய்த உணர்வு. நன்றி ஐயா .
இருபத்து எட்டாவது
“என்னுடைய உரிமை! உங்களது கடமை!” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
உரிமையையும் கடமையையும் பற்றிய உதா’ரணங்’களோடு , உண்மை
ரணங்களோடு சிறப்பான மனநலக் கட்டுரை
‘உதவுவோம்! தேவைக்கு ஏற்றவாறே! ‘என்று முடித்திருக்கும் விதம் அற்புதம் .
இருபத்து ஒன்பதாவது எண்ணத்தில் அள்ளிக் கொஞ்சம் – 5 – இந்திரநீலன் சுரேஷ்
லண்டன் வாழ் நண்பர் . அவரின் அயல்நாட்டு அனுபவங்களை அவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் நாம் படித்து அனுபவித்து இருக்கிறோம் .
இதுவும் அதே போல் .
விசா இல்லாமலே லண்டன் சென்று டியூப் ரெயிலில் பயணம் செய்து ஈழ பதீஸ்வரர் தரிசனம் செய்து வந்த திருப்தி . புகைப்படங்களோடு அருமையான தரிசனம்.
முப்பதாவது நாயன்மார் வெண்பா -14 – தில்லை வேந்தன்
தில்லை வேந்தன், வெண்பா வேந்தன் என்பதை நிரூபிக்கும் நாயன்மார் வெண்பாக்கள் தொடர்கின்றன
கழற்சிங்க நாயனார்,இடங்கழி நாயனார், செருத்துணை நாயனார் ஆகியோரின் வரலாற்றைச் சொல்லிவிட்டு அதை வெண்பாவில் ஐயா அவர்கள் சுருக்கிச் சொல்ல, நமக்கு வெண்பாவின் பெருமையும் விளங்குகிறது. அய்யாவின் புலமையும் புலப்படுகிறது. நன்றி
முப்பதும் முப்பது முத்துக்கள். இயல், இசை, நாடகம் மூன்றும் குவிந்த முத்தமிழ் இதழ் குவிகம் பிப்ரவரி இதழ். எல்லா மாதங்களும் இப்படித்தான். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, இந்த ஒரு மாதம் மட்டும் இப்போது படித்துப் பகிர்ந்து கொண்டேன்.

நண்பர் நா.பா. வின் விவரணைத் திறன் நம்மை வியக்க வைக்கிறது. சில இடங்களில் ‘ரன்னிங் கமெண்டரி’ போல வேகம் எடுத்து, சில இடங்களில் சுருங்கக் கூறி விளங்க வைத்து, நகைச்சுவையுடன் எழுத்தில் ஒரு நடனமே ஆடி விடுகிறார்!
LikeLike
முப்பது முத்துக்கள் என்று சொல்லும் இவர் ஒரு முத்து மாலையை புனைந்து இருக்கிறார்!
LikeLike