. (ஓர் அடியார் – ஒரு வெண்பா)
57) மங்கையர்க்கரசி அம்மையார்
மங்கையர் குலத்துக்கு ஒப்பில்லாத அரசியும், தெய்வத்தன்மை பொருந்தியவருமான சோழனின் மகளான மங்கையர்க்கரசி அம்மையார், செந்தாமரை மலரின் திருமடந்தை போன்றவர். பாண்டியன் நின்றசீர் நெடுமாறனை மணந்து கொண்ட அவர், பாண்டிய குலத்துக்கு ஏற்பட்ட புறச் சமயப் பழியைப் போக்கியவர். சண்பையர் கோனாகிய ஞானசம்பந்தப் பெருமானின் அருளால் தமிழ் நாட்டில் வேற்றுச் சமயமான சமணத்தால் விளைந்த இடரினை நீக்கி, ஒளி பொங்கும் திருநீற்றின் மேன்மையை எங்கும் பரவச் செய்தார்.
புகலிவேந்தர் என்று போற்றப்பட்ட ஞானசம்பந்தரின் புனிதம் மிக்க பாடலால் பாராட்டப் பெற்றவர். பாண்டியப் பெருமன்னரான நின்றசீர் நெடுமாறன் சைவ நெறியில் செல்வதற்கு வழித்துணையாக நீண்ட நெடுங்காலம் விளங்கினார். பின்னர் அவரோடு இணைந்து சிவபெருமானின் திருவடி நிழலில் நிலைபெற்று இருக்கும் பேறு பெற்றார்.
சேக்கிழார், தம் பெரிய புராணத்தில்,
“ வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்குந் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னர் நாடு
சீர்விளக்குஞ் செய்யசீ றடிகள் போற்றி”
என்று மங்கையர்க்கரசி அம்மையாரைப் போற்றுகின்றார்.
மங்கையர்க்கரசியார் வெண்பா
சோழர் குலக்கொழுந்து ,தொன்மதுரைத் தென்னவரைச்
சூழு பழிதுடைத்த தூயமங்கை, – காழிவள்ளல்
பாடிய பெற்றியள், பாண்டியன் சைவநெறி
நாடி வரச்செய்தாள் நன்று
(காழிவள்ளல் – ஞானசம்பந்தர்)
58) நேச நாயனார்

நிலவு தோய்ந்திருக்கும்,,மேகங்கள் தவழ்ந்திருக்கும் உச்சியையுடைய மாடங்கள் நிறைந்த தொன்மையான நகரம் காம்பீலி என்பதாகும். அவ்வூரில் சிறந்த செயல்களும், குறையாத ஒழுக்கமும் , அன்பும், வாய்மையும் மிக்க மக்கள் நிலைபெற்று வாழ்ந்து வந்தனர்.அந்நகரில் துணி நெய்யும் அறுவையர் குலத்தில் தோன்றியவர் நேச நாயனார்.
அவர், சிவபெருமானின் அடியவர்களைப் பணிந்து தொண்டு செய்து வந்தார்.
தம் மனத்தில் சிவபெருமானின் திருவடித் தாமரையை மலரச் செய்தார்; தம் வாக்கினில் அவன் அஞ்செழுத்தை எப்பொழுதும் நிலவச் செய்தார்; தாம் செய்து வந்த கைத்தொழிலை இறைவனின் அடியவர்க்கு ஆக்கி, அவர்களுக்குத் தேவையான சிறப்புடைய உடையும், இடுப்பில் கட்டும் துணியாலாகிய கீள் என்ற அரைஞாணும், பழுதில்லாக் கோவணமும் நெய்து தந்தார்.
இவ்வாறு சிவபெருமானின் அடியவர் வேண்டியவற்றை இடையறாது அளித்து அவர்தம் திருவடிகளை வணங்கிப் போற்றித் தொண்டு செய்து வந்த நேச நாயனார், அதனால் நன்மையடைந்து இறைவனின் திருவடி நிழலை அடையும் பேறு பெற்றார்.
“கற்றை வேணி முடியார்தங் கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கி’
என்று சேக்கிழார் நேச நாயனாரை வணங்கிப் போற்றுகிறார்.
நேச நாயனார் வெண்பா
உடையொடு கீளும் உறுகோ வணமும்
அடியவர்க் கென்றும் அளித்து,- நெடுமாடக்
காம்பீலி வாழ்நேசர் கண்ணுதலை ஏத்திமிகத்
தாம்பெற்றார் ஈசனவன் தாள்
(கீள்- இடுப்பில் கட்டும் துணியாலாகிய அரைஞாண்)
59) கோச்செங்கட் சோழ நாயனார்

அலைகளில் முத்தும், அகிலும்,சந்தனமும் கொண்டு வரும் அழகு மிகுந்த நீரையுடைய காவிரியாறு பாயும் சோழ நாட்டில் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தில் குளிர்ந்த கானகம் ஒன்று உள்ளது.
அங்கு ஒரு வெண்நாவல் மரத்தின் கீழ் வெளிப்பட்டு அமைந்திருந்த சிவலிங்கத்திற்கு ஒரு வெள்ளானை நீர் கொணர்ந்து திருமஞ்சனமாட்டி, மலர் கொய்து அணிவித்து வணங்கி வழிபட்டு வந்தது. அதனால் அத்தலம் திருவானைக்கா என்று வழங்கப் பட்டது.
அங்கு, ஞானமுடைய சிலந்தி ஒன்று இறைவனின் செம்பொன் திருமுடிமேல் கதிரவனின் வெப்பமும், மரங்களில் இருந்து உதிரும் சருகுகளும் படாதபடி வலையொன்றைத் தன் வாய் நூலால் மேற்கூரையைப் போல் கட்டியது.
இறைவனை வணங்க வந்த யானை, அந்தச் சிலந்தி வலையைத் தூய்மையற்றது என்றும் அனுசிதம்(இருத்தல் தகாது) என்றும் கருதிச் சிதைத்து அழித்தது. யானையின் துதிக்கை பட்டு வலை சிதைந்தது என்று எண்ணிய சிலந்தி மீண்டும் ஒரு வலையைப் பின்னியது.
மறுநாள் அங்கு வந்த யானை அதனையும் அழித்தது.
பெருமான் மீது சருகுகள் விழாமல் தடுப்பதற்காகத் தான் பாடுபட்டுக் கட்டிய வலையை இந்த யானை அழிக்கிறதே என்று சினம் கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி பொறுக்காத யானை துதிக்கையை நிலத்தின் மேல் மோதி அடித்துக் கீழே விழுந்து இறந்தது. துதிக்கை நிலத்தில் மோதியதால் சிலந்தியும் இறந்தது.
இப்படி, யானை,,சிலந்தி இரண்டும் இறந்தன. மறையின் பொருளாக விளங்கும் இறைவன் தன் அருள் முறையின் படி யானைக்கு ஏற்ற வரத்தை அளித்தான்; சிலந்தியைச் சோழர் குலத்தில் வந்து பிறக்கச் செய்தான்
சோழ குல மன்னன் சுபதேவன் மனைவி கமலவதியின் வயிற்றில் அச்சிலந்தி இறையருளால் மகவாய் வந்தது. அவளுக்குக் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியதும்,” ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்குமானால், இக்குழந்தை மூவுலகங்களையும் ஆளும்” என்று சோதிடர்கள் கூறினர்.
“ இப்போது பிறக்காமல் ஒரு நாழிகை கழித்துப் பிள்ளை பிறக்கும்படி என் கால்களை மேலே தூக்கிக் கட்டுங்கள் “ என்று அரசி கூற அப்படியே செய்தனர். பிறகு அந்தக் காலம் முடிந்த பின்னர்க் கட்டு அவிழ்க்க அரசியார் அரிய மணி போன்ற குழந்தையைப் பெற்றுக் கையில் ஏந்தி,” இவன் என் கோச்செங்கண்ணானோ!” என்று பாராட்டிக் கொஞ்சிப் பின் இறந்தாள்.
மகனை வளர்த்து உரிய பருவத்தில் அவனுக்கு அரசப் பட்டம் சூட்டிய சுபதேவன் குற்றமில்லாத தவத்தில் ஈடுபட்டுப் பின்னர்ச் சிவலோகம் அடைந்தான்.
மாலை அணிந்த வேலேந்திய கோச்செங்கட் சோழன், இறையருளால் தம் முற்பிறப்பைப் பற்றி அறிந்து கொண்டு,சிவாலயங்கள் பலவற்றை அன்புடன் எடுக்கும் தொண்டில் ஈடுபட்டார்.
திருவானைக்காவில் தாம் முற்பிறப்பில் அருள்பெற்ற வரலாற்றை அறிந்து, அத்தலத்தில் வெண்ணாவல் மரத்துடன் கூடிய கோவில் பணியைச் செய்தார்.
அமைச்சர்களை அனுப்பிச் சோழ நாட்டின் பல ஊர்களில் சிவபெருமானுக்குக் கோவில்கள் சமைத்தார்.அக்கோவில்களுக்கு வேண்டிய அனைத்தையும் முறையாகக் கிடைக்கும்படிச் செய்தார்.
செம்பொன் அம்பலத்தில் நடம் செய்யும் இறைவனின் திருவடியை வணங்கி அன்பினால் உள்ளம் உருகினார். வாய்மை வழியில் வாழும் மறையவர்க்கு மாளிகைகள் கட்டித் தந்தார்.
இவ்வாறு சிவத்தொண்டு புரிந்து செம்மை நெறியில் ஆண்டு வந்த கோச்செங்கட் சோழன் வானவரும் வணங்கும்படித் தில்லைவேந்தனின் திருவடி நிழலைச் சேர்ந்தார்.
“தென்னவனாய் உலகாண்ட செங்கணர்க்கு அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகையும்
“ கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல்சேர
வருநீர்மை யுடைய செங்கட் சோழர்தம் மலர்த்தாள் வாழ்த்தி”
என்று பெரிய புராணமும் கோச்செங்கட் சோழரைப் போற்றுகின்றன.
கோச்செங்கட் சோழ நாயனார். வெண்பா
சிவன்மேல் வலைசெய் சிலந்திநற் சோழன்
அவன்மகன்கோச் செங்கணான் ஆக – இவணுலகில்
கோவில் பலவெடுத்துக் குன்றாத ஈசனருள்
மேவ அணைந்தார் விழைந்து.
(இவண்- இங்கு/ இவ்விடம்)
( தொடரும்)
