ராஜாஜியின் பாடல் வாணியின் குரல்

Thikkatra Paarvathi (EMI) [1974-EPRip-WAV] - TamilFLAC.Comமூதறிஞர் ராஜாஜி எழுதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலும் இணைய புகழின் உச்சியைத் தொட்டு இன்றும் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் மூன்று ராகங்களை தன்னுள் கொண்ட அற்புதமான பாடல் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா… இது இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று வரம் கேட்காத சிறந்த ஆன்மிக பாடல். ராஜாஜி எழுதிய மற்றொரு பாடல் பெரும்பாலோர் அறியாதது.அவரது சிறுகதையில் வரும் சம்பவத்துக்காக எழுதியது. திக்கற்ற பார்வதி படத்தில் இடம் பெற்றுள்ள அந்தப் பாடலைப் பாடியவர் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலைப் பாடி திரையுலகில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்தவரும் பலமொழிகளிலும் பாடுவதிலும் வல்லவருமான வாணி ஜெயராம்.

 

என்ன குற்றம் செய்தேனோ எல்லாருங் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில்

கொன்றாரைத் தின்றேனோ தின்றாரைக் கொன்றேனோ

எண்ணாதெல்ல லாமெண்ணு மிச்சை மறந்தேனோ

சாதியிற் கூட்டுவரோ சமயத்தோ ரெண்ணுவரோ

பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சிக்கிடமாச்சுதடி

 

– இதுதான் அந்தப் பாடல் வரிகள்.

திக்கற்ற பார்வதி சிறுகதையில் கண்பார்வையற்ற சிறுவன் ரயிலில் பாடுவதாக இந்தப் பாடலை எழுதியுள்ளார் ராஜாஜி. திக்கற்ற பார்வதி திரைப்படத்திலும் இந்தக் காட்சி இடம் பெற்றுள்ளது.நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல கதாநாயகி ரயிலில் அழைத்துச் செல்லப்படும் போது வெளியில் சொல்ல முடியாது அவள் தவிக்கும் மரண வேதனையைப் பிரதிபலிப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. அதிகம் வெளிச்சத்துக்கு வராத அந்தப் பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.எத்தனை ஆழமான வரிகள். இனிய குரல்வளமும் சேர பாடல் நம்மை மீண்டும் மீண்டும் கேட்கச் செய்வதுடன் மெய்சிலிர்க்கவும் வைக்கிறது. இப்படத்திற்கு ஆகாயம் மழை பொழிந்தால் ஆத்துக்கு கொண்டாட்டம் என்ற பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்தப் பாடலை பாடியவரும் வாணி ஜெயராம்தான். இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீகாந்த், லட்சுமி நடிப்பில் வீணை சிட்டிபாபு இசையில் காரைக்குடி நாராயணன் வசனத்தில் சிங்கிதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் ராஜாஜியின் திக்கற்ற பார்வதி சிறுகதை திரைப்படமாக வெளிவந்தது. சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதும் இப்படத்துக்கு கிடைத்தது. குடி குடும்பத்தை சீரழிக்கும் என்பதை சித்தரிக்கும் கதையின் ஆன்மா கெடாது எடுக்கப்பட்ட காவியமாய் இப்படம் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளியில் 28 நாள்கள் படம் எடுக்கப்பட்டது. 1944-இல் வெளியான சிறுகதை திக்கற்ற பார்வதி. ராஜாஜியின் எழுத்தாற்றலை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள சுருக்கமாக கதையின் சில வரிகள்.

கறுப்பன் வயது 30. நல்ல திடகாத்திரன். பார்வதி ஏழைக் குடியானவப் பெண்ணானாலும் ராஜாத்தியொத்த முகக்களை.எறும்பும் தேனியும் சோம்பினாலும் அவள் வேலை செய்வதில் ஒயமாட்டாள். கறுப்பன் வாடகைக்கு வண்டி ஓட்டத்தொடங்கினான். அவனுடன் பெரியப்பன் மகன் ராமனும் செல்வான்.ஒரு வருஷம் ஆவதற்குள் இவன் கறுப்பனை கள் குடிக்கப் பழக்கி விட்டான். அப்புறம் வண்டி ஓட்டிக் கொண்டு போனால் கள்ளுக்கடை நுழையாமல் வருதில்லையென்று ஏற்பட்டது. கறுப்பன் போதையோடு வீட்டுக்கு வந்ததைக் கண்டு பார்வதி திடுக்கிட்டுப் போனாள்.ஐயோ குடியைக் கெடுத்து விட்டாயே என்று அலறினாள். பார்வதி பல நாள் உறுதியாய் இருந்தாள். கணவனுக்கு கடன் கொடுத்தவன் மகன் பலமுறை வீட்டுக்கு வந்தபோதும் அவன் வலையில் விழாமல் இருந்தாள். கடைசியில் ஏமாந்து போனாள்.கஞ்சிக்கு கஷ்டபட்டுக் கொண்டு ஆதரவற்றிருப்பவளை வெற்றிபெறுவதற்கு கேட்பானேன். பார்வதி கற்பை இழந்தாள்.
அம்மா தாயே காளி. என் பாவங்களையெல்லாம் மன்னித்துக் கொள். என்னை உன்னோடு சேர்த்துக் கொள். என்று கதறிவிட்டு ஒரே குதியாய் மலையிலிருந்து குதித்தாள். திக்கற்ற பார்வதியின் உயிர் துயரக் கூட்டினின்றும் தப்பிப் பறந்து சென்றது.

‘திரைக்கதை அமைக்க உட்கார்ந்தவுடன் ஆச்சரியப்படத் தக்க வகையில் ராஜாஜியே சம்பவங்களைக் கதையில் தந்திருக்கிறார் என்பது புரிந்தது. ராஜாஜியின் எழுத்து வன்மை என்னை வியப்படைய வைத்தது’ என்று பட இயக்குநர் சிங்கிதம் பதிவு செய்துள்ளார்.

சிறந்த படத்தை தந்த தயாரிப்பாளர்களும் இயக்குநரும் தயாரிப்புக் கடனை அடைக்க முடியாது சிரமப்பட்டனர்.அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். தொகையைச் செலுத்தி தமிழக அரசுக்கு படத்தை வாங்கி வரலாறு படைத்தார்.வெளியான திரைப் படத்தை ஒரு மாநில அரசு விலைக்கு வாங்கியது இதுவே முதல் முறை.

இப்படம் வெளியாவதற்கு முன்பே 25.12. 1972-ல் ராஜாஜி மறைந்து விட்டார்.

ஜே.கே.வின் கடைசி நாவல் –

Hara Hara Sankara…. (Tamil Edition) See more Tamil EditionTamil Editionமுருகேசன் என்ற இயற்ப்பெயர் கொண்ட ஜெயகாந்தனின் (ஜே.கே.) முதல் நாவல் வாழ்க்கை அழைக்கிறது 1957-ல் வெளியானது.சிறுகதைகள்,குறுநாவல், நாவல், கட்டுரைகள்,திரைப்படங்கள் என படைப்பிலக்கியத்தில் சாதனை படைத்தவர்.ஞான பீடம், சாகித்ய அகாதெமி (சில நேரங்களில் சில மனிதர்கள்) உள்ளிட்ட உயரிய விருதுகள் அவரை அலங்கரித்தன. எழுதிக் குவிந்தவர் 20 ஆண்டுகள் எழுதாமலும் இருந்தார்.ஆனாலும் அவரை வாசிப்பவர்களும் தேடிப்போவோரும் குறையவில்லை. அது தான் ஜே.கே.வின் ஆளுமை. 1934 ஏப்ரல் 24-இல் பிறந்த அவர் 2015 ஏப்ரல் 8-இல் மறைந்தார்.

கடந்த ஏப்ரல் 24-இல் ஜெயகாந்தனின் 91-வது பிறந்த நாள் விழா மற்றும் ஜெயகாந்தனின் சிந்தனையைக் கவர்ந்த சிறுகதைகள் புத்தக வெளியீட்டு விழா சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது.கவிதா பப்ளிகேஷன் சேது.சொக்கலிங்கம் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

‘நீண்ட இடைவெளிக்குப் பின் ஹர ஹர சங்கர என்ற புதிய நாவலை ஜே.கே. எழுதினார். கவிதா பப்ளிகேஷன் 2005-இல் மிகுந்த பெருமையுடன் வெளியிட்ட அந்த நாவல் 15 ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது.இதுவே அவர் எழுதிய கடைசி நாவல்’ என்று தனது உரையில் சொக்கலிங்கம் குறிப்பிட்டார்.

‘ஹர ஹர சங்கர ஒரு கதை, கற்பனை, கனவு.ஆனால் பொய் அல்ல சத்தியம்.உங்கள் நடைமுறை வாழ்க்கையை விடவும்,நமது நிதர்சனங்களை விடவும் எனது கனவுகளும் கற்பனைகளும் கதைகளும் மேலான அர்த்தமும் ஆக்க சக்தியும் உடையவை’ என்று முன்னுரையில் ஜே.கே.குறிப்பிட்டுள்ளார். அவரது படைப்புகள் மட்டுமல்லை முன்னுரையும் காலம் கடந்தும் வாசிக்கப்படும் என்பது மிகையல்ல.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது 

வாழ்த்துக்கள் எஸ். ரா. சார்இந்திய இலக்கியத்தில் சிறந்த பங்களிப்புக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருது கிடைத்துள்ளது. கொல்கத்தாவில் ஷேக்ஸ்பியர் வீதியில் அமைந்துள்ள பரிஷத் அமைப்புக்குச் சொந்தமான அரங்கில் மே முதல் தேதி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விருதினை பிரசிடென்சி பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் அனுராதா லோகியா வழங்கினார். ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, நினைவுச் சின்னம், பாராட்டுப் பத்திரம் கொண்டது இந்த விருது. விழாவில் 3 நிமிடங்கள் தமிழில் ஏற்புரை வழங்கினார் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கியத்தில் நாவல்களின் முக்கியத்துவம், ரஷிய நாவல்கள் குறித்து அப்போது அவர் பேசினார். கடந்த 2018-இல் தனது ‘சஞ்சாரம்’ நாவலுக்காக அவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.