உலக இதிகாசங்கள் வரிசையில்
சுமேரியர்களின் கில்காமேஷ்
ஹோமரின் இலியட்
ஹோமரின் ஓடிஸி
ஆகிய மூன்று இதிகாசங்களின் கதைகளைக் குவிகத்தில் தொடராக வெளியிட்டு பின்னர் அவை மூன்றையும் தனித்தனிப் புத்தகமாக வெளியிட்டோம்.
குழந்தைகளும் பெரியவர்களும் படிக்கும் புத்தகங்களாக இருக்கின்றன என நண்பர்கள் கூறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. காஞ்சிபுரத்தில் ஒரு அரசினர் பள்ளியில் நூலகத்திற்காக இந்த மூன்று புத்தகங்களையும் 10 பிரதிகள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தோம்.
நூற்றுக்கும் மேற்பட்டஇதிகாசங்கள் உலக அளவில் இருக்கின்றன. அவற்றிலிருந்து 10 தலை சிறந்த இதிகாசங்களைச் சுருக்கமாக நமது குவிகத்தில் தொடராக வெளியிட்டு பின்னர் புத்தகங்களாக வெளியிடவேண்டும் என்பது என் அவா.
பத்துக்கு மூன்று பழுதில்லை என்று சொல்லும்படி மேலே குறிப்பிட்ட மூன்று புத்தகங்கள் குவிகம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துவிட்டன.
இன்னும் எழுதிய வேண்டியவை
வால்மீகியின் ராமாயணம்
வியாசரின் மகாபாரதம்
வர்ஜிலில் ஏனிட்
பிர்டௌஸியின் ஷா நாமா
ஓவிடின் மெடமார்பஸிஸ்
பியோ உல்ப்
அரிஸ்டோவின் அர்லான்டோ
இவற்றுள் ராமாயணம் மகாபாரதம் இரண்டும் நமது நாட்டில் அதிகம் எழுதப்பட்ட ,பேசப்பட்ட நூல்கள். இவற்றை எப்படி வித்தியாசமான எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்கு முன் இலியட் ஓடிஸி இரண்டிற்கும் மிகவும் சம்பந்தமுள்ள ஏனிட் (Aeneid ) கதையை எழுதலாமே என்று தோன்றியதான் விளைவே இந்தத் தொடர்.
வர்ஜில் என்பர் எழுதியது ஏனிட் என்ற மகா காவியம்.
டிராய் யுத்தத்தில் கிரேக்கருக்கு ஆதரவாகப் போரிட்ட அக்கிலிஸின் கதையைக் கூறுவது இலியட். போரில் கிரேக்கர் வெற்றி பெற உதவிய ஓடிஸியஸ் என்று கிரேக்கர்களாலும் யுலிஸஸ் என்று ரோமர்களாலும் அழைக்கப்படும் வீரனின் கதையைக் கூறும் இதிகாசம் ஹோமரின் ஓடிஸி.
டிராய் நாட்டுக்கு ஆதரவாகப் போரிட்ட தெய்வ குமாரன் ஏனியஸ் ஏனிட் என்பவனின் கதையைக் கூறும் காவியம்தான் ஏனிட்.
ராமாயானத்தில் அயனம் என்றால் பயணம் என்று பொருள். ராமரின் பயணமே ராமாயணம். ஓடிசியஸின் பயணம் ஓடிசி . அதைப்போல இங்கே ஏனியஸின் பயணம் ஏனிட் என்று அழைக்கப்படுகிறது.
முதலில் வர்ஜில் என்னும் மாபெரும் கவிஞரைப்பற்றி சில வரிகள்.
வர்ஜில் அகஸ்டஸ் சீஸரின் காலத்தவர். அகஸ்டஸ் ரோம சாமராஜ்யத்தின் மாபெரும் தலைவர். சக்கரவர்த்தி. ஜூலியஸ் சீஸரின் வளர்ப்பு மகன். ஆண்டனி கிளியோபாத்ரா ஆகியவர்கள் அகஸ்டஸ் சீஸர் காலம். ஜூலியஸ் சீஸர் பெயரில் அவர் பிறந்த மாதம் ஜூலை என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அகஸ்டஸ் பிறந்ததானால் அந்த மாதம் ஆகஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. வர்ஜில் கி மு 70 ஆம் வருடம் அக்டோபர் 15இல் பிறந்து கி மு 19 செப்டம்பர் 21 இல் மறைந்தவர். நமது திருவள்ளுவரும் இந்தக் காலத்தவர் என்று கருதப்படுகிறது.
“வர்ஜில் ஓர் எழுத்தாளரல்ல, ஒரு கலாசாரக் கனவை உருவாக்கிய கலைஞர். அவரது படைப்புகள் அரசியலையும் ஆன்மிகத்தையும் காதலையும், வீரத்தையும் ஒன்றாகக் குழைத்து எழுதப்பட்ட காவியங்கள். ” என்று என்று சொல்வர்.
இவரது கவிதை நடை மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோமரின் பாணியைப் பின்பற்றியது. அத்துடன் இவரது காவியத்தில் புராணச் சிறப்பும், வரலாற்று விளக்கங்களும், அரசியல் நுட்பங்களும் நிறைந்திருக்கின்றன. பிற்காலத்தில் வந்த ஷேக்ஸ்பியர் போன்ற பல பிரபல ஆங்கிலக் காப்பிய ஆசிரியர்கள் இவரது பாணியைப் பின்பற்றித் தங்கள் காவியங்களை அமைத்தனர் என்றால் இவரது பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ?
கி மு 20 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஏனிட் ஒரு முற்றுப் பெறாத காவியம். வர்ஜில் தான் இறக்கும் போது முடிவுறாத இந்தக் காவியத்தை அழித்துவிடும்படி வேண்டினார். ஆனால் அகஸ்டஸ் சீஸர் அதன் பெருமையை உணர்ந்து அழிக்காமல் அதனைத் தனது ரோம சாம்ராஜ்ஜியத்தின் தேசியக் காப்பியமாகப் போற்றினான். காரணம் ரோம சாம்ராஜ்யம் உருவாவதற்குக் காரணமானவன் ஏனியஸ் . அதன் புகழையும் சரித்திரத்தையும் நிலை நாட்டியவன் ஏனியஸ் . அன்றைய ரோம சாம்ராஜ்யத்தின் குறியீடாக அந்தக் காவியம் அமைந்திருந்தது. இலக்கிய நயத்தால் சிறந்தது. போர் பற்றிய சொல்லோவியங்களான வருணனைகளைக் கொண்டது. விரிந்த களப்பரப்பைக் கொண்டது. வீரத்தின் ஆற்றல் மற்றும் விதியின் வலிமையைக் கதைக் கருவாக முன்வைக்கிறது. ரோம் மக்களின் கடவுளர் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் பேசுகிறது
தனது நண்பரும் மிகச் சிறந்த அறிவாளியுமான புரூட்டசால் கொலை செய்யப்பட்டு ஜூலியஸ் சீசரின் மரணமடைகிறார். நாடு பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளானது. மார்க் ஆண்டனி, அகஸ்டஸ் மற்றும் லெபிடஸ் மூவரும் சேர்ந்து மூவராட்சியை அமைத்தார்கள். ஆனால் அவர்களுக்குள் போட்டி பொறாமை சண்டை இருந்ததால் நாடு உள்நாட்டுப் பூசல்களால் பிளவுபட்டது. வீதிச் சண்டைகளும் கலவரங்களும் அதிகரித்தன. இச்சூழ்நிலையில் அகஸ்டஸ் தனது எதிரிகளை அழித்து சர்வ வல்லமை பெற்ற அதிகாரியாக உருவானான். சக்கரவர்த்தி என்ற பெயரைச் சூட்டிக்கொள்ளாமல் ஜன நாயக சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்தான்.
அப்போதுதான் வர்ஜிலுக்குத் தனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. அகஸ்டஸின் ஆட்சிச் சிறப்பைப் போற்றும் காப்பியமாகவே வர்ஜில் ஏனியட்டைப் படைத்தார். ரோமானியர்கள் தங்கள் நாட்டின் வரலாற்றையும் வல்லமையையும் தொன்மக் கதைகளையும் பற்றிப் பெருமை கொள்ளும் விதத்தில் அமைந்தது இக்காப்பியம்.
கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் இடையே நடந்த ட்ரோஜன் போரின் (Trojan War) முடிவிலிருந்து தொடங்கும் கதையே ஏனியட். ட்ராய்(Troy) நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிதறுண்ட தனது மக்களை அழைத்துக் கொண்டு ட்ராயின் இளவரசன் ஏனியாஸ்(Aeneas) தெற்கு நோக்கிப் பயணம் செய்கிறான்.
செயல்வீரனான ஏனியாஸ், பிறப்பிலிருந்தே பெரும் புகழுக்குரியவன். இத்தாலியின் பேரரசு ஒன்றை நிறுவுவான் என்பதே அவனது விதி. ஆனால் அந்த விதியை முறிக்கக் கடவுளர்கள் சதி செய்கிறார்கள். அவனுக்கு எதிராக இயற்கையின் சீற்றத்தை ஏவிவிட ஏனியாஸ் அந்தச் சுழலில் சிக்கித் தவித்தான். கடவுளர்கள் தந்த இடர்களை மீறி அவன் எப்படி வெற்றி பெற்றான் என்பதை வீர தீர காவியமாகத் தந்தவர் வர்ஜில்!
ஏனியட்12 காண்டங்களைக் கொண்டது. முதல் ஆறு காண்டங்கள் ஏனியாஸ் தனது மக்களோடு புதிய நாடொன்றை அமைக்கத் தென்திசை நோக்கி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கின்றன. கடைசி ஆறு காண்டங்கள் ட்ரோஜன் மக்கள் ஏனியாஸின் தலைமையில் இத்தாலியில் நடத்திய பெரும் போரைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.
இந்த முன்னுரையுடன் அடுத்த இதழில் ஏனிட் கதைக்குள் செல்வோம்

அருமை. மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள் சுந்தரராஜன் சார்.
LikeLike