ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறை பற்றி ஒரு feature செய்ய வேண்டும் என்று திரு ராகி ரங்கராஜன் நினைத்தார். அதை என் கணவரிடம் ஒரு அசைன்மெண்டாக அளித்தார்.
பொதுவாக இது போன்றவர்களை பேட்டி எடுப்பது மிகவும் சுலபம் என்று தானே நினைப்போம்..
அப்படி அல்ல.
அவர்கள் சுலபத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கன்வின்ஸ் செய்யப் படாத பாடுபட வேண்டும்.
நாங்கள் வசிக்கும் குரோம்பேட்டை பகுதியில் இருக்கும் பூக்கார அம்மாள் ஒருவரைக் கேட்கும்படி என் கணவர் என்னிடம் சொல்லி இருந்தார். குரோம்பேட்டை ஸ்டேஷன் மாடிப்படி கீழே பூக்கடை வைத்திருந்தார் அந்த அம்மாள்.
பக்கத்து பக்கத்தில் நான்கைந்து பூக்கடைகள் உண்டு. அவர்களிடம் ஒரு வினோத ஒற்றுமை நிலவும். ஒருவரிடம் வாடிக்கையாகப் பூ வாங்குபவரை மற்றவர்கள் தன் பக்கம் திருப்ப முயற்சி செய்யவே மாட்டார்கள்.
என் கணவர் , பூஜை செய்வதற்காக வேண்டி, ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரிடம் பூ வாங்கி வருவார்.விதி வசமாக அவர்களில் ஒரு பூக்கார அம்மாளை நான் தேர்ந்தெடுத்து, குமுதத்துக்காகப் பேட்டி வேண்டும் என்று கேட்டேன்.
நான் கேட்ட வேகத்திலேயே அவர் மறுத்து விட்டார்.
எதற்கு வம்பு என்கிற மாதிரி பதில் சொன்னார்.
பொதுவாக இது போல் மறுப்பவர்களை நாங்கள் கம்பல் செய்யும் வழக்கம் கிடையாது.
யார் போதாத வேலையோ தெரியவில்லை.. ” அம்மா இது போல் பேட்டி வந்தால் உங்கள் சிரமங்கள் பொதுமக்களுக்கு தெரியும்”. என்று சொல்லிப் பார்த்தேன்.
பூ வாங்கும் போது பேரம் செய்வார்கள் இனி அப்படி செய்ய மாட்டார்கள் என்று சொன்னேன்.
மெல்ல ஒப்புக்கொண்டார்.
ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வரும்.. அதில் எவ்வளவு பணத்தை மீண்டும் பூ வாங்கப் பயன்படுத்துவார்…சினிமா நாடகம் எல்லாம் போவதுண்டா? எந்த மாதிரி பொழுதுபோக்கு முறைகள் பின்பற்றுவார்… போன்ற எளிதான கேள்விகள் தான் என்பதையும் சொன்னவுடன், முதலில் அரைகுறையாக ஒப்புக்கொண்டவர் பிறகு முழு மனதாகச் சரி என்றார்.
அப்படி முழு சம்மதம் வந்தால் தான் பேட்டியே துவங்குவேன்.
நான் சில கேள்விகள் கேட்டு, பதில் வாங்கி வந்தேன். என் கணவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால் அவரும் மேலும் சில கேள்விகள் கேட்டு பதில்களை ரெக்கார்ட் செய்து வந்தார்
அந்த அம்மாளில் பேட்டி குமுதத்தில் பிரசுரமானது.
எவ்வளவு பணம் சேமிப்பார் என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருந்த பதில், ” எங்கங்க சேமிக்கறது.. எல்லாக் காசையும் என் புருஷன் பிடுங்கிக்கிட்டுப் போய் குடிச்சுட்டு வந்து என்னை அடிப்பான்” என்பது.
நானும் ரொம்ப சின்சியராக வார்த்தை மாறாமல் இதை டைப் செய்து கொடுத்து விட்டேன்.
அது, அப்படியே குமுதத்தில் பிரசுரமாகியிருந்தது.
அடுத்த நாள் என் கணவர் குரோம்பேட்டை ஸ்டேஷனில் இறங்கிய போது, உள்ளூர் நண்பர் ஒருவர் ” பாமா கோபாலன் சார்.. அப்டியே வேற ரூட் பிடிச்சு வீட்டுக்கு போங்க. அந்தப் பூக்கார அம்மாளை கிராஸ் செய்துடாதீங்க” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
என் கணவருக்கு திகைப்பு. ஏன் என்று கேட்டிருக்கிறார்.
” அதெல்லாம் தெரியாது கோபாலன் சார்.. இன்றைக்கு நான் அந்த அம்மாவிடம் பூ வாங்கும் போது முகம் எல்லாம் வீங்கி இருந்தது. பேட்டி வந்திருப்பது பற்றி பாராட்டினேன். அவர்களுக்கு ரொம்பவும் கோபம் வந்துடுச்சு. அதைப் பத்தி பேசாதீங்க சாமி. அந்த பேட்டியால் என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு’ என்றார் அந்த அம்மாள்” என்று அந்த நண்பர் என் கணவரிடம் சொல்லி இருக்கிறார்.
இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. நண்பர் அதோடு நிறுத்தவில்லை. அவர்களின் ஆத்திரம் அடங்கும் வரை நீங்கள் அந்தப் பக்கம் போகாதீர்கள் என்று வேறு சொல்லி இருக்கிறார்.
என் கணவர் மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவர்.
அதனால் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு குரோம்பேட்டை ஸ்டேஷனில் மேற்கு புறம் இறங்கி ரயில்வே கேட்டை கிராஸ் செய்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
எனக்கு அவர் படுகிற சிரமம் பொறுக்கவே இல்லை.
என்னதான் ஆகிவிடப் போகிறது?
நான் ஒரு பெண் பிள்ளை.. என்னை அடித்து விடுவார்களா? பேட்டியால அவருக்கு என்ன சிரமம் ஏற்பட்டது என்று கூட தெரிந்து கொள்ளாமல் நாங்கள் இருட்டில் இருப்பது எனக்கு பொறுக்கவில்லை.
வருவது வரட்டும் என்று அன்றைக்கு மாலை அந்த பூக்கார அம்மாளை தேடி போனேன்.
” பூ குடுங்கம்மா” என்று எதுவுமே நடக்காத மாதிரி கேட்டேன்.
அந்த அம்மாள் எனக்காக காத்திருந்த மாதிரி ஓ என்று அழ ஆரம்பித்தார். ” நான்தான் புத்தி கெட்டு போய் ஏதோ பேட்டி கொடுத்தேன்னா… உன் புருஷன் அதை பொஸ்கத்தில் அப்படியே எழுதலாமா? ” என்று புலம்பினார்.
விஷயத்தை விளக்கிச் செல்லும்படி கேட்டேன்.
தன் புருஷன் குடித்துவிட்டு அடிப்பதாக போட்டோவுடன் பேட்டி வந்தவுடன், புருஷனின் நண்பர்கள் அவரை தூண்டி விட்டார்கள். அந்த ஆள் வந்து கண் மண் தெரியாமல் இந்த அம்மாவை அடித்து விட்டார்.
” இப்போ என் முகத்துல வீக்கம் எவ்வளவோ குறைஞ்சு போய் இருக்கும்மா ” என்றபோது எனக்கு பக்கென்று இருந்தது. குறைந்து போனதே இந்த அழகு என்றால்… போன வாரம் எல்லாம் எப்படி இருந்திருக்கும்!!
மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மாளும் தன் பங்குக்கு ” உங்க வீட்டுக்காரரை இந்த பக்கம் வர வேணாம்னு சொல்லுமா.. என் புருஷன் பொல்லாதவன்” என்று எரிகிற தீயில் கொஞ்சம் நெய் ஊற்றினார்.
ஆனால் இந்த விஷயத்தில் ஒரு திருப்பம் நேர்ந்தது. ஏழை எளியவர்களின் பேட்டி பிரசுரமானவுடன் பலர் இவர்களுக்கு பரிதாபப்பட்டு, பணம் அனுப்ப ஆரம்பித்தார்கள். ஈரோடில் இருந்து புடவைத் தறி போடும் ஒரு நபர், 20 காட்டன் சேலைகள் அனுப்பி அவற்றை அந்த அம்மாளுக்கு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். பார்சல் குமுதம் ஆபிசுக்கு வந்து விட்டது. என் கணவர் அதை ஆட்டோவில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்போது இவர் போய் புடவைகளை அந்த அம்மாளுக்கு கொடுத்தால் என்ன நடக்கும்!!!
” கவலைப்படாதீங்க வாங்க நாம ரெண்டு பேரும் போவோம்” என்றேன். கை நிறைய பணமும் புடவைகளும் எடுத்துக்கொண்டு போய், ” முதலில் உன் புருஷனை கூப்பிடு” என்றேன். அந்த அம்மாள் பயந்தவாறு அழைத்து வந்தார்.
” உங்க மனைவி பேட்டி கொடுத்ததன் பலன் நிறைய பேர் பரிதாபப்பட்டு பணமும் புடவையும் அனுப்பி இருக்காங்க. அவங்க கிட்ட கொடுக்கறதுக்கு உங்க அனுமதி வேண்டும் “என்றேன்.
சற்றும் எதிர்பாராத குழைவும் பணிவும் அந்த ஆளிடம் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன.
தலையைச் சொறிந்தவாறு ” என்னமா பர்மிஷன் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் கேக்குறீங்க” என்று கைநீட்டினார்.
” இந்த காசைக் கொண்டு போய் தண்ணி அடிச்சிட மாட்டீங்களே? ” என்று தைரியமாய் கேட்டு விட்டேன். என் கணவர் பயத்துடன் என் முகத்தை பார்த்தார்.” அச்சோ அதெல்லாம் மாட்டேன் மா அவ கிட்டயே குடுங்க” என்றார்.
அப்புறம் தைரியமாக ஸ்டேஷன் வழியாகவே என் கணவர் வர ஆரம்பித்தார்.
(அடுத்த முறை நான் போய் பூ வாங்கிய போது, அந்த காசையும் பிடுங்கிக் கொண்டு போய் அந்த ஆள் தண்ணி அடித்ததை அந்த அம்மா சொன்னது சோகக் கதை)
ஆனால் என் சந்தோஷம் என்னவென்றால், ஈரோடு வாசகர் கொடுத்த அழகிய நீல நிறச் சேலையை அன்றைக்கு அந்த அம்மாள் அணிந்து கொண்டிருந்தார்.
குமுத நினைவுகள் தொடரும்

மிகச் சிறப்பாக சொல்லப்பட்டுள்ள நிகழ்வு. குறும்படமாக எடுக்கலாம், அந்தக் குடிகாரக் கணவன் தடுக்காத (அடிக்காத) பட்டத்தில்…. !
LikeLike
பட்சத்தில்*
LikeLike