“ஆ”, “ஊ”, “ஐயோ”, “ஈஸ்வரா”, என்ற வினோத சத்தங்கள் காமுப்பாட்டியின் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தது. பாட்டியின் கதை இன்றோடு முடிந்து விட்டதோ என்னவோ என்று பயந்து கொண்டு எல்லாரும் பாட்டியின் அறைக்கு ஓடினார்கள்.
பாட்டியின் மூத்த பிள்ளை சங்கரன், முதலில் போனார். பின்னாலேயே லல்லுவும், அம்பியும் ஓடிப் போனார்கள். சங்கரனின் மனைவி, ஜானு என்றழைக்கப்படும் ஜானகி, பூஜையறை பக்கம் ஓடினாள்.
பாட்டி ஐ-பேடில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளையாடிக் கொண்டிருந்த IPL கிரிக்கெட் மேச்சைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டியாவது போவதாவது!
கோபாவேசத்துடன் CSK டீமை வசை பாடிக் கொண்டிருந்தாள் பாட்டி.
“நம்ம டீம் முதல்லே வரும்னு பார்த்தா, டோர்னமெண்டுலேந்து எலிமினேட் ஆன முதல் டீமால்லே வந்திருக்கு. ஆடி தள்ளுபடியிலே ‘ஒண்ணு வாங்கினா இரண்டு ஃப்ரீ’ன்னு ப்ளேயர்ஸ்ஸை ஏலத்துலே எடுத்திருக்கா போல இருக்கு. ஒண்ணும் சரியா விளையாட மாட்டேன்றதுகள். நம்ம தெரு பசங்கள அனுப்பிருந்தாலே நல்லா விளையாடிருப்பா போலிருக்கு.”
அப்போது கங்கை சொம்பை தூக்கிக் கொண்டு அங்கு வந்த ஜானு, பாட்டி ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, பாட்டிக்கு ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டு, சொம்பை பின்னால் மறைத்துக் கொண்டாள்.
அதை கவனித்து விட்ட பாட்டி, “ஜானு, நான் என்ன இந்த அல்ப ஆயூசுலேயே போயிடுவேன்னு நெனைச்சியா? எங்க பரம்பரைலேயே எல்லாரும் நூறு வயசை தாண்டினவா. நானும் செஞ்சுரி போடாம போக மாட்டேன். தெரிஞ்சுக்கோ” என்றாள்.
காமுப்பாட்டியின் வைராக்கியத்தில் பாதியாவது CSK ப்ளேயர்ஸ்களுக்கு இருந்திருந்தால் இன்று டீம் முன்னணியில் இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டார் சங்கரன்.
“நம்ம பேட்டர்ஸ் சில பேரு விளையாடறத பாத்தா, ஏதோ மேட்சை ட்ரா பண்றதுக்கு விளையாடற மாதிரி இருக்கு. T-20’ல ட்ரா எல்லாம் கிடையாதுன்னு அவாளுக்கு யாராவது சொன்னா தேவலை.”
“பாதி பணத்தை பழைய ப்ளேயர்ஸை ரீடைன் பண்றதுலேயே விட்டிருக்கா. இன்னும் கொஞ்சம் சின்ன பசங்களா பாத்து செலக்ட் பண்ணியிருக்கலாம். சும்மா ‘தல’ மேலே தூக்கி வெச்சிண்டு ஹீரோ வொர்ஷிப் பண்றத முதல்லே நிறுத்தணும். அப்ப தான் டீம் உருப்படும். வயசானவங்கள ‘மென்டார்’ ரோல்ல போடணும். எல்லாருக்கும் ஒரு காலம், நேரம்னு இருக்கோல்லியோ?” என்றாள் பாட்டி.
இதற்கு மேல் பாட்டியை பேச விட்டால் எங்கே B.P. எகிறி விடுமோ என்று பயந்து, பேச்சை திசை திருப்ப எண்ணினார் சங்கரன்.
“காலம், நேரம்னவுடனே ஞாபகத்துக்கு வருது. கவர்னர் அனுப்பற மசோதா மேலே மூணு மாசத்துக்குள்ளே ஜனாதிபதி முடிவெடுத்தாகணும்னு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதிச்சிருக்கே, படிச்சியா?” என்று கேட்டார் சங்கரன்.
காமுப்பாட்டியின் மாமா ஒரு காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் குமாஸ்தாவாக வேலை பார்த்தாராம். அதனால் சுப்ரீம் கோர்ட்டுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாட்டிக்கு ஒரு கெத்து.
“சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுகளை, கொலீஜியம் அட்வைஸ்படி அப்பாயிண்ட் பண்றதே ஜனாதிபதி தான். அவருக்கே எப்படி காலக்கெடு விதிக்கலாம்னு கேக்கறாவாளும் இருக்கா. ஆனா ஜுடிஷியரியோ, ‘நாங்க இண்டிபெண்டெண்ட். எங்களுக்கு அந்த உரிமை இருக்கு’ங்கறா. கொஞ்ச காலமாகவே இந்த ஜுடிஷியரிக்கும் எக்ஸிகுடிவ்வுக்கும் இடையே அக்கப்போர் நடந்துண்டுருக்கு. அவாவா தங்களோட அத்தாரீட்டியை எஸ்டாப்ளிஷ் பண்ணணும்னு பாக்கறா. ‘நான் உசத்தியா, நீ உசத்தியா’ன்னு மாமியார் மருமகள் சண்டை மாதிரி போயிண்டிருக்கு. ஜானு, நான் உன்னை சொல்லல்லேடிம்மா. நீ தங்கமானவோ. என்னை குழந்தை மாதிரி பாத்துக்கறே” என்றாள் பாட்டி.
ஜானுவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. “இருங்கோம்மா. உங்களுக்கு சுண்டக் காய்ச்சிய பாலை கொண்டு வரேன்” என்று சொல்லி கிச்சனுக்கு போனாள்.
“ஆனா ஒண்ணு கண்டிப்பா சொல்லியே ஆகணும். நாடு முழுக்க லட்சக்கணக்கா கோர்ட் கேஸ் தேங்கியிருக்கு. வாய்தா, வாய்தான்னு கேட்டு கேஸை வருஷக்கணக்கா இழுத்தடிச்சுண்டு போறா. இதுலே சம்மர் வெகேஷன், விண்டர் வெகேஷன், பூஜா ஹாலிடேஸ்னு கோர்ட்டை வேறே மூடிடறா. கேஸை முடிக்கிறது இவா கைலேன்னா இருக்கு. இரண்டு மூணு வாய்தாவுக்கு மேலே கிடையாது, ஒரு வருஷத்துள்ளே சிவில் கேஸை முடிச்சாகணும்னு காலக்கெடு கொண்டு வரலாமே. நம்ம பக்கத்து தெரு சுப்புணி இருக்கானே, அவனோட பேரன் பொறந்த போது போட்ட கேஸ், இன்னும் போயிண்டிருக்கு. பேரன் இப்போ காலேஜ் சேரப் போறான்.“
“ஐயோ, பாவம். பேசாமே காம்ப்ரமைஸ் பண்ணிண்டு போயிருக்கலாமே” என்றார் சங்கரன்.
“அந்த தைரியத்துலேதான் தப்பு பண்றவா தப்பு பண்ணிண்டே போறா. கோர்ட்டு கேஸுன்னு போனா, இந்த ஜன்மத்துலே முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஜஸ்டிஸ் டிலேய்ட் ஈஸ் ஜஸ்டிஸ் டினைய்ட், இல்லியோ” என்றாள் பாட்டி. சும்மாவா, அந்த காலத்து S.S.L.C !
லல்லு தன் பங்குக்கு “பாட்டி, இண்டியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை வருமா?” என்றாள்.
“நிச்சயம் வரும் போல தான் தோணறது. இவ்ளோ காலம் உக்ரைன், காஸா, மிடில் ஈஸ்ட்னு வெவ்வேற இடத்துலே சண்டை நடந்துண்டுருந்தது. இப்போ நம்ம புழக்கடைப் பக்கமே வந்துடுத்து. ஆனா, இந்த வாட்டி அவாளே சும்மா விடக்கூடாது. ஈவு இரக்கமில்லாமே இருவத்தாறு பேரை, குடும்பத்து முன்னாடியே சுட்டு கொன்னுருக்காளே. குடுக்குற அடியிலே இனிமே இந்த பக்கமே தலை வச்சு படுக்க கூடாது. அப்படி அடிக்கணும்” என்றாள் பாட்டி.
அம்பி, “எல்லா இடத்துலேயும் சண்டை நடக்கிறதைப் பார்த்தா, ஒரு வேளை, வொர்ல்ட் வாரா மாறிடுமா பாட்டி?” என்று பயத்துடன் கேட்டான்.
“அதெல்லாம் ஒண்ணும் மாறாதுடா. அதுக்கு அமெரிக்ககாரன் உள்ளே வரணுமே. அவன் வர மாட்டான். எல்லாருக்கும் இடையே நடக்கிற சண்டையை வேடிக்கை பார்த்துண்டுருப்பான்” என்றாள்.
சங்கரன் நடுவில் புகுந்து, “இத்தோட போதும். இதுக்கு மேல அனாவசியமா பாட்டியை ரொம்ப டென்ஷன் பண்ணாதீங்கோ. பாட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்” என்று பாட்டி படுத்துக் கொள்ள படுக்கையை தட்டிப் போட்டார்.
***************

hilarious Patti 🤣
LikeLike