செழுங்கிளைகள் தாங்கியபோது
இருந்த பசுமை வளம்மாறி
கிளை பிரிந்து
தனித்து..
ஒற்றையாய்…
வீழ்ந்து கிடக்கும்
இலையின் வறுமை.
பசுமைத் துகிலுரிக்கப்பட்டுப்
பறிபோய்விட்ட பச்சாடைக்காக
மரத்தடி நீதிமன்றத்தில்
உரத்தக்குரலில்
உலர்ந்த வார்த்தைகளால்
வழக்காடிக் கொண்டிருக்கும்
இலையின் நிர்வாணங்கள்!
அடுத்த தலைமுறைக்காகத்
தன்னையே
உரமாக்கத் துணிந்துவிட்ட
இலையின் மரணங்கள்.
குருத்தில் கருவாகி..
கொழுந்தில் குழந்தையாகி…
இளமை இலையாகி….
முதுமை சருகாகி…
பற்றுகளை
முற்றிலுமாய்த் துறந்து கிடக்கும்
மரத்துறவிகள்.
ஆணிவேராக இருக்கும் போது
தாய்ப்பால் தந்து காப்பாற்றிய
தாய் மண்ணுக்கு
மரங்கள்
வரி.. வரியாய்…
எழுதி அனுப்பும்
அஞ்சல் அட்டைகள்.
வசந்த காலத்திற்கு
இலையுதிர்காலம்
எழுதிஎழுதி உதிர்க்கும்
வரவேற்புக் கவிதைகள்.
