
“என்ன கல் மனசோ, பெத்த அப்பாவையும், அம்மாவையும் தனியா தவிக்க வுட்டுட்டு, நேத்திக்கு வந்தவளோட, தனியாப் போய்ட்டான். நன்றிகெட்ட ஜென்மங்கள்”
இப்படியெல்லாம் கேள்விப்படுகிறோம். நேரிலும் சில குடும்பங்களில் இதைக் காண்கிறோம். இதற்கு முற்றிலும் மாறாக ஒரு குடும்பத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
அந்தப் பாட்டிக்கு வயது 92. ‘பொல்’ லென்று வெளுத்த தலைமுடி. நெற்றி, கைகள், கால்கள், உடல் எங்கும் முழுமையின் சுருக்கங்கள்! கொஞ்சம் கூன் விழுந்த முதுகு. மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைக்கும் நடை. ஆனால் கூர்மையான பார்வை! எப்போதும் கைத்தாங்கலாக, அம்மாவைக் கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு பிள்ளைகள். ஒருவருக்கு வயது 74, அடுத்தவருக்கு 69. அம்மாவை ஸ்டூலில் அமர்த்திவிட்டு, எதிரே இருக்கும் நாற்காலிகளில் அமராமல், கை கட்டி பவ்யமாக நிற்கும் அன்பு!
மெதுவாக அமர்ந்து , பாட்டி கணீர் என்ற குரலில் தனக்கு இருக்கும் உபாதைகளைச் சொல்வார்.
“கை, கால் எல்லாம் ஒரே குடைச்சல். காலையில் எழுந்தால் முதுகில் அப்படி ஒரு வலி. விரல்கள் மற்றும் மணிக்கட்டில், மிளகாய் அரைச்சுத் தடவினாற்போல எரிச்சல்”
பாட்டிக்கு, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, கொலஸ்டிரால் போன்ற மாடர்ன் வியாதிகள் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு கண்களிலும் ‘காட்ராக்ட்’ ஆபரேஷன் செய்து கொண்டவர்.
“தூக்கம், பசி எல்லாம் எப்படி இருக்கு பாட்டி?” என்ற டாக்டரிடம் (அவருக்கே 70 வயதிருக்கும்!), தலையைப் பலமாக ஆட்டி, ”அதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை; ஆனால் பொழுது விடிஞ்சா இந்த கொல்லைக்குத் தான் போக மாட்டேன் என்கிறது” என்பார். இவர் வசிக்கும் அடுக்குமாடி வீட்டில் ‘கொல்லைப்புரம்’ என்பது படுக்கை அறையோடு இணைந்திருக்கும் அட்டாச்டு பாத்ரூம்!
“வயசானா, மலச்சிக்கல் வருவது நார்மல்தான். இரண்டு நாளைக்கு ஒரு முறை மோஷன் போனாலே அபூர்வம். அது ஒரு வியாதியே இல்ல. நிறையத் தண்ணீர் குடியுங்கள். சர்க்கரை வியாதி இல்லாததால், பழங்கள் சாப்பிடலாம்” என்ற டாக்டர் மீது, ’நீ எல்லாம் ஒரு டாக்டர்’ என்பதைப் போன்ற அலட்சியப் பார்வையை வீசுவார். இருந்தாலும், அந்த டாக்டரிடம் மதிப்பும், மரியாதையும் உடையவர்; ஏனென்றால் அந்த டாக்டர் அனாவசியமான மருந்துகள் கொடுக்க மாட்டார், முக்கியமாக ஊசி போட மாட்டார்!
அவசர அவசரமாக Bபி, பல்ஸ் எல்லாவற்றையும் சரி பார்த்து, “எல்லாம் சரியாக இருக்கின்றன. உங்களுக்கு வயது தான் வியாதி” என்று சொல்லும் டாக்டரைப் பார்த்து, கோணல் மாணலாக இருக்கும் மூன்று, நான்கு பற்கள் தெரிய, சத்தம் இன்றிச் சிரித்து வைப்பார்!
இருந்தாலும், வந்ததற்காகப் பாட்டிக்கு ஒரு வைட்டமின் மாத்திரை, வலிகளுக்கு ஒரு பாராசிடமால் மாத்திரை என எழுதிக் கொடுத்து, ”இதைச் சாப்பிட்டு வாருங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்பார் டாக்டர்.
“மாத்திரை எல்லாம் சாப்பாட்டுக்கு முன்பா அல்லது பின்பா?” என்று பாட்டி கேள்வி கேட்க, அதற்கு டாக்டர் பதில் சொல்லும் முன், மீண்டும் பாட்டி, “காபியில் அல்லது மோரில் இந்த மாத்திரைகளை சாப்பிடலாமா அல்லது தண்ணீரில் தான் சாப்பிட வேண்டுமா?” என்ற கேள்விகளை வழக்கம்போல் கேட்டு வைப்பார். டாக்டரும் சிரித்துக் கொண்டே, “சாப்பிட்ட பிறகு, குடிக்கும் நீரில் மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளுங்கள்” என்பார். உடனே பாட்டி, “அதான் கேட்டேன்..” என்று டாக்டர் சொன்னது சரி என்பதை ஆமோதிப்பது போல் தலையாட்டுவார்.
அதற்குள் உடன் இருக்கும் பிள்ளைகள் இருவரும் அம்மாவின் உடம்பை பற்றி ஏதாவது இரண்டு கேள்விகளைக் கேட்டு,
”அம்மாக்கு ஒண்ணும் சீரியஸா இல்லையே?” என்பார்கள். டாக்டரும் சிரித்தபடி, “பாட்டி இன்னும் 10 வருடங்களுக்கு குறையாமல், 100 வயது வரை இருப்பார் கவலைப்பட வேண்டாம்” என்பார்.
மீண்டும் கைத் தாங்கலாக பாட்டியை அழைத்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளும் திரும்பிச் செல்வார்கள். கதவருகில் சென்ற பாட்டி, மெதுவாகத் திரும்பி, ”பல்ஸ் (pulse) எல்லாம் சரியாத்தான இருக்கு?…” என்று கேட்டுவிட்டு, “உங்களுக்குத் தெரியாதா, இருந்தாலும் வயசாறதே, அதனால கேட்டேன்…. கிருஷ்ணா…” என்றபடியே வெளியே செல்வார்!
சில சமயங்களில் பாட்டி இல்லாமல் பிள்ளைகள் மட்டும் வந்து அம்மாவைப் பற்றி சொல்லிவிட்டு, மருந்து சீட்டு வாங்கிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் டாக்டர் பேச்சு கொடுக்கும் போது, அவர்கள் சொன்ன விஷயங்கள் ஆச்சரியப்படுத்துபவை.
“அம்மாவுக்கு சின்ன வயதிலேயே கல்யாணம். 15 ,16 வயதிலேயே. நாங்கள் இருவரும் பிறந்து இரண்டு வருடத்திற்குள் அப்பா அந்த கால டிபி நோயினால் இறந்து போனார். அம்மா வழியிலும், அப்பா வழியிலும் உதவி ஏதும் இன்றி, அம்மா தனியாகவே எங்களை வளர்த்தாள். மிகவும் கட்டுப்பாட்டுடன், அதே சமயம் பாசத்தைக் கொட்டி வளர்த்தாள் அம்மா. ஒரு திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும், அம்மாவுக்கு இரண்டு பக்கத்திலிருந்தும் எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம் வரை படித்துவிட்டு, நாங்கள் இருவரும் கிடைத்த வேலையைச் செய்ய ஆரம்பித்தோம். குழந்தைகளை மேலே படிக்க வைக்கவில்லையே என்ற ஆதங்கம் அம்மாவுக்கு இன்றும் உண்டு. இந்த உடம்புடன் இன்று காலை, இங்கு நாங்கள் வருவது வரை, அம்மா தான் சமையல் செய்வார். நாங்கள் இருவரும் நன்றாக சமைப்போம். இருந்தாலும் அம்மா எங்களை அடுப்பருகில் விடவே மாட்டார். அம்மா, எங்களை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டோம். அதில் அம்மாவுக்கு வருத்தம் உண்டு. ஆனாலும் குடும்பத்தில் புதிதாக ஒருவர் வந்து பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற பயம் எங்களுக்கு இருந்தது. அதனால் இறுதிவரை அம்மாவுக்கு துணையாக அனுசரணையாக இருந்து விடுவது என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம்”
இவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டருக்கு வியப்பாக இருந்தது, ‘இந்த காலத்தில் இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா’ என்று.
இரண்டு மூன்று மாதங்கள் சென்ற பிறகு மீண்டும் அந்த பாட்டி டாக்டரைப் பார்க்க வந்தார். “சௌக்கியமா இருக்கீங்களா டாக்டர்?” என்று விசாரித்தபடி அருகில் அமர்ந்தார். டாக்டர், வழக்கமான உரையாடலுடன், உடலைச் சரிபார்த்து மருந்து எழுதிக் கொடுத்தார். அருகில் இருந்த பிள்ளைகளை மருந்து வாங்கி வரச் சொல்லி அனுப்பிவிட்டு, பாட்டி டாக்டரிடம் சொன்னார்: “கிறுக்கு பசங்களா இருக்காங்க. கல்யாணம் செய்துக்கல. நான் போன அப்புறம் இவங்களை யார் பார்த்துப்பாங்க. எவ்வளவு நாளைக்குத் தானே பொங்கித் தின்பார்கள்? எனக் கவலையா இருக்கு டாக்டர்” – சொன்னவரின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
“கவலைப்படாதீங்க.. அவங்க, அவங்களே பார்த்துப்பாங்க. உங்க மேல இருக்கிற பாசத்தாலதான், அவங்க திருமணமே செய்து கொள்ளவில்லைன்னு நான் நினைக்கிறேன்” என்று பட்டும் படாமலும் டாக்டர் சொன்னார்.
“கிறுக்கு பசங்க. சொன்னா கேக்க மாட்டாங்க. அம்மாவுக்கும் மேல, அவளுக்குப் பிறகும் வாழ்க்கை தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கும். புரிஞ்சுக்க மாட்டாங்க” பாட்டியின் குரல் கம்மியிருந்தது.
பிள்ளைகள் வந்தவுடன் அவர்களுடன் பாட்டி எழுந்து வெளியே சென்றாள். கதவருகில் நின்று, திரும்பி கேட்டாள் “பல்ஸ் எல்லாம் சரியா இருக்கு இல்ல?”
டாக்டரிடம் சொல்ல என்ன இருக்கிறது!

மீண்டும் மனதை உருக்கும் ஒரு நடைச் சித்திரம், டாக்டர் பாஸ்கரிடமிருந்து!
LikeLike