Aadal, Paadal, Vilaiyaadal  சமையல்கார அம்மாள் ஒரு வாரம் விடுமுறை. என் தலையில் அத்தனை பொறுப்பும். காய்கறி வாங்குவதிலிருந்து என்ன சமைப்பது என முடிவு செய்து, அதனைச் செயல்படுத்துவது வரை! என் நண்பி(பர்)களான மற்ற பெண்மணிகள் இதென்ன பிரமாதம் என முகவாய்க்கட்டையைத் தோளில் இடித்துக்கொள்வது மனக்கண்ணில் தெரிகிறதே! ஒரு வாழ்க்கைமுறைக்குப் பழகிவிட்டால் பின் அனைத்துமே கடினம்தான்; மாற்றிக்கொள்ள முடியும். ஆனால்……

          ‘சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப்போறேன்,’ என்று பாட்டி பாடுவாளே அதுமாதிரி பாடிக்கொண்டே வெண்டைக்காயைப் பொரியலுக்கு நறுக்கலானேன். திடீரென ஒரு சிந்தனை. சங்கீதம் அத்தனை சுலபமா? ஆமாம். சம்பிரதாயமாகக் கற்றுக் கொள்ளாமல் மனதுக்குப் பிடித்தமாதிரி கேள்விஞானத்திலேயே எத்தனைபேர் நன்றாகப் பாடுகிறார்கள், அதுவும் நம் ‘இசை புதிது’ நண்பர்கள் மாதிரி என எண்ணம் எழுந்தது. உற்சாகமாக, “தமிழுக்கும் அமுதென்று பேர்,” என்று பாடியபடியே வேலை செய்தேன். ஆகா! சமையல் கிடுகிடுவென சுவையாக சமைத்து முடிந்தது.

          எதற்கு இந்தப் பீடிகை என்றால் நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ இசை என்றென்றும் இணைந்து இனிமை தருகிறது; நிம்மதி தருகிறது. எப்படி எனப்பார்க்கலாமா?

          குழந்தை பிறந்ததிலிருந்து எல்லா நிகழ்ச்சிகளிலும், பாடல்கள் உண்டு. புதிதாகப் பிறந்த பாப்பாவைப் பார்க்கவரும் பக்கத்து வீட்டுப் பெண்கள், பாட்டிகள் அனைவரும் குழந்தையை ஒரு நிமிடமாவது மடியில் வைத்துக்கொண்டு ஒரு இரண்டு வரியாவது பாடுவது வழக்கம்: “அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு அரும்பு முடிச்சதாரு?” என்றும் “ஓமனத் திங்கள் கிடாவோ” என்றும் பாடுவார்கள்.

          குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம், (இப்போதுதான் மூன்று வயதிலேயே நர்ஸரி, எல்கேஜி முதலிய) வகுப்புகளுக்கு போகத் தொடங்கியதுமே பாடல் வடிவில் பாடங்கள்: ‘ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று, இரண்டு முகத்தில் கண் இரண்டு, மூன்று முக்காலிக்கு…..’ இவ்வாறு ஓடும் பாடல்கள். ‘வட்டமான தட்டு’ என்று எளிய முறையில் கூட்டல், கழித்தல் கற்பிக்கும் பாடல்கள், ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா!’ என்று ‘அ’ னா’ ஆவன்னா கற்பித்தல்…. ஆகா! ஆங்கிலத்திலும் அப்படியே!

          குழந்தை இன்னும் வளர்ந்து நண்பர்களோடு விளையாடுகிறது. ஏழாங்கல், அச்சாங்கல் (5) ஆகிய அம்மானைக்கு ஈடான விளையாட்டுகள், தட்டாமாலை முதலியன. ‘குலை குலையா முந்திரிக்கா’ பாட்டைக் கேட்காதவர்கள் உண்டோ?கைகளைக் குறுக்காகப் பிடித்துக்கொண்டு பெண்குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் விளையாடும் விளையாட்டு, இன்ன பிற. இதில் படித்தவர்கள், பாமரர்கள் எனும் பாகுபாடே இல்லை, எதுகையும் மோனையும் தானாகச் சந்தநயத்துடன் வந்து விழுந்துவிடும்.

          எடுத்துக்காட்டாக ஒரு கதை: ஒருநாள் கம்பர் (ஆமாம்; பெரும்புலவர் கம்பர்தான்!) வயல்வரப்பு வழியாகப் போய்க்கொண்டிருக்கையில் ஏற்றத்தில் நீர் இறைப்பவன் ஒரு பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான். அது அவனுக்கு அவன் வேலையைச் சுளுவாக்கியது போலும்!

          மூங்கில் இலையே மூங்கில் இலையே!

          மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே!

உழவன் வேலையை முடித்தான். பாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போய்விட்டான். கம்பர் அடுத்த அடி என்ன என்று தெரியாமல் தவித்தார். இரவு தூங்கவில்லை. பொழுதுவிடிந்ததும் முதல் காரியமாக அந்த வயல்வரப்பில் ஓடினர்; அவனும் பாடியபடியே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான். இப்போது பாடினான்:

          மூங்கில் இலையே மூங்கில் இலையே!

          மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே!

          தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!

          ஆகா! கம்பர் வியந்தார், என்ன நயமான பாடல்!

இதுபோல இன்னும் வேலைப் பளுவைக் குறைக்கும் பல பாடல்கள் உண்டு. ஏலேலோ! ஐலஸா என்றபடி பெரிய பாறைகளைப் புரட்டுவர், உழவுப்பாட்டு, மீனவர் பாட்டு என்று சில. திரையிசையிலும் இவை புகுந்தன. ‘மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏருபூட்டி,” என்றும், ‘பொங்கும் கடலோசை” என்றும் பாடல்களைக் கேட்காதவர் இருக்க முடியாது.

          அடடா! ஒரு பெண்மணி தன் குழந்தையைத் தூளியில் தூங்க வைக்கிறாள் போலிருக்கிறதே! பெரிய குரல் வளம் ஒன்றும் இல்லைதான். ஆனால் தாய்மையின் பாசம் பொங்கிவழியும் அழகான பாட்டை அல்லவா பாடுகிறாள் அவள்?

          சித்தடியே சித்தடியே! செம்பவள சித்தடியே!

          என்னருமைக் கண்மணியே! கண்வளராய் சித்தடியே!

 

          ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்

          ஸ்ரீரங்கம் ஆடி திருப் பாற்கடல் ஆடி

          மதுரை நகர் ஆடி மாசிமகம் தானாடி

          வரம்பெற்று வந்தவனே கண்வளராய் சித்தடியே!

 

          மாமன் அடித்தானோ மல்லிகைப்பூசெண்டாலே

          மாமி அடித்தாளோ மலர் கொண்ட கையாலே

          பாட்டி அடித்தாளோ பால்புகட்டும் சங்காலே

          சித்தி அடித்தாளோ சின்னஞ்சிறு விரலாலே

 

          யாரடித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகிறது?

          எவரடித்த கண்ணீர் குளமாய்த் தேங்கிறது?

          அடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்

          தொட்டாரைச் சொல்லியழு தோள்விலங்கு போட்டிடுவோம்

          (பாட்டை முழுமையாகக் கொடுத்தது வேண்டியவர்களின் உபயோகத்திற்காக!)

          தாலாட்டுப்பாடல்கள் உலகம் முழுவதுமே ஒலிப்பவை!

 

          சின்னஞ்சிறு பெண்குழந்தைகள் பலவண்ணங்களில் வளை அணிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள்தாம். அவர்களுக்காக வளைச் செட்டியார்களும் பாட்டுப்பாடியபடியே வளையல் அணிவிப்பார்கள். பாட்டிமார்கள் தங்கள் குட்டிப்பேத்திகளுக்காகப் பாடுமொரு பாடல்:

          வாரும் வளைச்செட்டி, வந்திறங்கும் திண்ணையிலே

          கொச்சிட்ட திண்ணையிலே கோலமிட்ட வாசலிலே

          கம்பளியப் போட்டு கனத்த சுமையிறக்கும்

          துப்பட்டியப்போட்டு தங்கவளைத் தூக்கிறக்கும்

          ….      …..     …..     …..     …..     …..     இப்படிப்போகும் பாட்டு. பின் திரைப்படங்களிலும் புகுந்தது வளையல் பாடல்: ‘கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு, கொண்டாடி வரும் வளையல்…”

          வளைகாப்பு, சீமந்தம் என்று வளையல் அடுக்கி கருவுற்ற மங்கையரைச் சீராட்டும்போது வளையல் செட்டியார் பாடுவாராம்:

          ‘வளைகுலுங்கினாற்போல மழலைமொழி பேசும்

          கிளைபெருகி வாழவே வளைசூட்டுகின்றோம்.’

          என்ன நயமான கருத்துச்செறிந்த பாடல்! இதைப் புனைய பாண்டித்யம் வேண்டாம். மற்ற மனிதர்களிடத்தில் அன்பும், அனுசரணையும் கொண்ட நல்ல உள்ளம்தான் தேவை! எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் எனும் நல்ல எண்ணம் வேண்டும். இது அக்காலத்தில் நிறையவே இருந்தது.

          மீனுப்பாட்டி (ஆமாம். என் பாட்டி, அவர்பெயர்தான் எனக்கு வைத்திருக்கிறது!) எங்களுக்குக் கதை சொன்னால் தூக்கம் வராது! இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும்!! ஒரு அழகான பாட்டு; சாதாரணக்கதை – என்னவொரு நியாயம் அதில்! கேளுங்கள்: உயரமாக வளர்ந்து எதிரே உள்ள அனைத்தையும் மறைக்கும் புல்!

          புல்லே புல்லே ஏன் மறைத்தாய்?

          மாடு என்னை மேயவில்லை!

          ஏன் மாடே மேயவில்லை?

          பையன் என்னை ஓட்டவில்லை!

          ஏன் பையா ஓட்டவில்லை?

          அம்மா கஞ்சி வார்க்கவில்லை!

          ஏன் அம்மா கஞ்சி வார்க்கவில்லை?

          குழந்தை அழுததனாலே!

          ஏன் குழந்தாய் அழுதாய்?

          எறும்பு கடித்ததினாலே!

          ஏன் எறும்பே கடித்தாய்?

          என் புற்றில் கைவைத்தால் சும்மா இருப்பேனோ?

          கடித்தேன் நறுக்கென்று!!!

          எப்படி பாடல்? இதுமாதிரி எத்தனை எத்தனை?

          மற்றொருநாள் கிருஷ்ண லீலைகளைப் பற்றிய கதைகளைச் சொல்வார் பாட்டி.

          பாக்கு மரத்தடியே நாங்கள் பெண்கள் பகடைகள் ஆடையிலே

          பகடைக்காய்களை ஒளித்தான் கிருஷ்ணன்

          பகடைக்காய்களை ஒளித்தான்- யசோதே உந்தன்பாலன்

          கண்ணனை என்னென்று நாங்கள் சொல்லுவோம்!

 

          வெள்ளிக்கிண்ணம் கொண்டு நாங்கள்பெண்கள்

          வெண்ணைக்குப் போகையிலே பின்னலைப் பிடித்திழுத்தான்

          கிருஷ்ணன் பின்னலைப் பிடித்திழுத்தான்- யசோதே உந்தன்பாலன்

          கண்ணனை என்னென்று நாங்கள் சொல்லுவோம்!

அப்புறம் கோபிகள் கிருஷ்ணனுடன் வாக்குவாதம், அவன் மரத்தில் ஒளித்து வைத்த வண்ண வண்ணச் சேலைகளைத் தரக் கெஞ்சுதல், முடிவேயில்லாத இனிமைததும்பி வழியும் இளமைப்பருவ நாட்கள் அவை!

          இதில் பாட்டியின் கற்பனையும் கொஞ்சம் சேர்ந்துகொண்டு விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைகள் எல்லாம் வியப்பின் உச்சிக்கே இட்டுச் சென்றுவிடும் அழகே அழகு!

          அத்தை வீட்டில் அவர் பெண்ணுக்குத் திருமணம். எனக்குப் பன்னிரு வயது; விவரம் தெரியும் பருவம்! ஓகோ! மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, கண்ணில் மைதீட்டி, கௌரிகல்யாணம் பாடுகிறார்கள்:

          கொத்தோட வாழைமரம் கொண்டுவந்து நிறுத்தி

          கோப்புடைய பந்தலுக்கு மேல்கட்டு கட்டி

          கௌரிகல்யாண வைபோகமே!

அடுத்து மாப்பிள்ளையும் பெண்ணும் மாலைமாற்றுதல்; அதற்கும் சலிக்காமல் பாட்டி, மாமிகள் எல்லாரும் சேர்ந்து பாடுகிறார்கள்:

          ‘மாலை மாற்றினாள் கோதை மாலை சாற்றினாள்’

          ‘மன்மதனுக்கு மாலையிட்டாயே அடி மாதே

          ஜன்மமதில் சுகித்து நீதாண்டி”

          ஒன்று தெரியுமா? இவையெல்லாம் வீட்டிலேயே காலம் காலமாக பெண்டிர் தாமே இயற்றி வழிவழியாகத் தொடர்ந்துவரும் சம்பிரதாயப் பாடல்கள் எனப்படும் வகை.

          பிறகு ‘கன்னூஞ்சல் ஆடியிருந்தாள் காஞ்சனமாலை மனமகிழ்ந்தாள்’ என்றொரு பாடல்.

          ‘விந்தைமிகு செம்பவளக் கால்கள் நாட்டி

          விளங்குமுயர் மரகதத்தால் கொடுங்கை பூட்டி

          அந்தமிகு நவரத்ன ஊஞ்சல்மீதே

          அபிமனுடன் வத்சலையும் ஆடிரூஞ்சல்’

          என்று பாடல் இழைகின்றது. நான் பிரமிப்புடன் எல்லார் வாயையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

          இவையெல்லாம் என்ன பொக்கிஷங்கள்! காத்து வைத்துக்கொள்ள வேண்டாமோ?

          இன்னும் சாப்பாடு, நலங்கு இவற்றுக்கெல்லாம் வக்கணையாகப் பாட்டுகள்; சொல்லிக்கொண்டே போக வேண்டியதுதான். குதூகலமும், போட்டியும், மகிழ்ச்சியும் பொங்கிப் புரண்டோடும் பொழுதுகள். வாழ்க்கை வாழ்வதற்கே!!

          இவையெல்லாம் ஒரு சாராரின் குடும்பங்களில் மட்டும் என எண்ணிவிடாதீர்கள். எல்லாருக்கும் அவரவர் வகைகளில் பாடல்கள் உண்டு. முழுநிலா மாலைப் பொழுதுகளில் கிராமப்புறங்களில் திடல்களில் கூடி, கட்டபொம்மன் நாடகம், தேசிங்குராஜன் கதை, நல்லதங்காள் கதை என்றெல்லாம் ஒரு பெரியவரோ பெரியவளோ கூற ஜனங்கள் அதை விடிய விடியக் கேட்பார்கள். தெருக்கூத்து, அரிச்சந்திர நாடகம், பஞ்சம் பற்றின கதைகள் இன்னும் என்னவெல்லாமோ புராணக்கதைகள்.

          இவை புத்தகமாகவும் கிடைத்தன. ஓயாமல் படித்து, சில வரிகளும் மனப்பாடம்!

          கட்டபொம்மன் கதையிலிருந்து:

          ‘வாராண்டா வாராண்டா வெள்ளைக்காரன்

          வரட்டும் முரட்டுத் தொப்பிக்காரன்

          தொப்பிக்காரன் குண்டு செல்லாது- அவன்

          துப்புக்கெட்ட குணம் பொல்லாது’ என்றும்

          தேசிங்குராஜன் கதையிலிருந்து:

          ‘அண்ணா வாடா தம்பிவாடா தோன்றமல்லண்ணா

          தெய்வலோகத்துப் புரவி ஒன்று டில்லியில் இருக்கிறதாம்

          குதிரை ஏறி சவாரி செய்து கொண்டு வர வேணும்’ என்றும் அழகான பாடல்கள்.

         

          இப்போதைக்கு இங்கு நிறுத்துகிறேன்.

          அடுத்த பகுதியில் இன்னும் சுவாரசியமான செய்திகலைப் பார்க்கலாமே!

          (இப்போதைக்கு ‘பிரமிக்க வைத்த புத்தகங்களு’க்குச் சின்னதாக ஒரு இடைவெளி!)

 

                                                                        [வளரும்.]