மறைந்த நண்பன் தாமஸின் உடலை சென்னையில் அவன் இல்லத்தில் டாக்ஸியில் கொண்டு சேர்த்த பிறகு மதுரை திரும்பினேன்.
மதுரை திரும்பி முதல்நாள் வகுப்பில் பேராசிரியர்கள் எல்லாம் என்னைப் பாராட்டினார்கள். பலகலைக் கழகத்தில் எனக்கு அறிமுகம் இல்லாத பலரும் என்னிடம் வந்து பேசினார்கள். என் அனுபவம் பற்றிக் கேட்டார்கள் . நான் பல்கலைக் கழக வளாகத்திலேயே ரிசர்ச் குவார்ட்டர்ஸில் தங்கி இருப்பதால் விடுதி மாணவர்கள் அனைவருக்கும் தெரிந்தவனாகிவிட்டேன். விடுதியில் தங்கி இருந்த மாணவர் ஒருவர் திடீரென மருத்துவமனையில் இறப்பதும் அவர் உடலை சென்னை வரை காரில் உடனமர்ந்து ஒருவர் எடுத்துச் சென்று சேர்ப்பதும் சாதாரண நிகழ்வு அல்லவே ! என் வாழ்நாளின் மறக்க முடியாத சோகப் பக்கங்களில் அது ஒன்று,
எது எப்படியோ மதுரைப் பல்கலைக் கழக வளாகத்துக்குள் நான் பிரபலமாகி விட்டேன். இந்த பாப்புலரிட்டி முதலில் இனித்தாலும் நாள் ஆக ஆக கொஞ்சம் அலுத்து அதன் பிறகு தவிர்க்க வேண்டிய தொல்லை ஆகிவிட்டது.
“ வி வி எஸ் இருக்கான் பாத்துப்பான்.. நண்பர்கள் கேட்ட எதையும் செய்வான் .”நண்பேன்டா” அவன் என்ற தகுதியை எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டது. வகுப்பிலும் வெளியிலும் நடக்கும் எல்லாவற்றிலும் நான் பங்குபெற ஆரம்பித்துவிட்டேன்.
மதியம் வகுப்புகள் இல்லா நேரத்தில் அருகிலுள்ள நாகமலையில் பிக்னிக் போவது போல சாப்பாடு எடுத்துக் கொண்டு ஏறி இறங்குவோம். மேலும் எங்கள் பயோகெமிஸ்ட்ரி லாபரட்டரியில் நிறைய நேரம் எடுக்கும் கெமிக்கல் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதாலும் ஆய்வுக்காக லைப்ரரி வொர்க் நிறைய செய்ய வேண்டும் என்பதாலும் எங்கள் லேப் கீ எங்களிடம் இருக்கும். இருபத்திநாலு மணி நேரமும் நாங்கள் அந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சில ஆய்வு மாணவர்கள் தங்கள் பரிசோதனைகளை எந்தவித இடையுறுகளும் இல்லாமல் அமைதியாக இரவு நேரங்களில் செய்து முடிப்பார். அங்கேயே படுத்து உறங்கியும் விடுவார்.
சில பரிசோதனைகளின் அளவீடுகளை ஒரு மணி நேர இடைவெளிகளில் ஐந்து முறை எடுக்கவேண்டி வரும். அதாவது ஐந்து மணி நேரம் பரிசோதனைக் கூடத்தில் இருக்கவேண்டும். இது போன்ற நேரங்களில் நண்பர்கள் சோதனைகளின் அளவீடுகளைப் பதிவு செய்ய ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொள்வார். இந்த வகையில் பல நாட்கள் நான் இரவு முழுதும் பரிசோதனைக் கூடத்தில் செலவு செய்திருக்கிறேன்.. மாட்டேன் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் ”நண்பேன்டா” தகுதியை நான் பெற்றிருந்தேன். அவ்வளவு சீக்கிரம் அதை விலக்க முடியாது.
இது ஒரு பக்கம் இருக்க எனது கவிதைகளையும் பாடல்களையும் கேட்க ஒரு சிறு இரசிக்கர் கூட்டம் உருவாகிவிட்டது.
“விவிஎஸ் இன்னிக்கு ஈவினிங் எங்க டிபார்ட்மெண்ட்ல் ஒரு சின்ன கெட் டூ கெதர் நம்ம சீனி “தீசிஸ்” சப்மிட் பண்ணிட்டான் .. நீ வரணும் வந்த ஜாலியா இருக்கும் வா ‘ என்று வேறு துறை மாணவர்கள் என்னை அழைக்கும் வரை எனது செல்வாக்கு பரவிவிட்டது.
இன்னொரு பக்கம் இருக்கிற ஜூவாலஜி டிபார்ட்மெண்ட் ஆய்வுகளில் ஒரு குழு வௌவால்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தனர். மலை அடிவாரங்களில் உள்ள பழைய கட்டடங்களிலும் மலைக் குகைகளிலும் இரவு நேரங்களில் சென்று சில ஆய்வுகளை அவர்கள் செய்யவேண்டும். ஆடியோ ரெகார்ட் செய்யவேண்டும்; புகைப்படங்கள் எடுக்கவேண்டும். இப்போது கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும், எல்லாம் செய்து விடலாம். ஆனால் நான் சொல்வது ஐம்பது ஆண்டுகள் முன்பு நடந்த நிகழ்ச்சிகள்.
அவர்கள் தங்கள் ஆய்வுக்காக ஒரு ஜீப் வைத்து இருந்தார்கள். சில நேரங்களில் என்னையும் அவர்களோடு அழைத்துச் செல்வார்கள்.
“ஏண்டா என்னைக் கூப்பிடுறே “ என்றால் “ ரொம்ப போரடிக்கும் நீ வா “ என்பார்கள். இந்த மாதிரி விஷயங்களில் எனக்கும் “குஷி” தான். பக்கத்துல இருக்கற செக்கானூரணியில் இருந்து அதே ரூட்டில் கம்பம் தேனி வரை பல இடங்களைப் பார்க்கும் வாய்ப்பும் இதனால் கிடைத்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழக்கங்களுக்கு இடையே நடந்த இலக்கியப் போட்டிகளின் இறுதி விழா நடந்த போது எங்கள் பேராசிரியர் என்னை அழைத்து நான் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்க வேண்டும் என்று வாய்ப்பளித்தார். செம நிகழ்ச்சி. பல தோழர் தோழிகள் கிடைத்தனர். இதற்கெல்லாம் காரணம் என் ”நண்பேன்டா” ஸ்டேட்டஸ் !
அப்போது மதுரையில் வானொலி நிலையம் கிடையாது. திருச்சி வானொலி நிலையம்தான் மதுரையையும் “கவர்” செய்யவேண்டும்.. வானொலியில் அறிவியல் துறை ஆய்வுகள் தொடர்பான செய்திகளை வழங்க அவ்வப்போது மதுரை பல்கலைக்கழகத்துக்கு அரைமணி நேரம் அளிப்பார்கள்.
நான் பயின்று கொண்டிருந்த அந்த ஆண்டு திருச்சி வானொலியிலிருந்து அரைமணி நேர நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்த போது , அதிலும் நான் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.. முழுவதும் அறிவியல் தகவல்களாகப் படிக்காமல் அதை சுவையான கலை நிகழ்ச்சியாக மாற்றலாம் என நான் சொன்ன கருத்தை எங்கள் பேராசிரியர் ஜெயராமன் ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி அந்நிகழ்ச்சியில் எனது கவிதை ஒன்றும், நான் எழுதி இயக்கிய நாடகம் ஒன்றும் இடம்பெற ஒப்புதல் அளித்தார்.
“இதுதான் உண்மையிலே மரபுக் கவிதை “ என்ற தலைப்பில் நான் ஜெனிடிக்ஸ் பற்றியும் டி. ஏன். ஏ என்ற மரபணுக்கள் பற்றியும் கவிதை படித்தேன். ( தமிழகத்தில் மரபுக் கவிதை புதுக் கவிதை விவாதங்கள் நடந்து கொண்டிருந்த காலம் அது.) எனது நாடகம் சுற்றுப்புறச் சூழல் தூய்மை மற்றும் பாதுகாப்பு பற்றியது.. திருச்சி வானொலி நிலையத்துக்குச் சென்று ஒரு குழுவாக நாங்கள் வழங்கிய அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
”நண்பேன்டா” ஸ்டேட்டஸ் இன்னும் கொஞ்சம் உயர்ந்தது.
இந்த ஸ்டேட்டஸ் உயர்வால் வளாகத்தின் அத்தனை அக்கப்போர்களும் என் பார்வைக்கு வந்தது. சில பல பஞ்சாயத்துகளிலும் என் கருத்தைக் கேட்டார்கள். இது எங்கெல்லாம் என்னைக் கொண்டுவிட்டது என்பதைச் சொல்லிவிட்டால் இந்த வியாஸம் முடிவுக்கு வந்துவிடும்.
கல்லூரி வாழ்க்கையில் பல ஆண் பெண் நட்புகள் உருவாகும்; சில நட்பு என்ற அளவிலேயே நீடிக்கும்; சில காதலாக மலரும்; வெகு சில திருமணத்தில் முடியும். இந்த எல்லா வகைகளையும் எங்கள் பல்கலைக்கழக வளாகத்துள் பார்க்க முடியும். பொதுவாக ஆண் பெண் வேறுபாடின்றித் தோழமையோடு நாங்கள் பலர் பழகிக் கொண்டிருந்தோம்.
எங்கள் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று அங்கேயே இளநிலை பேராசிரியராக அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டவன் ராகுல். அவனுக்கு மூன்றாண்டுகள் ஜூனியர் ராதா. அதே டிபார்ட்மெண்டில் முனைவர் பட்ட ஆய்வு மாணவியாகப் படிப்பவள். இவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பது பலருக்கும் தெரியும். அது சென்ற வருடம் காதலாக மலர்ந்து மணம் வீச ஆரம்பித்தது எனவும், அதன் காரணமாகத்தான் தனது அமெரிக்க வாய்ப்பை ஒத்திப் போட்டுவிட்டு ராகுல் தற்காலிகமாக இங்கே பணி புரிய ஒத்துக் கொண்டுள்ளான் எனவும் ஆகிய இந்த உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி எனக்கும் பகிரப்பட்டது.
ஏன் பகிரப்பட்டது என்றால், இந்தக் காதல் செழித்து வளர ஒரு பெரிய பட்டாளமே துணை நின்று கொண்டிருந்தது. ராகுல் ராதா காதல் தெரிந்த உடனேயே , சம்பந்தப்பட்ட இருவரை விட , இந்த பட்டாளமே எந்நேரமும் அவர்கள் காதல் வெற்றி பெற உழைத்துக் கொண்டிருந்தது. நாமும் நம் வாழ்வில் ஓர் இளம் ஜோடியை சேர்த்து வைத்தோம் என்ற பெருமையையும் புகழையும் அடைய அந்த நண்பர்கள் குழு முயற்சியில் இருந்தது. அந்தக் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிட்டார்கள் காரணம் நான் “நண்பேன்டா “ பட்டியலில் இருப்பவன்.
பட்டாள நண்பர்களின் சேவை பல விதங்களில் இருந்தது. காதலர் இடையே தூது போவதற்கு சில தோழர் தோழியர் இருந்தனர். ராதாவின் ரும் மேட் ஜான்ஸி அதில் முக்கியமானவள். மதுரை தியேட்டரில் டிக்கெட் புக் செய்யவும் சினிமாவுக்கு “டிஸ்டர்ப் “ செய்யாமல் கூட சென்றுவரவும் இன்னொரு குழு இருந்தது. நூலகத்தில் அவர்கள் சந்திக்க இடையூறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள ஒரு நாலு நண்பர்கள் உதவி செய்தனர். இதெல்லாம் சென்னைக் கல்லூரிகளில் நான் பார்த்திராத செயல்பாடுகள்.
“ம்.. எல்லாவற்றிற்கும் முகராசி தேவை” என்றான் என் நண்பன் ராகவன்.
சொல்ல மறந்துவிட்டேனே ! ராகுல் நார்த் இந்தியன் ; உ.பி. காரன். அழகான மழலையிலே தமிழில் குதறித் தள்ளுவான். ( ராதா வுக்குத்தானே பிடிக்க வேண்டும் !) எனக்கு ஹிந்தி தெரியும் என்பதால் ( நான் பனாரஸ் பல்கலைக்கழக்கத்தில் படித்த கதைகளை வேறு அத்தியாயங்களில் காணவும்) இந்த காதல் ஒருங்கிணைப்புச் சேவையில் என் பங்கு கொஞ்சம் அதிகமானது. ராகுல் பாடும் ஹிந்தி ரொமான்டிக் திரைப் பாடல்களின் பொருளை ராதாவுக்கு விளக்கும் பொறுப்பு மிக்க பணி எனக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ராதா பிஹெச்..டி தீஸிஸ் சப்மிட் செய்துவிட்டாள். இனி விடுதியில் தங்கவேண்டாம் என்று ராதாவின் தந்தை அவளை திருச்சிக்கு வரச் சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் அவளுக்குத் திருமணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த செய்தி தெரிய வந்ததும் காதலர் சேவைப் பட்டாளம் துடித்து எழுந்தது. ராகுலுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் போஸ்ட் டாக்டரேட் கிடைத்துவிட்டது. ராதாவுக்கும் கிடைத்தால் இருவரும் அமெரிக்கா சென்றுவிடலாம் என்ற அவர்கள் திட்டம் நிறைவேற சில மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு முன் இந்த இடைஞ்சல் ஏற்பட்டுவிட்டது. இதை மாற்ற என்ன செய்வது ?
இருபது பேர் கொண்ட நண்பர்கள் குழு இதை மையமாக வைத்து ஐந்தாறு சுற்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியது. ஃபைனல் முடிவு “ரிஜிஸ்டர் மேரேஜ் “
மேற்படி முடிவை வெற்றிகரமாகச் செயல் படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டன.
பி ஹெச் டி சம்பந்தமாக இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கின்றன எனச் சொல்லி ராதா ஒரு நாள் பல்கலைக் கழகத்திற்கு வரவேண்டும்.. அன்றைய தினம் ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கவேண்டும். அதன் பிறகு இருவர் வீடுகளிலும் சொல்லிக் கொள்ளலாம். ராகுல் வீட்டில் பிரச்சனை இல்லை. எப்படியும் அமெரிக்கா போக இருக்கிறான். ராதாவையும் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவான்.
ராதா வீட்டில்தான் பிரச்சனை. அவள் தந்தை திருச்சியில் ஓர் உயர் காவல்துறை அதிகாரி. காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காதவர்.. காதல் திருமணத்தைத் தடுக்க எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர். ஆள் படை அம்பு இருக்கும் ஆளுமை..
எந்த எட்டப்பன் மூச்சு விட்டான் என்று தெரியவில்லை. இந்த விஷயம் ராதாவின் தந்தைக்குத் தெரியவந்துள்ளது. அவர் திருச்சியிலிருந்து மதுரைக்குக் காரில் கிளம்பிவிட்டார். போர்க்களம் என்றால் இரண்டு பக்கமும் ஒற்றர்கள் இருப்பார்களல்லவா ! எங்களுக்கும் அவர் மதுரைக்கு வரும் செய்தியும் நேரமும் தெரிந்துவிட்டது.
பட்டாளம் ஒரு மிக முக்கியமான தீர்மானம் எடுத்தது.. இனி மூடி வைத்துக் கொண்டு இயங்குவது ஆபத்து என்று எங்கள் துறைத் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமியை சந்தித்து விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டது.
“ஓகே ஸ்டூடண்ட்ஸ் இவங்களுக்கு வயசு என்ன ? “
“ராதாவுக்கு இருவத்தஞ்சு ராகுலுக்கு இருவத்தெட்டு “
“ இரண்டு பேர்களும் ஃபுல் அடல்ட்ஸ் அண்ட் ராகுல் இஸ் எம்பிளாய்ட். இந்த மேரேஜை யாரும் தடுக்க முடியாது ஐ வில் ஹெல்ப் ” என்று சொல்லிவிட்டார்.
பல்கலைக்கழகத்துக்கு அன்று காலை வந்த ராதாவின் தந்தை . ராகுலையும் ராதாவையும் பார்க்கவேண்டும் என்று பேராசிரியர் அறைக்குச் சென்று விசாரித்துள்ளார். அங்கு நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்ட உரையாடல்.
“ எஸ் டெல் மீ வாட் கான் ஐ டூ “
“ சார் ஐயாம் சந்தானகிருஷ்ணன் டி எஸ் பி. திருச்சி . ஹெல்ப் மீ டூ மீட் மை டாட்டர் ராதா அண்ட் யுவர் ஸ்டாஃப் டாக்டர் ராகுல்.. யாரைக் கேட்டாலும் தெரியாது என்கிறார்கள்
“ அடே டே! அப்படியா ஐ வில் டிரேஸ் தெம் . நீங்க என்ன குடிக்கிறீங்க? ஐ வில் கெட் யு ஸம் கூல் ட்ரிங்க் .. ஒங்க வொர்க் எப்படி போகுது. இதுதான் ஃபர்ஸ்ட் டைம் நீங்க எங்க யூனிவர்சிட்டிகக்கு வரிங்களா?
இது போல பேசியே புரொஃபசர் கிருஷ்ணசாமி ஒரு மணி நேரத்துக்கு ராதாவின் அப்பாவை தன் அறைக்குள்ளேயே அமர வைத்துவிட்டார். ( நாங்கள் கேட்டுக் கொண்டபடி)
ஒருமணி நேரம் ஆன பிறகு அவர்களை எங்கும் காணவில்லை என்ற செய்தியை பேராசிரியர் ராதாவின் தந்தையிடம் சொல்கிறார்.
“ என்ன சார் இது ? நீங்க அவங்கள இங்க வர வப்பிங்க என்று நினைத்தால் இப்படிச் சொல்லறீங்க. ஹவ் கான் யூ அலோ தெம் டூ அப்ஸ்காண்ட் ?” என்று கோபத்தோடு கேட்கிறார்.
“ மிஸ்டர் சந்தான கிருஷ்ணன் திஸ் இஸ் நாட் அ ஸ்கூல் இட் இஸ் அ யூனிவர்சிட்டி அண்ட் டோன்ட் யூஸ் போலீஸ் டெர்ம்ஸ் இங்க என்னிடம் சொல்லிட்டுதான் போகணும் என்று யாருக்கும் அவசியமில்ல. யூ மே வெயிட் ஆர் கெட் அவுட் “ ..
ராதாவின் தந்தை காத்திருந்த ஒரு மணி நேரத்தில் மதுரையில் ரிஜிஸ்டர் மேரேஜ் சுபமாக நடந்தேறியது. சாட்சி கையெழுத்து போட்டவரில் நானும் ஒருவன், அது மட்டுமல்ல அன்று காலை ராதாவின் தந்தை கண்ணில் படாமல் அந்த இளம் காதலர்கள் ஒளிந்திருந்த இடம் என்னோட குவாரட்டர்ஸ் ! அங்கிருந்துதான் ஒரு அம்பாசடர் காரில் நாங்கள் மதுரை ரெஜிஸ்டிரார் ஆபீஸ்கக்குத் தப்பி ஓடினோம். இது ராதாவின் போலீஸ் தந்தைக்குத் தெரிந்திருந்தால் என் நிலை என்ன ஆகியிருக்கும் ? அப்போ யோசிக்கவில்லை ! காரணம் “நண்பேன்டா”
(தொடரும்)

ஆகா, வெரி இன்ட்ரஸ்டிங் வவேசு சார்! உணகளுடைய பன்முங்களில் ‘நண்பேன்டா’ முகமும் ஒன்றா!!!!
LikeLike
அழகான திரைக்கதை போல விரிந்தது. கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்று துடித்துக்கொண்டே படித்தேன். இது கதையா , கட்டுரையா ? பட்டி மன்றம் தான் வைக்கவேண்டும் 🙂
LikeLike
நண்பர்களுக்கு நற்பேண்(நன்மையை பேணுவதால்) “நண்பேன் “” என அழைத்தனர்?
ஸீப்பி.
LikeLike