இந்த விஷயத்தைப் பதிவு பண்ண வேண்டாம் என்றுதான் நினைத்தேன். பதிவு செய்து ஏதாவது பயனுண்டா என்ற சந்தேகம்தான் என் தயக்கத்துக்குக் காரணம். இருந்தாலும் ஊதுகிற சங்கை ஊதிவிடலாம் என்ற முடிவுடன் தொடர்கிறேன்.

சில தினங்களுக்கு முன்னால் நான் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் என்னுடைய பைக்கில் சென்றுக் கொண்டிருந்தேன். வழக்கமாக கொஞ்சம் நெரிசலாக இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் நான் சென்ற அந்த சமயத்தில் கொஞ்சம் விஸ்ராந்தியாக இருந்தது.

எனக்கு முன்னால் ஒரு நடுத்தர வயதுடையவர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் போகிறாரே.. அடுத்த சிக்னலில் நிச்சயம் போலீஸ்காரர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மாட்டி ஃபைன் கட்டப் போகிறாரே என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது ஸ்கூட்டியில் பயணித்த அந்த நபர் சட்டென்று வலது பக்கம் திரும்பினார். சரி எதையோப் பார்த்துத் திரும்புகிறார் என்று நினைத்தேன். ஆனால் திடீரென்று அவர் வாயிலிருந்து சிவப்பு எரிமலை வெடித்தது. ஒருவேளை ரத்த வாந்தி எடுக்கிறாரோ என்று ஒரு கணம் எனக்கு திகைப்பு. ஆனால் மறுகணமே புரிந்தது.. அவர் ரத்த வாந்தி எடுக்கவில்லை. வெற்றிலைச் சாரை துப்பியிருக்கிறார். அவருடைய எச்சில் காற்றில் துப்பாக்கித் தோட்டாவைப்போல் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. சட்டென்று நான் சுதாரித்துக் கொண்டிருக்கா விட்டால் நான் சிவப்பு மனிதன் ஆகியிருப்பேன்.

அந்த நபர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று விட்டார். வள்ளுவர் கோட்டம் சிக்னலில் அவரைப் பிடிக்க முடிந்தது. அவரிடம் ரொம்பவே சாத்வீகமாக..

“சார்.. தயவு செய்து வண்டில போகும்போது துப்பாதீங்க.. பின்னால வண்டி ஓட்டிட்டு வரவங்க மேல..”

நான் முடிப்பதற்குள் அவர் என்னை துச்சமாகப் பார்த்தார்.

“சார்.. இதெல்லாம் நீங்க சொல்லாதீங்க.. You are not in US”

அவர் சொல்லி முடிக்கவும் சிக்னல் விழுந்தது. ஸ்கூட்டியை விரட்டிக் கொண்டு பறந்து விட்டார்.

எனக்கு அதிர்ச்சி. அவர் துப்பினதுகூட இப்போது இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது. ஆனால் அதை நியாயப்படுத்த அவர் சொன்ன காரணம்.. அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

பொது இடங்களில் துப்பக்கூடாது என்பது சுயகட்டுப்பாடுதானே? அந்தக் கட்டுப்பாடு USல் இருப்பவர்களுக்கு மட்டும்தானா? நம் நாட்டில் இருப்பவர்களுக்கு செல்லுபடியாகாதா?

அப்படியென்றால் “ஸ்வச் பாரத்” என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு என்ன அர்த்தம்?

பொது இடங்களில் துப்பி அசுத்தப்படுத்தக் கூடாது என்பது அடிப்படை விஷயம். ஆனால் ”நான் எங்கு வேண்டுமானாலும் துப்புவேன். அது என் பிறப்புரிமை” என்று நினைப்பவர்கள் இருக்கும்வரை எந்த ஸ்வச் பாரத் கோஷமும் வேலைக்காகாது.

வெளிநாடுகளில் பொது இடங்களில் துப்பினாலோ இல்லை அசுத்தப்படுத்தினாலோ அபராதம் விதிக்கின்றனர். கடும் தண்டனை விதிக்கின்றனர். அதே மாதிரி நம் நாட்டிலும் கடும் நடவடிக்கை எடுத்தால் என்ன என்று யோசிக்கத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் குப்பையைக்கூட ரொம்பவே சுத்தமாகக் கையாளுகிறார்கள். அப்புறப்படுத்துகிறார்கள். ஆனால் நம் நாட்டில் கதையே வேறு. நம் வீட்டுக் குப்பையை பக்கத்து வீட்டில் கொட்டலாமா என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வெளிநாட்டு மோகத்தில் நம் நாட்டு கலாச்சாரமே மாறிக் கொண்டிருக்கிறது. மொழியிலும், உடையிலும், நடத்தையிலும் வெளிநாட்டு பழக்கவழக்கங்களை ஆராதிக்கும் நாம் ஏன் இந்த சுத்தம் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாராமுகமாக இருக்கிறோம் என்பது புரியாத புதிராகவேதான் இருக்கிறது.

இந்த விஷயத்தில் அரசாங்கத்தை நாம் முழுதுமாக குறை சொல்ல முடியாது.

சென்னை மாநகராட்சி அவ்வப்போது சுத்தத்தைப் பற்றின கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். விள்ம்ப்ரங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல.. குப்பைகளை வகைப்படுத்திக் கையாள “செக்ரகேஷன்” முறையையும் அறிமுகப்படுதியுள்ளார்கள். அதாவது மக்கும் குப்பையையும் மக்காத குப்பையையும் தனித்தனியாகச் சேகரித்து அப்புறப்படுத்தும் முறை.

ஆனால் நம்மில் எத்தனைபேர் அதைப் பின்பற்றுகிறோம்?

இன்னமும் குப்பைகளை மொத்தமாகக் குப்பைத்தொட்டியில் திணிக்கும் பழக்கத்தைத்தானே மேற்கொள்கிறோம்.

தெருவில் குப்பைகளை வகைப்படுத்த தனித்தனியாக தொட்டிகள் வைக்கப் பட்டிருந்தாலும் நாம் அதைக் கண்டுக் கொள்கிறோமா?

இல்லையே.. அது எந்த வகைக் குப்பையாக இருந்தாலும் கண்ணில் படும் தொட்டியில் வீசிவிட்டுப் போய் விடுகிறோம்.

ஒன்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

என்னதான் அரசாங்கம் முயன்றாலும் சுத்தம் சுகாதாரம் இதையெல்லாம் நம்முடைய ஒத்துழைப்பில்லாமல் முழுதுமாக நடைமுறையில் கொண்டுவர முடியாது.

இந்தத் தருணத்தில் எனக்கு பட்டுக்கோட்டையாரின் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது..

“திருடனாப் பார்த்துத் திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது”

இதேபோல்தான்..

“மக்களாப் பார்த்துத் திருந்தாவிட்டால்

சுத்தம் என்பது கிடையாது”

(கிறுக்கல்கள் தொடரும்)