தனது 6ஆம் வயதிலேயே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பதினைந்து வயதிற்குள் 72 மேளகர்த்தா ராகங்களிலும் தேர்ச்சி பெற்று, ஒவ்வொன்றிலும் கிருதிகளை இயற்றினார். சங்கீத உலகில் 72 மேளகர்த்தா இராகங்களிலும் புலமை பெற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அழகான உருவம் – அருமையான சாரீரம் – உச்சஸ்தாயி போகும்போது கூட எந்த stressம் strainம் இல்லாமல் பாடி அங்கேயே நிற்பது இவரின் வரம். ஸ்வரங்கள் அப்படியே இவரின் குரலில் அலைகளைப் போல வந்து மோதும்.ராகங்கள் மாறுவது மேகங்கள் மாறுவதைப்போல இயற்கையாக இருக்கும்.
கஞ்சிரா, மிருதங்கம், வயோலா மற்றும் வயலின் என அனைத்துக் கருவிகளையும் இசைக்கும் ஆற்றல் பெற்றவர். வயோலாவை இந்திய இசைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்.
உலகளவில் 25,000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்.
இவரின் சாதனைகள், இவர் வாங்கிய விருதுகள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். பத்மஶ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பிரான்சு நாடு வழங்கிய செவாலியே, சங்கீத கலாநிதி எனப் பல உயரிய பட்டங்கள் பெற்றவர்.
இளம் வயது, முகத்தில் எப்போதும் புன்னகை, எளிமை, அனைவரையும் மதித்தல், தலைக்கனம் இன்மை, தன்னை எதிர்த்தவர்களையும் நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் தன்மை – இப்படிப் பல நல்ல குணங்கள் கொண்டவர்.
செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தும்,
பின்னாட்களில் அவர்க்கு இவரே வயலின் வாசித்தார்.
அதேபோல் வீணை பாலச்சந்தர் இவரின் புதிய ராகங்கள் கண்டுபிடிப்பை கடுமையாக விமர்சனம் செய்தார். ஒரு நேரத்தில் பாலமுரளி அவர்கள், வீணை பாலச்சந்தர் மேலே நீதிமன்ற நடவடிக்கை எடுக்க, மிகப்பெரிய அபராதத் தொகையை பாலச்சந்தர் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் கூற, பாலச்சந்தர், பாலமுரளியை அழைத்து சமரசம் செய்துகொண்டார்.
எனது பாக்யம், தூத்துக்குடியில் நாங்கள் புதுக் கிராமத்தில் இருந்தபோது அருகில் இருக்கும் பெருமாள் கோயில் விலாவில் 5 நாட்கள் கச்சேரி, மதுரை சோமு, எம் எஸ் சுப்புலட்சுமி எனப் பலர் வந்து பாடினார்கள். நிறைவு நாள் கச்சேரி டாக்டர் பாலமுரளி (1968), லால்குடி வயலின், வேலூர் ராமபத்ரன் மிருதங்கம். அன்று தான் மிக அருகில் 2வது வரிசையில் (எல்லோர்க்கும் தரை தான்) என் பெற்றோருடன் அமர்ந்து ரசித்துக் கேட்டேன். ரசிகர்கள் விருப்பமாக, நிறைவாக ஒரு நாள் போதுமா பாடல் பாடியது இன்னும் நினைவில் உள்ளது. அன்று கேதாரகவுளை ராகத்தில் துளசி பில்வ என்ற கீர்த்தனையை 45 நிமிடம் பாடினார்.
தேவாதிதேவ என்ற மைசூர் வாசுதேவாச்சாரியாரின் சுநாத வினோதினி என்ற ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பிரபலப்படுத்தியவர் டாக்டர் பாலமுரளி அவர்களே.
பண்டிட் பீம்சென் ஜோஷி , பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியா , பண்டிட் அஜய்சக்ரவர்த்தி போன்றவர்களுடன் இணைந்து ஜுகல்பந்தி இசை நிகழ்வுகளை வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. பத்ராசல ராமதாசர் , அன்னமாச்சார்யா போன்ற பலரின் படைப்புகளைப் பிரபலப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
கணபதி, சர்வாஸ்ரீ, மஹதி, லவங்கி போன்ற ராகங்கள் அவருக்குப் பெருமை சேர்க்கின்றன. அவர் கண்டுபிடித்த ராகங்கள் புதிய எல்லைகளுக்கான அவரது தேடலைக் குறிக்கின்றன. லவங்கி போன்ற ராகங்கள் ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவர் உருவாக்கிய மஹதி, லவங்கி, சித்தி, சுமுகம் போன்ற ராகங்கள் நான்கு ஸ்வரங்களை மட்டுமே கொண்டுள்ளன; அதே நேரத்தில் சர்வ ஸ்ரீ, ஓம்காரி மற்றும் கணபதி போன்ற அவரது பிற ராகப் படைப்புகள் மூன்று ஸ்வரங்களை மட்டுமே கொண்டுள்ளன.
பாலமுரளி அவர்களிடம் பேசியபிறகு, மஹதி ராகத்தில் தான் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் அபூர்வ ராகங்கள் படத்தில் அதிசயராகம் என்ற பாடலை உருவாக்கினார்.
திரைப்படங்களில் நடித்த இவர், திரையில் பாடிய பல பாடல்கள் மிகப் பிரபலமானவை தங்கரதம் வந்தது, ஒரு நாள் போதுமா, சின்னக் கண்ணன் அழைக்கிறான், மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே எனப் பல. இவை தவிர, கண்மலர், தெய்வத்திருமணங்கள், ஶ்ரீனிவாச கல்யாணம் , போன்ற படங்களில் பாடிஉள்ளார். கன்னடப் படமான ஹம்சகீதே, ஆதி சங்காச்சாரியா, பகவத்கீதா, மத்வாச்சார்யா போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.
அவரின் கச்சேரிகள் கேட்டதுடன், 3 முறை சந்தித்து இருக்கிறேன். மிக் மிக எளிமையான, ஈகோ இல்லாத மாகலைஞர்.
2011ல் நான் நடத்திவரும் ரசிகாஸ் கலை அமைப்பின் சார்பாக, மெல்லிசை மன்னர் திரு டி கே ராமமூர்த்தி அவர்களுக்கு மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினேன். அதற்காக திரு பாலமுரளி அவர்களை அழைக்க, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, வாருங்கள் என்று உடனடியாகச் சொன்னார்கள். என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது. அவரின் வீட்டு விலாசம் அவரே ஃபோனில் சொன்னார். Music Academyககு முந்திய தெரு (கனகஶ்ரீ நகர் என நினைவு).
அந்தத் தெருவில் வந்தவுடன் அவர்க்கு மீண்டும் போன் செய்து வீடு எங்கே என்று கேட்டதற்கு, இருங்கள் என்று கூறியவர்கள், அவர் வீட்டு பால்கனிக்கு வந்து நின்று, உங்களைப் பார்த்துவிட்டேன், ஹீரோ ஹோண்டா பைக்தானே, நான் கை அசைக்கிறேன் பாருங்கள் என்றார். இவ்வளவுக்கும் பாராட்டு விழா அவருக்கு இல்லை. அவர் வந்து வாழ்த்தவேண்டும், அவ்வளவுதான்.
எனது சகோதரருடன் அவர் இல்லம் (மாடி) சென்றவுடன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே எங்களை வரவேற்றார். நாங்கள் விழுந்து நமஸ்கரித்து, பொன்னாடை ஒன்றை அணிவித்தோம். உடனே அவர், இங்கே யாருமே இல்லையே கை தட்ட – பொன்னாடையை வேஸ்ட் பண்ணிவிட்டீர்களே என்று சிரித்துக்கொண்டே பேசினார்கள். பால்கனி வரை வந்து வழி அனுப்பினார்.
டாக்டர் பாலமுரளி அவர்களுக்கு 3 மகன்கள் , 3 மகள்கள்.இதில், பாதிப்பேர் மருத்துவர்கள். மருத்துவராகிய ஒரு மகன் டாக்டர் சுதாகர் மற்றும் அவர் மனைவியும் டாக்டர். ஆதம்பாகத்தில் இருக்கும் அவரின் மருத்துவமனையில் எனது இரண்டாவது மகன் பிறந்தான். பாலமுரளி அவர்களின் மருமகள் தான் பிரசவம் பார்த்தவர்.
டாக்டர் பாலமுரளி அவர்கள் ஒரு சங்கீத சாகரம். ஆனால் அவ்வளவு எளிமை. என்னை மிகவும் கவர்ந்த கலைஞர் அவர்.

சில சமயங்களில் உச்சஸ்தாயியில் இவர் குரல் கீச்சிட்டு கேட்டிருக்கிறேன்.
பாகமுரளியின் மிகப்பெரிய விசிறி நான். என்னிடம் அவர் கேசட்டுகள் நிறைய இருந்தன. நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை அப்பா என்னை திருவையாறு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு உட்காரும் மணல்வெளியை ஒட்டி இருக்கும் தடுப்புக்கு வெளியே குறுகிய இடைவெளியில் நடந்து வந்த பாலமுரளி என் அப்பாவை அவருக்குத் தெரிந்த யாரோ என்றெண்ணி “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டு திகைக்க வைத்து, அருகில் நின்ற என் தோள் தடவிச் சென்றார்.
பாக்கியம்.
அவர் பாடிய திரைப்பாடல்களில் உயர்ந்தவர்கள் படப்பாடல் ‘ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே பாடல் லிஸ்ட்டில் விடுபட்டிருக்கிறது. இவர் பாடல்களில் நான் மிக அடிக்கடி கேட்பது பத்ராச்சல ராமதாசர் கீர்த்தனைகள், அஷ்டபதி, ஆரபியில் ஸ்ரீ ரமணவிவோ, ரீதிகௌளையில் ஸ்ரீ நீலோத்பல, அப்பறம் சிந்தா நா ஸ்திகிலா, சேடக ஸ்ரீராமம், முக்கியமாக ஆபேரியில் நகுமோமு
கடவுள் நமக்கு அனுப்பிய கொடைகளில் ஒன்று பாலமுரளியின் குரல், இனிமை, திறமை.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike