மார்கோ போலோ

Marco Polo | Biography, Accomplishments, Facts, Travels ...

பல அத்தியாயங்களாக, யுத்தம், இரத்தம், படையெடுப்பு என்று ஒரே ரணகளம்! அந்த சமாச்சாரங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, இந்த அத்தியாயத்தில் வேறு ஏதாவது, சற்று ‘அமைதியாக’ பேசலாம். முன்பு, பாஹியான், யுவான் சுவாங் என்ற சீன நாட்டுப் பயணிகளைப்பற்றி எழுதினோம். அந்த வரிசையில், இன்று இத்தாலியப்பயணி ஒருவரைப் பற்றிப் பேசலாம்.

The Blogs: Marco Polo, Kublai Khan and Jews of Ancient China | Nicholas Zane | The Times of Israelகடல் கடந்து பயணம் செய்த பயணிகளாலேயே உலகின் சில நிலப்பரப்புகள் கண்டறியப்பட்டன. நாடுகளைப் பற்றிய வரலாறுகள் தெரியவந்தன. அப்படி நாடு விட்டு நாடு சென்ற பயணிகளில் ஒருவர் ‘மார்கோ போலோ’. வெனிஸ் குடியரசில் உள்ள வெனிஸில் 1254ஆம் ஆண்டு பிறந்தார்.

மார்கோ போலோவின் தந்தை  ‘நிக்கலோ போலோ’ மிகப் பெரிய வணிகர். தன்னுடைய சகோதரருடன், கடல்கடந்து சென்று வியாபாரம் செய்துவந்தார். மார்கோ போலோ பிறப்பதற்கு சில மாதங்கள் முன்பே நிக்கலோ, வியாபார ரீதியாக சீனா புறப்பட்டுச் சென்றார். நிக்கலோவிற்கும் சீன அரசரான குபிலாய் கானுக்கும் நட்பு உண்டானது. பதினைந்து ஆண்டுகள் குபிலாய் கான் அரசவையிலே இருந்தார். பிறகு, சீன அரசர், நிக்கலோவின் மூலம் போப்பாண்டவருக்கு ஒரு விண்ணப்பக் கடிதத்தை கொடுத்தனுப்பினார். அதில் தனக்கு வானசாஸ்திரம், கணிதவியல், வடிவக் கணிதம், இசை, இலக்கணம், தர்க்கவியல் ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்ற நூறு கிறித்துவர்களை, சீனாவிற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் குபிலாய் கான்,  நிக்கலோவிடம் ஜெருசலம் நகரில் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்ட புனித எண்ணெயைக் கொண்டு வரும்படியும் பணித்தார்.

நிக்கலோவுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. இந்தப்பயணத்துடன், தனது சொந்த ஊர் வெனிசுக்குப் போய்விட்டு வரலாம் என்பதே அதன் காரணம். மேலும், பதினைந்து வருடம் முன்பு வெனீசிலிருந்து புறப்பட்ட நேரம், அவன் மனைவி, கருவுற்றிருந்ததால், தனது மகனோ/மகளோ வளர்ந்து வாலிபப் பருவத்திலிருப்பதைக் காணவேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

குபிலாய் கானின் வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு நிக்கலோ, சீனாவிலிருந்து வெனீஸ் நகரம் திரும்பினார். வெளி நகரத்திற்கு திரும்பிய பிறகுதான் நிக்கலோ, முதன் முதலாக தன்னுடைய மகன் மார்க்கோ போலோவைப் பார்த்தார். அப்பொழுது மார்க்கோ போலோவுக்கு வயது 16. 2 ஆண்டுகளில் மீண்டும் வியாபாரத்துக்காகக் கிளம்பினார் நிக்கலோ. இந்த முறை, தானும் அவர்களுடன் வருவதாகக் கூறி, மார்கோவும் இணைந்துகொண்டார்.

நிக்கலோ, மகன் மார்கோவோடு சீனா செல்லுமுன், குபிலாய் கானுக்கு செய்யவேண்டியதை செய்ய முனைந்தான். ஜெருசலத்திலிருந்து எண்ணெய் கிடைத்தது. நூறு கிறித்துவர்களைத் திரட்டிக் கொண்டுவர முடியவில்லை.

17 வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பி, பட்டுப்பாதை வழியாக, தந்தையுடன் சேர்ந்து, சீனாவை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தார் மார்கோ போலோ. இந்தப் பட்டுப்பாதை 4 ஆயிரம் மைல்களுக்கு நீண்ட வணிகப் பாதை. துருக்கியிலிருந்து கிழக்கு சீனா, இந்தியா, பாரசீகம் வழியாகச் சென்ற பாதை. வணிகர்கள் இந்தப் பாதை வழியாக பட்டு, பீங்கான், தேயிலை, மசாலா போன்ற பொருள்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். இந்தப் பாதை வழியாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பொருள்கள் மட்டுமல்ல, கலை, கலாச்சாரம், கண்டுபிடிப்பு, சிந்தனை போன்றவையும் பரவின.

மார்கோ போலோ பயணம் செய்த காலகட்டத்தில், பட்டுப் பாதையில் வணிகம் உச்சத்திலிருந்தது. விலை மதிப்புமிக்கப் பொருள்களை வணிகர்கள் கொண்டு செல்வதால், கொள்ளையர்களின் ஆபத்தும் இருந்தது. அப்போது சீனாவை ஆண்ட மங்கோலியர்கள், சாலையின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால், பெரிய குழுக்களாக வணிகர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்தனர்.

நான்கு ஆண்டுகள் பயணம் செய்த பிறகு, மார்கோ போலோ சீனாவை அடைந்தார்.  நிக்கலோ போலோ தன் மகனை சீனாவின் பேரரசர் குப்லாய் கானுக்கு அறிமுகப்படுத்தினார். மார்கோவும் குப்லாய் கானும் நன்றாகப் பழகினர்.

சீன அரசன், நிகலோவைப் பார்த்து மகிழ்ந்தான். நிகலோ, மன்னனிடம்:“அரசரே! ஜெருசலத்திலிருந்து எண்ணெய் கொண்டுவந்திருக்கிறோம்” என்று கூறினான். மன்னன் மகிழ்ந்து பாராட்டினான். நிகலோ மெல்ல, “மன்னா, கிறித்துவர்களைத் திரட்டிக், கொண்டுவர முடியவில்லை. அதற்கு மன்னிப்பு கோருகிறேன்” என்றான்.

கோபமடைந்த குபிலாய் கானை, மார்க்கோ போலோ தன் சாமர்த்தியமான பேச்சுத் திறமையால் சமாளித்தார். குபிலாய் கானுக்கு இளைஞன் மார்கோவை மிகவும் பிடித்து விட்டது. விரைவில் குப்லாய் கானின் தூதுவராகவும் உளவாளியாகவும் மாறினார் மார்கோ.

மார்க்கோ போலோவிற்கு நான்கு மொழிகள் தெரிந்திருந்தன. மேலும் அவர் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும் இருந்ததால், குபிலாய் கான் மார்க்கோ போலோவை தன்னுடைய அரசாங்கத்தில் முக்கியமான பொறுப்புகளில் நியமனம் செய்தார். 

Marco Polo, 1867 by Enrico Podio: Buy fine art printமார்க்கோ போலோ சீனாவில் இருபதாண்டுகளுக்கும் மேல் தங்கினார். பின்னர் குபிலாய் கானிடம், தான் வெனிஸ் நகரம் திரும்பிச் செல்வதாக தெரிவித்தார். குபிலாய் கான், மார்கோவைப் பிரியா மனமில்லாமல், அவருக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் மார்க்கோ போலோவிற்கு, சீனாவிலிருந்து கிளம்புவதற்கு அதிர்ஷ்டவசமாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. குபிலாய் கானின் உடன் பிறந்தவனின் பேரன் பாரசீக நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மணமுடிக்க பெண் தேடி பாரசீகத்திலிருந்து வந்த குழுவிற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மார்க்கோ போலோவை குபிலாய் கான் பணித்தான். பெண் தேடும் வேலை முடிந்து குழு பாரசீகத்திற்குப் புறப்பட்டது. மணப்பெண்ணை பத்திரமாக பாரசீகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அக்குழுவுடன் செல்லுமாறு மார்க்கோ போலோவிற்கு குபிலாய் கான் உத்தரவிட்டான். 

மார்க்கோ போலோ பாரசீகம் செல்லும் வழியில், சுமத்ரா தீவு, சிங்கப்பூர், இலங்கை, தமிழகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றார்.

(தமிழகத்தில் அவன் கண்ட காட்சிகளை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்)

வருடம் : 1295

மார்க்கோ போலோ பாரசீகம் செல்வதற்கு இரண்டாண்டுகள் பிடித்தன. அந்தக் கடுமையான பயணத்தில், ஆறு நூறு பேர் அடங்கிய குழுவில், மார்க்கோ போலோவையும் சேர்த்து வெறும் பதினெட்டு பேர் மட்டுமே எஞ்சினர். பாரசீகத்தில் மணப்பெண்ணை பொறுப்புடன் கொண்டு சேர்த்த மார்க்கோ போலோ அங்கிருந்து வெனீஸ் நகரம் திரும்பினார்.

கிட்டத்தட்ட இருபத்து நான்கு ஆண்டுகள் ஆசியாவெங்கும் சுற்றித் திரிந்துவிட்டுத் தனது தாய்நாடான வெனிசுக்கு வந்த போது அவரின் சொந்த வீட்டைக் கூட கண்டுபிடிக்க இயலாமல் தடுமாறுமளவுக்கு எல்லாமே உருமாறிப்போயிருந்தது. வெவ்வேறு ஆசிய மொழிகளில் பேசிப் பேசி, தாய்மொழி மறந்து போய், வார்த்தைகள் வராமல் தடுமாறிய மார்க்கோ போலோவை உறவினர்கள் நம்ப மறுத்ததுடன், வீட்டுக்குள் நுழையவிடாமல் விரட்டினார்கள்.

அந்தச் சமயம், வெனீஸக்கும் ஜெனோவாவுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. வெனிஸ் நகரம் சென்றவுடன், ஜெனோவா வீரர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் மார்கோ போலோ. அவர் சிறையில் இருந்த சமயத்தில்தான் அவருடைய சிறை நண்பரான ரஸ்டிசெல்லோ டா பிஸ்ஸா என்பவருக்குத் தன்னுடைய பயண அனுபவங்களைக் கூறினார். 

அவர் ‘மார்கோ போலோவின் பயணங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் மூலமே மார்கோ போலோவின் வாழ்க்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

1299 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு வந்தார் மார்கோ. அவர் சீனாவுக்குப் பயணம் செய்த முதல் ஐரோப்பியர் அல்ல என்றாலும், அவர் அதிகமான தகவல்களைக் கொண்டுவந்தவர் என்பதால் வரலாற்றில் புகழ்பெற்ற பயணியாகத் திகழ்கிறார். இவர் மூலமே சீனாவைப் பற்றி ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்துகொண்டனர்.

1298-ஆம் ஆண்டுவாக்கில் புத்தகமாக வெளிவந்த அவரின் பயணக் குறிப்புகள் (Marco Polo ‘s Description of the World) ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் விரும்பி வாசிக்கப்பட்டதுடன், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் போன்றவர்கள் புதிய உலகத்தைக் கண்டறிய புறப்பட உதவும் ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.

அந்நாட்களில் கீழை நாடுகள் பற்றிய அறிவு அதிகம் இல்லாதிருந்த பெரும்பாலான ஐரோப்பியர்கள், மார்கோ போலோ புளுகுவதாக நம்பினார்கள். எரியும் கருப்புக் கற்கள் (நிலக்கரி), காகிதப் பணம், மனிதத் தலையளவு இருக்கும் பருப்புகளைச் (தேங்காய்) சாப்பிடும் மனிதர்கள் போன்ற தகவல்கள் அவர்களுக்குக் கதைகளாகவே தெரிந்தன.

சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் விரவிக் கிடக்கின்றன. மார்கோ போலோ எழுதியவற்றை வெனிஸ் மக்கள் நம்பவில்லை. வெனிஸ் நகரத் தெருக்களிலே அவர் நடந்து செல்கையில், சிறுவர்கள் அவரைப் பின் தொடர்ந்து, ‘மார்கோ போலோ இன்னொரு பொய் சொல்லு! ‘ என்று கேலி செய்வார்களாம். அவரின் மரணத்திற்குப் பின்னால் (ஜனவரி 8, 1324) வெனிஸ் நகரக் கோமாளிகள் மார்க்கோ போலோவைப் போல உடையணிந்து, நம்பவியலாத பல கதைகளைச் சொல்லித் திரிந்தார்களாம்.

மரணப்படுக்கையில் இருந்த மார்க்கோ போலோவை அணுகி, ‘இப்பொழுதாவது நீங்கள் சொன்னவை அனைத்தும் பொய் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்பொழுதான் உங்களின் ஆத்மா சாந்தியடையும் ‘ என வேண்டிய அவரின் நண்பர்களுக்கு அவர் சொன்ன, ‘I have not told half of what I saw ‘ என்ற பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. எது எவ்வாறாயினும், அவரின் Description of the World புத்தகம் பிற்கால ஐரோப்பிய சந்ததியினருக்கு உலகைப் புரிந்து கொள்ள உதவியாயிருந்தது என்பதே வரலாறு.

69 வயதில் நோய்வாய்ப்பட்ட மார்கோ, ஜனவரி 8, 1324 அன்று வெனிஸில் இறந்தார்.

வாசகப் பெருமக்களே! சரித்திரம் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதே என்று எண்ணினால் ஏமாந்தே போவீர்கள்.

தென்னிந்தியாவிற்கு, சரித்திரத்தில், இதுவரை காணாத பேரழிவு வரவிருக்கிறது. புயலுக்கு முன் அமைதி என்பது போல..

பார்க்கலாம்.