(ஓர் அடி
யார் – ஒரு வெண்பா)

63). சுந்தரமூர்த்தி நாயனார்
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூர் என்னும் ஊரில் மாதொரு பாகனார்க்கு வழிவழியாகத் தொண்டு செய்து வந்த ஓர் ஆதிசைவ வேதியர் குலத்தில் மேன்மை மிக்க சடையனார்க்கும், குற்றமற்ற கற்புடைய குலமங்கை இசைஞானியார்க்கும் திருமகனாகத் தோன்றியவர் சுந்தரர்.
இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரர்க்குப் புத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மணநாளன்று ஒரு முதியவர் , சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாக ஓர் அடிமை ஓலையைக் காட்டிச் சுந்தரர் தனக்கு அடிமை என்ற வாது செய்து வென்று பின் கோவிலுள் சென்று மறைந்தார்.
இறைவனே தம்மைத் தடுத்தாட் கொண்டான் என்பதைச் சுந்தரர் உணர்ந்து கொண்டார்.
பின்னர்ப் “ பித்தா! பிறைசூடி,! பெருமானே!” என்று தொடங்கும் பாடலைப் பாடி இறைவனைத் துதித்தார்.
இறைவனைத் தம் தோழனாகக் கருதிய சுந்தரர், பதிகள் தோறும் சென்று அவனைப் பணிந்து வழிபட்டுப் பதிகங்கள் பாடத் தொடங்கினார்.
திருவாரூரை அடைந்த போது அங்குப் பரவையார் என்ற பெண்ணைக் கண்டு காதல் கொண்டு மணம் செய்து வாழ்ந்து வந்தார்.
திருவாரூரில், “ தில்லைவாழ் அந்தணர்” என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகையைப் பாடினார். சிவபெருமானின் அடியவர்களைக் குறிப்பிடும் இந்நூல் பெரிய புராணம் எழுதுவதற்கு முதல்நூலாக அமைந்தது.
சேரமான் பெருமாள் நாயனார் என்று அழைக்கப் பெற்ற கழறிற்றறிவார் நாயனாரின் நட்பு இவருக்குக் கிடைத்தது. சுந்தரர் பலமுறை சேர நாடு சென்றார். சேரமான் பெருமாள் நாயனாரும் திருவாரூர் வந்து சுந்தரருடன் தங்கி மகிழ்ந்தார்.
பல ஊர்களுக்குச் சென்று இறைவனைப் பாடி வந்த சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியார் என்ற பெண்ணைக் கண்டு விருப்புற்று, அவரைப் பிரிய மாட்டேன் என்ற சத்தியம் செய்து கொடுத்துத் திருமணம் செய்து கொண்டார்.
சிறிது காலம் சென்றதும் திருவாரூர் இறைவன் வீதிவிடங்கன் நினைவு வரவே, சத்தியத்தை மீறித் திருவாரூருக்குப் புறப்பட்டுச் சென்றார். சத்தியத்தை மீறிய காரணத்தால் ஒற்றியூர் எல்லையைத் தாண்டிய உடனே இரண்டு கண்களின் பார்வையை இழந்தார்.
மற்றவர் உதவியுடன் ஆரூரை நோக்கிச் செல்கையில், காஞ்சியில் அன்னையின் திருவருளால் இடக்கண்ணைப் பெற்றார்.பிறகு திருவாரூர் சென்று “ மீளா அடிமை” என்ற பாடலைப் பாடி இரண்டாவது கண்ணையும் பெற்றார்.
தம் மீது ஊடல் கொண்டிருந்த பரவையாரிடம் தம் தோழனாகிய இறைவனையே தூதாக அனுப்பி ஊடலைத் தணியச் செய்தார்.
மீண்டும் தல யாத்திரை செல்லத் தொடங்கிய சுந்தரர், வழியில் திருப்புக்கொளியூர் ( அவிநாசி) என்ற ஊரில் முதலை உண்ட பாலகன் ஒருவனைப் பதிகம் பாடி, அம்முதலை வாயிலிருந்து மூன்றாண்டு வளர்ச்சியுடன் மீட்டுக் கொடுத்தார்.
ஒருமுறை சிவபெருமான், பரவையார் செய்யும் அன்னதானத்திற்காக அருளிய பன்னீராயிரம் பொன்னை திருமுதுகுன்றத்தில் (விருத்தாச்சலம்) உள்ள மணிமுத்தாற்றில்,அவன் கட்டளைப்படிப் போட்டு விட்டுப் பிறகு அப்பொற்காசுகளைத் திருவாரூரில் உள்ள கமலாலயக் குளத்தில் இருந்து இறைவன் அருளால் எடுத்த அற்புதத்தை நிகழ்த்தினார்
“ ஆற்றில் போட்டுக் குளத்தில் எடுப்பது” என்ற சொலவடை இதன் பின்னர்த் தோன்றியது.
சேர நாட்டுத் தலங்களை வணங்கி வருகையில் திருவஞ்சைக் களத்தை அடைந்தார். நெஞ்சம் உருக வணங்கிய சுந்தரர்,
“ தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே?” என்று தொடங்கும் பதிகம் பாடி இவ்வுலக வாழ்வை விடுத்து இறைவன் திருவடியைச் சேர்தல் வேண்டும் என்ற விண்ணப்பம் செய்து கொண்டார்.
இறைவன் அருளால் கயிலையில் இருந்து வெள்ளை யானை வரவும் அதில் ஏறிக் கயிலை நோக்கிச் சென்றார்.
அவர் செல்வதைக் கண்ட சேரமான் பெருமாள் நாயனார் தம் குதிரை மீதேறி அதன் காதில் சிவமந்திரத்தை ஓதினார். அக்குதிரை வெள்ளை யானையைத் தொடர்ந்து சென்று அதனை வலமாய் வந்து பின்னர் அந்த யானையின் முன் சென்றது.
இருவரும் கயிலையை அடையவும் சுந்தரர் தடையின்றி உள்ளே சென்று இறைவனை வணங்கிச் சேரமான் வந்துள்ளதைக் கூறினார்.
பிறகு உள்ளே வரவழைக்கப்பட் சேரமானிடம், ,” நான் அழைக்காமல் ஏன் இங்கு வந்தாய்?” என்று இறைவன் கேட்டான்.
“ நான் சுந்தரரைத் தொழுத வண்ணம் வந்தேன். உன் கருணை வெள்ளம் என்னை இங்குக் கொண்டு வந்து சேர்த்தது. என் விண்ணப்பம் ஒன்றுள்ளது. நான் பாடிய ஞான உலாவைக் கேட்டருள வேண்டும்”என்றார். ஆதி உலாவாகிய ஞான உலாவை அவர் பாடக் கேட்ட இறைவன் ,” சுந்தரனுடன் நீயும் சேர்ந்து இருந்து கணங்களுக்குத் தலைமை ஏற்று, இருவரும் இங்குத் தங்குவீராக!” என்று திருவருள் செய்தார்.
இதனை அருணகிரிநாதர்,
“ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி ….லையிலேகி
ஆதியந்த உலாவாசு பாடிய
சேரர் கொங்கு”
என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறார்.
பெரிய புராணத்தில் முதலிலும், நடுவிலும், முடிவிலும் சுந்தரர் வரலாறு பேசப்படுவதாலும், அவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையில் உள்ள அடியார்கள் வரலாறுகள் தொடர்ந்து கூறப்படுவதாலும், இக்காப்பியத்தின் தலைவராக நம்பியாரூரராகிய சுந்தரர் திகழ்வதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
சுந்தரமூர்த்தி நாயனார் வெண்பா
பித்தனைப் பாடிப் பெருமைமிகு தொண்டரின்
அத்தொகையைப் பாடி அறியவைத்(து) – இத்தரையில்
அற்புதங்கள் ஆற்றி அணிவெள்ளை ஆனையில்
பொற்கயிலை போனகதை போற்று!
வாழ்த்து
ஆடும் இறைவன் அடியவர் தம்பெருமை
நீடுலகில் வாழ்க நிலைத்தென்றும் – பீடும்
புகழும் வளமும் பொலிவும் நலமும்
மிகவாழ்க மக்கள் மகிழ்ந்து!!!
ஓம் நமசிவாய!
(நிறைவுற்றது)
