வானொலி நினைவுகள் - Her Storiesஇதுவும் கிட்டத்தட்ட 50 வருடத்துக்கு முன் ரேடியோவில் கேட்ட ஒரு நாடகம்.

நேரிலே பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுத்திய நாடகம்.

ஒரு நகரத்தில் ஒரு மருத்துவ மனை. மிகவும் பிரபலமானது. அந்த நகரத்தில் அதைத் தவிர அவளவு பிரபலமான மருத்துவ மனை கிடையாது. அதில் டாக்டராக இருக்கிறார் லோகேஷ். மிகப் பிரபலமான டாக்டர். ரொம்ப நல்ல பெயர் பெற்றவர்.

அந்த ஊரில் இருக்கும் மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்துக்கு அவரை பிடிக்கவே பிடிக்காது. துரோகி, நன்றி மறந்தவன் என்று திட்டு வார்கள். இத்தனைக்கும் லோகேஷ்  என்ற அனாதைப் பையனை படிக்க வைத்தவர் அந்த குடும்பத்தின் தலைவர் தான். அவர் இப்போது இல்லை.

அவர்தான் ஏழையாக, அனாதையாக இருந்த அவனை படிக்க வைத்து இந்த மருத்துவ மனையில் சேர்ந்து விட்டவர்.

அவர், உடல்நலம் சரி இல்லாமல் இங்கே அனுமதிக்கப்பட்ட போது லோகேஷ் தான் முழுக்க முழுக்க கவனித்துக் கொண்டான். ஆனால்….

அவருக்கு ஒரு வியாதி அதற்கு வெளி நாட்டிலே இருந்து ஒரு மருந்தை வரவழைக்க (ஊசி மருந்து) வேண்டும். அவருடைய வசதிக்கு எங்கெங்கோ பேசி பெரிய செலவு செய்து வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
அதே சமயம் ஒரு 18 வயது வாலிபனும் அதே வியாதியுடன் அனுமதிக்கப்பட்டான்.அந்த வயதானவர் வெகுநேரம் டாக்டரிடம் பேசினார். பின்னர் அந்த ஊசி அந்த வாலிபனுக்கு போடப்பட்டது. அந்த வசதியான வயோதிகர் மரணமடைந்தார். அந்த குடும்பமே டாக்டர் லோகேஷை, நன்றி கெட்டவன், கொலைகாரன் என்று திட்டித் தீர்த்தார்கள். அவரை அந்த மருத்துவமனையை விட்டு, ஊரை விட்டு துரத்த முயன்றார்கள்.

அந்த மருந்தை அந்த வாலிபனுக்கு உபயோகிக அனுமதித்து அந்த பெரியவர் எழுதிக் கொடுத்த கடிதம் அந்த மருத்துவ மனையில் இருந்தது. அதனால் லோகேஷ் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அவராகவே அந்த ஊரை விட்டு போய்விடுவார் என்று அந்த குடும்பம் எதிர் பார்த்தது. அவர் மீது அந்த பெரியவரின் மனைவி மிக மிகக் கோபமாக இருந்தாள். அவளும் லோகேஷுக்கு உணவு கொடுத்து கணவன் அவரை படிக்க வைத்ததற்கு ஆதரவாக இருந்தார். பெற்ற பிள்ளை போல நடத்தினார். அவரும் லோகேஷ் அங்கே இருந்து போய்விடுவான் என்று நினைத்தார்.

ஆனால் பல வருடங்கள் ஆகயும் அவர் அதே மருத்துவ மனையில் வேலை செய்தார்.

ஒரு முறை அந்த அம்மாவுக்கு உடம்பு மோசமாகி, அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவரே அங்கேதான் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

சில நாட்கள் கழித்து வீட்டு மனிதர்கள் யாரும் இல்லாதபோது, “டாக்டர் லோகேஷை பார்க்க வேண்டும்” என்று கேட்டார்.

டாக்டர் லோகேஷ் வந்து “அம்மா..” என்று கண் கலங்கி நின்றார். டாக்டரின் கையைப் பிடித்துக் கொண்டு “டேய் லோகேஷ், எல்லோரையும் போல நானும் உன்னை தப்பா நினைச்சுட்டேன். தப்பா எடுத்துக்காதே. எனக்கும் வாழ்க்கை வெறுத்து விட்டது. பாசம், அன்பு எல்லாம் நம் உடம்பில் சக்தியும், கையில் பணமும் இருக்கும் வரையில் தான். இப்பதான் என் கணவர் கடைசியில் சொன்னது புரிந்தது. அந்த மருந்தை அவர் ஏன் தனக்கு வேண்டாம் என்று சொன்னார் என்று… அதைத் தவிரவும் நிறைய சொன்னார். இப்போ புரிகிறது. நான் வேண்டாதவளாகப் போய்விட்டேன். படுத்த படுக்கையாகப் போய்விட்டேன். நான் ஒரு பாரமாகப் போய்விட்டேன். நான் போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறார்கள். எனக்கும் ஏதாவது செய்து என்னை அனுப்பிவிடு… நான் குணமாகி திரும்பப் போகமாட்டேன்… அதாவது பண்ணு… ‘ என்று கண்ணீர் விடுகிறாள்.

“அம்மா, எத்தனை வருஷம் வேணும்னாலும் நான் பாத்துக் கிறேன் அம்மா. நான் இங்கே இப்படி வசதியாகவும், மதிப்போடும் வாழ நீங்க தானே காரணம். அப்பா அப்பவே சொன்னார். இந்த மாதிரி ஒரு நிலை உங்களுக்கு வரும் என்று. அவரும் அந்த நிலையில் தான் வந்தார். அவருக்குப்பின் அவர் சொத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது என்று அவர்கள் சண்டை போட்டுக் கொள்வதை அவர் கேட்டு விட்டார். அதனால்தான் ஒரு வாலிபனுக்கு வாழ்வு கொடுக்கவும் முடிவு செய்தார். அந்த வாலிபன் இப்போ ஒரு மிகச்சிறந்த இஞ்சினியர். அவன் படிக்க நானும் கொஞ்சம் உதவி செஞ்சேன். உங்கள் வளர்ப்பு அம்மா நான்.

ஒருநாள் உலகத்தையும், கூட இருப்பவர்களையும் புரிந்து கொண்டு நீங்கள் இங்கே வருவீர்கள் என்று அப்பா அப்பவே சொன்னார். நான் என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னார். அவருடைய கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும் அம்மா. அதற்காகத்தான் இத்தனை வருஷம், நீங்கள் எல்லாம் வெறுத்த போதும், திட்டி விரட்டியபோதும் நான் இந்த இடத்தை விட்டுப் போகவில்லை. உங்கள் பெயரில் இருக்கும் சொத்தை எல்லாம் இவர்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டு என் கூட வாருங்கள். நீங்கள் தான் எனக்குச் சொத்து. இதுக்காகத்தான் இத்தனை வருஷம் இங்கே காத்திருந்தேன்.. “

என்று இவளின் கையை இரு கைகளாலும் பிடித்துக்கொள்வார். அந்த அம்மா அவன் கைகளை கண்ணில் ஒற்றைக் கொண்டு “லோகேஷ்….. ” என்று கண்ணீர் விடுவாள்.நான் ரேடியோவில் கேட்ட போதும் நேரில் பார்த்தது போல உணர்ந்தேன்… இதன் விளைவுதான் கடைசி சில வரிகள்.