புத்தகம் : I Have The Streets – A Kutti Cricket Story
எழுதியவர் : R.Ashwin & Sidharth Monga
Foreword by : Rahul Dravid
Published by : Penguin Random House India
173 pages. Price : Rs. 599/-
நான் பார்த்த வரையில் தொடர்ந்து புத்தகங்களை வாசிப்பவர்கள் நம் சூழலில் மிகச் சிலரே. இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறதா, கூடி வருகிறதா என்பதை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் இவர்கள் சொற்பமானவர்கள்தான்.
என்னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டால் என்னுடைய தலைமுறையை விட அடுத்த தலைமுறையில், புத்தகம் வாசிப்பது குறைந்திருக்கிறது. தேவையானபோது தகவல்களை திரட்டிக் கொள்கிறார்கள் – அவ்வளவே.
என் அண்ணன் மகன் சுதர்சன் புத்தகங்களைப் படிக்கிறான் என்பதிலே எனக்கு அளவில்லா சந்தோஷம். ஏனென்றால், அவ்வப்போது அவன் படித்ததில் பிடித்ததை என்னிடமும் படிக்கக் கொடுக்கிறான்.
I have The Streets – A Kutti Cricket Story என்ற கிரிக்கெட் வீரர் அஷ்வினின் வாழ்க்கையை விவரிக்கும் சமீபத்திய வெளியீடு அப்படித்தான் என் கைக்கு வந்து சேர்ந்தது. சித்தார்த் மோங்கா என்ற எழுத்தாளருடன் இணைந்து இந்த நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார் அஷ்வின்.
கிரிக்கெட் பார்ப்பேன், ரசிப்பேன் என்றாலும் பக்கத்துக்குப் பக்கம் கிரிக்கெட்டாக இருந்தால் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்துடன்தான் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.
முதலிலே உள்ள அத்தியாயங்கள் என் பயத்தைப் போக்கி நம்பிக்கையை அளித்தன. தன்னுடைய இளமைக்கால போராட்டங்களை உள்ளது உள்ளபடி வேர்க்க விறுவிறுக்க விவரித்திருக்கிறார் அஷ்வின். வெற்றி வாசலை அடைய அவர் பட்ட துன்பங்களும் சமாளிக்க வேண்டிய எதிர்ப்புகளும் எண்ணிலடங்கா. டென்னிஸ் பந்தை வைத்துக்கொண்டு அவர் வசித்த மேற்கு மாம்பலத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம் தெருக்களிலிருந்து, படிப்படியாக வெற்றி பெற்று, இந்திய கிரிக்கெட் அணியிலும், ஐபிஎல்லிலும் சேர்ந்து, தொடர்ந்து விளையாடி, அடைந்த சாதனை இலக்குகள் பற்பல. இந்த சாதாரண மத்திய தர சிறுவனின் அசாதாரண கிரிக்கெட் பயணத்தை இந்த நூல் விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது.
இதில் என் மனதைத் தொட்ட விஷயம் அஷ்வினின் பெற்றோரும், அவருடைய தாத்தாவும் இவரைத் தொடர்ந்து தூக்கிப் பிடித்திருக்கும் விஷயம்தான். அவரிடம் ஆர்வமும் உழைப்பும் மிகுந்திருந்தாலும், அவருடைய குடும்பத்தார் தந்த ஊக்கமும், ஆதரவும், உழைப்பும், விடா முயற்சியும், தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது. படிக்கும் இளம் பெற்றோர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரவல்லது.
நீங்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், நிச்சயம் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் படித்து மகிழலாம். கட்டாயம் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய நூல் இது.


தமிழ்ப் புத்தகங்களை படிக்கும் அளவு சௌஜன்யம், வேகம் எனக்கு ஆங்கிலப் புத்தகங்களில் இல்லை. சற்று மெதுவாகத்தான் படிக்கத் தோன்றும்!
ஏற்கனவே சச்சின், ராகுல் டிராவிட் புத்தகங்களை வாங்கிப் படித்த என் மகன் ஏனோ இதில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் வீட்டிலும் நான் மட்டுமே அச்சுப் புத்தகங்கள் படிக்கிறேன்!
இப்படி ஒரு புத்தகம் வெளியாகி இருப்பதை இந்தப் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்!
– எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike