எஸ்.ஏ.பி.

முப்பதாண்டுக் காலம் வார இதழ் உலகில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்ட குமுதம் இதழின் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. (டிசம்பர் 2,1924-ஏப்ரல் 17,1994).சிறந்த நாவலாசிரியர். அரசு பதில்கள் மூலம் கேள்வி-பதில்கள் பகுதியைப் பிரபலமாக்கி ஏராளமான வாசகர்களை வாசிக்க வைத்தவர். தேசியவாதியான அவர் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர். நிறையப் படித்தவர், ரசனை மிக்கவர். இருந்தபோதிலும் ‘என் பத்திரிகை ஒரு பாமரனுக்காக’ என்பதில் உறுதியாக இருந்தவர். இந்த ஆண்டு எஸ்.ஏ.பியின் நூற்றாண்டு விழா ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ‘
அழியாத ரேகைகள்’ என்ற தலைப்பில் பத்திரிகை உலக முன்னோடிகள் குறித்த உரையின் மூன்றாவது நிகழ்வு சென்னையில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. பற்றி அந்த இதழின் ஆசிரியராக இருந்தவரும் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் உரைநிகழ்த்தினார்.
அதன் சாராம்சம்.
எஸ்.ஏ.பி. குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தவர்களை வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்கள் என்று அழைப்பார்கள். எஸ்.ஏ.பி.யோ தங்க ஸ்பூனோடு பிறந்தவர் என்று சொல்லத்தக்க அளவிற்கு பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். அகங்காரம், அலட்சியம், ஆடம்பரம் இல்லாதவர்.எளிமையானவர். கதர் வேட்டியும் அரைக்கை சட்டையுமே அவரது ஆடை. வக்கீலுக்குப் படித்த அவர் வழக்கறிஞராகப் பணியாற்றவில்லை. இளம் பருவத்திலேயே பத்திரிகைத் துறையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. பிரசண்ட விகடன், சுதேசமித்திரனில் சிறுகதைகள் எழுதினார்.
1947-ம் ஆண்டு நவம்பரில் தனது 23-வது வயதில் நண்பர் பார்த்தசாரதியுடன் இணைந்து குமுதம் இதழை தொடங்கினார். பெரிய கருப்பனின் தேவி பிரஸில் புத்தகம் அச்சிடப்பட்டது.டாக்டர் அழகப்பன் செட்டியார் கெளரவ ஆசிரியர். 2000 பிரதிகள் விற்பனையுடன் தொடங்கிய குமுதம் இதழ் விற்பனையை 1970-களில் 5 லட்சம் பிரதிகள் என்ற அளவுக்கு மட்டுமல்ல ஆசியாவிலேயே அதிகம் விற்பனையான இதழ் என்ற நிலைக்கு கொண்டுவந்தார். குமுதம் இதழ் மூலம் ஏராளமான எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் உருவாக்கினார். தனது புகைப்படமோ குடும்பத்தார் புகைப்படமோ வருவதை விரும்பாதவர்.
எஸ்.ஏ.பி.சிறந்த நாவலாசிரியரும் ஆவார். மலர்கின்ற பருவத்திலே என்ற படைப்பை அவரது சிறந்த நாவலாக கருதுகிறேன். செட்டி நாட்டுப் பகுதி வாழ்க்கையைப் பற்றிய முதல் நாவலாக அவரது சின்னம்மா அமைந்தது.காதலெனும் தீவிலே, பிரம்மச்சாரி, நீ, நகரங்கள் மூன்று சொர்க்கம் ஒன்று உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட நாவல்களை அவர் எழுதியுள்ளார்.
ரா.கி.ரங்கராஜன்,சுந்தரேசன், புனிதன் ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழுவுடன் எஸ்.ஏ.பி. திறம்பட செயல்பட்டார்.1983-இல் குமுதம் இதழில் சேருமாறு என்னை அழைத்தார். எனக்கு தயக்கம் இருந்தது. அவர் அழைப்பை தட்டமுடியாது வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வருதாக ஒப்புக்கொண்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய காலத்தை மறக்க முடியாது. தீபாவளி மலரில் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய வேள்வித் தீ நாவலை சுருக்கி வெளியிடும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது.அந்த புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. படித்து விட்டு தந்துவிட வேண்டும் என்று கூறி அவர் பராமரித்த நூலகத்திலிருந்து எஸ்.ஏ.பி. அந்த நாவலை எடுத்துக் கொடுத்தார். 1994-இல் குமுதம் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன்.
‘ஹரிஓம்’ அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தை. சந்திப்பின் போது அந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்.நெருங்கிய நண்பர்களை சாமி என்று அழைப்பார்.இருகரம் கூப்பிய நிலையில் தோளில் வேல் சாய்த்துக் கொண்டு இருக்கும் குழந்தை முருகன் அவருக்கு விருப்பமான புகைப்படம். அவரது காலத்தில் ஆசிரியர் குழு கூட்டம் நண்பர்கள் அரட்டை மாதிரி இருக்கும். பிரசுரமானதை போஸ்ட்மார்ட்டம் செய்வது அவருக்கு பிடிக்காது.அரசு பதில்கள் பற்றி பல்வேறு வதந்திகள் உண்டு. அந்த பகுதியை அவர் காலம் வரை அவர்தான் எழுதினார்.ஒவ்வொரு இதழிலும் ‘சர்ப்ரைஸ்’ இருக்க வேண்டும் என்று விரும்பினார். வாசகர்களின் இதழாக குமுதத்தை அவர் கொண்டு வந்தார்.
பிரார்த்தனை கிளப் பகுதி குமுதத்தில் பிரபலமானது. கூட்டுப் பிரார்த்தனை மூலம் நோயுற்ற ஏராளமான வாசகர்கள் குணமடைந்தனர்.
கீதையின் எல்லா ஸ்லோகமும் அவருக்குத் தெரியும். அரசு பதில்களில் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றி எழுதினார். வைர மோதிரக் கதைகள் என்ற பெயரில் சி.சு.செல்லப்பா, குமாரசுவாமி உள்ளிட்ட ஆளுமைகளின் கதைகளைப் பிரசுரம் செய்தார். கணையாழியில் வெளியான ஜெயந்தனின் ‘ நினைக்கப்படும்’ கதையை குமுதம் இதழில் மறுபிரசுரம் செய்தார். தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனின் முன்னுரை பெற்று அரசு பதில்கள் தொகுப்பை நூலாக வெளியிட்டார்.கண்ணதாசனின் மறைவின் போது குமுதத்தில் துணைத் தலையங்கம் வெளியானது.
உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்து தேறி வெளி வந்த பிறகு அவர் குறிப்பிட்ட சிந்திக்கத் தக்க சிறந்த வாசகம் இது. ‘பற்றோடு உழைத்தது ஒரு காலம்.பற்றின்றி ஒதுங்கியிருந்தது ஒரு காலம்.இப்போது பற்றின்றி உழைக்கும் ஒரு பருவத்தை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிறான். அதற்கு நன்றி’.
எஸ்.ஏ.பி.யின் நூற்றாண்டு விழா ஆண்டு இது. பத்திரிகை உலகம் இதை சிறப்பாகக் கொண்டாடி இருக்க வேண்டும் என்றார் மாலன்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எஸ்.ஏ.பி. எழுதிய ‘சின்னம்மா நாவல்’ அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மணியம் செல்வன்

லோகநாதன் என்ற இயற்பெயர் கொண்ட மணியன் செல்வன்( ம.செ.) பிரபல ஓவியர் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் மணியத்தின் மகன். சென்னை ஓவியம் மற்றும் கைவினைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.கல்கியின் வெளிவராத அரும்பு அம்புகள் புதினத்துக்கு ஓவியம் வரைந்து பரவலாக கவனம் பெற்றார். சுஜாதாவின் பூக்குட்டி, தேவிபாலாவின் மடிசார் மாமி தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் வெகுவாகப் பேசப்பட்டன.எஸ்.ஏ.பி. குறித்த உரையை கேட்க வந்த அவரிடம் ஒரு மினி நேர்காணல்.
அனுபவம் பெற்றாலும் ஒரு புதிய படைப்பை உருவாக்கும் போது பயம் இருக்கும். மகாசக்தியின் அருள், குரு அருளும் திரு அருளும் இருந்தால் மட்டுமே படைப்பு சிறக்கும். முதல் பரீட்சை எழுதும் போது மார்க் எப்படி வரும் என்ற மனநிலைதான் இப்போதும். நான் இன்னும் வளர வேண்டும். பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஆகச் சிறந்த ஓவியம் தீட்டி இளம் வயதிலேயே உச்சம் பெற்று விட்டார் அப்பா. நான் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. 1976-இல் கல்கியில் கல்கியின் அரும்பு அம்புகள், 1977-இல் விகடனில் சாண்டில்யன் எழுதிய மனமோகம், கலைமகளில் லட்சுமி ராஜரத்தினம் எழுதிய நாவல் ஆகிய மூன்று படைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்தேன். என்னுடைய ஓவிய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை காலம் அது. என்னுடைய தனி ஸ்டைல் இது என்று நிலைநிறுத்திக் கொள்ள அந்த ஓவியங்கள் எனக்கு பெரிதும் உதவின.
வாலியின் கிருஷ்ண விஜயம். தமிழருவி மணியனின் ஊருக்கு நல்லது சொல்வேன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்று ஒரே சமயத்தில் மூன்று தொடர்களுக்கு ஓவியம் வரையும் அரிய வாய்ப்பை விகடன் அளித்து கெளரவித்தது. ஓவியக் கல்லூரியில் படித்த போதே சுஜாதா தொடருக்கு ஓவியம் தீட்டும் வாய்ப்பை குமுதம் வழங்கியது.
‘லேட் மாஸ்டர்’ என்ற பெயர் எனக்கு இருப்பது உண்மைதான் படைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது. இளம் வயதில் எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு இருக்கவில்லை. ராணுவம், விமானப்படையில் சேரும் விருப்பம் இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும் வெளிநாட்டு ஓவியரின் ஓவியங்களை வரைந்து அப்பாவிடம் தயக்கத்துடன் காட்டினேன். அவர் என்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். முதலாண்டு முடிவில் இளம் வயதிலேயே அப்பா இறந்துவிட ஓவியமே எனது பிரதானமாகிவிட்டது. பத்தாம் வகுப்பு படித்த போது ஆண்டு மலரில் காண்டா மிருகம் படம் வரைந்தேன். இதுவே எனது முதல் ஓவியம். 11-வது வகுப்பு படித்தபோது லால்பகதூர் சாஸ்திரி படம் வரைந்தேன். அப்போது அவர் நாட்டின் பிரதமராக இருந்தார்.
ஓவியர்கள் வாழ்வில் கற்பனை வளத்துக்கு எப்போதும் குறை இருக்கக் கூடாது.பழையவற்றை ஆராதிக்க வேண்டும்.புதியவற்றைத் தேடித் தேடி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கிறேன் என்று அதன் உயிரை எடுத்து விடக்கூடாது. கல்லை தேய்த்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அது இல்லாமலே போய்விடும்.
கார்ட்டூன், ஜோக், சைலன்ஸ் ஜோக்குகள். சிறுகதை, தொடர்கதை, அட்டைப்படம் என பல்வேறு இதழ்களை தனது ஓவியங்களால் சிறப்பித்தவர் பிரபல ஓவியரான மறைந்த கோபுலு. ஹால்ஸ்ய உணர்வு மிக்கவர்.உடல் நலம் குணமாகி வந்திருந்த அவரை நேரில் பார்க்கப் போயிருந்தேன்.வயதான தாத்தா ஒருவர் அழகாக பல்லோடு சிரிப்பது போன்ற படத்தை வரைந்து பரிசளித்தார். அதனை பத்திரமாக இன்னமும் பாதுகாத்து வைத்துள்ளேன் என்றார் மணியம் செல்வன்.
புஷ்பா தங்கதுரை

பத்திரிகை உலகில் 1970, 1980-களில் பிரபலமாக இருந்த பெயர்களில் ஒன்று புஷ்பா தங்கதுரை. ஆணா பெண்ணா என்று தெரியாது அவரது கிளுகிளுப்பான கதைக்கும் நடைக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கவே செய்தது. எழுத்தில் இதுவும் ஒரு வகை என்று ஒருசாராரும் இப்படியெல்லாம் எழுதலாமா என்று ஒருசாராரும் விமர்சனம் செய்தனர். என் பெயர் கமலா. சிவப்பு விளக்கு கதைகள் புஷ்பா தங்கதுரையின் சர்ச்சைக்குள்ளான படைப்புகள். இவர் எழுதிய ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா ஆகிய நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன.
ஸ்ரீ வேணுகோபாலன் என்பது இவர் நிஜப் பெயர். இந்தப் பெயரில் அவர் எழுதிய திருவரங்கன் உலா சரித்திர நாவலும் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சரிதமான சத்யமே சாயி நூலும் குறிப்பிடத்தக்க படைப்புகள்.
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் அவர் கல்கியில் 1980-இல் எழுதிய கடலுக்குள் ஜூலி நாவல் முற்றிலும் வித்தியாசமானது. ஜெயராஜ் ஓவியங்கள் நாவலுக்கு மேலும் மெருகூட்டின. சரித்திர கதைகளுக்கு மட்டுமே சம்பவ இட பயணங்கள், ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. சமூகக் கதைகள் எழுதவும் கூட இன்று ஆ்ய்வு நடத்துகிறார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று கட்டத்தை டாமினிக் லாபியரும் லாரி காலின்ஸும் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற தலைப்பில் ஒரு நாவல் போல் எழுதினர்.அவர்கள் அடுத்து எழுதியது ‘ஜந்தாவது குதிரை’ என்ற பரபரப்பான நாவல். ஏராளமான உண்மைத் தகவல்கள் அதில் உள்ளன. ஆய்வுக் கதைகள் வாசகர்களுக்கு விஷய ஞானத்தை அளிக்கின்றன.
தமிழில் தீவிர ஆராய்ச்சிகளுடன் வெளிவந்த நாவல்களில் ஒன்று என்ற சிறப்பு புஷ்பா தங்கதுரையின் கடலுக்குள் ஜூலிக்கு உண்டு.கதை நாயகன் மல்லிக்.ஆய்வுகளில் விருப்பமுள்ள இளைஞன். ராமநாதபுரம் அருகே கனி நாகலாபுரத்தில் 1840-இல் எச்.எம்.எஸ். ஜூலி காண்ட் என்ற கப்பல் புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்த விவரம் கிடைக்கிறது. தங்கம், வெள்ளி என விலையுயர்ந்த பொருள்கள் கப்பலில் கொண்டு வரப்பட்ட தகவலும் தெரிகிறது. பணக்கார நண்பன் ராம்சந்த், தோழன் கோபி, கோயில் அர்ச்சகர் பெண் சம்பகா உதவியுடன் கனி நாகலாபுரத்தில் மூழ்கிய கப்பலைத் தேடுகிறான் மல்லிக். இந்த அபாயரகப் பயணத்தில் ஏராளமான இன்னல்களை எதிர்கொள்கிறான். சாகசப் பயணத்தில்அவர்கள் மூழ்கிய கப்பல் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றனர்.அவர்களுக்கு ‘பாங்க் ஆப் இங்கிலாந்து’ முத்திரையுடன் 5 தங்கப் பாளங்களும் கிடைக்கின்றன. வொய்ட் என்ற ஆங்கிலேயரும் இந்தக் கப்பல் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். வொய்ட் கப்பல் தங்களை நெருங்குவதை அறிந்த மல்லிக் குழுவினர் பவழப்பாறை நுனியில் சாய்ந்த நிலையில் இருந்த ஜூலி கப்பலை அங்கிருந்த மூன்று மைல் பள்ளத்தில் வெடி வைத்து தள்ளி விடுகின்றனர்.ஜூலி மீண்டும் கடல் ஆழத்தில். கதையின் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பாக ஜூலி கப்பல் புறப்பட்டதிலிருந்து அது கவிழும் வரையில் காப்டன் பால்மர்ஸன் கூறுவதான பதிவு கதையின் நம்பகத் தன்மைக்கு வலு சேர்க்கிறது. நாவலின் இறுதி அத்தியாயத்தில் ‘வருங்காலத்தில் தீரமுள்ள இளைஞர்கள் இது போன்ற கடல் சாகசங்களில் இறங்க வேண்டும். இந்தியாவின் கடற்பிரதேசம் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார் நாவலாசிரியர். நாமும் அவரது கருத்தை ஆமோதிக்கிறோம்.


// இந்த ஆண்டு எஸ்.ஏ.பியின் நூற்றாண்டு விழா ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ‘ ..
அடடே.. அப்படியா? ஆரம்ப காலங்களில் எஸ் ஏ பி ப்ரசண்ட விகடனில் சுதேசமித்திரனில் எழுதிய கதைகள் கிடைத்திருக்கின்றனவா நமக்கு? மலர்கின்ற பருவத்திலே வாசித்திருக்கிறேன். எங்கள் பைண்டிங் கலெக்ஷனில் இருந்தது. இப்போது யாரோ லவட்டி விட்டார்கள். ராமு ஓவியம்.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike