1.  புயலும் பாதுகாப்பும்

Aeneas Recognising Venus as She Disappears in a Cloud, Giovanni Domenico Tiepolo

ஏனிட் என்ற மகா காவியத்தைப் படைத்த வர்ஜில், அழியாப் புகழ்  பெற்ற ரோமானியச் சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீஸர் காலத்தில் இருந்தவர். அவரால் போற்றப்பட்ட கவிஞர்.  

அகஸ்டஸ் சீஸரின் காலம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

அந்தப் பொற்காலத்தைக் காவியமாக்கவும்  அவர் தேர்ந்தெடுத்த நாயகன் ஏனியஸ் . அவன்  டிராய் நாட்டின்  இளவரசன். வீனஸ் என்ற அழகுத் தேவியின் திருமகன். ஹெக்டரின் உடன் பிறவா  சகோதரன். டிராய் நாட்டுக்கு ஆதரவாகப் போரிட்டுத்  தன் வீரத்தை நிலை நிறுத்தியவன். அகில்லஸ்  போன்ற மாபெரும் வீரர்களுடன் போரிட்டு கிரேக்கர்களால் பாராட்டப்பட்டவன். அமைதியின் வடிவம். எளிமையின் உருவம்.  தன் கூர்மையான அறிவுத் திறத்திலும்  கடவுளர்களின் விதியின் மீதும் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவன். 

ரோம சாம்ராஜ்யம் என்கிற  மாபெரும் தேசம் ஒன்றை  உருவாக்கவே கடவுளர்கள் தன்னைப் படைத்திருக்கிறார்கள் என்று உறுதியாக நம்பிச்  செயலாற்றி வெற்றியும் கண்டவன் ஏனியஸ். 

 இந்தக் கதைக்குள் செல்லும்முன்  நாம் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும்  கடவுளர்கள் அனைவரும் ஒன்றுதான். ஆனால் பெயர்களை மற்றும் மாற்றி அழைத்தார்கள்.  உதாரணமாக  கிரேக்கர்களின் ஜீயஸை ரோமர்கள் ஜுபிடர் என்று அழைத்தனர். அப்ரோடைட்  தான் வீனஸ் தேவதை.  ரோமானியப்  பெயர்களே இன்று வரை நிலைத்து நிற்கின்றன.

 

ரோமானியப்  பெயர்     கிரேக்கப் பெயர்     விளக்கம்
 ஜுபிடர் ஜீயஸ்  கடவுள்களின் தலைவர்
ஜூனோ  ஹீரா  ஜூபிடரின் மனைவி
நெப்டியூன்  பொசைடன்  கடலின் கடவுள்
ப்ளூடோ ஹாடிஸ்  மறுமையின் கடவுள்
மார்ஸ் ஏரிஸ்  போர்க் கடவுள்
வீனஸ்  அப்ரோடைட்  அழகு, காதல் தேவதை (ஏனியசின் தாய்)
மீனர்வா  அதீனா  அறிவு , யுத்த தேவதை
அப்பல்லோ  அப்பல்லோ  சூரியன்
டயானா  ஆர்டிமிஸ்  கன்னித்தன்மையின் தேவதை
மெர்குரி  ஹேர்ம்ஸ்  பயணத்திற்கான கடவுள்
வெஸ்தா  ஹெஸ்டியா  பாதுகாவல் தேவதை
சீரிஸ்  டெமெடர்  விளைநிலத்தின் தேவதை
குபிட் ஈரோஸ்  ஆசையின் சிறுவன் (வீனஸின் மகன்)
சன்னி  குரோனஸ்  (சனி) ஜூபிடரின் தந்தை; காலத்தின் கடவுள்

குறிப்புகள்:

  • ஏனிட்  காவியத்தில் முக்கிய பங்காற்றுபவர்கள்: 
    • வீனஸ்          – ஏனியஸின் தாய்
    • ஜூனோ      – வீனஸூக்கு எதிராகத் தொடர்ந்து வேலை செய்கிறாள்
    • ஜுபிடர்        – முதன்மைக்  கடவுள்
    • நெப்டியூன் –  புயல்  கடவுள்
    • மெர்குரி       – கடவுளின் தூதுவன் ;  டிடோவிடம் செய்திகள் கொண்டு செல்கிறான்
    • குபிட்             – டிடோவின் மனத்தில் காதல் விதைக்கும் குட்டி மன்மதன் ( CUPID) 

 

இக்கதையின் வில்லி  ஜூனோ !

அழகிப்போட்டியில் தனக்கு எதிராக பாரிஸ் தீர்ப்பு கொடுத்ததன்  காரணமாக  ஏனியஸ் மற்றும்  ட்ரோஜர்கள் மீதும் தீவிர  வெறுப்பு கொண்டிருந்தாள். அதுமட்டுமல்லாமல் அவளுக்கு மிகவும் பிடித்தமான கார்த்தேஜ் நகரை ஏனியஸ் மற்றும் அவன் சந்ததியர்கள் அழிப்பார்கள் என்று  ஒரு விதி இருப்பதை அவள் அறிந்திருந்தாள். அந்தக் காரியம் நடைபெறாமல்  இருக்க அதற்கு முன்பாகவே  ஏனியஸை அழித்துவிடவேண்டும் என்ற உறுதியில் இருப்பவள்.   

அதனால், ஜூனோ ஏனியஸின் பயணத்தைத்  தடுத்து அவனை இத்தாலிக்கு  வராதபடி செய்ய ஆரம்பித்தாள். 

இனி ‘புயல் மற்றும் கடல் அபாயம்’ என்ற முதல் அத்தியாயத்திற்குள் செல்வோம். 

Bird's Eye view of Ancient Carthage : r/MapPorn

” அதோ தெரிகிறது  என்  பிரியமான  கார்த்தேஜ் நகரம்! எவ்வளவு அழகான ஊர்! உலகுக்கே வழிகாட்டியாக விளங்கவேண்டும் இந்த ஊர்! ஆனால் டிராய் நாட்டின் ஓர் இளவரசனால்  இந்த நகரம் அழியக் கூடும் என்ற ஒரு விதி இருப்பதாக அன்று சொல்லப்பட்டதே!  அதை நடக்க விட மாட்டேன்.  என்  அழகை அவமதித்து வீனஸைப் பிரபஞ்சத்தின் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுத்த அந்த பாரிஸையும் அவன் நாட்டையும் அழிக்க நான் என்னென்ன செய்தேன்?  கிரேக்கர்களை வெற்றிப் பாதையில் தள்ள நான் எவ்வளவு முயற்சிசெய்தேன்? அகில்லஸ் மூலமாக டிரோஜன் வீரர்களைத் துவம்சம் செய்தேன்.   ஆனால் இப்போது டிரோஜன் நகர இளவரசனும் என எதிரி வீனஸின் மகனுமான ஏனியஸ் தன் தந்தை மற்றும் மாலுமிகளுடன் கடல் மூலமாக இத்தாலிக்குச் செல்ல முயற்சி செய்கிறான். இவன்தான்  என் கார்த்தேஜ் நகரையும் அழிப்பான் என்றும் தோன்றுகிறது. முதலில் இவனை அழிக்கவேண்டும்.  “

இவ்வாறு தீவிரமாக  யோசித்த ஜூனோ ,  காற்றுகளின் கடவுள் ஏயோலஸிடம் சென்று, ஏனியாசின் கப்பல்களுக்கு எதிராக புயலை விடுவிக்கச் சொன்னாள்.  அவனும் ஜூனோவிற்குப் பயந்து அவர்கள் செல்லும் பாதையில் புயலை விடுவிக்க வந்தான்.   

அப்படிப்பட்ட ஒரு கோரமான புயலை  ஏனியஸ் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. இந்தப் புயலில் இறப்பதற்குப் பதிலாக  ட்ரோஜன் யுத்தத்தில் கிரேக்கர் தலைவன் அகில்லஸ் கையில் மரணமடைந்திருக்கலாமே என்று  கூட அவனுக்குத் தோன்றியது. ஓடிஸியஸ் சதியால் டிராய் கோட்டைக்குள் புகுந்த கிரேக்க வீரர்களுடன் போரிட்டபோதாவது இறந்திருக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் என்  தாய் வீனஸ் என்னைக் காப்பாற்றி படைகளுடன் இத்தாலிக்குப் பயணம் செய்யுமாறு பணித்தாள். இந்தப் புயலிலிருந்தும் என் அன்னை என்னைக் காப்பாள்”  என்று நம்பி அவளை வேண்டினான். 

அப்போது கடலின் கடவுள்   நெப்டியூன்,  தன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடலில்   தன் உத்தரவில்லாமல் புயலைக் கொண்டுவந்த ஜூனோ மீது கடுங்கோபம் கொண்டான். உடனே   காற்றுக்களை அடக்கி புயலையும்  அடக்கி  ஏனியஸின் கப்பல்களுக்கும்  பாதுகாப்புத் தந்தான். 

ஏனியஸ் தன் தாய்க்கும் நெப்டியூனுக்கும்  நன்றி கூறி  லிபியாவில் உள்ள கார்த்தேஜ் துறைமுகத்தை அடைந்தான்.  தன்னுடன் வந்த  மக்களை ஊக்கப்படுத்தி, மான்களை  வேட்டையாடி, நெருப்பில் சுட்டுச் சமைத்த உணவைத்   தன்னுடன் வந்த மக்களுக்கு அளித்து மகிழ்ந்தான். 

அதே சமயம், ஏனியஸின் தாய் வீனஸ், தனது மகனின் பாதுகாப்பிற்காக க் கவலைப் பட்டு கடவுளர் தலைவன்  ஜூபிடரிடம் சென்று புகார் செய்தாள். ஜூபிடர் அவளைச் சமாதானப்படுத்தி , “ஏனியஸ் இத்தாலியை அடைவான். அவனுடைய  சந்ததிகள் ஈடு இணை கூற முடியாத  ரோம சாம்ராஜ்யத்தை நிறுவுவார்கள். பல நூற்றாண்டுகள் அதனை ஆண்டு வருவார்கள்.  இது கடவுள்களின் முடிவு” என்றார். மேலும் கார்த்தேஜ் நாட்டை ஆளும்  அரசி டிடோவிடம்  ஏனியஸுக்கு உதவும்படி கூற ஒரு  தூதுவனையும் அனுப்பினார்.  

மகிழ்ச்சியடைந்த  வீனஸ் தன்னை வேட்டைக்காரியாக மாற்றிகிக்கொண்டு, ஏனியஸூக்கு  கார்த்தேஜின் ராணி டிடோவின் வாழ்க்கைக் கதையைச்  சொல்லி விட்டு மறைந்தாள்.  

டிடோ,  டயர் நாட்டு இளவரசி.

அவளுக்கு மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அவள் அண்ணன் அவளது கணவனிடம் இருக்கும் தங்கப் புதையலை அபகரிக்க அவனைக் கொன்றான். அவனிடமிருந்து தப்பிய டிடோ தன்  ஆதரவாளர்களுடன் கணவனின் தங்கப் புதையலை எடுத்துக் கொண்டு  கார்த்தேஜ் நகருக்கு வந்தாள்.  தன்னிடமிருந்த புதையலால்  கார்த்தேஜ் நகரையே வாங்கினாள்.  டிடோவின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கிய மக்கள் அவளை அந்நாட்டு  அரசியாக இருக்கும் படி வேண்டிக்கொண்டார்கள். டிடோவும் அதை ஏற்றுக்கொண்டு மிகத் திறமையாக அரசாட்சி செலுத்தினாள்.   எந்த அந்நியரையும் அவர்கள் நாட்டுக்குள் விடுவதில்லை.

அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்ட ஏனியஸ், தன் கப்பல்களைப் பாறைகளுக்குப் பின் ஒளித்துவைத்துவிட்டு நகருக்குள்   நண்பர்களையும் அழைத்துக் கொண்டு  சென்றான். 

அங்கு வந்த காவலர்கள்  இவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு  அரசி டிடோ நீதி வழங்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தக் கோவில்  ஜூனோவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்.  இருந்தபோதிலும் அங்கு வரையப்பட்டிருந்த ட்ரோஜன்  போரின் ஓவியங்களைப் பார்த்து ஏனியஸ் உருகினான்.  அதைப்  பார்த்ததும் இந்த நாட்டில் டிரோஜன் மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்குள் பிறந்தது.   

அப்போது அந்தக் கோவிலுக்கு அரசி டிடோ  தன் பரிவாரங்களுடன் வந்தாள். அந்தக் கோவில் வளாகத்தில் அரசிக்கென்ற  தனி சிம்மாசனம் அமைந்திருந்தது. அரசி டிடோ  உட்கார்ந்திருந்த  அழகு மிகவும் நேர்த்தியாக இருந்தது. 

ஏனியஸ் மற்றும் அவனுடன் வந்த மக்கள் அனைவரும் அரசியின் முன் நிறுத்தப்பட்டனர்.  தங்களில் வயதான வீரர் ஒருவரை டிரோஜன் வீரர்களின் சார்பாகப் பேசும்படி ஏனியஸ் பணித்தான். டிராஜன் போரில் கிரேக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு இளவரசர் ஏனியஸ் இத்தாலிக்குச் செல்லும் வழியில் புயல் காற்றால் அந்த ஊரில் கரையேற வேண்டியதாயிற்று என்றும் தங்களுக்கு உதவி செய்து தங்கள் பயணம் தொடர அனுமதிக்கும்படியும்  வேண்டினார்.

 டிடோ, ஏனியசின் குழுவினரைப்  பெருமையுடன் வரவேற்று அவர்களின் பயத்தைப் போக்கி தன் நாடும் வீரர்களும் ஏனியஸ் மற்றும் அனைத்து டிரோஜன் வீரர்களுக்கும் தேவையான உதவியைச் செய்ய வாக்களித்தாள்.  

அதுவரை நண்பர் கூட்டத்தில்  பின்னால் மறைந்து  நின்றிருந்த  ஏனியஸ் தன் அன்னை தந்த அழகு முகத்துடன்  முன்வந்து   பெருமிதத்துடன்  அரசிக்கு நன்றி  தெரிவித்துப் பேசினான். அவன் புன்னகையும் நிமிர்ந்த நெஞ்சும் எதற்கும் அஞ்சாத கம்பீரமும் அழகும் தைரியமும் டிடோவை மிகவும் கவர்ந்தது. அந்த முதல் பார்வையே இருவருக்கும் இடையே ஒரு நல்ல  புரிதலை ஏற்படுத்தியது.

அவனுடன் வந்திருந்த டிரோஜன் வீரர்கள் அனைவருக்கும் உண்ண உணவு,  உடுக்க ஆடை . இருக்க இருப்பிடம் கொடுத்து  அவர்கள்  கவலையை மாற்றினாள். 

ஏனியஸை மட்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மிகச் சிறந்த விருந்து அளித்து அவனைக்  கௌரவித்தாள். டிரோஜன் யுத்தத்தைப் பற்றி விவரமாகச் சொல்லும்படியும்  கேட்டுக் கொண்டாள். 

அதே சமயம் வீனஸ் தன் மகன் ஏனியஸை  ஜூனோவின் கோபப் பார்வையிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க வைக்க  அரசி டிடோவின்   உதவி மட்டுமல்ல அவளின் ஆழ்ந்த காதலும்  தேவை என்று உணர்ந்து அதற்கானக் காய்களை நகர்த்த ஆரம்பித்தாள். 

தன் பிஞ்சு மகனான குபிட்டை  அழைத்து ‘ நீ ஒரு சின்னஞ்சிறு குழந்தை வடிவில் கார்த்தேஜ் சென்றால் உன் குறும்பு முகத்தைப் பார்த்து மயங்கி அரசி டிடோ உன்னைக் கொஞ்சி முத்தமிடுவாள். அப்போது அவளுக்குள்  ஏனியஸ் மீது காதல் உண்டாக்கும் அம்பைத் தைத்துவிடு” என்று கூறினாள். 

குபிட்டும் அன்னை சொன்னபடி தன் பங்கைச் செவ்வனே நிறைவேற்றினான்.

விளைவு  அந்த இனிமையான  இரவில் அரசியின்  தனி அறையில்    டிரோஜன் யுத்தத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல வந்த ஏனியசின் எழில் முகத்தைப் பார்த்தது கண்களில் காதல்  பொங்க  பார்த்தபடியே மயக்கக் கிறக்கத்தில் அமர்ந்திருந்தாள் அரசி டிடோ!

(அடுத்த நூல் அடுத்த மாதம் )