”வர வர தெருவுல வண்டி ஓட்டவே பயமாக இருக்கு. அதுவும் டூ வீலர் ஓட்ட ரொம்பவே டென்ஷனா இருக்கு”
பக்கத்து வீட்டு சுந்தரம் சார் அடிக்கடி இப்படி சலித்துக் கொள்வார்.
“இந்த சிக்னல்லாம் எதுக்கு இருக்குன்னே தெரியலை. எவனும் மதிக்கறதில்லை.. இஷ்டத்துக்குப் போறாங்க.. யூஸ்லெஸ்.. யூஸ்லெஸ்.. இவங்களை இப்படியே சும்மா விடக்கூடாது”
கதவிடுக்கில் சிக்கிய எலியின் குரலில் சுந்தரம் சார் கொதித்துக் கத்துவதைக் கேட்க தமாஷாக இருந்தாலும் அவர் புலம்புவதில் நியாயம் இருப்பதாகவே எனக்குப்படும்.
“கோட்டைத் தாண்டாதே.. ஆபத்து” என்பது வாழ்க்கையில் பொதுவாக வழங்கப்படும் எச்சரிக்கை.
லட்சுமணன் கிழித்த கோட்டை சீதாதேவி மீறியதன் பின் விளைவுகள் எல்லோருக்கும் தெரிந்ததே.
சுந்தரம் சார் புலம்புவதுபோல் இப்போது பலராலும் மீறப்படும் கோடுதான் டிராபிக் சிக்னல் கோடு..
சிக்னல் விழுந்தால் தெருவில் வரையப்பட்டிருக்கும் கோட்டுக்குள் வண்டியை நிறுத்த வேண்டும் என்பது பொதுவிதி. அதுதான் நம்முடைய லட்சுமண் ரேக்கா.
ஆனால் இந்த விதியை எத்தனைபேர் கடை பிடிக்கிறார்கள்.
பச்சை விளக்கு மறைந்து ஆரஞ்ச் ஆம்பர் ஒளிரும்போது வண்டியின் வேகத்தை நிதானப்படுத்தினால்தான் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வண்டியை லட்சுமணன் ரேக்காவைத் தொடாமல் அதற்கு முன்னால் விதிப்படி நிறுத்த முடியும்.
ஆனால் நம்மில் பலர் செய்வது என்ன? பச்சை விளக்கு மறைந்து ஆம்பர் வரும்போது வண்டியின் வேகத்தை இன்னும் அதிகரித்து பறக்கிறோம். அப்போதுதானே சிக்னலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
சிலர் சிவப்பு சிக்னல் விழுந்த பிறகும் அதை அலட்சியம் செய்து வண்டியை நிறுத்தாமல் சென்று விடுகிறார்கள்.
உண்மையில் இதுபோல சிக்னலை மீறுவது ரொம்பவே சிக்கலான விஷயம் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.
நான் அமெரிக்கா சென்றபோது ஒரு விஷயத்தை கவனித்தேன். அங்கு தெரு காலியாக இருந்தால்கூட சிக்னலை மதித்து வண்டியை நிறுத்துகிறார்கள். வண்டி ஓட்டும்போது யாராவது தெருவை கடக்க முற்பட்டால் உடனே கொஞ்சம் தொலைவிலேயே வண்டியை நிறுத்தி விடுகிறார்கள். அவர்கள் தெருவைக் கடந்தபிறகுதான் வண்டியை மேலே செலுத்திச் செல்கிறார்கள்.
அப்படியொரு கட்டுப்பாடு. கட்டுப்பாடு மட்டுமல்ல.. விதிமுறையை மீறினால் என்ன நடக்கும் என்று அங்கிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
காரணம் தெருவில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. வரம்பை மீறினால் உடனே அவர்களைத்தேடி டிக்கெட் வந்துவிடும். டிக்கெட் என்பது செலுத்தவேண்டிய அபராதக் கட்டணத்துக்கான ஓலை.
அபராதக் கட்டணம் கட்டுவதோடு இது நின்று விடுவதில்லை. சங்கிலிபோல் இதன் பின்விளைவுகள் தொடரும். அடுத்தமுறை வண்டிக்கு இன்சூரென்ஸ் புதுப்பிக்கும்போது ஒவ்வொருவர் வாங்கியிருக்கும் டிக்கெட்டுகளுக்கு ஏற்ப ப்ரீமியம் தொகை அதிகரிக்கும். அதாவது குறைந்த டிக்கெட் வாங்கினால் குறைந்த அளவில் ப்ரீமியம் தொகை அதிகரிக்கும். அதிக டிக்கெட்டுகள் வாங்கியிருந்தால் ப்ரீமியம் தொகை எகிறிவிடும்.
அதோடு ஒரு வருடத்திற்குள் ரொம்பவே அதிகமாக டிக்கெட்டுகள் வாங்கினால் ஓட்டுனர் உரிமமே ரத்தாவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
அதனால்தான் முடிந்தவரை சிக்னலை மதிக்கிறார்கள்.
அங்கிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டு என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
இந்த முறையை ஏன் நம் நாட்டிலும் அமுல்படுத்தக் கூடாது?
நம் நாட்டிலும் இப்போது ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தியிருக்கிறாகள். கணினியின் உதவிகொண்டு அமெரிக்காவின் முறையை இங்கேயும் பின்பற்றினால் உண்மையிலேயே மக்களின் மனதில் ஒருவித பயம் வந்து டிராபிக் சிக்னல்களை மதித்து வாகன வேகத்தையும் கட்டுப்படுத்துவார்களோ? ஏனென்றால் இன்சூரென்ஸ் ப்ரீமியம் தொகை அதிகமாவதை யாரும் விரும்பமாட்டார்கள். அதே சமயத்தில் ஓட்டுனர் உரிமம் ரத்தானால் மீண்டும் புது உரிமம் பெற அவர்கள் சந்திக்க வேண்டிய உபத்திரவங்களை நினைத்தாவது ஒழுங்காக வண்டி ஓட்டுவார்கள்.
இதை நினைக்கும்போது வெறும் கற்பனைதான்.. நம் நாட்டில் சாத்தியமில்லை என்று நன்றாகவே தெரிகிறது.
காரணம்..
இப்போது இளைஞர்கள் வண்டி ஓட்டும் முறையைப் பார்த்ததால் ஏற்பட்ட ஞானோதயம்தான்.
சுந்தரம் சார் சொன்னது போல் தெருவில் வண்டி ஓட்டவே பயமாகத்தான் இருக்கிறது. அதுவும் முக்கியமாக இரண்டு சக்கர வாகனம்.
வேகமாக மட்டுமல்ல.. பாம்புக்குக்குப் போட்டியாக வளைந்து வளைந்து ஸ்டைல் காட்டியபடி இளைஞர்கள் வண்டி ஓட்டுவதைப் பார்க்கும்போது நம் மனம் பதபதைக்கிறது.
சினிமாவைப் பார்த்துத்தான் இவர்களின் இந்த ஹீரோயிச விளையாட்டுகள்.. சினிமாவில் ஹீரோ செய்யும் சாகசங்களை நிஜ வாழ்வில் மக்கள் நடமாடும் தெருவில் பண்ணிக்காட்ட வேண்டும் என்று அவர்களின் இளமைத் துடிப்பின் உந்துததில் செயல்படுகிறார்கள்.
ஆனால் அவர்கள் புரிந்துக்கொள்ளாத விஷயம்..
சினிமாவில் டெக்னாலஜி வேலை செய்கிறது. ஹீரோவோ வில்லனோ சாதாரணமாகத்தான் வண்டி ஓட்டுவார்கள். ஆனால் எடிட்டிங் டேபிளில் அவர்கள் போகும் வேகத்தைக் கூட்டிக்காட்டி ஏதோ அசுர வேகத்தில் அவர்கள் பறந்து செல்வதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.
சினிமாவில் நடித்த நடிகர்களே தெருவில் சாதாரணமாகத்தான் வண்டி ஓட்டிச் செல்கிறார்கள். பிறகு நிழலில் அவர்கள் காட்டும் போலி வித்தையை நம் இளைஞர்கள் ஏன் வாழ்க்கையின் நிஜத்தில் பின்பற்ற வேண்டும்?
இன்னொரு முக்கியமான விஷயம்.
இளைஞர்கள் இப்படி ஹீரோயிசம் காட்டி வேகமாக ஸ்டைலாக பாம்பு போல் வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவதனால் தெருவில் வண்டி ஓட்டும் வயதானவர்கள் நிலைதடுமாறி போகிறாகள். சிலர் வண்டியிலிருந்து விழுந்து காயம் ஏற்படுகிறது.
இப்படியொரு நிகழ்ச்சியை ஒருமுறை அசோக் பில்லர் ஜங்ஷனில் பார்த்தேன். பலத்த இரைச்சலுடன் வேகமாக வண்டி ஓட்டி வந்த இளைஞன் சட்டென்று வளைவில் திரும்பினான். மொபெட் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிவரின்மேல் கிட்டத்தட்ட மோதிவிட்டான். சட்டென்று சுதாரித்து வண்டியைத் திருப்பி அவன் நிற்காமல் பறந்துவிட்டான். ஆனால் அந்தப் பெரியவர் பதட்டத்தில் வண்டியுடன் தெருவில் சாய்ந்து விட்டார். குளிர் ஜுரம் வந்தவர்போல் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்த அவரை ஆசுவாசப்படுத்த சில நிமிடங்களும் ஒரு பாட்டில் தண்ணியும் தேவைப்பட்டது.
அங்கிருந்த எல்லோரும் நிற்காமல் வண்டியில் பறந்து சென்றுவிட்ட அந்த இளைஞனை வசை பாடினர். சிலர் ஒட்டு மொத்தமாக இந்தக்காலத்து இளைஞர்களைக் குற்றவாளிகளாக்கினர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக்கித்தான் (வி)வேகம் என்ற சிறுகதையை எழுதினேன். அது அமுதசுரபி பத்திரிகையில் பிரசுரமானது.
இதை நான் எழுதியதால் இளைஞர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைத்து இந்தச் சிறுகதையை எழுதவில்லை. திருந்த மாட்டார்களா என்று என் மனதிலிருந்த ஆதங்கம்தான் எழுத்தாக வடிவெடுத்தது.
வேகம் விவேகமல்ல என்பதை ஏன் இளைகர்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள்?
சமீபத்தில் பத்திரிகையில் படித்த ஒரு செய்தி என்னை ரொம்பவே பாதித்தது. இந்தப் பதிவுக்கான காரணமும் அந்தச் செய்திதான் என்றே சொல்லலாம்.
ஒரு இளைஞன் தன்னுடைய நண்பனை பில்லியனில் ஏற்றிக்கொண்டு வழக்கம்போல் வேகமாக தன்னுடைய பைக்கில் பாம்பாட்டம் ஆடியபடி சென்றுக்கொண்டிருந்தான்.
அவன் பயணித்த தெருவில் புதிதாக தார் போடுவதற்காக இயந்திரம் கொண்டு தெருவை சுரண்டி வைத்திருந்தார்கள். அதை கவனிக்காமல் அந்த இளைஞன் வண்டியின் வேகத்தைக் குறைக்காமல் ரொம்பவே வேகமாக வர அந்த சுரண்டல் சாலையில் ஸ்கிட் ஆகி பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட பின்னால் வந்த லாரியின் சக்கரம் அவன்மீது ஏற..
அந்த இளைஞனுக்கு வேகம் என்பது ஹீரோயிசம்.. சந்தோஷம்..
ஆனால் அவன் குடும்பத்தினருக்கு?
பெற்றவர்களுக்கு அவன் ஒரே மகனாம். அவர்களைப் பற்றி ஒரு கணம் அவன் நினைத்துப் பார்த்திருந்தால் இந்த விபரீத வேகத்துக்கு பலி ஆகியிருப்பானா?
எப்போதோ படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது.
“போய் சேர வேண்டிய இடத்துக்கு பத்திரமாகப் போகத்தான் வாகனம்..
ஒரேயடியாகப் போய் சேர அல்ல”
இளைஞர்களுக்கு ஒரு வயது வந்தவனின் வேண்டுகோள்..
வண்டி ஓட்டும்போது வேகம் வேண்டாம்.. விவேகம் இருந்தால் போதும்.


ஒரு விஷயம் சமீபத்தில் படித்தேன். லட்சுமணன் கிழித்த கோடு என்பது பிற்சேர்க்கை என்கிறார்கள். ஒரிஜினலில் அப்படி எல்லாம் இல்லையாம்!
வெளிநாட்டில் லைசென்ஸ் எடுக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும் செயல் நல்ல முயற்சி. நம்நாட்டில் நடக்காது. அரசியல் கட்சிகளே போராடும்!
வேகம் சோகம்தான்.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்.
LikeLike