இசை அரசி எம் எஸ் சுப்புலட்சுமி

From Mahatma Gandhi to Nehru, everyone was an MS Subbulakshmi fan

தெய்வீகக் குரல் – பட்டுப் புடவை கட்டி வரும் நேர்த்தி – நெற்றியில் குங்குமம், கீற்று விபூதி ரக்ஷை – காது தோடு – இரண்டு பக்கமும் மூக்குத்தி –  பிச்சுவா கொண்டை – பூ –  தெய்வீக அம்சம் நிறைந்த பாடகி – எளிமை, பந்தா என்பதை அறியாதவர் – முகத்தில் எப்போதும் புன்னகை. எம்.எஸ். என்று பலராலும் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலெட்சுமி.

வாழ்ந்த காலத்திலேயே பாரத ரத்னா விருது பெற்றவர். இசைக் கச்சேரிகளில் வந்த பணத்தை எல்லாம் சமூக சேவைக்கு அளித்த வள்ளல். 

எம் எஸ் சின் விரிவாக்கம் மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி. மேல அனுமந்தராயன் கோவில் தெரு – மதுரை மேலக்கோபுரத் தெருவில் இருந்து  பிரிகிற ஒடுங்கிய தெருவில் எம்.எஸ்.ஸின் வீடு. முகப்பில் மேலே பார்த்தால் வீணையின் சிற்பம் இன்றும் பார்க்கலாம்.

“சண்முக வடிவு வீடு” என்று தான் மதுரையில் பிரபலம். குஞ்சம்மா என்ற சுப்புலெட்சுமியின் அம்மா சண்முகவடிவு தேர்ந்த வீணைக் கலைஞர். பாட்டி அக்கம்மாவோ வயலின் வித்வான். சங்கீதம் இவர்களின் பரம்பரைச் சொத்து.

சேவாசதனம் படத்தில் நடிக்க நடிகையைத் தேடிய இயக்குனர் கே சுப்ரமணியத்தால்  எம் எஸ் அறிமுகம்.  சென்னை கிண்டியில் படப்பிடிப்பு நடந்தபோது சதாசிவத்துடன் உருவான நட்பு, திருநீர்மலையில் திருமணத்தில் முடிந்தது.

M.S.Subbulakshmi : The Voice That Mesmerized Millions. - VSKசகுந்தலை, சாவித்திரி, மீரா என்று அடுத்தடுத்து எம்.எஸ். நடித்த படங்கள் அவரைப் பிரபலமாக்கின. இசையுலகிலும் உயர்த்தின.

ஸ்ரீனிவாச அய்யங்காரிடம் வாய்ப்பாட்டு. பண்டிட் நாராயணராவிடம் ஹிந்துஸ்தானி என்று கற்றுக் கொண்டதும் இசையில் மெருகு கூடி பாடுவதில் தனித்துவம் மிளிர்ந்தது.மதுரை சோமு மாதிரியான பாடகர்கள் துவங்கி நாதஸ்வரக் கலைஞர்கள் வரை சுப்புலெட்சுமியின் குரலுக்கு வசியமானார்கள்.மாயவரம் கிருஷ்ணய்யர், முசிறி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி என்று இசையைக் கற்றுக் கொண்டே இருந்தார் எம்.எஸ்.

1932ல், இசை மேதை அரியக்குடி கச்சேரி தவிர்க்க முடியாமல் நடக்காமல் போக, அந்த வாய்ப்பு எம் எஸ்க்கு வந்தது. அதுதான்  Music Academyல் அவரின் முதல் கச்சேரி. அப்போது அவருக்கு வயது 16.

United Nationsநாடெங்கும் இசை ரசிகர்கள் பெருகவே, கிராமபோன் கம்பெனி இவரின் இசைத் தட்டுக்களை நிறைய அறிமுகம் செய்தார்கள். நகுமோமு, இனி என்ன பேச்சு, வேதவெற்பிலே போன்ற இசைத் தட்டுக்கள் கோகிலகான எம் எஸ் என்ற அடைமொழியுடன் வெளிவந்தது. காம்போதி ராகத்தில் எவெரிமாட்ட இசைத்தட்டு வெளி வந்தபோது ரசிகர்கள் மயங்கி, ‘ எவெரிமாட்ட எம் எஸ் ‘ என்றே அழைக்கப்பட்டார்.

1954ல் நமது நாட்டில் தேசிய விருதுகள் நிர்மாணிக்கப்பட்டது, முதல் ஆண்டிலேயே பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டது திருமதி எம் எஸ் அவர்களுக்குத்தான். .

சென்னை சங்கீத வித்வத் சபையில் (அகாடெமியில்) சங்கீத கலாநிதி விருது பெற்ற முதல் பெண் கலைஞரும் இவரே.

திருப்பதியில் சுப்ரபாதம் பாடி, அதில் வந்த ராயல்டியை திருப்பதி வேத பாடசாலைக்கு அளித்தார். 

சாவித்திரி படத்தில் கிடைத்த பணம் கல்கி பத்திரிகை தொடங்க மூலதனம் ஆனது.

ரமன் மக்சாசெய் விருதுப்பணம் அப்படியே கும்பகோணம் ராஜா வேத பாடசாலைககு கொடுக்கப்பட்டது.

திருவையாறு மும்மூர்த்திகள் நினைவிடம், சென்னை கிண்டி காந்தி மண்டபம், எட்டயபுரம் பாரதி மணி மண்டபம், மயிலை கபாலீஸ்வரர் கோயில் கோபுரம், ராமகிருஷ்ண மிஷன் நிதி, சங்கர நேத்ராயலய கட்டிட நிதி, காஞ்சிப் மகாஸ்வாமிகள் மணி மண்டபம் மற்றும் பல  கல்லூரிகள், பள்ளிகள் , சமுதாய அமைப்புகள் என இவர் கொடுத்தது ஏராளம்.

எம் கே தியாகராஜ பாகவதர் பாடியது உட்பட பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதிய மாகவிஞர் பாபநாசம் சிவன் அவர்கள் ஒருமுறை, எம் எஸ் கணவர் சதாசிவத்திடம், தான் எழுதிய நல்ல பாடலை, திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூற, அதை, எம் எஸ்ஸை வைத்துப் பாட வைத்து இசைத் தட்டாக வர, மிகப் பிரபலமானது. அந்தப் பாடல் தான் அம்பா நீ இரங்காயெனில் என்ற அடானா ராகப் பாடல்.

பல தடவை இவரின் கச்சேரிகள் கேட்கும் பாக்யம் பெற்றவன் நான். முதல் முறையாக 1968ல் தூத்துக்குடி புதுகிராமம் கோயிலில் , தொடர்ந்து நெல்லை சங்கீத சபாவில் (கைலாசபுரம்)1969ல் அப்பாவுடன். அப்புறம் சென்னை, மதுரை எனப் பல.  

மறக்கமுடியாத சந்திப்பு – 1975 ஆம் வருடம் – காஞ்சிபுரம் காமாக்ஷி கோயில் சன்னதியில் இரவு 8 30 மணிக்கு , கஞ்சதலாயதாக்ஷி என்ற கிருதி அற்புதமான குரலில் கேட்க, அங்கே இருந்தவர்கள் எம் எஸ் மற்றும் ராதா அவர்கள். எனது சகோதரர் மற்றும் எங்கள் பெற்றோர் என நாங்கள் மட்டுமே – எம் எஸ் அம்மா குரலில் காமாக்ஷி தரிசனம் வாழ்வில் மறக்கமுடியாத தருணம். .

1995க்குப் பிறகு எனது காஞ்சிபுரம் பணியின்போது,  நிறைய தடவை காஞ்சிபுரம் மடத்தில் , எம் எஸ் அம்மா அருகில் பார்த்து ஆசி வாங்கி இருக்கிறேன். அங்கும் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன்.

டெல்லியில் மீரா திரைப்படம் அறிமுகம். திரையில் தோன்றி அறிமுகம் செய்து வைத்தவர் கவிக்குயில் சரோஜினி நாயுடு. அவர் ஹிந்தியில் பேசாமல், ஆங்கிலத்தில் பேசினார், அதற்கு அவர் சொன்ன காரணம், இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

விடுதலை வீரர் சேலம் விஜயராகவாசாரியார், சரோஜினி நாயுடுவைப் பார்த்து இனி உங்கள் கவிக்குயில் பட்டத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்க, அவர், நான் எப்போதோ அதை எம் எஸ் க்கு கொடுத்துவிட்டேன் என்றார்.

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி,அவரை ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு நியமனம் செய்யக்கேட்க, தன்னைவிடப் படித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றும் தனக்கு வேண்டாம் என்றும் கூறி விட்டார்கள். 

காஞ்சிப் பெரியவர் எழுதிய மைத்ரீம் பஜதே பாடல், ராஜாஜி எழுதிய ஆங்கில பாடல்  இரண்டும் ஐ நா சபையில் பாடினார்.

தன்னுடைய வாழ்க்கையைத் திசை மாற்றி உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற சதாசிவத்தைப் பற்றி ஒரு மேடையில் இப்படிச் சொன்னார் எம்.எஸ்.

Singer, saint, goddess: who was M.S. Subbulakshmi? – Nikhil, etc.எனக்கு இரண்டு விஷயங்கள் தெரியும். முதலாவது எதுவும் எனக்குத் தெரியாது என்கிற விஷயம்.. இரண்டாவது என் நலம் அனைத்தும் என் கணவருக்கு தெரியும் என்பது.

தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத வெகுளித்தனம் நிரம்பிய மனதிடம் இருந்தே இப்படியொரு அடக்கமான வார்த்தைகள் வெளிவரமுடியும்.

குரல்வளம், ஸ்ருதி சுத்தம், தாள ஞானம், பாவம், சொற்சுத்தம், கற்பனாசக்தி, அசுர சாதகம், இவற்றுடன், தெய்வீகத்தில் திளைக்கும் ஐக்கிய பாவத்தையும் பெற்ற மாகலைஞர் எம் எஸ் அவர்கள்.

நிறைவாக, எம் எஸ் அவர்களின் இசைப் பயணம், வாழ்ந்த வாழ்க்கை, நாட்டிற்கும், ஆன்மிகத்திற்கும், சமுதாயத்திற்கும்   செய்த சேவைகள்,என்று பார்க்கும்போது, மஹாகவி பாரதியின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.

வாய் உரைக்க வருகுதில்லை

வாழி நின்றன் மேன்மை எல்லாம்