மார்க்கோ போலோ-தொடர்ச்சி

Lesson 6: On the Road with Marco Polo: Sea Voyage to India | NEH-Edsitementதமிழகத்தின் கடைசிப் பேரரசனைப் பேட்டி கண்ட நமது வெளிநாட்டுப்பயணி மார்க்கோ போலோ. அவர் பதினேழு ஆண்டுகள் குப்ளாய்கானின் விருந்தாளியாக சீனாவில் தங்கி இருந்து விட்டு, 1292 தென் சீனாவிலிருந்து புறப்பட்ட மரக்கலங்கள் மூலம் இன்றைய சிங்கப்பூரைத் தொட்டுக் கொண்டு, சுமத்ரா தீவுகள் வழியாக, இலங்கையைச் சென்றடைந்தார்.

இலங்கையில் மிக அரிதான, பெரியதொரு மரகதக்கல்லைத் தான் கண்டதாக மார்க்கோ போலோ எழுதுகிறார். ஒரு சராசரி மனிதனின் கையளவு பருமனும், உள்ளங்கையளவு நீளமும் கொண்டிருந்ததாம் அந்த மரகதக் கல். அது இலங்கை அரசனுக்குச் சொந்தமானது. புனிதமாகக் கருதப்பட்ட ஒரு புத்த மத பகோடாவின் உச்சியை அலங்கரித்த அந்தப் பெரிய மரகதக் கல்லிலிருந்து வீசிய ஒளி, இரவு நேரங்களில் நட்சத்திரத்தைப் போல மின்னியதாகக் குறிப்பிடுகிறார் மார்க்கோ போலோ.

இலங்கையிலிருந்து புறப்பட்ட மார்க்கோ போலோவின் மரக்கலம், இந்திய தீபகற்பத்தின் தென்முனையைச் சுற்றி, மேற்குக் கரையோரமாக பயணித்தது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மரக்கலத்திலிருந்து கரைக்கு இறங்கிய மார்க்கோ போலோ, அங்கு தான் கண்டவற்றைக் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்,

‘இந்த அரசாட்சியில் வாழும் மக்கள் உருவ வழிபாடு செய்பவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலோனோர் காளை மாடுகளைத் தொழுகிறவர்களாகவும், அங்ஙனம் தொழுவது மிகவும் புனிதமானது என்ற நம்பிக்கையும் உடையவர்களாகவும், எக்காரணத்தைக் கொண்டும் காளை மாடுகளைக் கொல்வது மிகவும் பாவச் செயலாகவும் கருதுகிறார்கள்.

காளைகளை அலங்கரிக்க, அதன் கொம்புகளுக்கு நடுவே, முன் நெற்றியில், வெண்கலத்தால் செய்யப்பட்ட அழகிய, சிறிய காளை உருவங்களைத் தொங்கவிடுகிறார்கள். அம்மாட்டின் சாணத்தை எரித்து, அதன் சாம்பலை உடலின் பல பகுதிகளில் பூசிக் கொள்கிறார்கள். நமது நாட்டில் கிறிஸ்துவர்கள் தெளித்துக் கொள்ளும் புனித நீருக்கு எவ்விதத்திலும் அது குறைவானதில்லை.

அனைத்து மக்களும், தரையில் அமர்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆளும் அரசர்களும், பிரபுக்களும் கூட தரையில் அமர்ந்தே தங்களின் அன்றாட பணிகளைச் செய்கிறார்கள். அவ்வாறு அமர்வது, அம் மண்ணில் பிறந்த, மண்ணால் ஆன, மண்ணிற்கே திரும்பச் செல்லும் சாதாரண மனிதர்கள், பூமித்தாய்க்குச் செய்யும் மிகப்பெரிய மரியாதையாக அது கருதப்படுகிறது. ‘எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்க்கோ போலோவால் கண்டெழுதப்பட்ட பல இந்து சமயச் சடங்குகள் இன்றும் தொடர்கிறது.

தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரமாக, மலபார் பகுதிகளில் பயணித்த மார்க்கோ போலோவின் கப்பல் ‘மோட்டுப்பள்ளி’ என்ற இடத்தில் நங்கூரமிட்டது. அப்பகுதியில் காணப்பட்ட பள்ளத்தாக்குகளிலிருந்தும், குகைகளிலிருந்தும் அளவிட முடியாத அளவிற்கு வைரங்கள் கிடைத்து வந்தன. மனிதர்கள் எளிதில் இறங்கவியலாத சில ஆழமான பள்ளத்தாக்குகளுக்குள் இருந்தும் கூட மிக நூதனமான முறையில் வைரம் எடுக்கப்பட்டது என்கிறார்.

‘முதலில், இரத்தத்தில் ஊற வைக்கப்பட்ட மிகப் பெரிய இறைச்சித் துண்டங்கள் வைரம் இருக்கும் பள்ளத்தாக்குகளுக்குள் எறியப்பட்டன. அவ்வாறு எறியப்பட்ட இறைச்சித் துண்டுகளுக்குள் வைரங்கள் பொதிந்து கொள்ளும். அப்பகுதி மலைகளில் வசித்து வந்த ஏராளமான வெண் கழுகுகள், அவ்விறைச்சித் துண்டங்களைக் கால்களில் கவ்விக் கொண்டு தங்களின் கூடுகளை நோக்கிப் பறந்து செல்லும். தன் கூடு நோக்கிப் பறந்து செல்லும் கழுகுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், அங்கு விரைந்து செல்வார்கள். கழுகு இறைச்சியைத் தின்று முடிக்கும் முன், அந்தக் கழுகுகளை விரட்டி விட்டு, இறைச்சியில் பொதிந்திருக்கும் வைரங்களை எடுத்து வருவார்கள். சிலர், கழுகின் எச்சங்களைத் தேடி எடுப்பார்கள். இறைச்சியுடன் விழுங்கிய வைரங்களை அவ்வாறு கைப்பற்றப்பட்டன. ‘

அதன் பிறகு, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் நியமித்த இலங்கையின் இளவரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டியநாட்டிற்கு வந்தார். இவர் பாண்டிநாட்டிற்கு வந்த போது மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் இக்குலசேகரனே ஐந்து பாண்டியர்களில் மூத்தவன் எனவும், இவனது ஆட்சியில் பாண்டிய நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தைப் பற்றியும் தமிழக மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்.

தமிழகத்தின் சீதோஷ்ண நிலை வெப்பமாக இருந்தது. பெண்கள் எளிய ஆடைகளை உடுத்தியிருந்தனர். அரசர்களும் மெலிதான ஆடைகளையே உடுத்தியிருந்தனர். ஆனால், அவர்களுடைய ஆடைகளில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. வர்த்தகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வர்த்தகம் நன்கு நடைபெறுகிறது. அரசனும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவனாக இருக்கிறான். இரவிலும், பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எந்தவிதப் பயமும் இல்லாமல் பயணம் செய்கிறார்கள். நான் பயணம் செய்த ஊர்களிலேயே தமிழகம்தான் உலகத்திலேயே செல்வம் மிகுந்த, அற்புதமான பிரதேசம். உலகில் உள்ள அநேக முத்துகளும் ரத்தினங்களும், தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும்தான் கிடைக்கிறது.

அரிசி மட்டும்தான், தமிழகத்தில் பயிர் செய்யப்படும் ஒரு தானியம். உணவு உண்பதற்கு, மக்கள் வலது கையைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற காரியங்களைச் செய்வதற்கு இடது கையைப் பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் தாம்பூலம் போடுவதை முக்கிய பழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெற்றிலை, சுண்ணாம்புடன் வாசனைத் திரவியங்களையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விட்டு கண்ட இடங்களில் துப்புகிறார்கள். (துப்புக்கெட்ட மனிதர்கள்!!)

உலகிலேயே தமிழர்கள்தான் ஆருடம் பார்ப்பதிலும், குறி கேட்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நல்ல சகுனத்தையும், கெட்ட சகுனத்தையும் வேறுபடுத்துவதில் வல்லவர்கள் தமிழர்கள்.

முத்துக் குளிப்பவர்கள், முத்துக்களைத் தேடி கடலில் இறங்குவதற்கு முன்னர், சுறா மீன்கள் அவர்களைத் தாக்காமல் இருக்க பிராமணர்கள் மந்திரங்களை உச்சரிக்கிறார்கள். இதற்காக, அந்த பிராமணர்களுக்கு 20 முத்துகளுக்கு 1 முத்து என்ற வீதத்தில் சன்மானம் வழங்கப்படுகிறது. மக்கள் பசுக்களை தெய்வமாக வணங்குகிறார்கள். மாட்டிறைச்சி உண்பதில்லை. வீடுகளின் தரைகளெல்லாம் சாணம் கொண்டு மெழுகப்படுகிறது.

போர்களில் நீண்ட ஈட்டிகளும் கேடயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கன்னிப் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒவ்வொரு மாதமும் சுவையான உணவுகளையும் மாமிசத்தையும் சமைத்து தெய்வங்களுக்கு படையல் செய்கிறார்கள். தெய்வங்களின் முன் ஆடலும் பாடலும் நடைபெறுகின்றன. தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட பின்னர் அந்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்கிறார்கள். இச்சடங்கு தெய்வங்களின் குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக நடைபெறுகிறது.

கருப்புத் தோல் உடையவர் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள். இதனால் அக்குழந்தை மேலும் கருப்பாக வளரும் என்று நம்புகிறார்கள். கடவுள் சிலை அனைத்தும் கருப்பாகத் தோற்றம் அளிக்கச் செய்கிறார்கள். சாத்தான்களுக்கு பனி போல் வெண்மை நிறத்தை உருவமாக வைக்கிறார்கள்.

தமிழகத்தில் நிறைய யோகிகள் இருக்கிறார்கள். யோகிகள் சிறிது உணவை உட்கொண்டு மற்றவர்களைவிட அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள். சில யோகிகள் 200 ஆண்டுகள் வரைகூட உயிர் வாழ்கிறார்கள். நிர்வாணத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

நான் யோகிகளிடம் நீங்கள் ஏன் உங்கள் ஆண்குறி மறைக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீங்கள் அதைப் பயன்படுத்தித்தான் துன்மார்க்கத்திலும் பாவத்திலும் ஈடுபடுகிறீர்கள். அதனால்தான் வெட்கப்பட்டுக் அதை மூடி மறைக்கிறீர்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்வதில்லை. அதனால் நாங்கள் எதற்கும் வெட்கப்பட வேண்டியதில்லை’ என்று பதிலளித்தனர். காமத்தை வென்றவர்கள் யோகிகளாக முடியும் என்று கூறினர்.

ஏடன் நாட்டிலிருந்து வருடா வருடம் சுமார் 2000 குதிரைகள் கப்பல் மூலமாக பாண்டிய நாட்டின் துறைமுகத்தில் வந்திறங்குகின்றன. நான் பார்த்ததில் காயல்தான் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்) பெரிய துறைமுகமாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் காயல் துறைமுகத்திற்கு நிறைய கப்பல்கள் வந்து செல்கின்றன. தமிழகத்திற்கு வரும் வியாபாரிகளுக்கும், வெளிநாட்டவர்களுக்கும், அரசர் நிறைய வெகுமதிகள் வழங்குகிறார். அதனால் நிறைய வெளிநாட்டவர்கள் தமிழகம் வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். அரசர் பாரபட்சமில்லாமல் அரசை நிர்வகித்து வருகிறார். மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஸ்திரமாக ஆட்சி செய்து, அரசுக் கருவூலத்தில் நிறைய செல்வங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்.

About Marco Polo - Marco Polo's Souvenir Storeமார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளிலிருந்து, தமிழகம் உன்னத நிலை அடைந்திருந்ததை உணர முடிகிறது.

மார்க்கோ போலோ தமிழகத்தை விட்டுச் செல்லும் போது கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த பயணிக்கு நாம் பிரியாவிடை கொடுத்து, நமது சரித்திரப்பயணத்தைத் தொடர்வோம்.

முன்பே சொன்னதுபோல, தென்னிந்தியாவிற்கு, சரித்திரத்தில், இதுவரை காணாத பேரழிவு வரவிருக்கிறது.

புயலுக்கு முன் அமைதி என்பது போல.. காண்போம் விரைவில்.