அவருக்கு 48 வயது. இருபது வருடங்களுக்கும் மேலாக என்னைத் தொடர்ந்து பார்த்து வருகிறார். மருந்துகளுக்குக் கட்டுப்படும் வலிப்பு நோய்தான் என்றாலும், வாழ்க்கை முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை – மருந்துகளை நிறுத்தினாலோ அல்லது குறைத்தாலோ, மீண்டும் வலிப்பு வந்துவிடும். ‘தீர்க்க முடியாத’ வலிப்பு நோய் (Intractable epilepsy) என்ற வகையில் வரும் வலிப்புநோய் அவருக்கு.
இருபது வருடங்களுக்கு முன்பு, அவரை என்னிடம் அழைத்து வந்தவர் அவருடைய மாமா. பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டு, தேவைக்கு அதிகமான மருந்துகளுடன் என்னைப் பார்க்க வந்தார். பார்த்த உடன், அவருக்குச் சிறிது குறைவான IQ (‘நுண்ணறிவு ஈவு’ என்கிறது கூகிள் சாமி) இருக்கும் எனத் தோன்றியது. சில பரிசோதனைகள் செய்துவிட்டு, மிகக் குறைவான மாத்திரைகளுடன் அவரை அனுப்பி வைத்தேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ‘செக் அப்’ செய்துகொள்ள வந்து, மருந்துகள் வாங்கிச் செல்வார்.
எப்போதும் என்னைப் பார்க்க வரும்போது, ‘பளிச்’ சென்ற சட்டை, பேண்ட், அன்று மழிக்கப்பட்ட முகம், ‘ட்ரிம்’ செய்யப்பட்ட அரும்பு மீசை என வருவார். ஓரிரு சின்னச் சின்ன சுகவீனங்களைச் சொல்லி, மருந்து வாங்கிச் செல்வார். அவர் சிரித்து நான் பார்த்ததில்லை.
இரண்டு மூன்று வருடங்களாகத் தனியாகத்தான் வந்து கொண்டிருந்தார். கேட்டதில், மாமா தவறி விட்டதாகத் தெரிவித்தார்.
இந்தமுறை வந்த போது, நோயாளிகள் குறைவாக இருந்ததால், சிறிது நேரம் அவருடன் உரையாட முடிந்தது.
“என்ன வேலை செய்றீங்க?”
“மளிகைக் கடையில வேலை செய்யறேன்”
“அப்ப, காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை வேலை இருக்குமே?”
“இல்லைங்க சார். காலை எட்டு மனி முதல் இரவு ஒன்பது மணி வரைதான் வேலை. முதலாளியும் அவரு சம்சாரமும் நல்லா கவனிச்சுக்கிறாங்க. மதிய சாப்பாடு போட்டு, மாதம் இருபதாயிரம் சம்பளம் சார்” – பெருமையாகச் சொல்லிக்கொண்டார்.
“கல்யாணம் ஆயிருச்சா? எவ்வளவு பசங்க?”
“கல்யாணமா? இந்த நோயோட யாரும் கல்யாணம் கட்டிக்கத் தயாரா இல்லை சார். நானும் உண்மையச் சொல்லாமெ கல்யாணம் செய்துக்கிறது தப்புன்னு மொதல்லயே சொல்லிடுவேன் சார்.” குரலில் இருந்த உறுதி, வருத்தத்தை மறைத்தது.
“உங்களுக்கு அப்பா, அம்மா இல்லையா?”
“அவங்க எல்லாம் காலமாயிட்டாங்க சார். ஒரே தங்கச்சிதான். அதுக்கும் கல்யாணம் கட்டி வெச்சேன். அத்தோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் கட்டிக் குடுத்தேன். ரண்டு வருஷம் முன்னாலெ தங்கச்சி புருஷனும் காலமாயிட்டாரு. என் கூட வந்து இருன்னு சொன்னேன். மாட்டேன்னிடுச்சு – அதுக்கு என்னா நெனைப்போ எனக்குத் தெரியல; சரின்னு வுட்டுட்டேன்” – இப்போது சிறிது நெகிழ்ந்தது போல இருந்தது அவரது குரல்.
“மளிகைக் கடையிலேயே தங்கிடுவீங்களா?”
“இல்லைங்க சார். சின்னதா சொந்த வீடு இருக்குது. அதுல பிரச்சனை இல்லே சார்”
“சைக்கிள் ஏதாவது வெச்சிருக்கீங்கள?”
“இல்லைங்க சார். பஸ்ல போய் வருவேன். ராத்திரி பத்து மணி வரைக்கும் பஸ் இருக்குது சார். 15 நிமிஷம்தான்; வீட்டுக்குப் போய்டுவேன்”
“அப்ப, ராத்திரி சாப்பாடு?”
“எங்க ஊர் ஓட்டல்காரர் எனக்குத் தெரிஞ்சவரு. ஒரு சாப்பாடு எடுத்து வெச்சிடுவாரு சார்” – தன் சொந்த ஊர்ப் பெருமிதம் அவரது முகத்தில் தெரிந்தது.
“என்னைப் பார்க்க வர்ற நாளில் லீவு போட்டுடுவீங்களா?”
“ஆமாம் சார். ஞாயிற்றுக் கிழமைதான் எனக்கு லீவு. ஆனா அன்னைக்கு நீங்க இருக்க மாட்டீங்களே. அதான் ஒரு நாள் லீவு போட்டு வந்துருவேன்”
“ஞாயிற்றுக் கிழமை என்ன செய்வீங்க?”
“வீட்ட சுத்தம் செய்வேன். ஒரு வார துணிங்களை துவைத்து, காய வைத்து எடுத்து வைப்பேன். நல்லா தூங்கிட்டு, சாயந்திரம் கோயில், சினிமான்னு போய்டுவேன்”
“தனியா வசிக்கிறீங்க, கஷ்டமா இல்லையா?”
“தங்கச்சி கூட வரலையேன்னு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். பொய் சொல்லிக் கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லே. இப்படியே இருந்துட்டுப் போயிடலாம்னுதான் தோணுது” – ஒரு ‘விடுபட்ட’ நிலையில் மனது!
முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. தூரப் பார்வை ஒன்றைப் பார்த்தபடி, ‘ப்ச்’ என்றார். பின்னர் என்னைப் பார்த்து சின்னதாக ஒரு புன்னகை. மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு, ‘வர்றேன் சார்’. சென்று விட்டார்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில்தான் எத்தனை சோகங்கள் – அனைத்தையும் எப்படி இந்த மனிதனால் கடந்து போக முடிகிறது? வலிப்பு நோயை மறைத்துத் திருமணம் செய்யும் எத்தனையோ குடும்பங்களுக்கு நடுவில், உண்மையைச் சொல்லி, தனிமரமாக நிற்கும் இவர் எனக்கு வித்தியாசமாகத் தெரிகிறார். பாசம், நேர்மை, இயலாமை, தனிமை என எல்லாவற்றையும் தாண்டி, இவர்க்குள் இருக்கும் ‘மனிதம்’ என்னை மிகவும் கவர்ந்தது.
மனிதர்களில் தான் எத்தனை நிறங்கள்!

மனிதர்களில் பல வகைகள். உழைப்பாளி!
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike