




பாடித் திரிந்த பறவைகளே –
“பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பிரிந்து செல்கின்றோம் “என்ற இனிமையான பாடல்; படம் -இரத்தத் திலகம்; கல்லூரி ஃபேர்வெல் பார்ட்டி ஸீன் ; சிவாஜி ,சாவித்ரி ,நாகேஷ் நடிப்பு. அசத்தியிருப்பார்கள். நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு நண்பனிடம் நாகேஷ் டைம் கேட்பார் . கையில் காபி கோப்பை இருப்பதை மறந்து அந்த நண்பன் கைக்கடியாரம் பார்க்க கையைத் திருப்புவான். இதை எதிர்பார்த்தே டைம் கேட்ட நாகேஷ் கீழே சிந்தும் காபியை தன் கோப்பையில் பிடித்துக் கொள்வார். பாடலின் இடையே நிகழும் நகைச்சுவை இது.
எழுபதுகளில் கல்லூரி சென்ற அனைவருக்கும் பிடித்த பாடல். எண்பது தொண்ணூறு வரையிலும் கல்லூரிகளில் மாணவர் பிரிவுபசார விழாக்களில் நிச்சயம் இடம்பெறும் பாடலாக இது இருந்திருக்கிறது.
அண்மையில் இந்த பிளாக் அண்ட் ஒயிட் பாடல் சீனை யு ட்யூப்பில் பார்த்த போது நினைவுகள் பின்னோக்கி ஓடின. கல்விக் கூடங்களில் நிகழும் பிரிவுகள் மறக்க இயலாதவை . நிறைவு ஆண்டில் படித்த சீனியர் மாணவர்கள் விடைபெறுவதும், ஜூனியர்கள் சீனியர்களாக மாறுவதும் ஆண்டு தோறும் காணும் நிகழ்வல்லவா !
நினைவுகள் மேலும் பின்னோக்கிப் பறந்து கல்லூரி ஸ்டாப்பில் நிற்காமல் நான் படித்த பள்ளியின் ஐந்தாம் வகுப்பு வாசலில் நின்றது,
சென்னை தி. நகர் கிரிஃபித் ரோடில்(தற்போது மகாராஜபுரம் சந்தானம் சாலை ) உள்ள ராமகிருஷ்ணா மிஷன் எலிமென்டரி பள்ளியின் வாயிலில் பெற்றோர்கள் கூட்டம்.
நீண்ட விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடக்கம். எலிமென்டரி பள்ளியில் ஐந்து வரைதான் வகுப்புகள் உண்டு. அங்கிருந்து இப்பிள்ளைகள் பனகல் பார்க் எதிரில் உள்ள மெயின் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். இங்கே ஐந்தாம் கிளாஸில் ஒரே செக்ஷனில் படித்த மாணவர்கள் மெயின் பள்ளியில் ஒரே செக்ஷனில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உண்மையிலே வெவ்வேறு செக்ஷனில் போட வேண்டும் என்பதே விதி. இங்கிருந்து செல்லும் ஐம்பது மாணவர்களை ஐந்து பிரிவாக ஆல்பபெட்“ வரிசையில் பிரித்துவிடுவார்கள். இது என்ன லாஜிக் என்று இப்போதும் புரியவில்லை.
சரி! கதைக்கு வருவோம். தங்கள் பிள்ளைகள் மெயின் ஸ்கூலில் “ஏ “ யில் ஆரம்பித்து “ஹெச்” வரை உள்ள ஆறாம் வகுப்புகளில் எந்த செக்ஷனில் போடப்பட்டுள்ளார்கள் என்பதை அறியவே அத்தனை கூட்டம். இந்தத் தகவல் காகிதத்தில் எழுதப்பட்டு ஒரு கரும்பலகையில் ஓட்டப்பட்டிருக்கும். எங்கள் அன்னையார் இந்த “ரிசல்ட்” பார்க்க வந்திருந்தார்.
பார்த்த போதுதான் தெரிந்தது, இரட்டையர்களான நானும் என் சகோதரன் கணேஷும் ஒரே செக்ஷனில் போடப்படவில்லை ஒருவன் “பி” இன்னொருவன் “சி” எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெவ்வேறு கிளாஸுக்கு போகிறோம் என்ற அளவில் மட்டுமே புரிந்தது. அதில் எங்களுக்கு விருப்பமில்லை. எங்கள் அன்னையார் எங்களைப் பிரித்து வெவ்வேறு வகுப்பில் போட்டால் நாங்கள் அழுது அடம் பிடிப்போம் என அறிந்து கொண்டு, எங்களை வெளியே விட்டு விட்டு “ஹெட் மாஸ்டர் “ அறைக்குள் சென்று ஒரு பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தார்.
“ டேய் ! அழாதீங்க ! ஒங்க வாத்தியார் கிட்ட சொல்லியச்சு. இரண்டு பேரும் ஒரே! செக்ஷன்தான் ..
“என்னம்மா சொன்னே ?”
“உண்மையைச் சொன்னேன்” என்றாள் அம்மா! (ரஜினி ஸ்டைலில்)
ஆமாம் நாங்கள் இரட்டையர் என்ற உண்மையைச் சொல்லிவிட்டு ,எங்களை ஒரே வகுப்பில் போடா விட்டால் வீட்டில் பெரிய பிரளயமே உருவாகும் என்ற இன்னொரு உண்மையையும் சொல்லி, ஸீட் ” வாங்கிவிட்டாள்.
அப்படியாகத்தானே எலிமென்டரி பள்ளியில் இருந்து ஹை ஸ்கூல் செல்லும் வைபவம், வேறு பெரிய “நிகழ்ச்சிகள்” இன்றி நடந்தேறியது.
கல்லூரி அனுபவம் வேற மாதிரி! முதல் ஆண்டிலேயே , ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் கடைசி நாள் பார்ட்டி கொடுப்பதையும் அந்த விழாவில் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொண்டோம். எனவே நாங்கள் மூன்றாம் ஆண்டு முடிக்கும் பொது, மிகச் சிறந்த முறையில் “பிரிவு உபசார விழா” நடத்தத் தீர்மானித்தோம்.
“ஹோட்டல் ஸ்வாகத்” தில் ஹால் புக் செய்து விட்டோம். மாலை, சந்தணம், வரவேற்பு, புகைப்படம் எடுத்துக் கொள்வது, ஆசிரியர்களை கௌரவிப்பது, பணியாளர்களை கௌரவிப்பது,சிறு இசை நிகழ்ச்சி, டின்னர் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கு இடையே நானும் என் நண்பன் “கோபி” என்ற ராஜகோபாலும் சேர்ந்து ஒரு “மிமிக்ரி” நிகழ்ச்சி நடத்திக் காட்டினோம்.
நாங்கள் செய்த மிமிக்ரி -யில் பிரபலமானவர்களின் குரலை பயன்படுத்தவில்லை. எங்கள் வகுப்புத் தோழர்களின் குரல் , உடல் மொழி ஆகியவற்றை நகைச்சுவையோடு செய்து காட்டினோம். பூரா ஸ்கிரிப்ட் நான் எழுதியது. தவறாக எண்ணமாட்டார்கள் என்று நாங்கள் நினைத்த சில இளம் பேராசிரியர்களின் அங்க சேட்டைகளையும் அரங்கேற்றினோம். சபையே குலுங்கிச் சிரித்தது. இப்போதிருந்தால் “யூ ட்யூப் -ல் ஷார்ட்ஸ் போட்டிருக்கலாம்.
அல்லாடி ராமச்சந்திரன் என்று ஒரு கெமிஸ்ட்ரி புரொஃபசர். அவர் வகுப்புக்குள் நுழையும் போதே , சென்ற வகுப்பில் எழுதிய ஈக்வேஷன்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு, எங்கே விட்டாரோ அதன் தொடர்ச்சியை அப்படியே கரும்பலகையில் எழுதத் தொடங்கிவிடுவார். அவர் போர்டில் எழுதுவதை உடனே விரைவாக நாங்கள் எழுதிக் கொள்ளவேண்டும். நான்கு வரிகள் எழுதினால் மேலே உள்ளதை அழித்துவிடுவார் . வலது கையில் சாக் பீஸ் இடது கையில் டஸ்டர் ; சில நேரங்களில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கும். இவர் செயலையும் ஒரு கையால் மணி அடித்துக் கொண்டு மற்றொரு கையால் ஆரத்தி சுற்றிக் கொண்டு தீபம் காட்டும் பூசாரியின் செயலையும் இணைத்து ஒரு “ஆக்ஷன் காமெடி” வைத்திருந்தோம். அது படு ஹிட் !
இன்னொரு லெக்சரர் இருந்தார். எல்லா வகுப்பிலும் “ ஆஸ் ஐ டோல்ட் யு இன் த லாஸ்ட் கிளாஸ் “ என்று ஆரம்பிப்பார். “ எல்லா விஷயத்தையும் போன வகுப்பிலேயே சொல்லிவிட்டால் இந்த வகுப்பில் என்ன சொல்லப் போகிறீர்கள்” என்ற கருத்தில் இன்னொரு நகைச்சுவை.
பேராசிரியர் நரசிம்ம ராவ் எங்களுக்கு இகாலோஜி என்ற சூழ்நிலை இயல் எடுப்பார். அவர் பேசும் போது நிமிடத்துக்கு ஒரு முறை “ யு ஸீ யூ ஸீ” என்று சாக் பீஸை உருட்டிக் கொண்டே பேசுவார். இவர் கண் டாக்டராக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டு உடனே நழுவும் தோழன் வெங்கடேஷ் ஆசிரியர் ஆனால் என்ன செய்வான் என்றொரு கற்பனை;
வயலின் இசையை முறைப்படி கற்றுக் கொண்டு வாசித்து வந்த ஃபிசிக்ஸ் புரொஃபசர் என். எஸ் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை பாஷையில் “ஃபிசிகல் பேலன்ஸ்” பற்றி வகுப்பெடுத்தால் எப்படி இருக்கும் என்று மற்றொரு கற்பனை.
ஆக மொத்தம் ரகளை. இறுதியில் பேசிய எங்கள் பிரின்ஸிபால் என்னை மிகவும் பாராட்டிவிட்டு
“பட் ஒன் திங் ஐ டோன்ட் லைக் அபௌட் திஸ் மிமிக்ரி.. என்னை ஏன் இந்த கிண்டலில் சேர்த்துக் கொள்ளவில்லை..? இருந்தால் நான் என்ஜாய் பண்ணியிருப்பேன் “ என்றார். என்னால் மறக்க முடியாத பிரிவு விழா அது.
பிறகு வட இந்தியாவில் பாட்னாவிலும். வாரணாசியிலும் நான் முதுகலை பட்டப்படிப்பு படிக்கச் சென்று பட்ட அனுபவங்களைப் பிறிதொரு பகுதியில் எழுதியிருக்கிறேன். காசியிலிருந்து பாட்னா வந்து அங்கிருந்து கல்கத்தா வந்து ஹெளரா மெயிலில் சென்னை வரவேண்டும் (கல்கத்தாவில் அது மதராஸ் மெயில்). என்னுடன் படித்த நண்பர்களும் நண்பிகளும் பாட்னா ஸ்டேஷன் நடை மேடையில் என்னை வழியனுப்பக் கூட்டமாக வந்திருந்தனர். இருபது இருபத்தைந்து பேர்கள் இருந்திருப்பார்கள். கழுத்துக்கு மோதிரம் போட்டது போல ஒரு சிறிய மாலையைப் போட்டு கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர். “மணி ஜி ஹிப் ஹிப் ஹு ரே “ என்ற கோஷம் வானைப் பிளந்தது. ( சரி சரி நாலு பேர் கத்தினார்கள்.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் ) ஒருத்தன் ஸ்வீட் பாக்ஸ் , இன்னொருத்தன பிஸ்கட் வாட்டர் பாட்டில் என்று கைகளில் திணித்தனர். எல்லோரும் இரண்டு ஆண்டுகளில் அங்கே பெற்ற நண்பர்கள்; வட இந்தியர்கள் சில வங்காளிகள் . அவர்கள் கழுத்தில் போட்ட சின்ன மாலையை கஷ்டப்பட்டு வண்டி நகர்ந்த பின்பு கழற்றினேன். ஆனால் அவர்கள் அன்பு அதை எப்படிக் கழற்றுவது ? அது கழுத்திலிருந்து இறங்கி நெஞ்சில் நிலைத்துவிட்டது.
கல்லூரிப் பணியில் சேர்ந்த பிறகு ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் விடைபெறும் சீனியர் மாணவர்கள், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் என்று பல ஃபேர்வெல் பார்ட்டிகள். ஒரு ஆண்டில் ஐந்து நிச்சயம் இருக்கும்.
கல்லூரி முதல்வராக இருந்த ஆண்டுகளில் , ஃபேர்வெல் பார்ட்டி என நினைத்தாலே தலைசுற்றும். இருபத்தியோரு டிபார்ட்மெண்ட் , தவிர என். சி. சி.,விளையாட்டுத்துறை, கல்லூரி அலுவலகம் என பல இடங்களிலும், எல்லா குருப் போட்டோக்களிலும் பிரினஸிபால் இருக்கவேண்டும்.
கல்லூரியின் அருகில் இருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலில்தான் பெரும்பாலும் டின்னர் ஏற்பாடு செய்திருப்பார்கள். மார்ச் ஏப்ரல் மாதங்களில் அந்த உணவகத்தின் “மெனு” எனக்கு அத்துபடியாகிவிடும். பிறகு அலுத்தும் விடும். எனக்குப் பழகி விட்டாலும் அந்தந்த “பேட்ஜ்” மாணவர்களுக்கு அது முதல்முறைதானே ! எனவே எப்போதும் உற்சாகத்திற்குக் குறைவு இருக்காது. ( இப்போது நினைத்தாலும் அது தனி சுகம்தான்)
முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிப் பணி ஓய்வு பெறும் போது ,வேறெந்த முதல்வருக்கும் கிட்டாத பேரும் பேறு எனக்குக் கிட்டியது எங்கள் சென்னை இராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீ கௌதமானந்த ஜி அவர்கள் ( தற்போது உலகளாவிய இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக விளங்குகிறார்) தானே நேரில் வந்து எனக்கொரு ஃபேர்வெல் பார்ட்டி கொடுத்தார். மிகச் சிறந்த முதல்வராக இருந்து பணியாற்றினேன் என என்னைப் பாராட்டினார். இன்றும் அந்தப் பாராட்டு என் நெஞ்சில் தங்கப் பதக்கமாக மின்னுகின்றது.
மிகுந்த மனநிறைவோடு அன்று மாலை சுவாமிஜியை வணங்கிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு எனது காரில் ஏறினேன்.
“பிரின்ஸிபால் சார் ! பலமுறை உங்களோடு காரில் வந்திருக்கிறேன். வழியிலுள்ள என் வீட்டில் என்னை டிராப் செய்துவிட்டு நீங்கள் போயிருக்கிறீர்கள் .. இன்று வழியனுப்பு நாள் உங்களை வீட்டில் கொண்டு விட்ட பிறகே நான் இறங்குவேன்” என்று எனது இளைய நண்பர் சம்ஸ்கிருதத் துறை பேராசிரியர் டாக்டர் சீனிவாசன் என்னுடன் காரில் ஏறினார்.
“ யூ ஆர் வெல்கம் .. சீனிவாசன் ! ஓய்வு பெறும் முதல்வரை வீடு வரை சென்று வழியனுப்பினால் நீங்களும் ஒருநாள் முதல்வர் ஆகிவிடுவீர்கள் “ என்று நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் ஸ்ரீநிவாசன் விவேகானந்தா கல்லூரியின் முதல்வராகப் பணி ஏற்றார் என்பது மகிழ்ச்சியான கூடுதல் தகவல்.
(தொடரும்)
