புத்தகம் : THE LIFE CHANGING MAGIC OF TIDYING
எழுதியவர் : Marie Kondo
English translation : Cathy Hirano
Published originally by : Vermilion, London ( Reprinted in India)
248 pages. Price : 10.99 British Pounds
ஏதோ ஒரு காரணத்திற்காக, நான் அடிக்கடி சென்னையிலிருந்து திருச்சி சென்று வருகிறேன். அங்கு செல்லும்போதெல்லாம் நான் தங்குவது என் உடன்பிறவா சகோதரி பூங்குழலி பிரகாஷ் வீட்டில்தான். ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்குள்ள மேசையில் புதிதாக ஒரு புத்தகம் கண்ணில் படும். அங்குள்ள சில நாட்களில் அவ்வப்போது அதைப் புரட்டி சிறிது சிறிதாகப் படித்து மகிழ்வேன்.
கடந்த முறை திருச்சி சென்றபோது அப்படி என் கண்ணில் பட்ட வித்தியாசமான புத்தகம்தான் மேரி கோண்டோ எழுதிய “ The Life Changing Magic Of Tidying”. சித்திரங்கள் இல்லாத வெண்ணிற முன் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள் :
A simple, effective way to banish clutter forever
The Japanese sensation – 3 million copies sold.
மேரி கோண்டோ என்பவரால், ஜப்பானிய மொழியில் முதலில் எழுதப்பட்டு பின்னர் கேந்தி ஹிரானோ என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டு, பலருக்கும் பயன்பட்ட நூல் இது.
இந்த நூலைக் கையில் எடுத்ததும் “ Transform your home into a permanently tidy, clutter – free space and be amazed at how your whole life changes” என்ற பின்னட்டை வாசகத்தைக் கண்டதும் ஆச்சரியப்பட்டேன்.
ஆச்சரியம் ஏனென்றால் “வீட்டை ஒழிப்பது – ஒழுங்குபடுத்துவது” என்பதை ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகத்தான் நாமெல்லாம் நினைப்போம். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி தன்னுடைய இளம் வயதிலிருந்து எண்ணி, அலசி, ஆராய்ந்து, புத்தகங்கள் பல படித்து, முயற்சிகள் பல செய்து, “கோன் மாரி வழிமுறை” என்று ஒரு புதுவித முறையினை வார்த்தெடுத்து, அதைப் பலருக்கும் சொல்லிக் கொடுப்பதை தன் வாழ்க்கைக் குறிக்கோளாகவும் வாழ்வியலாகவும் மாற்றி, இப்படி ஒரு விளக்கமான ஒரு நூலையும் எழுதி என்று சாதனை படைத்திருக்கிறார் மேரி கோண்டோ. இதைப் படிக்கும் உங்களுக்கும் ஆச்சரியம் மிகுந்திருக்கும்தானே ?
வெகு அபூர்வமான சிலருக்கு மட்டுமே இயற்கையிலேயே குப்பைகள் சேர்க்காமல் வீட்டை ஒழுங்காக அழகாக வைத்திருக்கும் கலையும் கைவண்ணமும் வாய்த்திருக்கும். நம்மில் பலரும் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவித்து அதை வீடெங்கும் பரப்பி, அந்த பிரவாகத்தில் தொடர்ந்து தத்தளிப்பவர்களாகவே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் தேவையற்றவற்றை தூர எறிந்து விட்டு வீட்டை ஒழுங்குபடுத்தி, அந்த ஒழுங்குபட்ட ரம்மியமான சூழ்நிலையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற கனவுடனேயே வாழ்ந்து வருகிறோம். இந்தக் கனவு என்றுமே நிறைவேறுவதில்லை. அவ்வப்போது வீட்டை சீர்படுத்தினாலும் கூட மீண்டும் மீண்டும் நம் வீடு பழைய சீர்குலைந்த நிலைக்கே திரும்பி, நம்மை ஏளனம் செய்கிறது. இந்த விஷயத்தில் நான் மிகவும் ஒரு மோசமான உதாரணம்.
நம்மைப் போன்றவர்களுக்கு மேரி கோண்டோவின் இந்த அரிய நூல் ஒரு வரப்பிரசாதம். இதைப் படிப்பவர்கள் இந்த விஷயத்தில் பல புதிய தெளிவுகளைப் பெறுவார்கள். இவர் காட்டிய வழிமுறைகளை உடனே செயல்படுத்தினால், வீட்டிலும், அதைத் தொடர்ந்து வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.
நான் படித்துவிட்டேன். செயல்பாடு இனிமேல்தான் !


அருமையான புத்தகம்
LikeLike