ஏனிட் – புத்தகம் 2 – “ட்ராயின் கடைசி இரவு”

ஏனியஸ் தன் துயரக் கதையைக் கூற ஆரம்பித்தான். அவன் உயிருக்கு உயிராய் நேசித்த டிராய் நாட்டின் அழிவு அவன் கண்களில் தெரிந்தது. நெஞ்சம் துடித்தது. கண்களில் ஈரம் கசிந்தது. வார்த்தைகள் மெல்ல உதிர்ந்தன. கேட்போரைத் துயரில் ஆழ்த்தும் அவனது நினைவலைகள். டிராய் நாடு எரிந்து சாம்பலான அந்தக் கடைசி நாள்..
டிராய் நாடு இருளில் மூழ்கப்போவதை அறிவிக்க விரும்பாத சந்திரனும் அன்று மாலையில் மிகுந்த ஒளியுடன் விளங்கினான். நகரின் உயர்ந்த கோபுரங்களிலிருந்து பிரதிபலித்த சந்திர கிரணங்கள் அந்தக் கடற்கரையை மணல் வெளியை நீலக் கடலை அப்படியே வெள்ளிப் பாளங்களாக மாற்றியிருந்தன.
பத்து வருடங்களாக ட்ராய் நகரின் வாயில்களில் பாய்ந்த ரத்தமும், போர் வீரர்களின் ஆரவாரமும் இறந்தவர்களை எரிக்கும் புகையும் இல்லாமல் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் ஒருவித மயான அமைதி நிலவியது.
இந்த அமைதி புயலுக்கு முன்னா பின்னா என்று புரியாத சூழ்நிலை அங்குப் பரவியிருந்தது.
பத்து ஆண்டுகளாகப் போரிட்ட கிரேக்கப் படையில் ஒருவர் கூட இல்லை. அவர்களது கப்பல்களும் அந்தக் கடல் வெளியில் எங்கும் இருப்பதாகத் தோன்றவில்லை. மிகவும் பாதுகாப்பான டிராய் கோட்டைக்குள் செல்லும் வழி தெரியாமல் எவ்வளவு காலம் முற்றுகையிடுவது என்று துவண்ட கிரேக்கப் படை திரும்பிவிட்டதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

கிரேக்கர் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த டிராய் நகர மக்கள், நகரின் வாசலில் ஒன்று திரண்டனர். அங்கே மரத்தில் வடிவமைக்கப்பட்டு சக்கரங்கள் இணைக்கப்பட்ட மிக உயர்ந்த ஒரு மரக் குதிரை மட்டும் இருந்தது. அந்த மரக் குதிரை கருநிழலோடு சந்திர ஒளியில் பீதி ஊட்டியது.
“இது என்ன வினோதம்?” என்று சிலர் கூவினார்கள்.
“கிரேக்கர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்கள், இது நமக்குக் கிடைத்த வெற்றியின் பரிசு, இதை கோட்டைக்குள் எடுத்துச் சென்று மன்னரிடம் ஒப்படைப்போம் ” என்று சிலர் மெல்ல உரைத்தனர்,
அவர்கள் நெஞ்சில் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு டிராய் நகரின் ஆசாரியர் வந்தார். அவர் முகம் கோபத்தில் சிவந்தது. குரல் புயலாய் எழுந்தது.
“மூடர்களே! இது அவர்கள் விட்டுச் சென்ற பரிசு அல்ல. நம்மை அழிக்க வந்த சாவுக் கடவுள்! இதன் உள்ளே படைகள் மறைந்து இருக்கலாம். இதை நகருக்குள் கொண்டு செல்லாதீர்கள்!”அப்படிக் கூறிக்கொண்டு அவர் தன் கையிலிருந்த ஈட்டியை குதிரையின் பக்கத்தில் எறிந்தார். மரக் குதிரையில் உள்ளிருந்து இரும்பு உராய்ந்த சத்தம் அவருக்கு மட்டும் கேட்டது. மற்ற மக்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை. அதனால் அதற்குள் ஒன்றும் இல்லை என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள்.
அப்போது, நகரக் காவலர்கள் கடற்கரையில் மயங்கிக் கிடந்த ஒரு கிரேக்கத் தளபதியை கைது செய்து இழுத்து வந்தனர். அவன் பெயர் சினோன்.
“நான் கிரேக்கப் படையிலிருந்து தப்பி வந்த தளபதி! என்னைக் காப்பாற்றுங்கள் ,” என்று அவன் கதறினான்.
“தோல்வியுற்றுத் திரும்பிய கிரேக்கப் படை தங்கள் கடற்பயணம் நல்லபடியாக இருக்க ஜூபிடர் கடவுளுக்கு என்னைப் பலியிட விரும்பினர். நான் உயிர் பிழைக்க வேண்டி கடலில் குதித்து நீந்தி வந்தேன். கடற்கரையில் கடவுளர்கள் இந்தக் குதிரையை ஆதீனாதேவிக்கு சமர்ப்பிக்க முடிந்தால் டிராய் நாட்டு மக்கள் என்றென்றும் பாதுகாப்புடன் இருப்பார்கள். எந்தப் படை வந்தாலும் அவர்களை யாரும் அழிக்க முடியாது என்று கூறுவதைக் கேட்டேன். இந்த ரகசியத்தைக் கூறியதால் என்னைக் காப்பாற்றுங்கள்! என்று அழுகையுடன் உணர்ச்சி ததும்பக் கூறினான்.
இது அனைத்தும் ஒடிஸியஸின் திட்டம். சினோனை இப்படி நடிக்கச் செய்ததும் அவனே!
அதை அறியாத மக்களும் காவலரும் அவனைப் பரிபூரணமாக நம்பினர்.
ஆனால் டிராய் நாட்டு ஆச்சாரியர் அவனை நம்பவில்லை. அந்தக் கடற்கரையிலேயே சினோனைப் பலியிடத் தயாரானார். ஆனால் அந்த சமயம் அச்சமூட்டும் நிகழ்வு அந்தக் கடற்கரை வெளியில் நடைபெற்றது. கடலின் ஆழத்திலிருந்து, இரண்டு பிரம்மாண்டமான பாம்புகள் போன்ற பறவைகள் சிறகடித்துப் பாய்ந்து வந்தன. அவை இரண்டும் ஆச்சாரியரின் கழுத்தைச் சுற்றி நெரித்துப் பிழிந்தன. அந்த இடத்திலேயே ஆச்சாரியார் ரத்தம் கக்கி மரணமடைந்தார். .
“இது ஆதீனாதேவியின் தண்டனை! அவள் குதிரையை விரும்புகிறாள்,” என்று மக்கள் அலறினர்.
உடனே காவலர்களும் மக்களும் அந்த மரக் குதிரையை அந்த இரவில் கோட்டைக்குள் இழுத்துச் சென்று ஆதீனாதேவியின் கோயிலின் அருகே வைத்தார்கள் கோட்டைக் கதவைப் பலமாகத் தாழிட்டு காலையில் பிரியம் மன்னனிடம் சொல்லலாம் என்று சென்றனர்.கடவுளர்கள் எண்ணப்படி மிகுந்த பாதுகாப்போடு இருப்போம் என்ற நம்பிக்கையில் டிராய் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் சென்றனர்.
பாவம் அந்த நகர மக்கள்! இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் கதி அதோகதியாகப் போகிறது என்பதை அறியாதப் பாமர மக்கள் அவர்கள்!
அந்த நள்ளிரவில் டிராய் கோட்டைக்குள் நகரம் அமைதியில் மூழ்கியிருந்தது. ஆனால் அந்த அமைதியின் உள்ளே, மரக் குதிரையின் உடலுக்குள் மெல்லிய சலனம் ஏற்பட்டது. கிரேக்க வீரர்கள் ஒடிசியஸ், மெனிலாயஸ் மற்றும் பலர் மரக் குதிரையிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் காவலர்களைக் கொன்று, வாயில்களைத் திறந்தனர்.
அந்த இடைவெளியில், கடற்கரையில் மறைந்திருந்த கிரேக்கப் படைகள், இருளின் போர்வையில் நகருக்குள் பாய்ந்தன. வாள்கள் மின்னின, சத்தங்கள் உயர்ந்தன, வீடுகள் தீயில் மூழ்கின. புகையும் சாம்பலும் காற்றில் கலந்தன; எரியும் மரத்தின் வாசம் மூச்சை அடைத்தது.டிராய் வீரர்கள் கண் விழிக்கும் முன் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். அரச குடும்பத்து பெண்களையும் கிரேக்கப் படைகள் விட்டு வைக்கவில்லை. அக்கிலீஸைக் கொன்ற பாரிஸைக் கிரேக்க தளபதி விஷ அம்பைச் செலுத்திக் கொன்றான். டிராய் நகரம் பற்றி எரிந்தது. ஒரே இரவில் வெற்றியும் வெறியும் கிரேக்கர் வசமாயிற்று.
ஏனியாஸ் அந்த சமயத்தில் தான் இருந்த நிலையை விவரித்தான்.
நான், அந்த இரவில் என் மாளிகையில் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென என் கனவில் டிராய் நாட்டின் வீரத் தளபதி – அக்கிலீஸினால் கொல்லப்பட்ட என் ஒன்றுவிட்ட சகோதரன் மாவீரன் ஹெக்டர் தோன்றினார்.
“ஏனியாஸ்,! விழித்தெழு! நம் நகரம் விழுந்துவிட்டது. உன் வீரத்தை வீணடிக்காதே. உன் தந்தையையும், குடும்பத்தையும், தெய்வங்களின் பிம்பங்களையும் காப்பாற்ற இந்த நாட்டைவிட்டுப் புறப்படு ! எண்ணற்ற காரியங்களை நீ சாதிக்க வேண்டியவன். உன் உயிரைக் காப்பாற்றிக்கொள் ” என்று ஆணித்தரமாக உத்தரவிட்டார்.
நான் பயத்துடன் விழித்தேன். தொலைவில் போரின் சத்தம், குரல்கள், கற்கள் விழும் ஓசை – எல்லாம் ஒன்றாகக் கலந்திருந்தது. நான் டிராய் நகரைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்தி தெருக்களில் ஓடினேன். என்னுடன் வந்த டிரோஜன் வீரர்களுடன் சேர்ந்து கிரேக்கர்களை எதிர்த்துத் தீவிரமாகப் போரிட்டோம். சில முக்கிய கிரேக்கத் தளபதிகளை வீழ்த்தினோம், ஆனால் அவர்கள் எண்ணிக்கையும் ஆயுதங்களும் எங்களை விடப் பெரும் அளவில் இருந்ததால் எங்கள் வீரர்கள் அனைவரும் மடிந்தார்கள். இறை அருளால் நான் மட்டும் உயிர் தப்பினேன்.
நான் அரண்மனைக்குச் சென்றேன். அங்கு வயதான மன்னர் பிரியம் தன் மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அகிலீஸின் மகன் மன்னரை அவமதித்து, அரியணை முன் கொன்றுவிட்டான். அந்தக் காட்சி எனது உள்ளத்தை நொறுக்கியது.
என்னைக் காத்த என் தாயும் உடனே என்னை வீட்டுக்குச் செல்லும்படி உத்தரவிட்டாள். வீட்டில் என் தந்தையும் மனைவியும் மகனும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது வானிலிருந்து ஒரு விண்மீன் வளைந்து, நகரத்தின் வெளியே பாய்ந்தது. அதன் அர்த்தத்தை என் தந்தை எனக்கு கண்களில் கண்ணீருடன் விளக்கினார். “இது கடவுளின் சைகை. நாம் உடனே இந்த நாட்டை விட்டுப் புறப்பட வேண்டும்.”என்றார்.
நான் தந்தையைத் தோளில் சுமந்து, இடது கையால் மகனைப் பிடித்துக்கொண்டு ஓடினேன். என் மனைவியை என்னுடன் தொடர்ந்து வருமாறு கூறினேன். நாங்கள் தெருக்களை விட்டு, இருளின் மறைவில் நகரின் பின்வாசல் வழியாக ஓடினோம்.
எங்கும் தீ, எங்கும் அலறல்கள்.
நகரின் வெளியே வந்ததும் – என் இதயம் துடித்தது – என் மனைவியைக் காணவில்லை! உடனே தந்தையையும் மகனையும் அங்கேயே நிறுத்திவிட்டு நான் மட்டும் மீண்டும் நகருக்குள் ஓடினேன். எரியும் வீடுகளின் வழியாக, புகை மூடிய தெருக்களில் அவளது பெயரை உரக்கக் கூவினேன்.
அப்போது ஒரு நிழல் என் முன் தோன்றியது. அவள் முகம்தான். ஆவி வடிவில் இருந்தது. ஆனால் அவள் குரல் தெளிவாகக் கேட்டது.
“ஏனியாஸ்! என் விதி இங்கு முடிந்துவிட்டது. என்னைக் காண முயலாதே. உன் தந்தையையும் நம் மகனையும் காப்பாற்றி, கடலைத் தாண்டிச் செல். ஒரு பெரிய பேரரசு உன் சந்ததியால் உருவாகும்.”
நான் தாங்க முடியாத துயரத்துடனும் வெடித்த இதயத்துடனும் கண்களில் வழியும் கண்ணீருடனும் அவளை விட்டுப் பிரிந்தேன்.
விடியற்காலையில், உயிர் பிழைத்தவர்கள் சிலர் என்னோடு சேர்ந்தனர். என் பொன்னாட்டைத் திரும்பிப் பார்த்தேன். டிராய் நகரத்து அழகிய மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் சிதிலங்களாகவும், புகை வடிவிலும் சிதறிக் கிடந்தன. என் மனம் வெடித்துச் சிதறியது. இனி இந்த நாட்டுக்கு நான் திரும்ப வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தேன்.
எனக்கு முன்னே முடிவற்ற கடல் காட்சியளித்தது.
நான் என் மகனின் கையைப் பிடித்து, தந்தையைத் தாங்கி, அந்தக் கடலை நோக்கி நடந்தேன். ஒரு புதிய நிலம், ஒரு புதிய வாழ்க்கை, ஒரு புதிய கதை – எங்களுக்காகக் காத்திருந்தது.

“Trojan Horse” – A Trojan horse is a type of malicious software (malware) that disguises itself as legitimate or harmless software to trick users into installing it, much like the mythological Trojan Horse. This is named after the story above!!
LikeLike