
நன்றி:விக்கிபீடியா
கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் (புதினம்) கருதப்படுகிறது.[1] இதனை பி. ஆர். இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் 1893 பெப்ரவரியில் இருந்து எழுதத் தொடங்கினார்.
விவேக சிந்தாமணியின் முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்ற தலைப்பிலும் மூன்றாவது இதழில் இருந்து ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வந்து 1895 ஜனவரியில் நிறைவுற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது பி. ஆர். சிவசுப்பிரமணிய ஐயர் என்ற பெயரிலேயே எழுதினார்.
ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார்.
கதைச் சுருக்கம்
சிறுகுளம் என்ற கிராமத்தில் வாழும், முத்துசாமி அய்யர் – கமலாம்பாள் என்ற தம்பதியினரை கதைமாந்தர்களாகக் கொண்டது இந்த நாவல். சிறுகுளத்திலிருந்து பனராஸ் வரை இந்நாவலின் களம் விரிந்திருக்கிறது. நிறைவாக வாழ்ந்த இத்தம்பதியர்களின் வாழ்க்கை, சுற்றம் மற்றும் பந்துமித்திரர்களின் அபவாதங்களால் சீரழிவதைப் பற்றிய கதைக் களனைக் கொண்டது இந்த நாவல்.
விமரிசனங்கள்
19ஆம் நூற்றாண்டின் மக்களினைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு மற்றும் நாட்டுப்புற சூழல் பற்றி கூரியமான அவதானிப்பினை பதிவு செய்துள்ளது இந்த நாவல். இந்த அவதானிப்பினை பதிவு செய்ததாலும், தத்துவ மற்றும் இயல்பான நகைச்சுவை பரவியிருப்பதாலும், இந்நாவல் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்நாவல் தெற்காசிய இலக்கியத்தின் ஒரு மைல் கல்லாக திகழ்கிறது.
கமலாம்பாள் சரித்திரத்தின் முற்பகுதியானது ராஜமய்யரின் இலக்கியக் கலைத்திறனாலும், அனுபவ செழுமையாலும் நிறைந்துகிடக்கிறது. இயல்பான பேச்சும், பல வண்ணங்கள் கொண்ட நகைச்சுவையும், யதார்த்தமான நடையும், நடமாடும் கதைமாந்தரின் குணச்சித்திரமும் பிரமிக்க வைக்கும் நேர்த்தியோடு அமைந்திருக்கிறது.
ஆங்கில மொழிபெயர்ப்பு
பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம். உலகக் கலாசார வரிசையில் வெளியிடுவதற்காக ஐக்கிய நாட்டு ஸ்தாபனம், சுமார் ஐம்பதாண்டுகளுக்கு (1950இல்) முன்பே தேர்ந்தெடுத்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகியது. என்ன காரணமோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. மொழிபெயர்ப்பும் தொலைந்துவிட்டது.
பின்னர் இந்த நாவல், The Fatal Rumour என்று ஆங்கிலத்தில் ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் (Stuart Blackburn) என்பவர், பல ஆண்டுகள் அந்த நாவலை ஆராய்ந்து, 1999 இல் அடிக்குறிப்புகளும் சிறப்பு அகராதியும் இணைத்து அந்த நாவலை ஆங்கில மொழியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடச் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு, 2000ஆம் ஆண்டின் ஏ. கே. ராமானுஜன் மொழிமாற்றப் படைப்புக்கான விருதினைப் பெற்றது.
கமலாம்பாள்: கதைநாயகி. பொறுமையுடன் பிறரை அனுசரித்துப் போகும் பெண். அன்பும் பணிவும் அடக்கமும் நிரம்பியவள்.
முத்துஸ்வாமி ஐயர்: கமலாம்பாளின் கணவர். நல்ல குணமும், ஊருக்கு உதவும் பெருந்தன்மையும் கொண்டவர். வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர்.
கல்யாணி/லட்சுமி: கமலாம்பாள் – முத்துஸ்வாமி ஐயர் தம்பதியின் மகள்.
சுப்பிரமணிய ஐயர்: முத்துஸ்வாமி ஐயரின் தம்பி. அண்ணன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். மனைவிக்கு பயந்தவர்.
பொன்னம்மாள்: சுப்பிரமணிய ஐயரின் மனைவி, பொறாமையும் அகங்காரமும் கொண்ட அவளுக்கு துர் உபதேசம் செய்து தூண்டி விடுவது வம்பர் மகாசபையும் அதன் அங்கத்துப் பெண்மணிகளும்
சுந்தரம்: சுப்பிரமணிய ஐயர்- பொன்னம்மா தம்பதியின் மகன்.
ஆடுசாப்பட்டி அம்மையப்ப பிள்ளை: தமிழ் ஆசிரியர். பிறருக்கு விளங்காத வகையில் பேசியும் பாடல்கள் பல பாடியும் உலகம் அறியாமல் இருக்கும் பழந்தமிழ் பண்டிதர்களின் ஒரு பிரதிநிதி இக்கதாபாத்திரம். கமலாம்பாளை ஒரு ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றுபவர்.
பாராட்டுதல்கள்:
பாரதியார் “ஸ்ரீ இராஜமய்யர் புதிதாக தமிழ்க்கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார்” என்று சான்றளித்துள்ளார்.
கருத்துப் பிரச்சாரம் மேலோங்காத நாவல்; நுட்பமான நகைச்சுவையும் குணச்சித்திர வரைவும் கொண்டது; நுண்ணிய உளவியல் சித்தரிப்பும் அதில் சாத்தியமாகியிருக்கிறது என்றும் இந்திய மொழிகளின் முதல் கட்ட நாவல்களில் கமலாம்பாள் சரித்திரமே மேலானது என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்[1].
“நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்று கூசாமல் சொல்லிவிடலாம். கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல் சுடர் விட்டுக்கொண்டு போகிறது” என்பது எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி அவர்களின் கருத்து.
“கமலாம்பாள் சரித்திரம் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர் என்ற புகழ் ஒருமுகமாகக் கிடைக்கப் பெற்ற நாவலாசிரியர் பி.ஆர். ராஜமையர். இந்த நாவலின் முதல் பதிப்பு அவர் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. கமலாம்பாள் நாவலுக்குப் பிறகு அதோடு ஒப்பிடக் கூடிய தமிழ் நாவல் இன்னும் வரவில்லை.” இது சி.சு. செல்லப்பா அவர்களின் பாராட்டு.
“புதிய தமிழ் வசன சிருஷ்டிகளிலேயே ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்பதை அழுத்தந்திருந்தமாக ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறேன்” என்று ஆய்வாளர் கமில் ஸ்வலபில் குறிப்பிடுகிறார்.
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, பி.எஸ். ராமையா உள்ளிட்ட பலராலும் தினமணி, சுதேசமித்திரன், சித்தாந்த தீபிகை, மெட்ராஸ் மெயில், இந்தியன் சோஷியல் ரிஃபார்மர் ஆகிய அக்கால இதழ்களாலும் கமலாம்பாள் சரித்திரம் நாவல் பாராட்டப்பட்டிருக்கிறது.
பி.ஆர்.ராஜமய்யர் குறித்த வெங்கட் சாமிநாதனின் மதிப்பீடு, அந்த ஆளுமையின் மகத்தான ஆகிருதியை உள்ளபடியே சரியாக அடையாளப்படுத்துகிறது.
”ராஜமய்யர் என்ற சக்தி, ஒரு வால் நட்சத்திரம் போல, அணு ஆயுத வெடிப்பின் பிரம்மாண்டம் போல ஒரு குறுகிய காலத்திற்குள், பல்வேறு திசைகளில் ஓர் அசாதாரண வேகத்தில் துடித்து இயங்கி மறைந்துவிட்டது. இவ்வியக்கத்தின் துடிப்பும், வேகமும், பலதிசை நோக்கும், வாழ்ந்த காலத்தின் சுருக்கமும், இதை அணுகி புரிந்து கொள்ள முயற்சி செய்பவனைத் திக்கித் திணற வைத்துவிடுகிறது. இதன் விளைவு, வெடித்துச் சிதறிய துணுக்குகளில் தனக்கு அகப்பட்டதை வைத்துக் கொண்டு, ராஜமய்யரை, நாவலாசிரியர், தத்துவ ஞானி என்று பலவாறாக மதிப்பிடுகிறோம்” (’சில இலக்கிய ஆளுமைகள்’ நூலில்)
(விரைவில் இதன் சுருக்கிய வடிவத்தை குவிகம் குறும் புதினத்தில் காணலாம்)


மிகவும் சிறப்பான விமர்சனம். படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டது. குவிகத்தில் அதன் குறுகிய வடிவத்துக்காக காத்திருக்கிறேன்.-
-ராஜன்
LikeLike